Saturday, 18 April 2015

5.திருச்சதகம்

         இறைவனை பக்தியோடு வணங்கினால் என்ன நிகழும் உடல் சிலிர்க்கும், கண்ணீர் பெருகும், தன்னையும் மீறி கையெடுத்து வணங்கும். இதைதான் மாணிக்கவாசகர் மெய்யுணர்தல் என்கிறார். 

மெய்தானரும்பி விதிர் விதிர்த்
         துன் விரையார் கழற்கென்
 கைதான் றலைவைத்துக் கண்ணீர்
         ததும்பி வெதும்பியுள்ளம்
 பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
         சயசய போற்றியென்னுங்
 கைதான் நெகிழ விடேனுடை
         யாயெனைக் கண்டுகொள்ளே

          உனது திருவடியை நாடுகின்ற எனது உடல் புளகித்து நடுநடுங்குகிறது. தலைமேல் கைகுவித்து உன்னை வணங்குகிறேன். என் கண்கள் கண்ணீரைப் பெருக்குகின்றன. உள்ளம் பக்திக் கனலால் வெதும்பும். பொய்மை தவிர்த்து மெய்ம்மை நிற்கும். என் நாவும் உன்னை வாழ்த்தும். தலைமேல் குவிக்கப்பட்ட கைகளோ தம்மை மறந்து குவித்த வண்ணமே இருக்கும்.



         உன்னை தரிசிக்கின்றபோது பக்தி உணர்வால் உடல் நடுங்கி, உள்ளம் நெகிழ்ந்து, கண்ணீர் ததும்பி அன்பு மேலீட்டால் கரம் குவித்து உன்னை நாவார வாழ்த்தி வணங்குபவர் யாரோ அவரை உண்மை அடியாராய்க் கண்டு கொள்க. அவ்வாறில்லாதவர் உன்னிடம் வரம் வேண்டிப் பெறுதற்பொருட்டு வந்த பொய்யடியாரெனக் கண்டு கொள்க என இருபொருள் படும்படி கண்டு கொள்க என்னும் சொற்களால் கூறினார்.

            தன்னுடைய பக்தியில் ஒருவேளை நடிப்பு இருக்குமோ எனக் கருதிய மாணிக்கவாசகர்

நாடகத்தாலுன்னடியார்
           போனடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான்
          மிகப் பெரிதும் விரைகின்றே
னாடகச் சீர் மணிக்குன்றே
          யிடையறா வன்புனக்கென்
 னூடகத்தே நின்றுருகத்
          தந்தெருளெம் முடையானே

         என்னுடைய இயல்பில் ஒன்றாத பக்தி நாடகத்தில் நடிப்பது போன்றது. ஆனாலும்  முக்தி பெற நான் அவசரப்படுகிறேன். எப்போதும் உன்னை நினைத்து உருகியிருப்பின் என் உள்ளம் தூயதாகியிருக்கும்.

        நாம் இறைவனிடம் எதைக் கேட்பதற்கு முன்பும் அதைப் பெறுவதற்கு நம்மைத் தகுதியுடையவராக்கிக் கொள்ள வேண்டும்.

        இறையுணர்வு இல்லாத மனம் பிணத்துக்குச்சமம். அது இறைவனின் துணையின்றி உயர்நிலையை எட்ட முடியாது.

          மனிதர்கள் தங்கள் தோல்விக்கும், துன்பத்துக்கும் அடுத்தவர்களைத்தான் காரணம் காட்டுவார்கள்.

 ஏனையாவரு மெய்திடலுற்றுமற்
          றின்ன தென்றறியாத
தேனை யானையைக் கரும்பினின்றேறலைச்
         சிவனையென் சிவலோகக்
கோனை மானென நோக்கிதன் கூறனைக்
         குறுகிலே னெடுங்காலம்
ஊனையானிருந் தோம்புகிறேன் கேடு
         வேனுயிரோயாதே

           பக்தரல்லாத மற்றவர்க்கு சிவசொரூபம் எத்தகையது என்பது தெரியாது.

         சிவனை நாடுகின்றவர்களுக்குத் தேன், பசு, நெய், கரும்பின் சாறுபோன்று சிவானந்தம் பெருகும். நல்லது செய்த கடவுளுக்கு கைமாறாக என்னக் கொடுக்கலாம் பல வேண்டுதல்களை நாம் முன் வைப்போம். ஆனால் மாணிக்கவாசகர் என்ன சொல்கிறார் பாருங்கள்.

           மனிதர்களுக்குக் கைம்மாறு கொடுக்கலாம். இறைவனுக்கு எதைக் கொடுப்பது? பிரதிப்பொருள் கொடுக்கவியலாதவர் நன்றி பாராட்டுவது போல இறைவனது பேரருளை எண்ணியிருப்பதே மனிதர்கள் அவனுக்குச் செய்யக்கூடிய கைம்மாறு. என்கிறார்.

          நாயைப்போலவே நல்லது கெட்டது பாராமல், எவ்வித நோக்குமின்றி அலைந்து திரிகிறது மனம். தெய்வீக நிலையை அடைவதில் மனித முயற்சி ஒருபுறம் இருந்தாலும் அத்தெய்வத்தின் கருணை அமையப் பெறுவது முக்கியம். மேலான உணர்வு மேலான அறிவைத் தரும்.

'போற்றியோ நமச்சிவாய
           புயங்கனே மயங்குகின்றேன்
போற்றியோ நமச்சிவாய
           புகலிடம் பிறிதொன்றில்லை
போற்றியோ நமச்சிவாய
           புறமெனைப் போக்கல்கண்டாய்
போற்றியோ நமச்சிவாய
          சயசய போற்றி போற்றி

          இந்த உலக வாழ்க்கையில் அழுந்திக் கிடக்கிற எனக்கு நீயே கதி. என்னை நீதான் அதிலிருந்து விடுவிக்க வேண்டும். என்கிறார் மாணிக்கவாசகர்.

                                                    -தொடரும்

No comments:

Post a Comment