Wednesday 17 September 2014

ஆண்டவனை ஆலயம் சென்று வழிபடுவது ஏன்?

         ஆண்டவன் எங்கும் நிறைந்து வியாபித்து இருக்கும் போது ஆலயத்திற்கு சென்று ஆண்டவனை வழிபடுவது ஏன் என்கிற எண்ணமும், ஏதாவது காரியம் நிறைவேற தெய்வத்தை வேண்டிக்கொள்ள வேண்டியது ஏன் என்கிற சந்தேகமும் ஏற்படுவதுண்டு. பசுவின் பால் எங்கே இருக்கிறது? என்று கேட்டால் என்ன சொல்வோம் பசுவின் மடியில் உள்ளது அதன் காம்பைப் பிடித்துக் கறந்தால் பால் கிடைக்கும் என்று கூறுவோம்.

        ஆனால், பசுவின் மடியில் மட்டுமே பால் உற்பத்தியாகிறது என்று கூறினால் ஒப்புக்கொள்வோமா? இல்லையே? அதன் உடல் முழுவதும் அந்தச் சத்து பரவி இருக்கிறது என்று திருப்பிச் சொல்வோம். அதற்காக பசுவின் காதைப் பிடித்து இழுத்தால் பால் கிடைக்குமா? வாலைப் பிடித்து இழுத்தால் பால் கிடைக்குமா? அது காலால் உதைக்கும்.

        பசுவின் பால் என்கிற சத்து அதன் உடம்பு முழுவதும் நிறைந்திருந்தாலும், பால் கிடைக்க வேண்டும் என்றால் அதன் மடியைப் பிடித்துக் கறந்தால்தான் கிடைக்கும் என்கிற உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டியதாகிறது. அதனால் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும் அவரைச் சரியான முறையில் அணுகிப் பிராத்தனை செய்து கொள்ள தெய்வ சாந்நித்தியம் கொண்ட ஆலயம் என்கிற ஓரிடத்திற்குப் போயாக வேண்டி இருக்கிறது.

          நமக்கு ஒரு அலுவலகத்தில் காரியம் ஆக வேண்டியிருந்தால் ஒவ்வொருவரையும் கவனித்த பிறகுதான் தலைமை அதிகாரியை சந்தித்து தன் வேலையை சாதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கோயிலிலும் இப்படிதான் நடக்கிறது. ஆண்டவன் எல்லா இடங்களிலும் நிறைந்து இருந்தாலும் குறிப்பிட்ட வேண்டுகோள்  நிறைவேறுவதற்குக் குறிப்பிட்ட சந்திதிக்குப் போக வேண்டியதாக இருக்கிறது. குறிப்பிட்ட தெய்வத்திடம் உங்கள் தேவைக்கேற்ப பிரார்த்தனை செய்து அருளைப் பெற வேண்டி இருக்கிறது. இவை ஆன்மிக ஒளிவிளக்கு நூலிருந்து.

No comments:

Post a Comment