Sunday, 26 April 2015

திருப்பொற்சுண்ணம்

          நறுமணப் பொருள்கள் பலவற்றை உரலிலிட்டு இடிக்கப்படுவது பொற்சுண்ணம். பொன்னிறமானது, பொன்னும் சேர்க்கப்படுவது. காதலன் நீராடத் தேவைப்படும் மணப்பொடிகளைக் காதலியும், தோழிகளும் இடிப்பது. அவனது புகழ்பாடிக் கொண்டே இடிப்பார்கள்.

 முத்துநல் தாமம் பூமாலை தூக்கி
            முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
 சத்தியும் சோமியும் பார்மகளும்
           நாமகளோடு பல்லாண்டிசைமின்
 சித்தியும் கௌரியும் பார்ப்பதியும்
           கங்கையும் வந்து கவரிகொண்மின்
 அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி
         ஆடற் பொற்சுண்ணம் இடித்தும்நாமே


          நல்ல முத்து மாலைகளையும், பூமாலைகளையும் தொங்கவிட்டு முளைக்குடம், தூப கலசம், தீபம் வையுங்கள். கொற்றவையும், திருமகளும், நிலமகளும், சரஸ்வதியோடு கூடிப் பல்லாண்டு பாடுங்கள். சித்தியும்,கௌரியும், பார்வதியும் , கங்கையும் வந்து சாமரம் வீசுங்கள். திருவையாற்றுக் கடவுளாகிய நம் தந்தையைப் பாடி நாம் மணப்பொடி அடிப்போமாக.

 சுந்தர நீறணிந்தும் மெழுகித்
       தூய பொன் சிந்தி நிதிபரப்பி
 இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
      எழிற்சுடர் வைத்துக் கொடி எடுமின்
 அந்தரர் கோன் அயன் தன்பெருமான்
      ஆழியான் நாதன்நல் வேலன் தாதை
 எந்தரம் ஆளுமையாள் கொழுநற்கு
 ஏய்ந்த பொற்சுண்ணம் இடித்தும்நாமே


        அழகிய திருநீறணிந்து, தரைமெழுகி, புனிதமான பொற்பொடிகளைச் சிதறி, நவதான்யங்கள் பரப்பி, இந்திரனுக்குரிய கற்பகமரத்தை நட்டு, எல்லா இடங்களிலும் தீபம் வையுங்கள். கொடிகளைக் கட்டுங்கள். இந்திரனுக்கும் பிரம்மாவுக்கும் தலைவன், திருமாலுக்கு நாயகன், முருகனுக்குத் தந்தை, எம் போன்றவர்களை ஆட்கொண்ட உமையின் கணவன். இத்தகைய பரமனுக்குப் பொருந்திய பொற்சுண்ணம் இடிப்போமாக.


முத்தணி கொங்கைகள் ஆட ஆட
        மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
செங்கயற்கண்பனி ஆட ஆடப்
       பித்தெம்பிரானொடும் ஆட ஆடப்
பிறவிபிறரொடும் ஆட ஆட
      அத்தன் கருணையொடு ஆட ஆட
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே

           முத்துமாலைகள் அணியப்பட்ட கொங்கைகள் அசைந்தாடவும், வண்டுகள் திரண்டிருக்கும் மலர்க்கூந்தல் அசைந்தாடவும், மனமானது சிவனிடம் லயப்பட்டிருக்கவும், சிவந்த கெண்டை மீன் கண்போன்ற கண்களில் நீர் அரும்பவும், பேரன்பு சிவபெருமான்பாற் செல்லவும் நாம் இறைவனுக்கு சுண்ணமிடிப்போமாக.

        இந்த பாடல் வரிகளை படிக்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? எனக்கு என்ன ஞாபகத்திற்கு வருகிறது என்றால் கண்ணதாசனின் பாடல் வரிகள்தான் "கட்டோடு குழலாட ஆட ஆட" ஒருவேளை இதை வைத்துதான் அதை எழுதியிருப்பாரோ?

                                                     -தொடரும்.

No comments:

Post a Comment