Monday, 13 April 2015

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

         பாட்டுக்கு கோட்டையாக விளங்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்த நாள் இன்று 13.4.1930 எங்க ஊர் கவிஞர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம். எங்க ஊரிலிருந்து 3 கிமீ தொலைவிலே உள்ளது செங்கப்படுத்தான்காடு கிராமம் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செங்கப்படுத்தான்காடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தனது 15 வது வயதில் 

ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே
 கரை ஓரத்தில் மேயாதே கெண்டை குஞ்சே
 தூண்டில்காரன் வரும் நேரமாச்சு
 ரொம்ப துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே


              என்று கவிதை எழுத தொடங்கி தனது 1955 ல் திரையுலகில் படித்த பெண் படத்தின் தடம் பதித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து 15.8.1959 ல்

செக்கச் சிவந்த செழுங்கதி ரோனும்
 கிழக்கினில் வந்துவிட்டான் - புற
 மக்கள் மதிக்கண் விழித்துக் கிளம்பிட
 வானில் உதித்து விட்டான்

              என்ற தனது இறுதி கவிதையை முடித்து 8.10.1959 ல் தனது இன்னுயிரை நீத்தார்.

             இவர் திரையுலக வாழ்க்கையில் மட்டுமல்ல வாழ்நாளும் குறுகிய நாட்களாக அமைந்து விட்டது. அந்த குறுகிய காலத்திலே அவர் எடுத்துக்கொண்ட பரிமாணங்கள் ஏராளம்.

             1. விவசாயி, 2. மாடுமேய்ப்பவர், 3. மாட்டு வியாபாரி, 4. மாம்பழ வியாபாரி, 5. இட்லி வியாபாரி, 6. முறுக்கு வியாபாரி, 7. தேங்காய் வியாபாரி, 8. மீன் வியாபாரி, 9. தண்ணீர் வண்டிக்காரர், 10. நடனக்காரர், 11. பாடகர், 12. உப்பளத் தொழிலாளி 13. கீற்று வியாபாரி, 14. அரசியல்வாதி, 15. மிஷின் டிரைவர் 16. பாடகர், 17.கவிஞர் என்று பல முத்திரைகளை பதித்தவர்.

           இவரின் பாடல்கள் பெரும்பாலும் உழைப்பவர்களைப் பற்றியே அதிகம் இருந்தன. இவரின் ஒவ்வொரு பாடல்களும் கருத்துள்ள சிந்தனை முத்துக்களா வெளிவந்தது. மனிதர்களின் குணங்களைப் பற்றியும், திருட்டு, ஏமாற்று, மூட நம்பிக்கை, கற்பு நெறி, ஏழைகளின் உழைப்பு ஆகியவைகளைப் பற்றியே அதிகம் இருந்தது.

           சமுதாய சிந்தனைகளை மக்களிடத்தில் எடுத்துச் சென்ற ஒரே கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இவரின் அனைத்து பாடல்களும் வலிமையானவை அதனால்தான் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டன.  

             சக்கரவர்த்தி திருமகள் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல்

உறங்கையிலே பானைகளை உருட்டுவது
பூனைக்குணம் - காண்பதற்கே
 உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே
குரங்கு குணம் - ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று இரையாக்கல்
 முதலைக் குணம் - ஆனால்
இத்தனையும் மனிதரிடம் மொத்தமாய் வாழுதடா

             என்று மனிதனின் குணங்களை விலங்கோடு ஒப்பிட்டு காட்டுகிறார் கவிஞர்.

           திருட்டு என்பது எவ்வளவு மோசமனா தொழில் அதை சிறியவர்களுக்கு சொல்வது போல் பெரியவர்களுக்கு உணர்த்துவது இவரது தனிச் சிறப்பு. குழந்தையிலே பிள்ளைகள் நல்லவனாக வரவேண்டும் என்று தனது சிந்தனைகளை புகுத்தியவர்.


திருடாதே பாப்பா திருடாதே
 வறுமை நிலைக்குப் பயந்து விடாதே திறமையிருக்கு மறந்துவிடாதே
 சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து - தவறு
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமல் நடந்திருந்தா - அது
 திரும்பவும் வராமே பார்த்துக்கோ

              என்று அருமையாக சொல்லியிருக்கிறார்.

           நாடோடி மன்னன் படத்தில் சௌந்தரராஜன் பாடிய பாடல் எத்தனை தத்துவமான பாடல் சோம்பேறிகளைத் தட்டி எழுப்புகின்ற ஒரு பாடல்.

தூங்காதே தம்பி தூங்காதே - நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே நீ
தாங்கிய உடையும் ஆயுதமும் பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தியிருந்தால் உன்னைக் கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடங்கொடுக்கும். இந்த பாடல்களின் ஒவ்வொரு வரியும்
தத்துவ நிறைந்த வரிகள்.

                இவரின் பாடல்கள் திருடர்களைப் பற்றி சொன்னது, சோம்பேறிகளைப் பற்றி சொன்னது அடுத்து உழைப்பாளிகளை சொல்கிறார் இப்படி

சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்பலில்லாமல் ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்திக் கட்டி
கரும்பு கரையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு - வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு - அட காடு வெளைஞ்சென்ன மச்சான் -
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்

என்று ஒரு கணவனும் மனைவியும் பாடுவதாக கேள்வி பதிலாக அமைந்திருக்கிறது இந்த பாடல். இத்தனை விஷயங்களை சொன்னவர் அடுத்து பெண்ணின் கற்பு நெறியை எத்தனை அற்புதமாக கவியில் புகுத்துகிறார்.
       
           கல்யாண பரிசு படத்தில் ஏ எம் ராஜாவும் சுசிலாவும் பாடிய பாடல்

காதலன்:

வாடிக்கை மறந்ததும் ஏனோ என்னை
வாட்டிட ஆசைதானோ பல
 கோடி மலரழகை மூடி வைத்து
மனதை கொள்ளையடிப்பதும் ஏனோ

          காதலன் கை காதலியின் கையை தீண்டிவிடுகிறது. உடனே காதலி

பொறுமை இழந்திடலாமோ
பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ
நான் கருங்கல்லுச் சிலையோ
காதலெனக்கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ

             என்று காதலை சுட்டு விரல்க்காட்டி எச்சரிக்கிறாள் அடுத்து, எங்கே அடிக்கிறார் பாருங்கள் பதிபக்தி படத்தில் டிஎம்எஸ் சந்திரபாபு பாடிய பாடல் மூடநம்பிக்கையை சாடுவதாக இந்த பாடல் அமைந்திருக்கும்

தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்
 சரித்திரத்தைச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டு
தன்மான வீரரென்பார்
மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்ம வினையென்பார்
பிரமனெழுத்தென்பார்
கடவுள் மேல் குற்றமென்பார் இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கனும் அண்ணாச்சி - நாம
 ஒண்ணாயிருக்கனும் அண்ணாச்சி

              என்று கடவுளின் பேரைச் சொல்லி ஏமாற்றும் போலிகளைப் பற்றி சொல்லியிருக்கிறார்.
இவரின் பாடல்கள் அனைத்தும் பல கருத்துக்களை மக்களுக்கு சொல்கிறது. குறுகிய காலக் கட்டத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து மக்கள் கவிஞர் என்று பெயரெடுத்தவர். சமூக சீர்த்த கருத்துக்களை தன் கவியில் புகுத்திய கவிஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

2 comments:

  1. Puththandu vaalththu...

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete