Sunday 19 April 2015

7.திருவெம்பாவை

            நான் இந்த திருவாசகத்தை வாசிக்கும் போது என்னைக் ரொம்ப கவர்ந்ததும், ஒரு தொடராக பதிவு செய்ய வேண்டுமென்று நினைக்க வைத்ததும் 'திருவெம்பாவை' பகுதிதான் ஏனோ என்னை வெகுவாக ஈர்த்தது. நீங்களும் வாசித்து பாருங்கள் பிடிக்கும். அதாவது இலக்கியத்திலும், நடைமுறை வாழ்க்கையிலும் சரி நண்பர்கள் பேசிக்கொள்வது என்பது சுவாரஸ்யமானவை.

        இங்கேயும் தோழிகள் பேசிக்கொள்வது போல்தான் அமைந்திருக்கிறது அதவும் ரசிக்கும்படி இருக்கிறது. சரி வாருங்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று சற்று காதுக்கொடுத்து கேட்போம்.

           மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்றார் பகவான். பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வது சிறந்தது. மார்கழி மாதத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்து கொள்வதற்குப் பாடப்பட்டது திருவெம்பாவை.


ஆதியுமந்த முமில்லா வரும்பெருஞ் சோதியை
 யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
 மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
 மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
 வீதிவாய்க் கேட்டாலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
 போதார் அமளியின் மேல்நின்றும் புரண்டிங்ஙன்
 ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
 ஈதே எம்தோழி பரிசேலோர் எம்பாவாய்.

            முதலும் முடிவும் இல்லாத அறிவுப் பேரொளியை நாங்கள் போற்றி பாடினோம். ஆனால், ஒளிபொருந்திய அகன்ற விழிகளை உடைய தோழி, நீ ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறாய்? நாங்கள் மாதேவனை வாழ்த்தும் ஒலி உன் காதில் கேட்கவில்லையா? அது தெருவெல்லாம் கேட்கிறதே. அதைக் கேட்ட வேறொரு பெண் எழுந்தாள், தேம்பியழுதாள், படுக்கையினின்று புரண்டு விழுந்து மயங்கிக்கிடந்தாள். என் தோழியே உன் நிலை என்ன? இதுவா உன் தன்மை? சொல்வதை ஏற்று ஆராய்ந்து பார்.

 பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும் போதெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையும் சிலவோ விளையாடி
 ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசுமலர் பாதம் தந்தருள் வந்தருளும்
 தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பர்யாம் ஆரேலோர் எம்பாவாய்.

            ஒளிவடிவினனாகிய இறைவனைப்பற்றி நாம் பேசும் போதெல்லாம் உன் அன்பு அவனுக்கே உரியது என்பாய். இப்போது மலர் தூவிய படுக்கையின் மீது உனக்கு அன்பு ஏற்பட்டுவிட்டதோ (வந்தவள் சொல்கிறாள்) தோழியரே இப்படிப் பரிகசித்து விளையாட இதுவல்ல நேரம், இடமும் இதுவல்ல (எழுந்தவள் சொல்கிறாள்)

ஒண்ணித்தில் நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளி மொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கொரு மருந்தை வேதவிழுப் பொருளைக்
கண்ணுக் கினியானைக் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்

           ஒளி முத்துப்பல் வரிசை உடையவளே! உனக்கு இன்னும் விடியவில்லையா? (எழுப்ப வந்தவர் சொல்கிறாள்)

         கிளிபோல் மொழியுடைய எல்லோரும் வந்தார்களோ? (எழுந்தவர் கேட்கிறாள்)

        எண்ணிப்பார்த்துச் சொல்கிறோம். நீ அதற்கிடையில் கண்ணுறங்கிக் காலம் கழிக்காதே. ஒப்பில்லாத அமிழ்தமும், வேதங்களில் சிறந்த பொருளும் ஆகிய சிவனின் புகழைப் பாடி கசிந்துருகுவாயாக. வந்தவரை எண்ணவேண்டுமானால் நீயே எழுந்து வந்து எண்ணிக்கொள். நீ நினைக்கிற எண்ணிக்கைக்குக் குறைவாய் இருந்தால் திரும்பவும் உறங்கப் போகலாம்.

மானேநீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றாலும் நாணாமே
 போனதிசை பகராய் இன்னம் பலர்ந்தின்றோ
வானேநிலனோ பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலை அளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல் பாடிவந்தோர்க்குன் வாய்திறவாய்
உனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.

        மான்போன்ற பார்வை உடையவளே, நாளை நானே முந்தி வந்து உங்களை எழுப்புவேன் என நேற்று நீ சொன்னாய். நாணமின்றி அச்சொல் போன இடம் எங்கே? பொழுது விடிய வில்லையா? விண்ணவரும், மண்ணவரும் அறிய முடியாதவன் வலிய வந்து நம்மை ஆட்கொண்டருளினான். அவனுடைய மேலான திருவடிகளை நாம் பாடி வந்தோம். வந்திருக்கும் எங்களை முன்னிட்டாவது இறைவனைப் புகழ்ந்து பாடு, உள்ளம் உருகு. இவை உனக்குத்தான் பொருந்தும், இதனை எண்ணிப்பார்.

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையா
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழிமுதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடேலோ ரொம்பாவாய்.

             விடியற்காலையில் கோழிகள் கூவும். ஏழிசை நாதம் போல் பறவைகள் கூவும். வெண் சங்கு முழங்கும். ஒப்பற்ற பேரொளியும் பெரிய அருளும், சிறந்த புகழும் உடைய சிவபெருமானைப் பாடினோம். தோழியே, நீ கேட்கவில்லையா? இப்படியும் உறங்குவார்களா? சிவனிடத்து அன்புவைக்கும் முறை அதுதானோ? பிரளயத்தில் அனைத்தும் ஒடுங்கும் போது எஞ்சி இருப்பது அவன் மட்டுமே அவன் உமையொருபாகம் வைத்தவன் அவனது புகழைப் பாடுகிறோம் தோழி நீயும் பாடு.

       
                                                   -தொடரும் 

No comments:

Post a Comment