Thursday 22 October 2015

தமிழகத்திற்கு தண்ணில கண்டமா?

            "நீரின்றி அமையாது உலகு" என்று வள்ளுவ பெருந்தகை நமக்கு உணர்த்திருக்கிறார். நமது வாழ்க்கையின் ஆதாரமே நீர் தான். முதன் முதலில் உயிர்கள் தோன்றியது நீரில் இருந்துதான். அப்படிப்பட்ட நீரால் எப்போதும் தமிழகம் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒரு பக்கம் தண்ணீர் விடாமல் கர்நாடகம் பிரச்சனை செய்கிறது இன்னொரு பக்கம் இலங்கை அரசு மீனவர்களை கைது செய்து பிரச்சனை செய்கிறது. அன்றாடம் தொலைக்காட்சி செய்திகள் இதைதான் சொல்லிக்கொண்டு இருக்கிறது. இதற்கு என்னதான் தீர்வு? என்னதான் முடிவு?


                  தமிழகத்திற்கு தண்ணில கண்டமா என்ன? மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வீட்டுக்கு வீடு மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டாயம் கட்ட வேண்டும் அப்போதுதான் நிலத்தடி நீர் உயரும் என்றார்கள் நல்ல விஷயம்தான்.

                    ஆனால் ஒவ்வொரு முறையும் மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை சேமித்து வைக்க வழியில்லையே...விவசாயிகளின் தேவைக்கு போக மிச்ச தண்ணீர் வீணாக கடலில்தான் போய் கலக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் நிறைய குளங்கள், ஏரிகள் இருக்கிறது அதை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி வருகின்ற தண்ணீரை சேமித்தாலே போதும் நாம் கர்நாடகத்திடம் கையேந்த வேண்டிய அவசியமே இல்லை.

                 சென்னையை சுற்றி எத்தனையோ இடங்கள் அபார்ட்மெண்டாக உருவெடுக்கிறது. மழை பெய்தால் தண்ணீர் வெளியே செல்ல வழியில்லை. வெயில் காலத்தில் குடிக்கவும் தண்ணீர் இல்லை. சென்னையில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தலாம் அல்லது புதிதாக ஏரியை வெட்டலாம் அதனால் வேலைவாய்ப்பும் கொடுக்கலாம் தண்ணீரையும் சேமிக்க வழியும் கிடைக்கும்.

                 சென்னையில் மழை பெய்தால் ரோடு மூழ்கி போகிறது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. தண்ணீர் வெளியில் செல்ல வழிகளே இல்லை எல்லாமே அடைக்கப்பட்டு இருக்கிறது. தண்ணீரை உரிஞ்ச அங்க மண் இல்லை எல்லாம் கான்கீரிட் தரை. அரசு தேவையில்லாத எத்தனையோ பணிகளை செய்து பணத்தை விரயம் செய்கிறது ஆனால் இந்த தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு தயங்குகிறது.

                முன்பு கிராமங்களில் கல்வெர்ட் அமைத்து குழாய்கள் பொருத்தி மழைக்காலத்தில் தேங்கி நிற்கின்ற தண்ணீரை அதன் வழியாக குளத்திற்கோ ஆற்றுக்கோ செல்லும்படி வழியிருந்து இப்போது அப்படி இல்லை. சென்னையை போல் கிராமங்களிலும் மழை பெய்தால் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது அதனால் நோய்கள் பரவுகிறது. வீடுகள் தண்ணீரில் மூழ்கி அதற்கு நிவாரணம் கொடுப்பதற்கு பதிலாக தண்ணீர் வெளியே செல்ல ஒவ்வொரு தெருவிலும் கல்வெர்ட்  வடிகால் ஒன்று  அமைத்தால் தண்ணீர் ஆற்றிலோ குளத்திலோ சென்று கலக்கும். தண்ணீரையும் சேமிக்கலாம் மக்களுக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும் இனி மழைக்காலம் அரசு என்ன செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை.

No comments:

Post a Comment