Monday 16 February 2015

பிறவிப் பாவங்களைக் களையும் ராமநாதர்

         இராவண வதம் முடிந்து இலங்கையிலிருந்து சீதையுடன் பாரதத்திற்குத் திரும்பிய இராமர். வானர வீரர்கள் புடைசூழக் கந்தமாதனம் வந்து சேர்ந்தார். அப்போது அகஸ்தியர் முதலான ரிஷிகள் அங்கு வந்து இராமரைத் துதித்து, சிவபக்தனாக விளங்கிய இராவணனை அழித்த பாவம் விலக ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள் என்று இராமருக்கு ஆலோசனை வழங்கினார்.

             இராமர் ஆஞ்சநேயரிடம் மாருதி நீ கைலாயத்திற்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவா என ஆணையிட்டார். ஆஞ்சநேயர் கயிலையை அடைந்தார். சிவபெருமானிடமிருந்து சிவலிங்கம் ஒன்றைப் பெற்று கந்தமாதனம் நோக்கி விரைந்தார். ஆனால் அங்கே சிவலிங்கப் பிரதிஷ்டைக்குக் குறிக்கப்பட்ட நல்ல நேரம் முடியப் போவதை முனிவர்கள் தெரிவித்தனர்.


           சீதை தன் கரங்களால் மணலை அள்ளி, அதை ஒரு சிவலிங்கமாகப் பிடித்துத் தந்தாள். அதனை இராமர் பிரதிஷ்டை செய்து விட்டார். அந்தச் சிவலிங்கத்திலிருந்து மகேஸ்வரியுடன், ஜோதி வடிவில் தோன்றினார் பரமேஸ்வரன்.

           இராமா நீ ஸ்தாபித்த லிங்கம் இனி இராமலிங்கம் என்றும் இராமநாதர் என்றும் அழைக்கப் பெறும். இதைத் துதிப்பவர்களின் பாவங்கள் பறந்தோடிப் போகும் என்று அருளி மறைந்தார்.

          சற்றே தாமதமாக வந்து சேர்ந்த ஆஞ்சநேயர் கயிலையிலிருந்து தான் கொண்டு வந்த லிங்கத்தைதான் இராமர் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று பிரியப்பட்டார்.

         நான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுத்து விடு அதே இடத்தில் நீ கொண்டு வந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்வோம் என்றார் இராமர். ஆஞ்சநேயர் சிவலிங்கத்தின் மீது தன் வாலைச் சுற்றிப் பற்றினார். முழு வலிமையையும் பிரயோசித்து இழுத்தார். மணலால் ஆன இராமலிங்கம் அசையவில்லை.

          "அனுமனே விசனப்படாதே நீ கொண்டு வந்த லிங்கத்தையும் பிரதிஷ்டை செய் நான் பிரதிஷ்டை செய்த இராமலிங்கத்தை தரிசனம் பண்ணுவதன் முழுப்பலன் கிடைக்க வேண்டுமானால் அதற்கு முன் உன் சிவலிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று அருளினார்.

        ஆஞ்ச நேயர் அமைதி அடைந்தார். தான் கொண்டு வந்த லிங்கத்தை இராமலிங்கத்தின் வடக்கே பிரதிஷ்டை செய்தார்.

           இராமர் ஈஸ்வரனைப் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டதால். இத்தலம் அன்று முதல் இராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் பெருமை பெற்றது. இராமலிங்கம், பன்னிரண்டு ஜோதிலிங்கங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

          ஆலயம் கடலுக்கு அருகே அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய பிரதான கோபுரம் ஒன்பது அடுக்குகளைக் கொண்டது. மூன்று பிராகாரங்கள் மூன்றாவது பிரகாரத்தில், நாலாயிரம் தூண்கள் நூல் கட்டி ஒரே நேராக அமைத்தது போல் வரிசையாகக் காட்சியளித்து வியப்பை ஏற்படுத்துகின்றன.

        இரண்டாவது பிராகாரம் தாண்டியதும் கதையால் செய்யப்பட்ட நந்தி. பதினெட்டடி உயரம். இருபத்திரண்டு அடி நீளம். கருவறையில் இராமர் ஸ்தாபித்த இராமநாதலிங்கம்.

       லிங்கத்தில் ஆஞ்சநேயர் தன் வாலால் சுற்றிய மூன்று தழும்புகளை இன்றும் காணலாம். இராமநாதருக்கு வலப்புறத்தில் அம்பாள் பர்வதவர்த்தினிக்கான தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

        மூல சன்னிதிக்கு வடக்கில் அனுமன் பிரதிஷ்டை செய்த அனுமத்லிங்கத்தின் சன்னிதி. சிவனும், விஷ்ணுவும் ஒன்றுதான் என்பதை நிலைநிறுத்த அவர்கள் ஒரே கோயிலில் குடி கொண்டிருக்கும் அற்புதத்தலம் இரமேஸ்வரம்.

            இராமேஸ்வரத்தில் கோடி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சக்ர தீர்த்தம், சிவ தீர்த்தம், சங்க தீர்த்தம், சீதா தீர்த்தம் என்று முப்பத்தாறு புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.அவற்றில் இருபத்திரண்டு தீர்த்தங்கள் கோயிலின் உள்ளே அமைந்துள்ளன.

          இராமநாதரை தரிசிப்போம் பாவங்களைக் கரைப்போம்.

குறிப்பு:- ஜயோதிர்லிங்கத் தலங்களுக்கு வலஞ்சுழியாக யாத்திரை மேற்கொண்டால் இராமேஸ்வரம் முதலாவதாகவும், காசி, ஸ்ரீ சைலத்துக்கு முந்தைய தலமாகவும் அமையும். ஸ்ரீசைல தரிசனத்தை முடித்துக்கொண்டு இறுதியில் மீண்டும் இராமேஸ்வரத்தில் இராமலிங்கரை தரிசனம் செய்தாலே ஜயோதிர்லிங்க யாத்திரை நிறைவு பெறும்.

          காசி யாத்திரை மட்டும் மேற்கொள்பவர்களுக்கு தங்களது யாத்திரையை இராமேஸ்வரத்தில் தொடங்கி அங்கிருந்து மணல் எடுத்துச் சென்று பிரயாகையின் கங்கைக்கரையிலும், காசியிற் கங்கை கரையிலும், வைத்துப் பூஜை செய்து கங்கையில் அந்த மணலைச் சேர்த்து இரு இடங்களில் இருந்தும் கங்கா தீர்த்தம் கொண்டு வந்து இராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்தத்தில் சேர்த்தால்தான் காசி யாத்திரை பரிபூர்ணமாக நிறைவு பெறும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment