Friday 16 October 2015

நிலவும் மலரும் / தொடர்கதை

               காவியா... பேப்பரையும், பேனாவையும் எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தாள். வேறொன்றுமில்லை கடிதம்தான் அவளின் அபிமான எழுத்தாளருக்கு இது 25 வது கடிதம் இதுவரை எதற்கும் பதில் வரவில்லை ஆனால் இவளுக்கு சலிப்பதே இல்லை ஏனெனில் இவள் மனது முழுவதும்  பிரபல எழுத்தாளர் கௌரிமனோகரிதான் நிறைந்திருக்கிறார். 24 மணி நேரமும் அவரை பற்றிதான் சிந்தனை, கற்பனையில் அவரோடு பேசிக்கொண்டு இருக்கிறாள் அந்தளவிற்கு அவரின் எழுத்து இவளை ஈர்த்திருக்கிறது.

             "ம்ம்ம்... என்ன எழுதலாம்... சரி வழக்கம்போலவே ஆரம்பிப்போம்.  அன்புள்ள அக்காவிற்கு, நான் நலம். நீங்கள் நலம்தானே? அப்புறம் அக்கா... உங்களை அக்கா என்று அழைக்கலாம்தானே. உங்களுடை நாவல் படித்தேன் படிக்க படிக்க நேரம் போனதே தெரியவில்லை பத்து தடவைக்கு மேல் படித்துவிட்டேன் இடையிடையே கண்ணீர் சிந்த வைத்துவிட்டீர்கள். கதை மிக அருமை எப்படி இப்படி உங்களால் எழுத முடிகிறது.

அப்புறம், என்னுடைய கடிதங்கள் உங்களுக்கு கிடைக்கிறதா அல்லது கிடைத்தும் நீங்கள் படிக்கின்றீர்களா என்றே எனக்குத் தெரியவில்லை. நான் ஏதேதோ உளறிக்கொண்டு இருக்கிறேன் நீங்கள் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை நீங்கள் படிக்கின்றீர்களா என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது? உங்களுக்கு எத்தனையோ ரசிகர்கள் கடிதம் எழுதுவார்கள் பத்தோடு பதினொன்றாக என் கடிதத்தையும் சேர்த்து குப்பையில் போட்டுவிடாதீர்கள். எனக்கு உங்களைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் உங்கள் போட்டோவும், போன் நம்பரும் வேண்டும் எனக்கு அனுப்பி வையுங்கள் இல்லையெனின் கன்னிதீவு மாதிரி என் கடிதம் தொடரும். தொல்லைகள் அதிகரிக்கும் எப்படி வசதி? சரி இப்ப நான் போறேன்  ஆனால் மீண்டும் வருவேன்...

என்றும் ப்ரியமுடன்,
காவியா.


               கடிதத்தை எழுதி முடித்து ஒன்றுக்கு இரண்டு தடவை படித்துவிட்டு கவரில் போட்டு ஒட்டி கேன் பேக்கில் வைத்துவிட்டு எழுந்தாள்.

               "ஏய்.. காவியா! ஏய்.. காவியா... காலையிலே எழுத உக்காந்துட்டியா... உனக்கு ஆபிஸ்க்கு லேட் ஆகலையா அப்புறம் லேட் ஆயிட்டுன்னு குதிக்க வேண்டியது அப்படி.. அப்படியே போட்டுட்டு ஓட வேண்டியது இங்க ஒருத்தி நான் இருக்கேன்ல்ல வேலைக்காரியாட்டம்" லெட்சுமி அம்மாள் கத்த தொடங்கினாள்.


            "அய்யோ... அம்மா! ஏன் இப்படி கத்துறே... நான்தானே எல்லா வேலையும் பார்க்கப்போறேன் எப்ப பாரு தொணதொணன்னு பேசிட்டு... முகத்தை சுழித்தபடி கிச்சனுக்குள் சென்று அடுப்பை பற்றவைத்து கடகடவென்று ஒரு மணி நேரத்தில் சமைத்து முடித்து டிபன் பாக்ஸ்சில் எடுத்து வைத்துவிட்டு. ஓடி போய் குளித்துவிட்டு டிரஸ் மாத்திக்கொண்டு அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து செருப்பை மாட்டிக்கொண்டு அம்மா போயிட்டு வர்றேன் என்றபடி ஹேன்பேக்கையும், லன்ச் பேக்கையும் எடுத்துக்கொண்டு ஓடினாள்...

              அச்ச்சோ... ரொம்ப லேட் ஆச்சே... லெட்டரை வேர போஸ்ட் பண்ணனும் வேகமாக நடந்து கடையின் ஓரத்தில் இருந்த அந்த சிவப்பு நிற பெட்டிக்குள் திணித்துவிட்டு ஓடிவந்து ரெடியாக வந்த பஸ்சில் ஏறி ஆபிஸ் சென்றாள் காவியா.

             "குட்மார்னிங் காவியா... என்ன இன்னைக்கும் லேட்டா ஆமா அப்படி என்னதாண்டி பண்ணுவ வீட்டுல, நானே தூரத்துல இருந்து வந்துட்டேன். நீ வெறும் காவியா இல்ல இனி லேட் காவியா" என்று நக்கலடித்தாள் அலுவலகத் தோழி ஷர்மி என்ற ஷர்மிளா.


            "ஏய்... போடி.. போடி.. போய் வேலையிருந்தா பாரு.. விஐபி எல்லாம் லேட்டாதாண்டி வரணும். நாம யாருக்காகவும் காத்திருக்க கூடாது நமக்காகதான் நாலு பேரு காத்திருக்கனும்."

             "எப்படிடீ... இப்படி எல்லாம் பேசுற... எப்டி பால் போட்டாலும் அடிக்கிற அதான் உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே ஆனா மூஞ்சிய பார்த்தா இந்த பூனையும் பால் குடிக்குமாங்கிற மாதிரி வைச்சுகிறியே அந்த ரகசியத்தை மட்டும் எனக்கு சொல்லிடு ஆமா ஏன் லேட்?"

            "ம்ம்ம்.. அது வேற ஒன்னும் இல்லடி நேத்து நம்ம ஆளோட நாவல் வாங்கினேன்... சொல்லி முடிப்பதற்குள் ஷர்மி கைகளை இரண்டையும் மேலே தூக்கி எப்பா சாமி நீ ஆளவிடு எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. நீ அவங்களோட புராணத்தை ஆரம்பிச்சா இப்ப நிறுத்த மாட்டே எனக்கு கேட்டு கேட்டு காதுல ரத்தம் வருது இனிமே நீ ஏன் லேட்டுன்னு கேட்கவே மாட்டேன்."

              "இல்லடி இதமட்டும் கேளு..." ம்கூம் கேட்க மாட்டேன் .... கேட்க மாட்டேன் ..... காது இரண்டையும் இருக மூடிக்கொண்டாள் ஷர்மி.

            காவியா சிரித்துக்கொண்டே அவளை செல்லமாக தட்டிவிட்டு வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள்.

காவியா அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றுகின்றாள் இவளுக்கு பொழுது போக்கு என்றால் கௌரிமனோகரி நாவல் படிப்பது மட்டும்தான். அந்த எழுத்தாளரை எப்படியாவது பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்பது இவளின் கனவு. கதையை படித்துவிட்டு ஓயாது நண்பியிடம் எப்ப பார்த்தாலும் சொல்லிக்கொண்டே இருப்பாள் அதனால்தான் இவள் தோழி காதை பொத்திக்கொண்டு ஓடுகிறாள். வீட்டில் அம்மா என்றால் அலுவலகத்தில் ஷர்மி தான் நல்ல தோழி எதுவாக இருந்தாலும் அவளிடம்தான் பகிர்ந்துகொள்வாள்.

             நாட்கள் சென்றது வழக்கம்போல் சமையல்  வேலைகளை செய்துகொண்டு இருந்தாள் காவியா. மனதிற்குள் இனம்புரியாத ஒரு சந்தோஷம் என்னவாக இருக்கும் என யோசித்தபடி எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அதே சந்தோஷத்தோடு ஆபிஸ் செல்ல வீட்டை விட்டு ரோட்டிற்கு வந்தாள். எதிரே போஸ்ட்மேன் "என்ன மேடம் ஆபிஸ் கிளம்பிட்டிங்களா நீங்க போய்டுவீங்கன்னுதான் சீக்கிரம் வந்தேன் நல்லவேளை பார்த்துட்டேன்... உங்களுக்கு லெட்டர் வந்திருக்கு  கொடுத்துவிட்டு சைக்கிளை மிதித்துக் கொண்டு சென்றார்.

               கவரைப் பார்த்தாள் டு அட்ரஸ் மட்டும்தான் இருந்தது ப்ரம் அட்ரஸ் இல்லை. யாராக இருக்கும் என்றபடி கவரைப் பிரித்தாள் உள்ளே... ஒரு பெண்ணின் போட்டோ யார்... இது என்றபடிு பின்னாடி திருப்பி பார்த்தவள் அதிர்ச்சியில் நின்றாள். சுயநினைவுக்கு வந்து துள்ளி குதித்து ரோடு என்று பாராமல் சந்தோஷத்தில் அந்த போட்டோவிற்கு முத்தம் கொடுத்தாள். இதுவரை இவள் இப்படி நடத்துக்கொண்டதே இல்லை வார்த்தையால் கூட சொல்ல தயங்குவாள் இதுவரை சிறுபிள்ளைகளுக்கூட முத்தம் கொடுத்தது இல்லை. அந்தளவிற்கு கூச்ச சுபாவம். அதில் அப்படி என்ன எழுதியிருந்தது கௌரிமனோகரி...

- மீண்டும் வருவாள்...

No comments:

Post a Comment