Showing posts with label திருவாசகம். Show all posts
Showing posts with label திருவாசகம். Show all posts

Sunday, 3 May 2015

அன்னைப் பத்து

சிறு பெண்ணொருத்தி தனது தாயிடம் இறைவனின் தன்மைகளை எடுத்துக் கூறுவது.

 கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர்
 உண்ணின் றுருக்குவர் அன்னே என்னும்
 உண்ணின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்
 கண்ணீர் தருவரால் அன்னே என்னும்

           உள்ளத்தே நீங்காது நின்று என்னை உருக்குபவர். அப்படி உருக்கிப் பேரின்பம் தருபவர். எனது வற்றாத கண்ணீர் ஆனந்தம் பெறுதற்கானது.

Saturday, 2 May 2015

திருச்சாழல்

              மகளீர் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. தடையும் தடைக்கேற்ற விடையும் பாடுவது. இருவருக்கிடையில் நிகழும் வாதம் போன்றது.

 பூசுவதும் வெள்நீறு பூண்பதுவும் பொங்குஅரவம்
 பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ
 பூசுவதும் பேசுவதும் கொண்டு என்னை
 ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பு ஆனான் சாழலோ.

           பூசுவது வெண்ணீறு, அணிவதோ சீறும் பாம்பு. பேசுவது நற்றமிழ் நான் மறை. இவற்றிடையே பொருத்தம் ஏதும் உண்டா? உண்டு. இயற்கையாகவும், உயிர்களனைத்துமாகவும் இறைவன் விளங்குவதுதான் அது. இறைவன் உண்மையில் இயற்கையின் வடிவம். மனிதனன்றோ தனது கற்பனையில் தோன்றியவாறெல்லாம் இறைவனை அலங்கரித்து அழகு பார்த்தான். நீறு பூசி, பாம்பு அணிவித்து, வேதம் ஒதப்பண்ணினான்.

Tuesday, 28 April 2015

10. திருக்கோத்தும்பி

          வண்டு தேனை நாடிப் பூவிடம் செல்வது போல நாமும் ஈசனை நாடிச் செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம்,

 பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த
 நா ஏறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
 மா ஏறு சோதியும் வானவரும் தாம்அறியாச்
 சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

         செந்தாமரையில் இருக்கும் பிரம்மாவும், இந்திரனும், அழகு பொருந்திய சரஸ்வதியும், நாரணனும், சந்திரசூரிய அக்கினியாகிய பெருமை மிக்க சோதிகளும், தேவர்களும் சிவபெருமானை முழுதாய் அறிந்து கொண்டவர்களல்ல. அத்தகைய ரிடப வாகனனைப் போற்றி அரசவண்டே நீ ரீங்காரம் செய்வாயாக.

Sunday, 26 April 2015

திருப்பொற்சுண்ணம்

          நறுமணப் பொருள்கள் பலவற்றை உரலிலிட்டு இடிக்கப்படுவது பொற்சுண்ணம். பொன்னிறமானது, பொன்னும் சேர்க்கப்படுவது. காதலன் நீராடத் தேவைப்படும் மணப்பொடிகளைக் காதலியும், தோழிகளும் இடிப்பது. அவனது புகழ்பாடிக் கொண்டே இடிப்பார்கள்.

 முத்துநல் தாமம் பூமாலை தூக்கி
            முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
 சத்தியும் சோமியும் பார்மகளும்
           நாமகளோடு பல்லாண்டிசைமின்
 சித்தியும் கௌரியும் பார்ப்பதியும்
           கங்கையும் வந்து கவரிகொண்மின்
 அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி
         ஆடற் பொற்சுண்ணம் இடித்தும்நாமே

Saturday, 25 April 2015

திருவம்மானை

கேட்டாயோ தோழிகிறிசெய்த வாறொருவன்
 தீட்டார் மதில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
 காட்டாதன எல்லாம் காட்டிச் சிவங்காட்டித்
 தாட்டாமரைக் காட்டித் தன் கருணைத் தேன்காட்டி
 நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
 ஆட்டான் கொண்டு ஆண்டவா பாடுதுங்காண்.

          தோழியே ஒருவன் எனக்குச் செய்த மாயத்தைக் கேட்டாயோ? சித்திரங்கள் தீட்டிய மதிள் சூழ்ந்த திருப்பெருந்துறைப் பெருமான் எனக்குக் காட்டுவதற்கு அரியன காட்டினான். தன் திருவடிகளையும் காட்டினான். அருளாகிய தேன் காட்டினான், சிவபரம் பொருளைக் காண்பித்துத் தன்னுடைய அடிமையாக்கிக் கொண்டதை நாம் பாடுவோம்.

Sunday, 19 April 2015

7.திருவெம்பாவை

            நான் இந்த திருவாசகத்தை வாசிக்கும் போது என்னைக் ரொம்ப கவர்ந்ததும், ஒரு தொடராக பதிவு செய்ய வேண்டுமென்று நினைக்க வைத்ததும் 'திருவெம்பாவை' பகுதிதான் ஏனோ என்னை வெகுவாக ஈர்த்தது. நீங்களும் வாசித்து பாருங்கள் பிடிக்கும். அதாவது இலக்கியத்திலும், நடைமுறை வாழ்க்கையிலும் சரி நண்பர்கள் பேசிக்கொள்வது என்பது சுவாரஸ்யமானவை.

        இங்கேயும் தோழிகள் பேசிக்கொள்வது போல்தான் அமைந்திருக்கிறது அதவும் ரசிக்கும்படி இருக்கிறது. சரி வாருங்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று சற்று காதுக்கொடுத்து கேட்போம்.

           மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்றார் பகவான். பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வது சிறந்தது. மார்கழி மாதத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்து கொள்வதற்குப் பாடப்பட்டது திருவெம்பாவை.

Saturday, 18 April 2015

நீத்தல் விண்ணப்பம்

         பெண்ணையும், பொன்னையும் நாடுகிறவர்கள், காமத்தை விரும்பி ஏற்கிறவர்களுக்கு நோய்வாய்பட்டு இந்த உடல் அழிந்துவிடும் என்கிறார் மாணிக்கவாசகர்.

 காருறு கண்ணியரைம்புல
         னாற்றங் கரைமரமாய்
 வேருறுவேனை விடுதிகண்
         டாய் விளங்குந்திருவா
 ரூருறை வாய்மன்னு முத்தர
        கோசமங்கைக் கரசே
 வாருறு பூண்முலையாள் பங்க
        வென்னை வளர்ப்பவனே

        ஆற்றங்கரையில் வளர்கின்ற மரம் வெள்ளத்தால் அழிந்து போகும் ஐம்புலன்களும் காமம் என்கிற பிணிவாய்பட்டு அழிந்துவிடும்(கரைபுரளும் வெள்ளம் அரிப்புண்டு பண்ணுவதுபோல் காமமும் அழிவை உண்டு பண்ணும்) அதனால் என்னை நல்வழிப்படுத்து இறைவா என்கிறார். அழிவு என்பது போகிக்கு மட்டுமல்ல அவனுடைய போகத்தில் பங்குபெற்ற புலன்களுக்குமுண்டு.

5.திருச்சதகம்

         இறைவனை பக்தியோடு வணங்கினால் என்ன நிகழும் உடல் சிலிர்க்கும், கண்ணீர் பெருகும், தன்னையும் மீறி கையெடுத்து வணங்கும். இதைதான் மாணிக்கவாசகர் மெய்யுணர்தல் என்கிறார். 

மெய்தானரும்பி விதிர் விதிர்த்
         துன் விரையார் கழற்கென்
 கைதான் றலைவைத்துக் கண்ணீர்
         ததும்பி வெதும்பியுள்ளம்
 பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
         சயசய போற்றியென்னுங்
 கைதான் நெகிழ விடேனுடை
         யாயெனைக் கண்டுகொள்ளே

          உனது திருவடியை நாடுகின்ற எனது உடல் புளகித்து நடுநடுங்குகிறது. தலைமேல் கைகுவித்து உன்னை வணங்குகிறேன். என் கண்கள் கண்ணீரைப் பெருக்குகின்றன. உள்ளம் பக்திக் கனலால் வெதும்பும். பொய்மை தவிர்த்து மெய்ம்மை நிற்கும். என் நாவும் உன்னை வாழ்த்தும். தலைமேல் குவிக்கப்பட்ட கைகளோ தம்மை மறந்து குவித்த வண்ணமே இருக்கும்.

4. போற்றித் திருவகல்

            கடவுள் இல்லை என்பர்கள் நாத்திகம் வாதம் செய்வார்கள் அவர்களுக்கு என்ன சொல்கிறார் பாருங்கள் மாணிக்கவாசகர்.

           'ஆத்த மானா ரயலவர் கூடி
           நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்'

            உற்றாரும், பக்கமுள்ளாரும் தங்கள் நாவில் தழும்பேறும் அளவுக்கு கடவுள் இல்லையென்கிற நாத்திக வாதம் பேசுகின்றனர். இதுவும் மாயை செய்கிற லீலைகளில் ஒன்று. மாயை என்றாலே மயக்குதான். அது கண்ணை மறைக்கும், அறிவை மயக்கும்.

3. திருவண்டப் பகுதி

       'நீற்றோன் காண்க நினைதொறு
        நினைதொறு மாற்றோன் காண்க வந்தோ கெடுவேன்'

            திருநீறு பூசியவனைக் கண்டு கொள்க. அவனை நினைக்குந்தோறும் அவனிடத்துப் பக்தி பெருகுகிறது. இன்ப உணர்வு மிகுகிறது. அவனை மறந்திருக்க என் மனம் சகியாது. ஒருவேளை அவனை மறந்தால் நான் கெட்டொழிவேன்,

Monday, 13 April 2015

கீர்த்தித் திருவகவல்

         பழமை வாய்ந்த புண்ணியத் தலமான சிதம்பரத்தில் நடனம் புரியும் நடராஜன் உயிர்கள் அனைத்திலும் இனிதே இடம் பெற்றிருக்கிறான்.

          எங்கே பக்தியிருக்கிறதோ அங்கே இறைவன் விரும்பிக் குடிகொள்கிறான். பாவங்களைப் போக்கி யருள பூவலம் என்னும் ஊரில் நீ காட்சியளித்த பெருமை உண்டு.

Tuesday, 7 April 2015

திருவாசகம்

          'பரந்து கிடக்கின்ற அண்டமானதால் பரம்பொருள் என்றும், கடந்து நிற்பதால் கடவுள் என்றும் குறிக்கப்பெற்றவன். அவனை அருவமானவன் என்பார்கள். ஆனால் லட்சோப லட்சத் தாரகைகள் மூலம் தன்னுடைய இருப்பை அவன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். கோடான கோடி உயிரனங்கள் பொருந்திக் கிடக்கிற உலகில் ஒரு சீர்த்தன்மை காணப்படுகிறது. வினையின் விளைவாய் உடலெடுத்து ஐம்பொறிகளின் கட்டுப்பாட்டில் அகப்பட்டுக் கிடக்கிற நான் அகிலத்து நாயகனை எப்படி அறிந்து போற்றுவது?

Monday, 6 April 2015

திருவாசகம்/ ஆன்மீகம்

          எனக்கு திருவாசகம் படிக்க இப்போதுதான் வாய்த்திருக்கிறது. ஒரு பிரதோஷ நாளில் இந்த புத்தகம் என் கண்ணில் பட்டது ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. எடுத்துப் படிக்கத் தொடங்கினேன் ஒரு 5,6 பக்கங்களை கடந்திருப்பேன் என் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து உருகியது "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கு உருகார்" என்று சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன் நான் அதை இப்போது உணர்ந்தேன். இதைப் படிக்கும்போது ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்தேன் படிக்க படிக்க சிறு கட்டுரையாக போட முடியாது அப்படி எழதினால் முழுமையாகாது திருப்தி கிடைக்காது என்று தோன்றியது அதனால் ஒரு தொடராக எழுதலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

          ஒருவர் கடவுளின் மீது இத்தனை காதல் வைத்திருக்க முடியுமா? இத்தனைப் பக்தி வைத்திருக்க முடியுமா? முடிந்திருக்கிறது அதனால்தான் தெய்வ மாந்தராக திகழ்கிறார் மாணிக்கவாசகர்.