Tuesday 24 February 2015

நட்பு என்பது எதுவரை?

சிலேட்டு குச்சியும் 
குச்சி மிட்டாயும்
கொடுக்கும் வரை
சில நட்பு..!

பேப்பர் பேனாவும் 
பென்சில் ரப்பரும்
கொடுக்கும் வரை
சில நட்பு..!



 பரிசு பொருட்களும்
 பார்ட்டி டின்னரும்
 கொடுக்கும் வரை
 சில நட்பு..! 

ஆபத்தில் உதவியும்
அவசரத்திற்கு பணமும் 
கொடுக்கும் வரை 
சில நட்பு..!

 இவையாவும் இல்லாத
 நட்பு எங்கேயேனும்
 தொடர்ந்து நீடித்ததுண்டா?
 ஒருவேளை இருந்தால் அது
 தெய்வீக நட்பாகதான் 
இருக்க முடியும்..! 

கர்ணன் போன்ற ஒரு 
நண்பன் இருந்தால்
துரியோதணன் போன்ற
ஒருவன் இருக்கத்தான் செய்வான்..!


            நமக்கு யாராவது உதவி செய்தால்தான் நாம் நண்பராக கருதுகிறோம். இங்கே கொடுத்தல் என்பது ரொம்ப முக்கியமாக இருக்கிறது.

           நண்பன் என்பவன் ஆபத்துக்கு உதவுபவன் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. ஒரு நண்பன் கணக்குப் பார்த்தால் அல்லது திரும்பி பார்த்தால் நட்பின் கணக்கே முடிந்துவிடும்.

         நட்புக்கு எல்லை அவசியமா? அவசியம்தான் அதீத அன்பு பொறாமையை கொண்டுவரும், கோபத்தை வரவழைக்கும், சண்டை போடும். இதை ஒரு எல்லைக்குள் வைத்துக்கொண்டால் இதற்கு அவசியமே இருக்காது.

         இளகிய மனமும், கொடுக்கின்ற மனமும் உள்ளவர்கள் எப்போதும் ஏமாளியாக இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

       ஒரே மாதிரி இரண்டு தண்டவாளங்கள் இணைந்தால்தான் நட்பு என்ற இரயில் பயணிக்க முடியும். இல்லை என்றால் விபத்து நிச்சயம். இதில் பலமான அடியோ, அல்லது உயிரோ கூட போகலாம்.

              நட்பு என்பது எல்லா இடங்களிலும், எல்லா இடங்களிலும் பேசப்படும் ஒன்று ஆனால் கண்ணதாசனின் இந்தப் பாடல் வரிகளில் நட்பை ஏன் சேர்க்காமல் போனார் என்று என்னை சிந்திக்க வைக்கிறது.

வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ..?

             முக்காலத்தையும் உணர்ந்து எழுதியவர் கண்ணதாசன் ஆனால் இந்த நான்கு வரிகளில் நட்பை அவர் குறிப்பிடவில்லை. ஒருவேளை அவர் தெரிந்துதான் சேர்க்காமல் விட்டாரோ என்னவோ?

           "நட்பை உணர்ந்தவர்களுக்கு கடவுள்
            உணராதவர்களுக்கு ஜோக்கர்"

No comments:

Post a Comment