Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Thursday, 8 June 2023

திருவணைக்காவல் போகலாம் வாங்க

                  ரொம்ப நாளாக எந்த கோவிலுக்கும் போக நேரமில்லை. சமீபத்தில் எனது பிறந்த நாள் அன்று திருவணைக்காவல் கோவில் சென்றேன். தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டில் திருச்சிக்கு 1to1 பஸ் நின்றிருந்து தஞ்சையில் ஏறினால் திருச்சியில் தான் போய் இறங்க முடியும் வேற எங்கும் வண்டி நிற்காது. நான் அந்த பேருந்தில் ஏறினேன் பஸ்ஸில் ஏறியதும் ஜன்னல் ஓர சீட்டா பார்த்து உட்கார்ந்தேன் கன்ட்ரைக்கடர் டிக்கெட் ..டிக்கெட்... ம்மா.. இப்பவே டிக்கெட் வாங்கிடுங்கம்மா கன்ட்ரைக்டர் வரமாட்டார் என்று சொல்லிக்கொண்டே வந்தார் நான் ஆச்சரியத்தோடு திருச்சி ஒன்னு என்று பணத்தை நீட்டினேன். அவரும் டிக்கெட்டை கொடுத்துவிட்டு நகர்ந்து சென்றார். நடத்துநர் இல்லாத பேருந்தா என்ற வியப்பு எனக்குள் பரவாயில்லையே இது கூட நல்லாதான் இருக்கு என நினைத்துக்கொண்டேன். எனக்கு அருகே இருந்த பெண்ணுக்கும் அதே ஆச்சரியம்தான். பஸ் ஏறிய சற்று நேரத்தில் பஸ் கிளம்பியது என் அருகே இருந்த பெண் கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தது. நான் பேக்கை திறந்து கடையில் வாங்கிய மசால் வடையை கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு ஜன்னல் வழியே பார்வையை வீசினேன் நெடுஞ்சாலை மிக அழகாக இருந்தது. 5 வருடத்தில் நிறைய மாற்றம் தெரிந்தது வழியெங்கும் பெரிய பெரிய கட்டிடங்கள் முளைத்திருந்தன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி சென்றேன். கையில் இருந்த மொபைலை எடுத்து திருச்சியை நோக்கி பயணம் என்று பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டேன் அன்று எனது பிறந்த நாள் என்பதால் சில நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள் அதற்கெல்லாம் நன்றியை தெரிவித்தேன் என்னதான் நம்மை நேரில் பார்க்காது பழகாது இருந்தாலும் மனம் நிறைந்து வாழ்த்து சொல்ற மனசு பெரிய மனசுதானே.. நம்மோடு பழகியவர்கள் கூட வாழ்த்து சொல்ல மனசு வராதா போது யாரோ எவரோ சொல்ற அந்த வாழ்த்து மனசுக்கு சந்தோஷம்தான். இந்த நவீன உலகத்தில் இது சற்று ஆறுதலான விஷயம்தான். சற்று நேரத்திற்கெல்லாம் திருச்சி வந்துவிட்டது எனக்கு இன்னும் வியப்பு கூடிவிட்டது ஒரு மணி நேரத்தில் இந்த பஸ் திருச்சி வந்துவிட்டதே என்று. பஸ்ஸை விட்டு இறங்கியதுமே திருவணைக்காவல் பஸ் எனக்காக ரெடியா நிற்பது போலவே நின்றது நான் பஸ் ஏறியதும் பஸ் புறப்பட்டது இந்த பஸ் திருவணைக்காவல் போகுமா என்று டிரைவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஏன்னா நாம தெரியாம ஏறிவிட்டு அப்புறம் அவர்களிடம் திட்டு வாங்கி இடையில் இறங்க கூடாதில்லையா அதனால். சற்று நேரத்தில் திருவணைக்காவல் வந்துவிட்டது நானும் இறங்கி மெல்ல நடந்தேன் சாலையில் இருப்பக்கமும் கடைகள் பூஜை பொருட்கள் இருந்தது ஒரு பூக்கடையில் பூ வாங்கினேன் நல்ல நெருக்கமாக கட்டிய மல்லியப்பூ  முழம் முப்பது ரூபாய் இரண்டு முழம் வாங்கினேன் சற்று தள்ளி ஒரு அர்ச்சனை கடையில் அர்ச்சனை வாங்கினேன் அம்பாளுக்கா? அய்யனுக்கா என்றார் கடைக்காரர் அய்யனுக்கே கொடுங்கோ என்றேன். அவரும் நான் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தார் நான் வாங்கிகொண்டு பணத்தை கொடுத்தேன் அவறும் புன்முறுவலோடு வாங்கிக்கொண்டு இதை பிள்ளை வையுங்கன்னு இலவச இணைப்பா அருகம்புல்லை நீட்டினார். 

Saturday, 29 October 2022

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் போகலாம் வாங்க




              ஒரு நாள் திடீர்னு சென்னைக்கும் பக்கத்துல இருக்கிற 
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு போகனும்னு தோணுச்சு நாம வழக்கமா அப்படித்தான் கிளம்புவோம். காலையில் 7 மணிக்கு கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு பஸ் ஏறினேன் நான் நினைச்சேன் பக்கத்துலதான் இருக்கும் போயிட்டு சீக்கிரம் வரலாம் னு அப்புறம் தான் தெரியுது அது சென்னையில் இருந்து 60கி.மீ னு அச்சச்சோ இது தெரியாம நாம பாட்டுக்கும் அசால்டா கிளம்பிட்டோமேன்னு உள்ளுக்குள்ள திக்..திக்.

Wednesday, 7 September 2022

இம்மையில் நன்மை தருவார் ஆலயம் போகலாம் வாங்க


                 கடந்த சில வருடங்களா எங்கேயும் போக முடியல கொரோனா காலம் என்பதை விட வேலை பளு,  நேரமில்லை இப்படி பல காரணங்கள் சொல்லலாம். சட்டென்று ஒரு யோசனை மதுரை இம்மையில் நன்மை தருவார் ஆலயம் செல்லாம் என்று தோன்றியது. சரி ஞாயிற்றுக்கிழமை போகலாம் என முடிவு செய்தாச்சு. சனிக்கிழமை இரவு மொபைலில் 4 மணிக்கு அலாரம் வைத்து விட்டு தூங்க ஆரம்பித்தேன். முழிச்சுப் பார்த்தால் காலை 6 மணி

Saturday, 1 July 2017

சித்தர்களும் பக்தர்களும்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே"

                                 - திருமூலர்

சித்தர்கள் பாடல் வழி சிருஷ்டியின் தத்துவத்தை அறியப் புகுமுன் சித்தர்களுக்கும் பக்தர்களுக்கும் உள்ள வேறுபாடு நிலையினை அறிவோம்.

Wednesday, 25 March 2015

சிவனே உனைத் தேடி வந்தேன்

சிவனே உனைத் தேடிவந்தேன்
சிங்கார நாயகனே உனைக் காணவந்தேன்
அன்பான தெய்வமே ஆதி சிவனே
 மனமிறங்கி வா.. வா.. என் ஈசனே
பாவம் போக்க உன் பாதம் தொடவந்தேன்
பாவி எனை ஆட்கொள்வாய் சிவனே

Sunday, 15 March 2015

மனமும் தெய்வ ஞானமும்

         மனம் என்பது தனி மனிதனின் மனமாகப் பலகாலம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. "இது என் உடல், இது அவன் உடல் " என்று சொல்லும் போது உடலின் வேறுபாட்டைக் குறிக்கிறது. ஆனால் இந்த வேறுபாடுகளைக் கொண்ட உடல்கள் எல்லாமே உணவால் சமைந்தவைதான் என்பதில் சந்தேகமில்லை. அதே போல் இது உன் மனம், இது அவன் மனம், இது நல்ல மனம், இது கெட்ட மனம் என்றெல்லாம் தனி மனிதனின் மனத்தைப்பற்றிச் சொன்னாலும் எல்லா மனங்களும் வெளியாகாயத்திலிருந்து பெறப்பட்ட மனம்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிரபஞ்சம் முழுவதும் மன ஆகாயம் பரவியிருக்கிறது என்பதை நீங்கள் இப்படி நம்பலாம். பூமிக்கு பலகோடி மேல்களுக்கு அப்பால் இருக்கும் சூரியனின் ஒளியை பூமிக்கு கொண்டுவர இடையில் ஒளியாகாயம் இருக்க வேண்டும். ஒளிகளின் மின்காந்த அலைகளை உலக முழுவதும் பரவச் செய்ய ஆகாயப்பரப்பில் மின் காந்த ஆகாயம் இருக்க வேண்டும் என்பது போல், மனத்தின் அலைகளைத் தாங்கிச் செல்ல ஏதுவாக மன ஆகாயமும் இருக்க வேண்டும் என்பதை நாம் நம்பலாம். அதுமட்டுமல்ல இன்று உலகில் மிக அதிக ஆண், பெண்களால் பயன்படுத்தப்படும் மானதத்தந்தி(Telepathy) என்ற கலை, வெளி ஆகாயத்தில் மனம் பரவியிருக்கிறது என்பதை உறுதிப்படுகிறது.

Friday, 6 March 2015

துவரங்குறிச்சி சிவ ஆலயம்

          தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகே 7 கி.மீ தொலைவில் துவரங்குறிச்சி எனும் ஊரில் பழுதடைந்த சிவாலயம் ஒன்று இருக்கிறது. மூன்று தினங்களுக்கு முன்பு பிரதோஷம் அன்று முதல் முறையாகச் சென்றேன். கோவிலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் நமது வீடு ஒன்று இடிந்த நிலையில் கிடந்தால் என்ன ஒரு உணர்வு ஏற்படுமோ அந்த உணர்வு எனக்குள் வந்தது.

Wednesday, 25 February 2015

மும்மூர்த்திகளின் தத்துவம்

            ஆக்கல் - காத்தல் - அழித்தல் இம்மூன்றும் இந்த உலகத்தில் எந்நேரமும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள். நடப்பது எதுவானாலும் இந்த மூன்று வகைக்குள் அடங்கியே ஆகவேண்டும்.

            இந்த மூன்று சக்திகளையும் மனிதன் உணர்ந்துகொள்ளவே இறைவனை இந்த மூன்று முக்கியமான கிரியைகளின் வடிவமாக நாம் வழிபடுகிறோம்.

Monday, 23 February 2015

ஜபம் செய்வது எப்படி?

             மனிதனை நல்வழிப்படுத்தி சகல சௌபாக்கியங்களையும் அளிக்கவல்லது ஜபம். எப்படி ஜபம் செய்யத் தொடங்குவது? வாங்க பார்க்கலாம்.

            உங்கள் வீட்டில் தனிமையான ஓர் அறையைத் தேர்ந்தெடுங்கள். சுவரில் உங்கள் மனதுக்கினிய சுவாமி அல்லது தேவியின் படத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் கண் பார்வை இருக்கும் மட்டத்தில் அவருடைய பாதம் கண்ணில் படும்படி படத்தை மாட்டுங்கள். கீழே உட்கார ஒரு பாயையோ, பலகையையோ போட்டுக்கொண்டு உட்காருங்கள். காலை சௌகரியமாக சப்பணம் போட்டு உட்கார்ந்து ஜபத்தை ஆரம்பியுங்கள்.

Monday, 16 February 2015

பிறவிப் பாவங்களைக் களையும் ராமநாதர்

         இராவண வதம் முடிந்து இலங்கையிலிருந்து சீதையுடன் பாரதத்திற்குத் திரும்பிய இராமர். வானர வீரர்கள் புடைசூழக் கந்தமாதனம் வந்து சேர்ந்தார். அப்போது அகஸ்தியர் முதலான ரிஷிகள் அங்கு வந்து இராமரைத் துதித்து, சிவபக்தனாக விளங்கிய இராவணனை அழித்த பாவம் விலக ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள் என்று இராமருக்கு ஆலோசனை வழங்கினார்.

             இராமர் ஆஞ்சநேயரிடம் மாருதி நீ கைலாயத்திற்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவா என ஆணையிட்டார். ஆஞ்சநேயர் கயிலையை அடைந்தார். சிவபெருமானிடமிருந்து சிவலிங்கம் ஒன்றைப் பெற்று கந்தமாதனம் நோக்கி விரைந்தார். ஆனால் அங்கே சிவலிங்கப் பிரதிஷ்டைக்குக் குறிக்கப்பட்ட நல்ல நேரம் முடியப் போவதை முனிவர்கள் தெரிவித்தனர்.

சிவராத்திரி

            சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்போர்

             மஞ்சள் அல்லது சிவப்பு ஆடை அணிந்து பகலில் இளநீரும் இரவில் துளசி தண்ணீரும் அருந்தலாம். முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருத்தி சிவராத்திரியன்று உபவாசம் இருந்து காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் இரவு கண்விழித்திருந்து அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி பாராயணம் செய்து விரதத்தை முடிக்கலாம்.

Friday, 9 January 2015

அறிந்ததும் அறியாததும்

              காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழவேண்டும். இதை முதல் ஒழுக்கம் என ஆசாரக் கோவை கூறுகிறது. வேதங்களும் இதையே வலியுறுத்துகின்றன. இந்துமத சாஸ்திரங்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழ வேண்டும் என கூறுகின்றன. பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 4.00 மணியாகும். அப்போது எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு, நன்கு குளித்துவிட்டு, கடவுளை தியானிப்பது மிகச் சிறப்பாகும்.

Tuesday, 30 December 2014

சஷ்டியின் பெருமை

            "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்வரும்" என்ற கிராமப்பகுதியில் சொல்வார்கள். ஆனால் உண்மையான பழமொழி என்ன தெரியுமா? "சஷ்டியிருந்தால் அகப்பையில் வளரும்" என்பதுதான் இதன் பொருள்.

அறியப்படாத ரகசியங்கள்

ஜீவன் எப்படி உடலை விடுகிறது?

             பஞ்ச ப்ராணனில் இருதயத்தில் ப்ராணன், மல வழியில் அபாநன்,தொப்புளில் ஸமாநன், கழுத்தில் உதானன், சரீரமெங்கும் வயாநன் தங்கியிருக்கிறான். ப்ராணன் போவதற்கு முன் வ்யாநன் ரத்தத்திலிருந்து திரும்பி ப்ராணனிடம் வருகிறான். ரத்தம் சுண்டுவதால் அப்போது தான் மரண வலி ஏற்படும். அபாநன் ஸமானன் இவர்களும் இங்கு வந்து சேரும்போது ஜீரணம், மலஜலம் நின்று விடும். ஒரு வீட்டை ஒழித்துக் கொண்டு வேறு வீடு செல்வோர் எப்படி எல்லா சாமான்களையும் நடுவீட்டில் கொண்டு வந்து வைப்பார்களோ அப்படி எல்லாம் இருதயத்தில் வந்து தங்கும் பின்னர் வெளியேறும.

Monday, 15 December 2014

ஆலயத்தில் செய்யக்கூடியது/ செய்யக்கூடாதது


  • கர்ப்ப கிரஹகத்தில் கடவுளுக்கு அலங்காரம் நடக்குகையில் திரையிட்டுயிருப்பார்கள் அச்சமயம் வழிபடுதல் கூடாது. 
  •  சுவாமிக்கும் பலி பீடத்திற்கும் குறுக்கே செல்லக்கூடாது. 
  •  ஆலயத்தில் நண்பர்களையோ, பெரிய மனிதர்களையோ கண்டால் வணங்க கூடாது. இறைவனே மிகப்பெரியவன் ஆலயத்தில் அனைவரும் சமம்.
  •  பிரசாதங்களை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்ளுதல் கூடாது. 

Saturday, 6 December 2014

விந்தையான கணிப்புகள்

           நவீன அறிவியல, விண்வெளிப் பயணத்தில் பயணம் செய்வோர் அடையும் நிலைகளை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. இந்த ஆய்வுகளின் முடிவுகளின் முடிவுகள் புராணம் கூறும் கதைகளை நினைவுப்படுத்தி நம்மை பிரமிக்க வைக்கிறது. வானில் மிளிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் ஆராய்ந்து அதன் மகத்துவத்தை முன்னோர்கள் கண்டு அனுபவித்து கதை வாயிலாகவும், செவி வழி பரவும் செய்தியாகவும் கூறி இருக்கின்றனர்.

              27 நட்சத்திரங்களுள் கடைசி நட்சத்திரமான ரேவதியின் கதை ஆச்சர்யமான கதை!

Tuesday, 2 December 2014

மனமும் அட்ட சித்திகளும்

         
                 யோகி, சித்தர், சாது என்று சொன்னதும் அவர்கள் ஏதோ அற்புதங்களை, சித்துக்களைச் செய்வார்களென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அற்புதங்களைச் செய்யாதவர் யோகியாய் இறையருளைப் பெற்றவராய் பக்தராய் இருக்க முடியாதென்பது பலருடைய தவறான கருத்து. யோகி, சித்தர், சாது என்பதற்கும் சித்துக்கள் விளையாடுவதற்கும் யாதொரு தொடர்புமில்லை. யோகத்தின் குறிக்கோள் சித்து விளையாடுவது அல்ல. ஒரு உண்மையான யோகி அதைப்பற்றி நினைக்கவே மாட்டான்.

           இறைநெறியில் செல்பவர்களுக்கு இடையில் சித்துக்கள் செய்யும் ஆற்றல் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் அதுப்பற்றி அறிய மாட்டாமல் மேலே முன்னேறிப் போக முயல்வர். ஆக சாமியார், யோகி என்றால் சித்துக்கள் செய்பவர்களாக இருக்க வேண்டுமென்றோ, சித்துகள் செய்பவர்களெல்லாரும் சன்மார்க் சீலர்களென்றோ கருதும் மயக்கத்திலிருந்து நாம் விடுபட வேண்டும்.

            பொதுவாக சித்துக்கள் அணிமா, லகிமா, கரிமா, மகிமா, ஈசித்வ, வசித்வ, ப்ராகாம்ய, ப்ராப்தி என எட்டுவகைப்படும். ஆனால் முன் பகுதிகளில் நாம் விளக்கிய சூக்கும திருஷ்டி, சூக்கும் ச்ரவணம், சூக்கும யாத்திரை, மானதத்தந்தி போன்றவைகளையும் சித்துகளென்றே சொல்ல வேண்டும்.

Thursday, 6 November 2014

சமுதாய சிந்தனைகளை கூறும் மகாபாரதம்

     

         பாரதப் பெருங்காப்பியம் குருகுலத்தாரிடை நிகழ்ந்த போர் பற்றி கூறுகிறது. உலக இலக்கியங்களுள் அளவாற் பெரியது பாரதம் என்பர். பாரத போர் நிகழ்ந்த காலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன 4500 வருஷங்களுக்கு முற்பட்டது என்கிறது " வெள்ளிடை மாலை" கலியுகத்தின் தொடக்கத்தில் ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக பாரதப் போர் நடந்ததாகவும் கூறுவர். ஒரு சிலர் துவாபரயுகத்தின் இறுதியில் கி.மு. 3139 என்றும் கி.மு. 3102 ல் நிகழ்ந்தது என்றும் பலவாறு பல கதைகள் புனைந்துள்ளனர். ஆனால் பாரத போர் உண்மையில் நிகழ்ந்திருக்க கூடும் ஏனெனில் நாமும் பாரத போரின் அடிப்படையில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Saturday, 25 October 2014

நமது வாழ்க்கையின் நல்லதும் கெட்டதும்

         நமது எண்ணங்களின் அடிப்படையில் தான் ஒவ்வொரு காரியமும் நல்லதாகவும் கெட்டதாகவும் அமைகிறது. நமது மனதில் நல்ல எண்ணங்களும் உண்டாகும் சில சமயங்களில் கெட்ட எண்ணங்களும் உண்டாகும.

        இந்த இரண்டு எண்ணங்களும் தெரிந்தோ தெரியாமலோ நாம்தான் காரணகர்த்தாவாகிறோம். நாம் வெளிப்படையாகச் சொல்லும் ஆசைகள் நல்லெண்ணங்களாக உருவெடுக்கிறது. நாம் ரகசியமாக மனதில் வைத்துக்கொள்ளும் கெட்ட ஆசைகள் தீய எண்ணங்களாக வடிவெடுக்கின்றன. இரவு வந்துவிட்டால் நாம் இருட்டிவிட்டதே என்று கவலைப்படுவதில்லை. ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் போதும் இருள் தானாகவே அகன்று விடும். அதேபோன்று நல்லெண்ணங்களுக்கு முக்கியமான இடம் கொடுத்துப் பழகினால் தீயவை தானாகவே மறைந்து விடும்.

         எது நல்லது? எது கெட்டது? தாம் அதன் மூலமாக பெறுகின்ற உணர்ச்சியைப் பொறுத்து தான் அது அமைகிறது. என்னிடம் தோன்றும் எண்ணம் என்னைப் பற்றிய தற்பெருமையை பிறரிடம் பொறாமையை என்னுடைய சுயநலத்தைத் தூண்டி விட்டால் அவை கெட்டவைஎன்னிடம் ஏற்படும் எண்ணங்கள் பிறருடைய நன்மைக்காகச் சேவை செய்யும்படி என்னை எளியவனாக நினைக்க உதவும்படி உன்னுடைய செயலினால் எவருக்கும் கெடுதல் ஏற்படாதபடி அமையுமானால் அவை நல்லவையாகும்.

        எனக்கு எல்லாம் வேண்டும் இன்னும் வேண்டும் என்று மேலும் மேலும் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பவர் எவ்வளவு செல்வங்களைப் பெற்றிருந்தாலும் அவன் ஏழைதான். எனக்கு எதுவும் வேண்டாம் என்னிடம் இருக்கும் சிறிதளவுள்ள பொருளையும் பிறருக்காகக் கொடுத்து விடுவேன் என்று சொல்லி செயல்படுகிறானோ அவன் பொருள் இல்லாவிட்டாலும் செல்வந்தன்தான்.

         ஆக நாம் உலகத்தில் சுவைப்பவை தொடுபவை, உணர்பவை ஒவ்வொன்றையும் ஆண்டவன்தான் அளித்தான் என்பதை உணர்ந்து கொள்வோம். ஒரு முயற்சி சுயநலத்திற்காக அமையும் போது தீய எண்ணம் ஆகிவிடுகிறது அதுவே பொது நலத்திற்காக அமையும்போது நல்ல எண்ணம் ஆகிவிடுகிறது.

Friday, 10 October 2014

ஐயனார் இந்து கடவுளா?

       

        
சங்க காலத்தில் சிறப்புடன் வழங்கிய பெயர் சாத்தன் என்பது நன்கு புலப்படும். சாத்தன் அல்லது சாத்தனார் என்னும் பெயர் சாஸ்தார் என்னும் வடமொழிப் பெயரின் திரிபு சாஸ்தா என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று கடைச் சங்க காலத்தில் தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் சாத்தன் என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களிலிருந்து தெரிகின்றது. சிலப்பதிக்காரத்தில் சாத்தன் வரலாறு கனாத்திரம் உரைத்த காதையில் விரிவாகப் பேசப்படுக்கின்றது.

 பௌத்த வழி சாத்தன் 

           புத்தருக்கு வழங்கிய பெயர்களுள் ஒன்று சாஸ்தா. சாஸ்தா சாத்தன் என்னும் வடமொழிச் சொல்லிற்கு நேரான தமிழ்ச் சொல் ஐயன் அல்லது ஐயனார் பௌத்த மதம் அழிந்த பின்னர் அம்மதக் கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்து மதம் ஏற்றுக் கொண்டபோது வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர் புத்தரை திருமாலின் ஓர் அவதாரமாகக் கருதினர், சைவ சமயத்தோர் புத்தராகிய சாத்தனாரை திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாக கற்பித்து சாத்தனாரைச் தமது தெய்வமாக சேர்த்துக்கொண்டனர்.

சமண வழி சாத்தன் 

           பௌத்த சமயத்திலிருந்து இந்துக்கள் சாத்தனை தெய்வமாக ஏற்றுக் கொண்டது போலவே சமணத்திலிருந்து இத்தெய்வத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்று கருதப்படுகிறது.

          சமணர்களுடைய கோயில்களில் இத்தெய்வத்தை இன்றும் காணலாம். இத்தெய்வத்திருக்கு பிரம்மயட்சன் சாத்தனர் முதலிய பெயர்களில் அவர்கள் கூறுகின்றனர. பௌத்த சமண ஐயனார் பௌத்த மதத்திலிருந்தும் சமண மதத்திலிருந்தும் ஐயனாரை இந்துக்கள் ஏற்றுக் கொண்டனர். பௌத்த ஐயனாருக்கும் சமண ஐயனாருக்கும் உள்ள வேறுபாடு யாதெனில் பௌத்த ஐயனாருக்குரிய வாகனம் குதிரை சமண ஐயனாருக்குரிய வாகனம் யானை என்பதே இன்றைய நிலையில் ஐயனார் கோயில்களில் இரண்டும் கலந்தே காணப்படுகிறது சிவன் கோயில் பலிபீடத்தில் நந்தியும், முருகன் கோயில்களில் மயிலும் இருப்பது போல் ஐயனார் கோயில்களில் பலிபீடத்தில் யானை தான் காணப்படுகிறது.

           அதே கோயில்களில் குதிரையின் சிலைகளும் கோயில்களின் எதிரே தனித்தும் வரிசையாகவும் வைக்கப்பட்டுள்ளன. இருவேறு மதங்களிலிருந்தும் ஐயனார் வழிபாடு புகுந்திருந்தாலும் அவை பிற சமயச் சார்பின் என்ற எண்ணமின்றி இந்துக்கள் இரண்டையும் இணைத்து ஒன்றாகவே கருதி வழிப்பட்டு வருகின்றனர் என்பதற்கு யானை உருவமும் குதிரை உருவமும் ஒன்றாக காணப்படுவதே சான்றாகும். சமணர்களும, பௌத்தர்களும் உயிர் கொலை விரும்ப மாட்டார்கள் அதனால்தான் ஐயனார் சந்நதிகளில் உயிர்பலியிடுதல் இன்றும் இல்லை.

          ஐயனார் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறும் காலங்களில் ஆடு, சேவல் முதலியன பலியிடப்படும் ஆனால் ஐயனார் சந்நதிகளில் இவற்றைப் பலியிடமாட்டார்கள். ஐயனார் கோயில்களில் பரிவாரத் தெய்வங்களாக இருக்கும் கருப்பர், வீரன் முதலிய தெய்வச் சந்நதிகளில் பலி நடக்கும் பலியிடுவதற்கு முன் ஐயனாருக்கு பூஜை செய்து திருக்கதவை தாழிட்டுப் பூட்டப் பெறும் ஐயனாரை இந்துக்கள் கடவுளாக ஏற்றுக்கொண்டாலும் உயிர்கொலை செய்வதைத் தடுத்து விடுகின்றனர்.

           இந்து சமயத்தாரால் சாத்தன் வழிபாடு தெய்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர். சாத்தனார் சிவபெருமானின் மகனாக சொல்கின்ற வரலாறு தமிழ்நாட்டில் பரவிற்று திருநாவுக்கரசர் தாம்பாடிய திருப்பாயிற்றுர்த் திருப்பதிகத்திலே சாத்தனைச் சிவபெருமானின் மகன் என்றே குறுப்பிடுகின்றனர்.

        "பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
         சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
         கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதியும் நல்ல
         தீர்த்தரும் சடை மேல் வைத்தார் திருப்பயற் றூர்ஊர னாரே"

         ஐயனார் அரிகரபுத்திரர் சாத்தா என்னும் அழைக்கப் பெறுவர் தாருகாவனத்து இருடிகளின் ஆணவ மாதி சிறு மாப்புக்களை அடக்குவதற்கு அரியும், அரனும் எழுந்தருளிய காலத்து, மோகினியாக நின்ற மகாவிஷ்ணுவின்பால் அரனுக்கு மகனாகத் தோன்றியவர். கிராமத்தை பாதுகாக்க ஊரின் வடக்கே கோயில் கொண்டுள்ளார் என்று குறிப்பிடுகின்றது. கந்தபுராணத்தில் இரண்டாவதான அசுர காண்டத்தில் 32 ஆம் படலம் மகா சாத்தப்படலம் இப்படலத்தில் ஐயனாரின் அவதார நிகழ்ச்சிகள் விரிவாகப் பேசப்படுகின்றனர்.
       
        திருமால் மோகினி வடிவங் கொண்ட பொழுது சிவப்பெருமான் அவளைச் சார்ந்த நிலையில் ஐயனார் தோன்றினார். ஐயனாரை உருவாக்கிய சிவபெருமான் அவருக்குப் பெயர் சூட்டி உருத்திரோடு உலகை காக்கும் தொழிலை அவருக்கு தந்தார்.

                                   "அங்கண் மேவி அரிகர புத்திரன்
                                     சங்கை யில்பெருஞ் சாரதர் தம்மோடு
                                     எங்கு மாகி யிருந்தெவ் வுலகையும்
                                     கங்குலும் பகலும் எல்லையுங் காப்பனால்
                                                                                                          
                                                                                               (கந்தபுராணம்- 54)

            ஐயனார் மாசி மாதம் அமாவாசைக்கும் முதல் நாள் சிவராத்திரியன்று பிறந்தார் என்று கூறுவர் அதனால்தான் ஐயனார் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் சிவராத்திரியன்று நடைபெறுகின்றனர். ஐயனார் தன் பரிவாரங்களுடன் இரவில் குதிரை மீதமர்ந்து ஊரை காத்து வருவதாக மக்கள் நம்புகின்றனர். மதுரை வீரனும் பாவாடைராயனும் ஐயனாரின் படைத்தளபதிள், குட்டிச் சாத்தான், சாத்தான் கருப்பன், முண்டன், குளிகன் முதலிய பூதங்கள் ஐயனாரின் பணியாட்கள் என்று சொல்லப்படுகிறது.

            ஐயனார்தான் ஐயப்பன் என்றும் சொல்லப்படுகிறது சைவ கடவுளாக இருப்பதால் பலியிடுதலை தவிர்த்து பச்சரிசி படையிலப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. கடவுளின் தோற்றம் வெவ்வேறாக இருந்தாலும் அதன் ஆதிமூலம் என்பது ஒன்றுதான். வேற மதக்காரர்கள் சிலர் கேலியாக சொல்வதுண்டு அரிக்கும் ஹரிக்கும் எப்படி குழந்தை பிறக்கும் அதாவது ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் எப்படி குழந்தை பிறக்கும் என்று கேட்கின்றனர் இப்போது அவர்களுக்கு புரிந்திருக்கும். மனிதர்களில் ஆண் பெண் என்ற இரண்டு படைப்புகளையும் தாண்டி திருநங்கை என்ற படைப்பு ஒன்று இருக்கு எல்லோரும் அறிவர் இப்படி ஒரு படைப்பு இருக்கும் பட்சத்தில் இதையும் நம்பதான் வேண்டியிருக்கிறது. மனிதருக்கு நல்ல விஷயங்களை எடுத்துரைக்க கடவுள் பல அவதராங்கள் எடுத்ததாக சொல்லப்படுகிறது.


 ஸ்ரீசந்திரா