Saturday, 18 April 2015

3. திருவண்டப் பகுதி

       'நீற்றோன் காண்க நினைதொறு
        நினைதொறு மாற்றோன் காண்க வந்தோ கெடுவேன்'

            திருநீறு பூசியவனைக் கண்டு கொள்க. அவனை நினைக்குந்தோறும் அவனிடத்துப் பக்தி பெருகுகிறது. இன்ப உணர்வு மிகுகிறது. அவனை மறந்திருக்க என் மனம் சகியாது. ஒருவேளை அவனை மறந்தால் நான் கெட்டொழிவேன்,


          திருநீறு ஒன்றை எரித்துப் பெற்றது. அது ஆசையை எரித்துவிடு என்று பொருள்படும். அவனது கோலத்தைக் கண்ட பின்னும் உலகப்பற்றை விடாது வாழ்வது தகுமோ? அவனது கோலத்தைக் காணவும், நினைக்கவும் தவறியவர்கள் கெட்டழிய நேரிடும் என்பதை மறைமுகமாய் உணர்த்தவே அந்தோ கெடுவேன் என்றுரைத்தது.

          'சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க 
         பக்தி வலையிற்படுவோன் காண்க'

          மனதுக்கு எட்டாததனால் அவன் தூரத்தில் இருப்பது போன்று காணப்படலாம். ஆனால் பக்தியின் மூலம் அவனை நாம் முற்றிலும் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

        தெய்வீக வாழ்வில் சிந்தை வைத்தவர்களுக்கு லௌகீக வாழ்வின் துன்பங்கள் பொருட்டில்லை. மனம் பாரத்தில் லயித்திருப்பின் இகத்தை ஏன் எண்ணப்போகிறது, எண்ணிக் கலங்கப் போகிறது.

            அகத்தினழகு முகத்தில் என்பார்கள்.
புனிதம் நிறைந்த மனம் நெறியான வாழ்க்கை வாழும். எப்போதும் தெய்வீக சிந்தனையில் திளைத்திருப்பதால் கிடைக்கும் ஒளி முகத்திலும் விகசிக்கும்.

          அறிவும், ஒழுக்கமும் இருந்தால் மட்டும் ஒருவனுக்கு இறையனுபவம் கிட்டிவிடாது, இறைவனது அருள் தேவை. ' ஒருவர் தமது உறவும், நட்பும் கண்டு வருந்துமளவுக்குக் கடுந்தவம் புரிந்தாலும் இறைவனை காண முடியாது.

          தமது உடம்பை வருத்தி இறைவனை அடைய முற்படுவது ஒருவருடைய அகந்தையின் வெளிப்பாடாகவோ, அறியாமையின் விளைவாகவோதான் இருக்க முடியும். இறைவனின் பார்வையில் அது முறை தவறிய வழிபாடாகவே இருக்கும். அகந்தையற்றிருப்பதே ஒரு வழிபாடுதான். அதுவே இறைவனுக்குகந்ததாகும்.

            சாத்திரம் அறிவுகொண்டு தன்னைப் பார்த்திட முயல்வோர்க்கு இறைவன் தோன்றுவதில்லை.

        'ஐம்புலன் செல விடுத்தருவரை தொறும்போய்த்
        துற்றவை துறந்து வெற்றுயிராக்கை
        யருந்தவர் காட்சியுட்டிருந்த வொளித்தும்'

         ஐம்பொறிகளின் செயல்களை ஒதுக்கி, உணவையும் அறவே துறந்து, மலைகளினிடையே சென்று குற்றுயிரோடு தவம்புரிந்தார்க்கும் ஈசன் எட்டுவதில்லை.


                                         - தொடரும்

No comments:

Post a Comment