திருக்கடையூர் போகவேண்டும் என்று சட்டென்று தோண அம்மாவும் நானும் அதிகாலையிலயே மயிலாடுதுறை பயணித்தோம்.. பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி அங்கிருந்து கும்பகோணம் அங்கிருந்து மயிலாடுதுறை அங்கிருந்து திருக்கடையூர் சென்றடைந்தோம். சரியாக பட்டுக்கோட்டையில் இருந்து 6 மணிக்கு கிளம்பினோம் பஸ் தான் மன்னார்குடிக்கு டிக்கெட் 20 ரூபாய் இருவருக்கும் 40 மன்னார்குடியில் 7 to 8 கும்பகோணம் 2 டிக்கெட் 50 ரூபாய் 9 மணிக்கு மயிலாடுறை சென்றுவிட்டோம். மயிலாடுறையில் 9 மணி to திருக்கடையூர் 10 மணி. 2 டிக்கெட் 60 ரூபாய். மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் செல்ல பணம் இல்லை மகளீர் இலவச பேருந்து அங்கிருந்து திருக்கடையூர் ஒரு மணி நேரம் ஆச்சு ஆக சரியாக 11 மணிக்கு கோவிலுக்கு வந்துவிட்டோம். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமா இருந்தது நாங்கள் கோவிலுக்கு நுழையும் வேளையில் மேளத்தாளத்தோட நாதஸ்வரம் பழத்தட்டோடு வந்துகொண்டிருந்தார்கள் அது எங்களை வரவேற்பது போல் இருந்தது..
முதல் முறையாக நான் எந்த கோவிலுக்கு சென்றாலும் அம்பாளுக்கு புடவை சாத்துவது வழக்கமா அமைந்துவிடும்.. இந்த முறையும் அப்படியே புடவை வாங்க வேண்டும் என்ற எந்த ஐடியாவும் இல்லை கோவிலை நெருங்கிய உடனே அங்கிருந்த கடையில் அருமையான பிங்க் நிற கலரில் ஒரு புடவை வாங்கினேன்.. ரோஜாப்பு மாலை சகிதம் அய்யனையும் அபிராமி தாயாரையும் பார்க்க சென்றாச்சு. அங்கே மூன்று அர்ச்சனை செய்ய வேண்டுமாம் அதனால் மூன்று அர்ச்சனை, 150 ரூபாய்க்கு வாங்கினேன்.. மூன்று அர்ச்சனை செய்ய வேண்டுமென்று தெரியாது வியாபாரிகள் ரெடியாக வைத்திருக்கிறார்கள் நானும் வாங்கிவிட்டேன் ஒரே இடத்தில் மூன்று தெய்வமும் இருக்கும் போல அதனால் தான் மூன்று அர்ச்சனை செய்ய வேண்டும் போல நினைச்சு சென்றேன் ஆனால் மூவர் சன்னதியும் தனித்தனியாக தான் இருக்கிறது உள்ளே சென்ற பிறகு தான் விபரமே புரிந்தது ஒவ்வொரு சன்னதிக்கும் கட்டுப்பாடற்ற கூட்டம் அலைமோதுவதால் புதிதாக செல்வோருக்கு ஒன்றும் புரியவில்லை அப்படித்தான் எனக்கும் புரியாமல் இருந்தது ஒவ்வொரு சன்னதிக்கும் தனித்தானியாக கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி எம்பெருமான் ஈசனையும் கால சம்கார மூர்த்திக்கும் அர்ச்சனை செய்தோம் அவை இரண்டும் ஒரே இடத்தில் தனித்தனி சன்னதி கொடி மரத்துக்கு வெளி பிரகாரத்தில் தனி தாயார் சன்னதி இருக்கு நிறைய பேர் அங்கு தடுமாறி நின்றது தாயார் சன்னதி எங்கிருக்கு என்றுதான் நானும் அப்படித்தான் தேடினேன் புதிதாக செல்வோருக்கு கண்டிப்பாக குழப்பமாக இருக்கும் அபிராமி அம்பாளையும் தரிசனம் செய்தோம்.. அம்பாளுக்கு வாங்கிய புடவை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அந்த புடவையில் அம்பாளுக்கு ஜோடித்தால் அருமையாக இருக்கும் என எனக்கு உள்ளுக்குள் ஒரு கற்பனை அத்தனை கூட்டத்திலும் தத்தளித்து தூரத்தில் இருந்து புடவையை நான் நீட்ட இந்த கூட்டத்தில் சாமிய பார்ப்பதே கஷ்டம் இதில் புடவை சாத்துவதை நாம் எப்படி பார்ப்பது நாம பார்க்கவில்லை என்றாலும் நமது புடவை அம்பாளுக்கு போய் சேர்ந்தால் சரி என மனநிலையில் நான் நிற்க அந்த நேரத்தில் எனக்கு முன்னாடி நின்ற பெண் உங்க புடவை சாத்துறாங்க பாருங்க என எனக்கு இடம் கொடுக்க ஒருவாறு பார்த்துவி்ட்டேன் மனசுக்கு நிறைவு அந்த பெண் சொல்லவில்லை என்றால் என்னால் பார்த்திருக்கவே முடியாது அந்த பெண்ணுக்கு நன்றி... புடவை, தங்கம் வெள்ளி என எந்த பொருளாக இருந்தாலும் அலுவலகத்தில் தனி ரசீது வாங்க வேண்டும் அதற்கு 100 ரூபாய் வாங்கிகொள்கிறார்கள் அர்ச்சனைக்கு ஒரு அர்ச்சனைக்கு தனியாக 5 ரூபாய் என ஒருவழியாக சாமி கும்பிட்டாச்சு..
அதுபோக 60/60, 80/80 கல்யாணம் செய்கின்றவர்கள் மாலை மாற்றிக்கொள்ள ஐயரிடம் சொல்லிவிட்டால் அவர்களே பூஜை செய்து விடுகிறார்கள் அதற்கு தனி பணம் கொடுக்க வேண்டும். ஆனால் என்ன க்யூ இல்லை முன்னாடி வந்தவங்க பின்னாடி வந்தங்க என தள்ளிக்கொண்டும் இடித்துக்கொண்டும் சாமி சரியாக கும்பிட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது அதை கொஞ்சம் கோவில் நிர்வாகம் கவனிக்க வேண்டும். வயதானவர்கள் தான் அதிகம் வருகிறார் அப்போ ஒருத்தரை ஒருத்தர் தள்ளினால் அவர்கள் தடுமாறி விழ நிறைய வாய்ப்பு இருக்கு எங்கம்மா மயக்கம் வருதுன்னு வெளியே போயிடுச்சு அவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்தது சாமியை பார்க்கத்தான் ஆனால் அதையும் பார்க்க முடியவில்லை என்று பலருக்கு வருத்தம். 12 மணியளவில் நடை சாத்திவிடுவார்கள் என கூட்டம் வந்து தள்ளுகிறது ஆனால் நடை சாத்தவில்லை அதனால் நீங்கள் அமைதியாக கும்பிடலாம். கூகிளில் 12 மணிக்கு நடை சாத்துவதாக போட்டிருப்பதால் அந்த கூட்டம் சேர்கிறது. அதன்பிறகு மறுமுறை கூட்டம் குறைந்ததும் எங்கம்மாவை அழைத்து போய் சாமியை காட்டினேன்.
இங்குதான் எனக்கொன்று தோன்றியது வயது இருக்கும் போதே எல்லா கோவிலுக்கும் சென்று வந்துவிட வேண்டும் வயதான பிறகு அந்த கூட்டத்தில் நாம் சாமியை பார்க்கவும் முடியாது அதற்கு நமது உடல் நிலையும் இடம் கொடுக்காது வயது இருக்கும் போதே போகவேண்டிய கோவிலுக்கு சென்று வந்துவிடுவது நல்லது. ஏனென்றால் நம்மால் நம் கூட வந்தவர்களுக்கும் சிரமம் கொடுக்க கூடாது நம்மால் அவர்களுக்கும் கஷ்டம். வயசு இருக்கும் போதே நீங்களும் சென்று வந்துவிடுங்கள் வயதான பிறகு ரொம்ப கஷ்டம்.
இந்த கோவில் எங்கே இருக்கிறது என்றால் மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கப்பாடி வட்ட்தில் திருக்கடையூர் கிராமத்தில் இருக்கிறது. முன்பு தஞ்சை மாவட்டத்திலும் அதன்பிறகு நாகப்பட்டிணம் மாவட்டத்திலும் இருந்தது இப்போது மயிலாடுதுறையை மாவட்டமாக மாற்றியதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது.திருக்கடையூர் அபிராமி அந்தாதி பாடல் பெற்ற தலம். சம்பந்தர், அப்பர் சுந்தரர் ஆகியோரால் தேவராம் பாடப்பெற்று. காவேரி தென்கரையில் 47 வது சிவ தலமாகும். குங்கிலிக்காய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலங்களில் ஒன்று இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்து தள்ளினார் என்பது நம்பிக்கை..
மூலவர் அமிர்தகடேசுவரர்
உற்சவர்: காலசம்கார மூர்த்தி
தாயார்: அபிராமி
தலவிருட்சம் : வில்வம்
வரலாற்று காரணம் என்னவென்றால் இத்தலத்தில் மார்க்கண்டேயனின் ஆயுட்காலம் நிறைவடைய எமன் பாசக்கயிற்றை அவன் மீது வீச உடனே மார்க்கண்டேயன் சிவ லிங்கத்தை கட்டி அணைக்க சிவ லிங்கத்தின் மீது பாசக்கயிறு விழ சிவன் உருவ வடிவம் எடுத்து காலால் எமனை எட்டி உதைத்து நெற்றிக்கண்ணால் எரித்து கொன்றுவிட்ட பிறகு மார்க்கண்டேயனை காப்பாற்றினார் எனபது இத்தலத்தின் வரலாறு. அதனால் தான் வயது முதிர்ந்தவர்கள் தன் ஆயுட்காலம் நீடிக்க மணி விழா, பவள விழா சதாபிஷேசகம் என விழா எடுத்து கொண்டாடுகிறார்கள் இதற்கு மற்றொரு சிறப்பும் உண்டு தை அமாவாசை அன்று அம்பிகையின் முக அழகை கண்டு மெய்மற்று இன்று பவுர்ணமி என்று சரபோஜி மன்னரிடம் சொல்ல மன்னர் உடனே கோபமுற்றை அமாவாசை தினத்தை பவுர்ணமி என்று எப்படி சொன்னாய் கேட்க அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி பாடி அமாவாசையை பவுர்ணமி ஆக்கினார் என்பது வரலாறு.
இப்படி பல சிறப்பு அம்சம் கொண்ட இறைவன் இறைவியை தரிசனம் செய்தோம் என்ற மனநிறைவோடு நான் வீடு வந்து சேர்ந்தேன் நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள் விடுமுறை நாட்களில் செல்லாதீர்கள் மற்ற நாட்களில் செல்லுங்க சிறப்பாக தரிசனம் செய்யலாம்.