Showing posts with label தொடர்கதை. Show all posts
Showing posts with label தொடர்கதை. Show all posts

Friday, 16 October 2015

நிலவும் மலரும் / தொடர்கதை

               காவியா... பேப்பரையும், பேனாவையும் எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தாள். வேறொன்றுமில்லை கடிதம்தான் அவளின் அபிமான எழுத்தாளருக்கு இது 25 வது கடிதம் இதுவரை எதற்கும் பதில் வரவில்லை ஆனால் இவளுக்கு சலிப்பதே இல்லை ஏனெனில் இவள் மனது முழுவதும்  பிரபல எழுத்தாளர் கௌரிமனோகரிதான் நிறைந்திருக்கிறார். 24 மணி நேரமும் அவரை பற்றிதான் சிந்தனை, கற்பனையில் அவரோடு பேசிக்கொண்டு இருக்கிறாள் அந்தளவிற்கு அவரின் எழுத்து இவளை ஈர்த்திருக்கிறது.

             "ம்ம்ம்... என்ன எழுதலாம்... சரி வழக்கம்போலவே ஆரம்பிப்போம்.  அன்புள்ள அக்காவிற்கு, நான் நலம். நீங்கள் நலம்தானே? அப்புறம் அக்கா... உங்களை அக்கா என்று அழைக்கலாம்தானே. உங்களுடை நாவல் படித்தேன் படிக்க படிக்க நேரம் போனதே தெரியவில்லை பத்து தடவைக்கு மேல் படித்துவிட்டேன் இடையிடையே கண்ணீர் சிந்த வைத்துவிட்டீர்கள். கதை மிக அருமை எப்படி இப்படி உங்களால் எழுத முடிகிறது.

அப்புறம், என்னுடைய கடிதங்கள் உங்களுக்கு கிடைக்கிறதா அல்லது கிடைத்தும் நீங்கள் படிக்கின்றீர்களா என்றே எனக்குத் தெரியவில்லை. நான் ஏதேதோ உளறிக்கொண்டு இருக்கிறேன் நீங்கள் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை நீங்கள் படிக்கின்றீர்களா என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது? உங்களுக்கு எத்தனையோ ரசிகர்கள் கடிதம் எழுதுவார்கள் பத்தோடு பதினொன்றாக என் கடிதத்தையும் சேர்த்து குப்பையில் போட்டுவிடாதீர்கள். எனக்கு உங்களைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் உங்கள் போட்டோவும், போன் நம்பரும் வேண்டும் எனக்கு அனுப்பி வையுங்கள் இல்லையெனின் கன்னிதீவு மாதிரி என் கடிதம் தொடரும். தொல்லைகள் அதிகரிக்கும் எப்படி வசதி? சரி இப்ப நான் போறேன்  ஆனால் மீண்டும் வருவேன்...

என்றும் ப்ரியமுடன்,
காவியா.