Saturday, 31 May 2014

மனிதர்களின் அன்பு எப்படிப்பட்டது தெரியுமா?

          தினமும் ஒரு மரத்தின் நிழலில் எல்லோரும் இளைப்பாரி சென்றார்களாம். அந்த மரத்திற்கு ஒரே சந்தோஷம் நாம் எல்லோருக்கும் நிழல் தருகிறோம் என்று. ஒரு நாள் அந்த மரத்திற்கு ஆயுள் முடிந்தது அப்போது அந்த மரம் வருத்தப்பட்டது "அய்யோ நாம் போய்விட்டால் அவர்களுக்கு நிழல் தர முடியாதே" என்று ஆனால் அதில் இளைப்பாரிய மனிதர்களுக்கு கொஞ்சமும் வருத்தம் இல்லையாம் வேறொரு மரத்தை நோக்கி சென்றார்களாம். அப்போதுதான் அந்த மரம் உணர்ந்ததாம் "நாம் வெறும் சாலையோர மரம், நிழல் தருவதற்கு மட்டும்தான் உரிமை கொள்வதற்கு அல்ல" என்று. கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்று இதைதான் சொன்னார்களோ..?

                      நானும் சாலையோர மரம்தானோ..? உன் நினைவுகளை சருகுகளாக உதிர்க்கிறேன் ஆனால் அது எனக்குள்ளே குப்பையாகி மடிந்து கிடக்கிறது. என் உணர்வுகளை கொன்றாலும் எனக்கு உரமாக இருக்கிறாய் மீண்டும் அதிலிருந்து தலைவிருச்சமாக எழுவேன் என்றாவது ஒருநாள் நீ இளைப்பார வருவாய் என்ற நம்பிக்கையில்..! "அன்பை கொடு அன்பை பெறு"

Tuesday, 27 May 2014

வலி

இந்த உலகத்தில்
மரண வலியை விட
கொடுமையானது
நம் மனதிற்கு பிடித்தவர்கள்
தரும் காயங்கள்தான்.

மயக்கம்உன் கண்கள்
மாய வலையோ
தெரியாமல் மாட்டிக் கொண்டேனோ...?

உன் இதயம்
சிறைக் கூடமோ
தெரியாமல் சிக்கிக் கொண்டேனோ..?

உன் பேச்சு மந்திரமோ
தெரியாமல் மயங்கிவிட்டேனோ..?
அப்பப்பா... இது என்ன அவஸ்த்தை
தவணை முறையில் தண்டிக்காதே
தற்காலிகமாவது விடுதலை செய்..!

Tuesday, 20 May 2014


சிறப்பு வாய்ந்த கோவில்களும் நானும்
                 கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோவில் இத்தலத்தில் மகாலிங்க சுவாமியை வந்து வணங்கினால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் என்பது வரலாறு. வரகுண பாண்டிய என்ற அரசன் இத்தலத்தில் தங்கி இறைவனை வணங்கி பிரமஹத்தி தோஷம் நீங்கி நலம் பெற்றான். நலம் பெற்றவுடன் ஒரு பெண்ணை விரும்பி திருமணம் முடித்தார் அப்பெண்ணின் அழகிய திருவுருவம் கண்டு இப்பெண் கடவுளுக்கு மட்டும் உரியவள் என்று கருதி மகாலிங்க பெருமானிடம் தன் மனைவியை ஏற்றுக்கொள்ளுமாறு மனம் உருக வேண்டினாராம் பெருமானும் ஏற்றுக்கொண்டார்.                   மறுமுறை பெருமானை வழிபட சென்றபோது அப்பெண்ணின் வலது கை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு இருந்ததைக் கண்டு அச்சமுற்று அந்தப் பெண்ணை திருமண நாளன்று வலது கை என்னால் பற்றப்பட்டது தான் பிழை வேற எந்த பிழையும் இல்லை அந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டாராம் அதன் பிறகு பெருமானும் முழுமையாக ஏற்றுக்கொண்டதாக வரலாறு சொல்கிறது. அந்தப் பெண் காந்திமதி தெய்வமாகி இத்தலத்திலே வீற்றிருக்கிறார். 
                          கர்நாடக மாநிலத்தில் கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகை போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமருதூர் மூகாம்பிகை சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள் . இந்தியாவிலே கொல்லூரிலும் திருவிடைமருதூரில் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது இத்திருகோயிலின் பெரிய பிரகாரத்தை முறையாக சுற்றி வந்து மூலவரை வழிபாடு செய்தால் சித்த சுவாதினமின்மை மனநோய் பீடிக்கப்பட்டவர்கள் பைத்திம் முதலிய பெரும் நோய் மற்றும் செல்வம் பெருக திருமணத்தடை நீங்க குழந்தை பாக்கியம் பெற இங்கே வந்து வழிப்பட்டால் எல்லா தடைகளும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த மேரு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள். இவை யாவும் படித்த, பார்த்த கேட்டு தெரிந்துக் கொண்ட விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் எனக்கே அண்டை நாட்டில் இருக்கும் ஒருவர் சொல்லிதான் இந்த ஆலயத்திற்கு சென்றேன் அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும். 


மனித மனங்களும் அவர் குணங்களும்

                            நட்பாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி பார்த்தவுடனே பேசிய உடனே அவர்களைப் பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்ள நினைக்கிறார்கள். சிலர் எத்தனையோ வருடம் தொடர்பில் இருப்பார்கள் நேரில் பார்த்திருப்பார்கள் ஆனால் ஒரு 10 நிமிஷம் சேர்ந்த மாதிரி பேச தயங்குவார்கள் யோசிப்பார்கள் அவர்களை புரிந்துகொள்ளவே பல வருடங்கள் ஆகிறது அப்படி இருக்கும் போது ஒரு சிலர் ஒரு ஹாய் ஒரு ஹலோ சொன்ன மறு நிமிடமே முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள் கிடைக்காத பட்சத்தில் வருத்தப்படுகிறார்கள். 

                          நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் உங்கள் அன்பை, பாசத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் அது அவர்களின் துரதிஷ்டம் அதற்காக நீங்கள் 
வருத்தப்படாதீர்கள் நீங்கள் எப்படி ஒருவரின் அன்பிற்காக பாசத்திற்காக 
துரத்துகின்றீர்களோ அதே போல் அவர் வேற ஒருவரின் அன்பிற்காக யாரையோ 
துரத்திக்கொண்டிருப்பார்கள். நீங்கள் எப்படி ஒருவரின் நட்பை பெற நினைக்கின்றீர்களோ அதே போல் உங்களிம் உங்கள் நட்பை எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள்.

                          நாம் எப்போதுமே கிடைக்காத ஒன்றுக்கு தான் ஆசைப்படுவோம் இப்படிதான் நாம் ஒருவரை ஒருவர் புரியாமல் அவரின் குணங்களை 
அறியாமலே போகிறோம். ஒன்றை நாம் இழந்தால் மிகப்பெரிய ஒன்று நமக்காக 
காத்திருக்கிறது அல்லது பெறபோகிறோம் என்று அர்த்தம். வாழ்க்கை என்பது 
கடிகாரமுள் மாதிரி ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டே இருக்கிறது இதை புரிந்து 
கொண்டவர்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. 

                         நல்ல எண்ணங்கள் கொண்டவன் ஞானி, எண்ணங்கள் உணர்ச்சிவயப்படும்போது, ஆசை, சினம், கடமை, உயர்வு, தாழ்வுமனப்பான்மை, வஞ்சம் என மனிதனை பல்வேறு குணங்கள் கொண்டவனாக்குகிறது அந்த குணங்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தெரிந்தவன் நாளடைவில் ஞானியாவன் வைக்கத்தெரியாதவன் சராசரி மனிதருக்கும் கீழான நிலைக்குப் போவான். 

ஸ்ரீசந்திரா

Monday, 19 May 2014

இலங்கை வானொலியின் கலை பொக்கிஷம் அறிவிப்பாளர் நாகபூஷணி

                     வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சி தொகுப்பாளினியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அறிவிப்பாளருமான இவர் பெயர்சூட்டக்கூடிய ஒருவராக இத்துறையில் தடம் பதித்துள்ளார். அறிவிப்பாளர், கவிஞர், எழுத்தாளர், விரிவுரையாளர், விளம்பர நடிகை என்ற பன்முகங்களை கொண்டவர்.

                          இவர் நாவலர் கதிரேஷன் கல்லூரியில் உயர்தரமும் யாழ் பல்கலைகழகத்தில் தமிழ் சிறப்பு கலைமாணி பெற்று கொழும்பு பல்கலைகழகத்தில் இதழியல் டிப்ளோமாவையும் முடித்திருக்கிறார்.

                        சின்னஞ்சிறு வயது முதல் வாசிப்பில் நிறைய ஆர்வம் கொண்ட இவர். பத்திரிக்கை, வானொலி, என்பவற்றுக்கு கவிதை, கதை, கட்டுரை, நாடகம் எழுதி பின்பு அதன் தொகுப்பாக 'நெற்றிக்கண்' என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

                        இலங்கை வானொலி கண்டிச் சேவையில் அறிவிப்பாளராகவும் கல்விச் சேவையில் தயாரிப்பாளராகவும் சுயாதீன தொலைக்காட்சி மற்றும் ரூபவாஹினியின் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் இலங்கை நேயர்களையும் இந்திய நேயர்கள் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தவர். தன் குயில் போன்ற குரல் இனிமையால் நேயர்களை கட்டி போட்டவர்.பழகுவதற்கு இனிமையும், எளிமையும் நிறைந்தவர்.

                     இவர் பெற்ற விருதுகள் சிறந்த செய்திவாசிப்பாளருக்கான விருது, சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான விருது, சாகித்திய விருது, கிருஷ்ண கலாலயா விருது, அதுமட்டுமல்லாமல் சார்க் மாநாட்டுக்கு ஆரம்ப அறிவிப்பாளராகவும், அணிசேரா நாடுகளின் மாநாட்டு அறிவிப்பாளராகவும் பங்குகொண்டு இருக்கிறார். மலேசிய சர்வதேச பாடலாசிரியருக்கான போட்டியில் 2 ம் பரிசும் பெற்றிருக்கிறார்.

யாத்திரை (2) திருவண்ணாமலை


              திருவண்ணாமலை செல்ல வேண்டும் என்று ஒரு ஆசை எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்தது ஒருநாள் போகலாம் என்று முடிவெடுத்தோம் ஆனால் சரியான ரூட் தெரியவில்லை. என் அலுவலத்தில் என்னோடு பணியாற்றுபவர் சொன்னார் கும்பகோணம் போய் போகலாம் என்று சொன்னார் நாங்களும் அவ்வாறு செல்ல முடிவெடுத்தோம். ஆனால் அந்த வழியில் ஏன்டா சென்றோம் என்று நொந்து போனோம்.


              ஒருவிதத்தில் இது ஒரு சுற்று பயணமாக அமைந்தது. நாங்கள் பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி சென்று அங்கிருந்து கும்பகோணம் சென்றோம். அங்கே சென்ற பிறகுதான் தெரிந்தது திருவண்ணாமலைக்கு நேரடி பஸ் இல்லை என்று பிறகு சிறிது நேர காத்திருப்புக்குபின் அணைக்கரை செல்லும் பஸ்சில் ஏறினோம் போய்கொண்டு இருக்கும் வழியிலே திரும்பி விடுவோமா என்றுகூட தோன்றியது என்னடா சிவன் ரொம்ப சோதிக்கிறானே என்று நினைத்தேன். அணைக்கரை சென்ற பிறகு பாலம் வேலை
நடைபெறுகிறது இங்கேயே இறங்கி செல்லுங்கள் என்று இறக்கிவிட்டார்கள்.

பக்தி மார்க்கத்தில் மகான்கள் அன்றும் இன்றும்

           அன்று அப்பர் சுந்தரர் திருஞானசம்மந்தர் மாணிக்கவாசகர் போன்றவர்கள் கடவுள் வாழ்த்துக்களையும் தேவார பதிகங்களையும் திருமறைகளையும் தொகுத்து கடவுளுக்கு பாமாலை சூடி மகிழ்ந்தார்கள் ஊர் ஊராக சென்று பக்தி நெறியை வளர்த்தார்கள்
.
        தனக்கென்று சொத்து சேர்க்காமல் ஏழை எளியோருக்கு உணவளித்தார்கள் எளிமையாகவாழ்ந்தார்கள் சிறு குடிசைதான் அவர்களின் இருப்பிடமாக இருந்தது சன்னியாசவாழ்க்கை வாழ்வதற்கு சொத்து தேவையில்லை என்று வாழ்ந்தார்கள் மாட மாளிகைஇல்லை, நீராட நீச்சல் குளமில்லை, கடவுளை தரிசிக்க ஏசி கார்களைபயன்படுத்தவில்லை காலார நடந்து கடவுளை தரிசித்தார்கள் இவர்கள் அல்லவாதெய்வமாந்தர்கள் இவர்கள் அல்லவா பக்திமான்கள்.

                    இன்றும் இருக்கிறார்கள் பக்திமான்கள் கோடி கோடியாய் பணம் குவிகிறது மாடமாளிகை இருக்கிறது அறுசுவை உணவு கிடைக்கிறது. ஏசி கார் இருக்கிறதுஎனக்கொரு சந்தேகம் இவர்கள் கடவுளை தரிசிக்க ஊர் ஊராக சென்றதுண்டா? அல்லதுகடவுளைப் பற்றி பிரசங்கம் செய்யும் இவர்களுக்கு ஒரு பதிகங்களாவது முழுமையாகதெரியுமா? அல்லது கடவுளைப் பற்றி ஒரு செய்யுளாவது இயற்ற முடியுமா? தன்னைகுரு என்று காட்டிக்கொள்ளும் இவர்களுக்கு அந்த கடவுள் அந்த ஞானத்தைவழங்காமல் போனது ஏன்?

             கடவுளின் பெயரை சொல்லி சம்பாதித்து அரண்மனை போன்று வீடுகளை கட்டி சுகபோகவாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் மெடிக்கல் காலேஜ்களை கட்டி பணம்சம்பாதிக்க கடவுள் இவர்களுக்கு போதித்தாரா? படித்த மக்கள் தேன் தடவியவார்த்தைகளில் மயங்கி தன்னிடம் இருக்கும் பணத்தை சாதாரண மனிதனின் காலடியில்கொட்டுகிறார்கள். தன்னிடம் கையேந்தி நிற்கும் ஒருவனுக்கு ஒருவேளை பசியை போக்க முடியாதநாம் யாரோ ஒருவன் சுகமாக வாழ பணத்தை வாரி இறைக்கிறோம்.

            கடவுள் போல் தன்னை காட்டிக்கொள்ளும் இவர்களுக்கு இந்த சொத்துக்கள் எதற்கு?இதை நாம் யோசிக்க வேண்டாமா? மாயஜால வார்த்தைக்கு கட்டுப்பட்டு தானும்கெட்டது இல்லாமல் மற்றவர்களை கோர்த்து விடும் மக்களை என்னவென்று சொல்வது.பேச்சு திறமையுள்ள ஒரு மேடை பேச்சாளன் செய்கின்ற வேலைகளைதான் இந்தபக்திமான்கள் பயன்படுத்தி கொண்டார்கள்.

         அந்த மடங்களுக்கு யாரும் சும்மா சென்று அந்த குருவின் சொற்பொழிவை கேட்டுவிடமுடியுமா? அங்கே செல்பவர்கள் அனைவருமே பணம் படைத்தவர்கள்தான் அவர்கள்தரும் சீறுடைக்கு பணம், அவர்கள் தரும் ஜீஸ்களுக்கு பணம், தங்குவதற்கு பணம்ஒரு கடவுளின் தொண்டன் இப்படி தான் பணம் பிடுங்குவார்களா என்ன?

                    நாம் ஒரு தவறு செய்கிறோம் அல்லது நேர்மையானவனாக இல்லை இது போன்றசூழ்நிலையில் மன உலச்சல் அடைவோம் மனம் அலைபாயும் அப்போது ஒரு ஆறுதலைதேடுவோம் அல்லது மனநல மருத்துவரை நாடுவோம் நீங்கள் இது போன்ற மடங்களுக்குபோவதும் மனநல மருத்துவரை சந்திப்பதும் ஒன்றுதான்.

               நீங்கள் நேர்மையானவரா? மனம் தூய்மையானவரா? யாருக்கும் தீங்கும் செய்யாதவரா?ஏழை எளியவர் நாலு பேருக்கு உதவி செய்பவரா? நீங்கள் இது போன்ற மடங்களுக்குசெல்ல தேவையில்லை. உங்களால் முடிந்த உதவிகளை கஷ்டபடுவர்களுக்குசெய்யுங்கள் நீங்கள் அவர்களுக்கு கடவுளாக தெரிவீர்கள் நல்லா இருக்கவேண்டும்மனதார வாழ்த்துவார்கள் அதை கடவுள் வாழ்த்தியதாக நினைத்துக்கொள்ளுங்கள் ஒருமனநிறைவு கிடைக்கும் அதே சந்தோஷத்தோடு கடவுளை காண ஆலயம் செல்லுங்கள்
கர்வத்தோடும் பெருமையோடும் கடவுள் முன் கண்ணீர் மல்க நில்லுங்கள்
தவறில்லை.

                      என் மனம் சுத்தமாக இருக்கிறது நாலு பேருக்கு உன் புண்ணியத்தில் நான் நல்லதுசெய்தேன் அதற்கு பங்கம் வரமால் பார்த்துக்கோ என்று சொல்லுங்கள் கடவுள் உன்நேர்மைக்கு உன் பக்திக்கு உன் அன்புக்கு கட்டுப்பட்டு உன் நெஞ்சிலேகுடியிருப்பார் நீ செய்கின்ற நல்ல செயலில்தான் கடவுள் இருக்கிறார் அது புரியாமல் நீ எங்கோ ஓடுகிறாய்.எதையோ தேடுகிறாய். நீங்கள் நல்லது செய்யுங்கள் இது போன்ற மடங்களுக்கு
செல்லும் எண்ணம் உங்களுக்கு வராது. கடவுளை மட்டும் வணங்குங்கள் கடவுள்பெயரைச் சொல்லி பணம் பறிக்கும் அற்பர்களை நாடி செல்லாதீர்கள்.

                  நல்ல விஷயங்களை நாம் ஏற்பதும் இல்லை நம்புவதும் இல்லை நம் கண்ணுக்குதெரிவதும் இல்லை. இதை படிப்பவர்கள் இதிலிருக்கும் உண்மையை உணர்ந்து ஆழ்ந்துயோசித்து நல்ல முடிவை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு நான்..!

#ஸ்ரீசந்திரா

Sunday, 18 May 2014

கண்ணாடி

நான் முகம் பார்க்கும்
கண்ணாடி உடைந்து விட்டது
என் நண்பன் அல்லவா
உடைந்துவிட்டதே என்று
பதறிபோய் கைகளில்
அள்ளிவிட்டேன் நான்
நண்பன் என்பதையும்
மறந்து பல பிம்பங்களாக மாறி
என் கைகளை காயப்படுத்தி விட்டது
அதை கொட்ட மனமில்லாமல்
ஒட்ட முயற்சித்தேன் முடியவில்லை...

Saturday, 17 May 2014

பிரம்மா

மனிதர்கள் எப்பவும்
பிரம்மாவாக இருக்கிறார்கள்
ஆம் மனிதனை படைத்தது
பிரம்மா என்பதாலே என்னவோ
மனிதர்களும் ஒவ்வொரு
இடங்களிலும் தனது
நான்முகங்களை காட்டுகிறார்கள்
இடத்திற்கு தகுந்தார்போல்,
நேரத்திற்கு தகுந்தார்போல்,
சந்தர்பத்திற்கு தகுந்தார்போல்
தன்னை மாற்றிக் கொள்கிறார்கள்.

Friday, 9 May 2014

என்னைக் கவர்ந்தவை

                            சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று என்னை வெகுவாக கவர்ந்தது. சன் தொலைக்காட்சியில் சாம்பியன் என்ற நிகழ்ச்சியில் அதில் பங்கு பெற்றஒருவருக்கு அம்மா, அப்பா யார் என்றே தெரியவில்லை பேர் தெரியாது என்று அவர் சொன்னவுடன் பார்வையாளராக வந்த நடிகை லெட்சுமி அவர்கள் உடனே சொன்னார் "என்னை அம்மா என்று அழைப்பா... நான் உனக்கு அம்மாவாக இருக்கிறேன்" என்று சொன்னதோடு இல்லாமல் அவரை வாஞ்சையோடு அணைத்துக்கொண்டார் அந்த நிகழ்ச்சியை
காணும் போது மனது வலிக்கத்தான் செய்கிறது பெற்றவர்கள் அந்த வலிதெரியாமல் போட்டுவிட்டு போய்விட்டார்கள் ஆனால் பலரின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் நிற்கும் அந்த மகனுக்கு எத்தனை வலி?

                       அதே நிகழ்ச்சி ஒன்றில் நடிகை பூஜா பார்வையாளராக வந்திருந்தார் ஒரு பெண் சிறப்பாக நடனமாடினார் அவருக்கு என்னக் கொடுப்பது என்று கை பையை துலாவினார் ஒன்றுமில்லை உடனே தன் காதில் உள்ள கம்மலை கழட்டி அந்த பெண்ணுக்கு பரிசாக அளித்தார் அந்த நிகழ்ச்சி என்னை நெகிழச்செய்து கையில் ஒன்றும் இல்லை என்றாலும் தான் போட்டு இருந்ததை உடனே கொடுத்தாரே யாருக்கு அந்த மனம் வரும்?

                     அதே போன்று சன் சிங்கர் என்ற மற்றொரு நிகழ்ச்சியில் ஜஸ்வர்யா என்ற குட்டிப் பெண் அவ்வளவு அற்புதமாக பாடலிலும், நடனத்திலும், நடிப்பிலும் எல்லோர் மனதையும் கவர்ந்து வந்தார் அவரின் அபார திறமையைக் கண்டு நடுவராக இருந்த பாடகி அனுராத ஸ்ரீராம் அவர்கள் உடனே உணர்ச்சி வசப்பட்டு சொன்னார் நீ என்ன ஆகவேண்டும் என்று நினைக்கிறாயோ அதற்கு முழு பொறுப்பேற்றுகிறேன் நான் உதவி செய்கிறேன் என்று கண்கலங்கி சொன்னார் உண்மையில் இதெல்லாம் பாராட்டுக்குரியது. உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்க்கும் போது இதை பார்ப்பவர்களுக்கும் கண்டிப்பாக உதவி செய்ய மனசு வரும்.


                        சரி இவற்றை விடுவோம் நம்மில் எத்தனை பேர் நம்முன்னே கையேந்தி நிற்கும் முதியவர்களுக்கு உதவி செய்திருக்கிறோம்? சிலர் பரிதாபபடுவார்களே தவிர உதவி செய்ய முன்வருவதில்லை "அய்யா பாவம் என்று அவசரமாக கை பையில் தேடுவார்கள் ஒரு ரூபாய் இருக்கிறதா என்று இல்லை என்றால் இல்லப்பா சில்லறை இல்லை என்று கூறி ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை பரிதாபமாக கொடுக்கிறோம்.

                      ஒரு சாதரண கடையில் ஒரு டீ யின் விலை 5 ரூபாய், இட்லி 2 ரூபாய், தயிர்சாதம் 25 ரூபாய், சாப்பாடு 50 ரூபாய் சில்லறை இல்லை என்றாலும் பரவாயில்லை ஒருபத்து ரூபாய் தாராளமாக கொடுக்கலாமே ஆனால் அதை கொடுக்கதான் நாம் யோசிக்கின்றோம் நாம் பரிதாபபட்டு பார்க்கும் சாலையோர பார்வையாளனாக மட்டுமே இருக்கிறோம் " எச்சில் கையால் காக்கை விரட்டாதவர்கள் கூட" இது போன்று கொடுக்கு உள்ளங்களை பார்த்து உதவி செய்ய முன்வரட்டும்.

                     கொடுப்பதிலா, பெறுவதிலா நிஜமான இன்பம் இருக்கிறது. காற்று! கால்பந்திலும் காற்று புல்லாங்குழலிலும் காற்று! கால்பந்து எல்லார்
கால்களிலும் உதைப்படுகிறது ஆனால் புல்லாங்குழல் எல்லா இதழ்களாலும்
முத்தமிடப்படுகிறது ஏன் தெரியுமா? கால்பந்து தன்னிடம் வந்த காற்றை சுயநலமாக சேமித்து வைக்கிறது, புல்லாங்குழல் அதே காற்றை அழகான இசையாக்கி சுதந்திரமாக வெளியே விடுகிறது ஆக கொடுப்பதில் உள்ள இன்பம் தான் நிஜமான இன்பம் நீங்கள் மனநிறைவோடு உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கோ கொடுத்துப் பாருங்களேன் அதில் உள்ள சந்தோஷம் எதிலும் இருக்காது. அதனால் கர்ணனுக்கு கொடுத்துக்கொண்டே இருக்க தோணுச்சோ?
யோசிப்போம்.


ஸ்ரீசந்திரா

நமது சிந்தனைக்கு இலக்கிய நூல்கள்

                        சில பெரிய மனிதர்கள் உதவி செய்ய முன்வரும்போது ஏதேனும் ஒரு சுயநலதைக் கருதியே உதவி செய்ய வருகின்றனர் அத்தகைய இழி செயலைக் காண்பித்து மேகத்தைப் போல் கைமாறு கருதாது கொடைவளம் புரிய வேண்டுமென விழைகிறார் ஆசிரியர். மேகத்திலிருந்து மழை பொழிகிறது மழை பொழிவதால் நாட்டில் வளம் பெருகின்றன அப்படி பல வளம் பெருக்க வழி செய்யும் மேகத்திற்கு நாம் ஏதேனும் செய்கிறோமா என்றால் அதுதானில்லை. அதுபோலதான் உதவி செய்ய வருபவரின் உள்ளமும் அமைந்திருக்க வேண்டுமென சொல்கிறது திரிகடுகம் என்னும் நூல்.

                                       பிறர் தன்னைப் பேணுங்கால் நானலும் பேணார்
                                       நிறன்வேறு கூறிப் பொறையும் - அறனைவியைக்
                                      காராண்மை போல வொழுகலும் இம் மூன்றும்
                                      ஊராண்மை யென்னுஞ் செருக்கு

- திரிகடுகம்

                     அக்காலத்தவர் பொருளை எண்ணியே செல்வமென்று சொல்லவில்லை அறத்திற்கேற்ப ஆன்ற செல்வத்தையே செல்வமாக போற்றுகின்றனர்."ஆக நாமும் அன்றாடம் இல்லை என்றாலும் அவ்வப்போது அந்த மேகமாவோமே."


ஸ்ரீசந்திரா

நட்பு எப்படி இருக்க வேண்டும்

                        கூடா நட்பு கேடாய் முடியும் எப்படி தெரியுமா? நாம் வீதியில் செல்கிறோம்!செல்கின்றபோது பலரைப் பார்க்கின்றோம் பழகுறோம் சிலரை நண்பராகவே கொள்கிறோம் அவ்விதம் நட்பு கொள்ளும்போது ஆராய்ந்து பார்த்து நண்பரை கொள்வதில்லை உடனே நம்பி பழகத் தொடங்கிவிடுகிறோம். இத்தகைய செயலால் தீமையே தோன்றுகின்றன என்கிறார் வள்ளுவர்

                                       ஆராய்ந்து கொள்ளதான் கேண்மை கடைமுறை
                                       தான்சாம் துயரம் தரும்

                       எதையும் ஆராய்ந்து பார்க்காமல் நட்பு கொள்வோமானால் அதனுடைய இறுதி கட்டமானது சாவாகத்தான் இருக்குமெனக் கூறுகிறார்.
உண்மைதான் ! தேர்ந்தெடுக்காமல் நட்பு கொண்டு நலிந்து இருப்பவர்கள் இன்னும் தான் நம் கண்முன்னே நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அத்தகையவர்களைக் கண்டாலும் நாம் திருந்த முன்வர வேண்டும்.

                       நன்றாகப் பேசுபவர்கள் அவர்கள் தம் பேச்சு சுவையாகவும் இருக்கும் ஆனால்முடிவென்னவென்று கருதுகிறீர்கள்? அந்த தேன் போன்ற சொல்லே நம்மை கொல்லாமல் கொன்றுவிடும் பழக வரும் எந்த மனிதனும் தூய  உள்ளன் போடுதான் பழக வருகிறார்.

                      என்று தெரியாது. அதனால் கருத்துணர்ந்து கற்றறிந்தார் தம் நட்பைக் கொள்ளவேண்டும் அந்த நட்பு எங்ஙனம் வளருமென்றால் கரும்பின் நுனியிலிருந்துஅடிவரைத் தின்பதை யொத்ததாகும் ஏனெனில் கற்றவர் தம் நட்பானது முதன் முதலில் சற்று சுவைக்கும் வகையில் இருக்காது போகப் போகத்தான் இன்பம் பயக்கக் கூடியதாகும். தீயவர் நட்பு அத்தகையதல்ல! முதலில் கரும்பினது அடியிலிருந்து நுனியை நோக்கிச் செல்வதைப் போன்று இதனை புலமை மிக்க சமண புலவரொருவர் நாலடியாரில் கூறுகிறார் இப்படி

                              "கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்
                               குருத்திற் கரும்புதின் றற்றே குருத்திற்(கு)
                               எதிர் செலுத்தின் றன்ன தகைத்தாரோ என்றும்
                               மதுரம் இலாளர் நட்பு"


- நாலடியார்

                      எல்லோரிடமும் நட்பு கொள்வது நல்லது தான் ஆனால் அது நல்ல நட்பாக இருக்க வேண்டும் போலித்தனமான ஆயிரம் நட்பை விட உண்மையான ஒரு நட்பு இருந்தால் போதும்.


ஸ்ரீசந்திரா

கனவு மெய்பட வேண்டும்


                     சுந்தரம்பிள்ளை அந்த காலைவேளையில் வேர்க்க விறுவிறுக்க பார்வையை தூரத்தில் போட்டப்படி வாசலுக்கும் வீட்டுக்குமாக நடந்துகொண்டிருந்தார்.

                    அவருக்கு வயது அறுபது இருக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் தான் உயிரோடுஇருக்கும்போதே தன் ஒரே மகளுக்கு திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்று மாப்பிள்ளை தேடிக்கொண்டிருக்கிறார். ஆனால் தகுந்த மணமகன் இதுவரை அமையவில்லை. இப்ப கூட மாப்பிள்ளை வீட்டுக்காரர்களின் வருகைக்காக காத்துகொண்டிருக்கிறார். " பத்துமணிக்கெல்லாம் வறேன்னு சொன்னாங்க இன்னும்வரலேயேன்னு" நினைக்கும்போதே வாசலில் கார் வந்து நின்றது அதிலிருந்து பத்து பேர் வந்து இறங்கினார்கள்.

                  சுந்தரம்பிள்ளை வாய் நிறைய பல்லாக "வாங்க வாங்க எல்லாரும் வாங்க " என சிரித்தப்படியே வரவேற்றார். வந்தவர்களை வீட்டுக்குள் அழைத்து அங்கிருந்த ஷோபாவில் அமர வைத்தார். நேரம் கரைந்து கொண்டிருந்தது அப்ப ஒருத்தர் பொண்ண வரச்சொல்லுங்க என்றார்.

Wednesday, 7 May 2014

அன்பின் தேடல்

என்னை தொலைத்துவிட்டு
 உன்னை தேடுகிறேன்
 உன்னை தேடுவதற்கு
 நான் இருக்கிறேன்
 என்னை தேடுவதற்கு
 யாரும் இல்லை..!

புத்தக கண்காட்சி

                     

                 நான் ஒரு புத்தக கண்காட்சிக்கு போனேன். எப்படியாவது மிக குறைந்த விலையில் ஒரு நல்ல புத்தகம் வாங்கிவிட வேண்டுமென்று. வரிசை வரிசையாக அழகாக அடிக்க வைக்கப்பட்டிருந்தது புத்தகங்கள் அத்தனை புத்தகங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும்போது உள்ளுக்குள் பெரும் மகிழ்ச்சி அழகான அட்டை படங்களோடு நமக்கு பிடித்த எழுத்தாளர் பெயர்கள் கண்ண கவர ஆவலோடு எடுத்து புத்தகத்தை புரட்டினேன் பிரமித்து போனேன் அதில் உள்ள விலையை பார்த்து.

                   அப்புறமென்ன அடுத்த புத்தகம் அடுத்த புத்தகம் என புரட்டி பார்த்ததில் நேரம் தான் கழிந்ததே தவிர புத்தகம் கிடைக்கவில்லை கடைசியில் வந்துவிட்டோமே என்று ஒரு புத்தகத்தை வாங்கி கொண்டு கண்களாலே ஒரு முறை ஆசை தீர பார்த்துவிட்டு வந்தேன். எனது பார்வையில் புத்தக கண்காட்சி வெறும் பார்வைக்காக வைக்கப்பட்டதாகவே தோன்றியது. புத்தம் இப்போதெல்லாம் யாரும் அதிகம் படிப்பதில்லை என்று வருத்தப்படுகிறோம்.
 
                   இந்த மாதிரி சூழ்நிலையில் புத்தகத்தின் விலை அதிகமானால் எப்படி வாங்குவார்கள்? புத்தகத்தின் விலை குறைந்தால் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எண்ணுகிறேன். அனேக இடங்களில் புத்தக கண்காட்சி வெறும் கண்காட்சியாகவே இருக்கிறது.

Monday, 5 May 2014

கண்ணீர் சிந்தும் வானம்

தேன்சிந்த வேண்டிய வானம்
உன் மவுனத்தின் வலியால்
கண்ணீர் சிந்துகிறது

Friday, 2 May 2014

சதுரகிரி போகலாம் வாங்க

                       


                   எங்கெல்லாமோ போறீங்க சதுரகிரி போயிருக்குறீங்களா?
ஒரு ஆடி அமாவாசை அன்று சதுரகிரி சென்றோம். பஸ்சை விட்டு இறங்கியதும் ஆச்சரியத்தில் மூழ்கிபோனேன் மலையின் அடிவார தென்னந்தோப்பில் கும்பல் கும்பலாக கடா வெட்டி சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். வழியெங்கும் பக்தர் வெள்ளத்தில் மூச்சுவிடத் தினறியது ஒரு லட்சம் பேருக்கு மேல் வந்திருந்தார்கள். சுந்தர மகாலிங்கரை தரிசிக்க ஐந்து வயது குழந்தை முதல் எழுபது வயது முதியவர் வரை பயணித்தார்கள். 

                      உல்லாசப் பயணமாக இருந்தாலும் சரி ஆன்மிக யாத்திரையாக இருந்தாலும் சரி அவை வழங்கும் அனுபவம் சுவாரஸ்யமானவை. இந்திரகிரி, ஏமகிரி, வருணகிரி, குபேரகிரின்னு நாலு மலைகள் அதற்கு நடுவில் சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சித்தகிரின்னு நாலு மலைகள் சதுர் என்கிற வார்த்தைக்கு நான்கு ன்னு பொருள் அதனாலதான் அந்த இடத்துக்கு சதுரகிரின்னு பேர்.

கல்கியின் பொன்னியின் செல்வன் எனது பார்வையில்


                  புத்தகம் நம் வாழ்க்கையில் அதிக பக்கங்கங்களை கொண்டதாக இருக்கிறது நான் முதலில் படித்த கதை புத்தகம் ராணிகாமிக்ஸ் வரும் மாயாவி புத்தகம்தான் 4-5 வகுப்பு படிக்கும்போதே படித்தது உண்டு படித்துவிட்டு அதை அப்படியே ஒன்றுவிடாமல் கதையும் சொல்லியிருக்கிறேன். 

                வளர வளர புத்தகமும் மாறியது ஆசிரியர்களும் மாறி போனது சுஜாதா, ராஜேஸ்குமார், வித்யா சுப்ரமணியம், அனுராத ரமணன், சிவசங்கரி, சுபா, சுமதி,ரமணிசந்திரன் இவர்களின் புத்தகம் படிப்பதே ஒரு பொழுது போக்காவே அமைந்து போனது அதே நேரத்தில் மனதை பக்குவபடவும் வைத்தது. ஒரு குடும்பம், ஒரு காதல், ஒரு அலுவலகம் ஒரு உலகம் எப்படி இருக்கும் அதில் உள்ள மனிதர்கள் எப்படி பட்டவர்கள் என்று இவர்கள் எழுதிய புத்தகம்தான் உணர்த்தியது.                  கல்லூரியில் படிக்கும் போது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தேன் நானும் அந்த காலத்திலே வாழ்ந்தேன் நான் மட்டும் அல்ல அந்த நாவலை படித்தவர்கள் எல்லாருமே அந்த காலத்திற்கே போய்விடுவார்கள். நானும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவள் என்பதாலோ என்னவோ என்னை ரொம்ப கவர்ந்தது இன்னும் தஞ்சையை நேசிக்க வைத்தது.

Thursday, 1 May 2014

வஞ்சகமானவர்கள்

உன்னை புகழ்ந்து
பேசுபவர்களை
ஒருபோதும்
நம்பிவிடாதே
அவர்களே
வஞ்சகமானவர்கள்

இலங்கை வானொலியும் என் மனம் கவர்ந்த அறிவிப்பாளரும்

                   இலங்கை வானொலி எல்லோரும் ரசித்த காலத்தில் நானும் ரசித்தேன். நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தேன் அப்போது வானம்பாடியில் (இப்போது தென்றல்) உமாசந்திரா அவர்களின் நிகழ்ச்சி எனக்குப் பிடிக்கும். அதே நேரத்தில் சர்வதேச ஒலிபரப்பில் ஒரு குரல் என்னை வெகுவாக கவர்ந்தது. அப்போது அது யார் என்று சரியாக எனக்கு தெரியவில்லை அப்புறம் படிப்பு என்று இருந்துவிட்டேன்.


                           பரிட்சை முடிந்து வீட்டில் இருக்கும்போது மீண்டும் அந்த அறிவிப்பாளரின் குரல் என்னை ஈர்த்தது. அப்போது அவர் கவிதை, சிறுகதை, இலக்கியம் என்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டு இருந்தார். நிறைய நேயர்கள் தனது பங்களிப்பை தந்து கொண்டு இருந்தார்கள். அப்போது ஸ்ரீராமின் வெற்றிபாதை என்ற நிகழ்ச்சி போய்கொண்டு இருந்தது அதை பிஹச் அப்துல்ஹமீது அதை தொகுத்து வழங்கினார். 
                           இவர்களின் குரல்கள் என்னை கவரவே நானும் எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது ஆனால் எழுதி, எழுதி நானே வைத்துக்கொண்டேன் அதோடு கல்லூரியில் சேர்ந்துவிட்டதால் எழுதும் ஆசையை ஓரங்கட்டி வைத்துவிட்டேன் கல்லூரி படிப்பு முடிந்ததும் மீண்டும் வானொலி கேட்க ஆரம்பித்தேன். அதன்பிறகு ஒவ்வொரு அறிவிப்பாளர்களையும் எனக்கு ரொம்ப பிடித்து போனது பிஹச் அப்துல்ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், ஜெயகிருஷ்ணா, நாகபூஷணி, ஜெகன்மோகன், கலிஸ்டா, அனுஷாமொராய் என்று பெரும் பட்டியலே உண்டு அதில் ஒரு அறிவிப்பாளரின் குரல்
என்னை ரொம்ப கவர்ந்து வந்தது அவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று
ஆசைப்பட்டேன் ஆனால் அவர் என்ன நினைத்துக்கொள்வாரோ என்று தயக்கமாக இருந்தது.


                            அந்த நேரத்தில் நேயர் அரங்கம் என்ற நிகழ்ச்சி போய்கொண்டு இருந்தது எல்லா நேயர்களும் அதில் இடம் பெற்று வந்தார்கள் அப்போது ஜெகன்மோகன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முதன் முதலாக ஒரு நேயர் அரங்கம் என் நண்பியின் பெயரிலும், என் பெயரிலும் எழுதினேன் ஜெகன்மோகன் வாசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டும் இருந்தேன் இரண்டுமே ஒலிபரப்பு ஆனாது ஆனால் அவர் அதை வாசிக்கவில்லை.
யார் வாசித்தார்கள் தெரியுமா? யாருக்கு நான் கடிதம் எழுத வேண்டுமென்று
ஆசைப்பட்டேனோ, யாரின் குரல் என்னை ஈர்த்து வந்ததோ, அவரே எனது பிரதியை வாசித்தார். வாசித்ததோடு மட்டுமல்லாமல் நான் கவிதை என்று கிறுக்கிய வரிகளை நன்றாக கவிதை எழுதியிருக்கிறார் என்று பாராட்டவும் செய்தார் நான் எல்லையில்லா மகிழ்ச்சியுற்றேன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தேன். 50 க்கு மேற்பட்ட கடிதங்கள் வந்து குவிந்தது நேயர்கள் பாராட்டு மழை பொழிந்தார்கள் இது என்னுடைய முதல் அனுபவமாக இருந்தது நிறைய பேனா நண்பர்கள் கிடைத்தார்கள்.