Thursday, 22 October 2015

நிறம் மாறாத பூக்கள் / சிறுகதை

              நிவேதா... அவசர அவசரமாக சமைத்துக்கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் ஒருவித சோகம் குடிக்கொண்டிருந்தது. இதற்கு காரணம் தன் அன்பான கணவன் தன்னை விட்டு சென்றுவிடுவானோ என்ற கவலைதான் இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு மாதம்தான் ஆகிறது. அருண்மொழி  நல்ல அழகானவன் ஒரு தனியார் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிகிறான். திடீரென்று ஒருநாள் நெஞ்சுவலி என்று மயங்கி விழுந்தவனை ஹாஸ்பிட்டலுக்கு தூக்கி சென்று பார்த்தபோது. டாக்டர் சொன்ன விஷயம் இவளுக்கு அதிர்ச்சியை தந்தது. இவன் இன்னும் ஆறுமாதத்திற்குதான் உயிரோடு இருப்பார் என்று சொன்னவுடன் இவளுக்கு அந்த நொடியே பாதி உயிர் போய்விட்டது போல் உணர்ந்தாள். தன் கவலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வலம் வந்தாள். அந்த கவலைதான் இவளுக்கு ஏதோ சுயநினைவு வந்தவளாய் மணியை பார்த்தாள். மணி எட்டைத் தாண்டிக்கொண்டிருந்தது.


               "ஓ... மை காட்... நரேன் 9 மணிக்கெல்லாம் வரச்சொன்னாரே..! இன்னும் சுறுசுறுப்பாய் வேலையை முடித்துவிட்டு தன்னையும் தயார்ப்படுத்திக்கொண்டு அருண்மொழிக்குத் தேவையான மருந்து மாத்திரை, சாப்பாடு எல்லாவற்றையும் அருகில் இருந்து கொடுத்துவிட்டு.. அன்பாக தலையை வருடிக்கொடுத்து மென்மையாக முத்தமிட்டு கிளம்ப தயாரானாள்.

              "அருண் நான் போயிட்டு வர்றேன் இதுல புக்ஸ் எல்லாம் இருக்கு போரடிச்சா எடுத்துப் படிங்க... நான் வராட்டா "என்றவாறு பஸ் நிலையம் நோக்கி நடந்தாள்.

             கணையாழி பத்திரிக்கை அலுவலகம் என பளபளத்தது போர்டு. நிவேதா இந்த அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகிறது. அறைக்குள் நுழைந்தவள் கண்ணாடி கதவை மெல்லத் தட்டினாள். "மே ஐ கம் இன் சார்..."

            "எஸ் கம்இன்" கம்பீரமான ஆண் குரல் அழைக்க...

உள்ளே ... சென்றாள் நிவேதா.
 
        "குட்மார்னிங் சார்..."

         "குட்மார்னிங் நிவேதா..." என்றவனுக்கு வயது முப்பது இருக்கும் நல்ல அழகாக ஹிந்திபட நாயகனை போல் இருந்தான்.

          "நீங்க கிளம்பியிருப்பீர்கள் என்று நினைத்தேன்..!"

           "நீங்கள் இல்லாமலா நிவேதா..!" என்று சாதாரணமா சொன்னவனின் கண்கள் அசாதாரணமான உணர்வை வெளிப்படுத்தின.
 
            "நான் நேரா அங்க வந்துர்றேன் சார்..!"

             "பரவாயில்ல நிவேதா ரெண்டுபேரும் சேர்ந்தே போகலாம்..!"

             "இல்ல சார்... நான் பஸ்ல வந்துர்றேன்..!"

             "ஏன்? நிவேதா என்னோடு ஒரே ஆபிஸ்ல வொர்க் பண்றீங்க என்னைப்பற்றி உங்களுக்கு நல்லாவே தெரியும் அப்படியிருக்கும்போது ஏன் என்கூட பைக்ல வரமாட்டேங்கிறீங்க?"

              மெல்லிய புன்னகையுடன் அவனை ஏறிட்டவள் "எவ்வளவுதான் படிச்சாலும், நாகரிகமா வளர்ந்தாலும் நம்மை பார்க்கிறவங்க தப்பாதான் நினைப்பாங்க. எனக்கும் இது பிடிக்காது அதோடு தமிழர்களோட பண்பாட்டை கடைப்படிக்கிறேன் தட்ஸ் ஆல்"

              ஏற்கனவே அவள் மேல் அன்பும், பாசமும் ஏற்பட்டிருந்தவனுக்கு இவளின் நாகரிமான பேச்சும், முன் எச்சரிக்கை உணர்வும் இவனை கவர்ந்தது. இன்னும் அவள் மேல் காதல் அதிகமானது, தக்கச் சமயத்தில் அதை வெளிப்படுத்த வேண்டும். என்னோட ஆசைகளை, கனவுகளை சொன்னா ஏற்றுக்கொள்வியா நிவேதா என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். இவனின் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக எங்கிருந்தோ காற்றலையில் பாடல் ஒலித்தது "புத்தம் புது மலரே.. என் ஆசை சொல்லவா... "
 
               கற்பனையில் மிதந்து வந்தவன் சற்று நேரத்திற்கெல்லாம் பிருந்தாவன் முதியோர் இல்லத்திற்கு வந்து சேர்ந்தான். சற்று காத்திருப்பிற்கு பிறகு நிவேதாவும் வந்து சேர்ந்தாள்.                   அந்த இடம் ரம்மியமாக இருந்தது அடர்ந்த மரங்களுக்கு இடையில் அமைதிமாக இருந்தது அந்த முதியோர் இல்லம்.

             நிவேதாவின் இதயம் பாறாங்கல்லாய் கனப்பதுபோல் உணர்ந்தாள். பிறர் தயவின்றி வாழமுடியாத வயோதிகர்களாய் இங்குமங்கும் தவிப்புடன் நடமாடியவர்களை கண்டு வேதனை அடைந்தாள்.

அப்போதே ஒரு முடிவுக்கு வந்தாள் இரண்டு முதியோர்களை தத்தெடுத்து அவர்கள் கடைசி காலம் வரை பணம் கொடுக்க வேண்டும்.
 
            இவங்களையெல்லாம் பார்க்கும் போது ரொம்ப பாவமாக இருக்கு நரேன்  பேரப்பிள்ளைகளை கொஞ்சி விளையாடுகிற  இந்த வயசுல அகதிகளைப் போல இங்கே சே... என்ன ஒரு சுயநலம் பெத்தவங்களை பாரமா நினைக்கிறவங்க நாளை நமக்கும் முதுமை வருமுன்னு நினைப்பாங்களா?" என்றவளை.

வியப்போடு பார்த்தான் நரேன்...

              "என்ன... நரேன் சார்..."

             "ஒன்னுமில்ல நிவேத சந்தோஷமா இருக்கு நீ இப்படி சொல்லும் போது நானும் இதையே  நினைச்சேன் நீங்களும் அதையே சொல்லிட்டிங்க. நானும் அவங்களுக்கு ஏதாவது செய்யனும்"

              அந்த முதியோர் இல்லத்தில் எல்லோரிடமும் அன்பாக பேசினாள். அவர்கள் மனதில் உள்ளதை வெளிக்கொண்டு வந்தாள். அவளை பலருக்கு ரொம்ப பிடித்திருந்தது, அவர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு   மனதில் பாரத்துடன்  வெளியே வந்தனர் இருவரும்.

               "நிவேதா... உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் அப்படியே பீச்சுக்கு போய் வரலாமா?"

              என்ன பேசப் போகிறான் என்ற சிந்தனையோடு " போகலாம்" என்றாள்.

            "கடற்கரையில்" இன்று அவ்வளவாக கூட்டம் இல்லை இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்தனர். முதலில் பேச ஆரம்பித்தான் நரேன்.
"நிவேதா... நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க... என்னை கல்யாணம் பண்ணிக்க போறவ எப்படியெல்லாம் இருக்கனும்னு கனவு கண்டு கண்டேனோ அது அப்படியே உங்ககிட்ட இருக்கு. அதோடு உங்களை பார்த்த நாள் முதலா என்மனசு என்னிடம் இல்ல...
நான் உங்களை விரும்புறேன் நிவேதா..." என்றான் தயக்கத்துடன்.
 
               நிவேதா, தாக்குண்டவளைப் போல் அதிர்ந்தாள் அவள் இப்படி ஆகுமென்று நினைச்சுக்கூட பார்க்கவில்லை அதிர்ச்சியை சமாளித்துக்கொண்டு

              "மிஸ்டர் நரேன்... நான் உங்கள நல்ல நண்பராதான் நினைச்சேன், உங்களோட பழகினேன் நீங்க இப்படி தவறா நினைக்கும்படி நடந்திருந்தா என்னை மன்னிச்சுருங்க ப்ளீஸ்..." என்றவளை.

                ஏமாற்றத்தோடு பார்த்தான். "ஏன் நிவேதா உங்களை கல்யாணம் பண்ணிக்கிற தகுதி எனக்கில்லையா?"

             "அய்யோ... நரேன் என்னை இதுக்குமேல தொந்தரவு பண்ணாதிங்க என்னோட சூழ்நிலை அப்படி தயவு செய்து என்னை மறந்திடுங்க நாம நல்ல நண்பர்களா இருப்போம். மழை வர்ற மாதிரி இருக்கு நான்    வீட்டுக்குப் பேறேன்" என்று சொல்லிவிட்டு கையில் உள்ள மணலை தட்டிவிட்டு கிளம்பி சென்றாள்.

                அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான் நரேன். இப்போது அவன் கண்களில் பெரும் மழை கொட்டத் தொடங்கியது.

               மறுநாள் ஆபிஸ் வந்தவன் அவள் வராததைக்கண்டு என்னவாகும் இருக்கும் என்று தெரிந்துகொள்வதற்காக அவளின் வீட்டிற்கு சென்றான் . அங்கே அவன் கண்ட காட்சி அவனை நிலைத்தடுமாற செய்தது.

                நிவேதாவின் மடியில் அவள் கணவன் அருண்மொழி  தலைசாய்த்து படுத்திருந்தான். அவன் தலையை கோதியபடி சிரித்து பேசிக்கொண்டிருந்தாள் இது அதிர்ச்சிக்கு காரணம்.

               திடீரென்று வந்து நின்றவனைக் கண்டு "வாங்க நரேன்" என்று அழைத்து சோபாவில் உட்கார வைத்தாள்.    
               "இவர் என்னோட கணவர் அருண்மொழி... அருண் இவர் என்கூட வேலை பார்க்கிறார் மிஸ்டர் நரேன்" என்று அறிமுகப்படுத்தி வைத்தாள்.

               "இருங்க நரேன் காபி எடுத்துட்டு வர்றேன்..." என்று கிளம்பியவளை தடுத்தான் நரேன் "இல்ல நிவேதா காபியெல்லாம் வேண்டாம் நான் ஒரு வேலையா இந்த பக்கம் வந்தேன் அப்படியே உங்களையும் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தேன்" என்று ஒருவாறு சமாளித்துக்கொண்டு வெளியே வந்தான்.

               அவனின் மனம் சுக்குநூறாய் உடைந்திருந்தது இவளுக்கு திருமணம் ஆயிட்டா..? அப்ளிக்கேஷன் பார்ம்ல அன் மேரிடுன்னுதானே இருந்தது. யோசித்தவனுக்கு லேசாக புரிய ஆரம்பித்தது. தன் அலுவலகத்தில் திருமணம் ஆகாதவர்களுக்குதான் வேலை என்ற ரூல்ஸ் இருந்தது அதற்காகதான் பொய் சொல்லியிருக்கிறாள். அதான் அன்று நம் விருப்பத்தை சொன்னபோது மறுத்திருக்கிறாள். மனவேதனையோடு கால்போனபடி நடந்து சென்றான்.

               "நிவேதா..!" என்று அழைத்தான் அருண்மொழி.

             "என்னங்க... என்றவாறு அருகில் வந்து அமர்ந்தாள்.

             "நான் ஒன்னு சொன்னா கேப்பியா?"

             "கண்டிப்பா"

              "நான் இன்னும் எத்தனை நாளைக்கு இருப்பேன்னு தெரியல நான் இறந்துட்டேன்னா நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்..," என்று சொல்லியவனின் வாயை பொத்தினாள் நிவேதா.

              "என்னங்க சொல்றீங்க இப்படி சொல்ல எப்படிங்க மனசு வந்தது" அழுதுக்கொண்டே கேட்டாள். அவள் கணவன் சொன்னதை அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தன் கணவனா இப்படி சொன்னது வெகு நேரம் வரை தூக்கம் வரவில்லை அவளுக்கு. தூக்கம் வரமால் புரண்டு புரண்டு படுத்தவள் விடியும் நேரத்தில் தன்னையறியாமல் தூங்கிபோனாள்.

               காலை 6 மணி திடுக்கிட்டு கண்விழித்தவள் அவசரமாக படுக்கையை விட்டு எழுந்தாள். எழுந்தவள் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தாள்.

              எப்போதும் வழக்கமா தான் எழுந்தவுடன் குட்மார்னிங் சொல்லும் அருண் இன்று அசையாமல் படுத்திருப்பதை கண்டு துணுக்குற்றாள். "என்னங்க... என்னங்க... சிறு நடுக்கத்தோடு அழைத்தாள் எந்த ஒரு பதிலும்  வராமல் போகவை ஓ... வென கதறினாள். அவன் உயிர் உடலை விட்டு சென்றிருந்தது, அக்கம் பக்கத்தில் உள்ளவகள் வந்து பார்த்துவிட்டு ஆறுதல் கூறினார்கள். உற்றார், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நரேனுக்கு தகவல் தெரிந்து வந்தவனுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது அதே வருத்தத்துடன் அவளைத் தேற்றினான். எல்லா காரியங்களையும் செய்து முடித்தான்.
காலங்கள் சில கடந்தன சோகத்தில் இருந்து விடுபட நிவேதா நிறைய கதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதினாள்.  "சுமைதாங்கி" என்ற நாவலுக்கு சிறந்த நாவலாசிரியை என்ற விருது கிடைத்தது.

               இன்று வழக்கம்போல் அலுவலகம் வந்தவள் எடிட்டரின் அறைக்குள் நுழைத்தாள்.

            "வாம்மா... நிவேதா! உட்கார்... நீ எழுதிய "சுமைதாங்கி" என்ற நாவலுக்கு விருது கிடைச்சிருக்கு கன்கிராஸ்லேஷன்..." மனதார பாராட்டினார்.

           "தேங்கியூ சார்..."

           "உன்னோட திறமைக்கும் உழைப்புக்கும் கிடைச்ச பரிசும்மா... இது. தொடர்ந்து நிறைய எழுது உனக்கு வெற்றிகள் பல காத்திருக்கு அதோடு இன்னொரு முக்கியமான விஷயம். இன்னையிலிருந்து துணை ஆசிரியரரா உன்னை நியமிக்கிறேன் உனக்கு சந்தோஷம்தானே" என்றார் எடிட்டர் நிரஞ்சன் குமார்.

               "ரொம்ப... ரொம்ப... நன்றி சார்..." என்றவாறு வெளியே வந்தவள். தன் சீட்டில் அமர்ந்து செய்யவேண்டிய எழுத்து வேலைகளை செய்துவிட்டு நிமிர்ந்த போது மணி ஐந்தை காட்டியது வீட்டுக்கு கிளம்ப தயாரானாள். தன் ஹேன்பேக்கை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் அங்கே நரேன்  நிற்பதை கண்டாள்.

                நிவேதா... விருதெல்லாம் கிடைச்சிருக்கு போல கன்கிராஸ்லேஷன். அப்புறம், உங்ககூட கொஞ்சம் பேசனும் நானும் வர்றேன் பஸ்ஸ்டாண்ட் வரைக்கும் சேர்ந்தே போகலாம்.

                 நிவேதா தலையசைத்துவிட்டு மவுனமாக நடந்தாள். மழை லேசாக தூரிக்கொண்டு இருந்தது. நரேன் தொண்டையை செருமிக்கொண்டு பேச. ஆரம்பித்தான்.

               "நான் மறுபடியும் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க உங்களை பழைய நிவேதாவா பார்க்க ஆசைப்படுறேன். அதனால உங்களை கல்யாணம் பண்றதுன்னு முடிவூ பண்ணிட்டேன். சாஸ்திரம் சம்பிரதாயம்னு சொல்லி உங்களையே நீங்க ஏமாத்தீக்காதீங்க..,"

                "நரேன் என்ன பேசுறீங்க நீங்க? நீங்க நினைக்கிற மாதிரி இல்ல நான் இன்னும் என் கணவரோடதான் வாழ்ந்துட்டு இருக்கேன். என்னை பொருத்தவரைக்கும் அவர் சாகல தயவு செய்து என்னை கஷ்டப்படுத்தாதிங்க ப்ளீஸ்..!"      


              "இல்ல நிவேதா நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்கனும் அதான் என்னோட விருப்பம்"

              "உங்களுக்கு ஒன்னு தெரியுமா நரேன்... அருண் கடைசியா இதைதான் அவரும் சொன்னார். தான் இனிமேல் உயிரோடு இருக்கமாட்டோம்னு நினைச்சுதான். அப்படி சொன்னாரா என்னவோ ஆனா எனக்கு இஷ்டமில்ல, அவரோட வாழ்ந்தது சில காலமானாலும் பல காலம் வாழ்ந்த சந்தோஷம் எனக்கு இருக்கு நரேன். நீங்க என்னை மறந்துட்டு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சுகிட்டா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். எனக்கொரு நல்ல நண்பன் தேவை அது நீங்களா இருக்கனும்னு நினைக்கிறேன் இருப்பீங்களா..."

                அவளின் பேச்சைக் கேட்டு விக்கித்து நின்ற நரேன் சுய உணர்வு வந்தவனாய் பேச ஆரம்பித்தான். "நிவேதா நீங்க எனக்கு மனைவியா வரனும்னுதான் ஆசைப்பட்டேன் அது வெறும் கனவா போச்சு. இப்படியொரு நல்ல பெண் எனக்கு மனைவியா கிடைக்கலையே என்ற வருத்தத்தை தவிர இப்ப வேற எதுவும் எம்மனசுல இல்ல... உங்களுக்கு விருப்பம் இல்லாதப்போ என்ன செய்ய முடியும். இப்ப மட்டுமல்ல நிவேதா எப்பவுமே நான் நல்ல நண்பனா இருப்பேன் இது சத்தியம் உனக்கு வேலியா இருந்து உன்னை காப்பேன்"

            "வர்றேன் நிவேதா என்றவாறு வீதியில் இறங்கி நடக்க தொடங்கினான். லேசாக தூரிக்கொண்டிருந்த மழை பெரிதாக பெய்யத்தொடங்கியது. அவன் மனதில் உள்ள பாரமெல்லாம் மழையினுடே கரைந்து போயிருந்தது.

             தனக்கு நல்ல நண்பன் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் அவன் போவதையே பார்த்துக்கொண்டு நின்றாள் நிவேதா...

                                         - முற்றும்-

                                                       துவரங்குறிச்சி வீ. சந்திரா

2 comments:

  1. காலம் நல்ல மாற்றத்தைத் தரும்.
    அருமையான கதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா செல்வம்

    ReplyDelete