Monday, 6 April 2015

திருவாசகம்/ ஆன்மீகம்

          எனக்கு திருவாசகம் படிக்க இப்போதுதான் வாய்த்திருக்கிறது. ஒரு பிரதோஷ நாளில் இந்த புத்தகம் என் கண்ணில் பட்டது ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. எடுத்துப் படிக்கத் தொடங்கினேன் ஒரு 5,6 பக்கங்களை கடந்திருப்பேன் என் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து உருகியது "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கு உருகார்" என்று சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன் நான் அதை இப்போது உணர்ந்தேன். இதைப் படிக்கும்போது ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்தேன் படிக்க படிக்க சிறு கட்டுரையாக போட முடியாது அப்படி எழதினால் முழுமையாகாது திருப்தி கிடைக்காது என்று தோன்றியது அதனால் ஒரு தொடராக எழுதலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

          ஒருவர் கடவுளின் மீது இத்தனை காதல் வைத்திருக்க முடியுமா? இத்தனைப் பக்தி வைத்திருக்க முடியுமா? முடிந்திருக்கிறது அதனால்தான் தெய்வ மாந்தராக திகழ்கிறார் மாணிக்கவாசகர்.


            திருவாசகம் 51 திருப்பதிகங்களுடன் திகழ்கிற நூல், பாடல்களின் தொகை 656 தத்துவ விளக்கத்தில் தலைசிறந்து நிற்கிறது திருவாசகம். மாணக்கவாசகரின் ஆன்மிக பரிபக்குவ நிலைக்கு எடுத்துக்காட்டு இந்நூல். பொதுவாக மனிதர்களிடம் காணப்படுகிற கீழ்மையை, அற்பத்தனங்களை, வழுவல்களை தம்முடையாதக ஏற்று உரைக்கிறார் மாணிக்க வாசகர்.


           "நாயினேன், கடையேன், அற்பன் என்கிற வார்த்தைகள் நூல் நெடுகிலும் வருகிறது அது அவரின் அடக்கைத்தையும், உயர் பண்பையும் காட்டுகிறது. தெய்வ விஷயங்கள் ஒரு போதும் மனஞ்சலிக்கச் செய்வதில்லை. பரம்பொருள் பற்றித் திறம்பட விளக்கும் இந்நூல் ஒரு பக்தரின் அனுபவத்தை முழுமையாக விளக்குகிறது.

          இதில் பாருங்கள் எல்லா இடங்களிலும் தன்னைத் தாழ்த்தியே குறிப்பிடுகிறார். திகட்டாத பேரானத்தத்தை வழங்கி நம்மைக் காக்கும் சிவனுக்கு மலைபோல் கருணைகொண்ட மகேசனுக்கு வணக்கம்.

                                      'சிவனவனென சிந்தையு ணின்ற வதனா
                                       லவனரு ளாலே யவன்றாள் வணங்கி'

           எப்போதும் எனது சிந்தையில் நிறைந்திருக்கும் சிவனை அவனருள் கொண்டே அவனடி தொழுவேன். சிவனை வணங்கும் பெரும்பேற்றைப் பெறுவதற்கும் அவனுடைய அருள் வேண்டும்.

          மணம் கொண்டு பூவையும், ஒளிகொண்டு நிலவையும் அறிவது போல அருள் கொண்டு இறைவனை அறிகிறோம். எந்த அளவு அறிந்திருக்கிறோமோ அந்த அளவு அவனுக்கு ஆட்பட்டவனாவோம். '

                                       சிந்தை மகிழச்சிவ புராணந்தன்னை
                                      முந்தை வினைமுழுது மோய வுரைப்பனியன்'

          எனது வினைகள் தீர்த்துப் பேரானந்தம் அளிக்கவல்ல சிவ தத்துவங்களை சிரத்தையுடன் ஒதுவேன்.என்கிறார் மாணிக்கவாசகர்

                                                                                                         -தொடரும்

No comments:

Post a Comment