Showing posts with label குறு நாவல். Show all posts
Showing posts with label குறு நாவல். Show all posts

Tuesday, 20 March 2018

பள்ளிப் பருவத்திலே / குறுநாவல்

(வணக்கம் இதனால் வரை தொடராக எழுதி வந்த பள்ளிப் பருவத்திலே சிறுகதையை இணைத்து குறுநாவலாக  மாற்றியிருக்கிறேன் நன்றி)


            சுதா சில வருடங்களுக்கு பிறகு அவளது பள்ளித்தோழியான கலா வீட்டிற்கு இப்போதுதான் முதல் முறையாக செல்கிறாள் . கலா எத்தனையோ முறை அழைத்தும் சுதா போகவில்லை இன்றும் அவள் போயிருக்க மாட்டாள் சென்னையில் ஒரு வேலை விஷயமாக சென்றதால் அப்படியே அவளை பார்க்கலாமே என்று செல்கிறாள். கலாவிடம் ஏற்கனவே தான் வருவதாக சொல்லியிருந்தாள். ஒருவழியாக சென்னை வந்து இறங்கியதும் ஒரு ஆட்டோ பிடித்து அட்ரஸ் சொல்லிவிட்டு இப்போது கலா நம்மை எப்படி ரிசிவ் செய்யும் அதே போன்று இருக்குமா?  இல்லை வேறு விதமாக இருக்குமா என யோசித்தபடி இருந்தாள் சிறிது தூரம் வந்ததும் இந்த ஏரியா தானே என மெல்ல ஆட்டோவுக்கு வெளியே தலையை நீட்டி எட்டிப்பார்த்தாள் கொஞ்ச தூரத்தில் கலா நின்றுக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு ஆட்டோகாரரிடம் அதோ அந்த ஹேட்டுக்கு முன்னாடி நிப்பாட்டுங்க என்றாள். ஆட்டோவும் அங்கே ஓரங்கட்டியது அவர் கேட்ட ஐம்பதை திணித்துவிட்டு ஆட்டோவை விட்டு இறங்கினாள் சுதா.

              கலா வாயெல்லாம் பல்லாக "வா..வா.. இப்பதான் உனக்கு வர்றதுக்கு வழி தெரியுதா ஒரு போன் இல்ல ஒன்னும் இல்ல நானா பேசினாதான் உண்டு எம்புள்ளைங்க ரெண்டும் டெய்லி கேட்கும் என்னம்மா ப்ரண்டு ப்ரண்டுன்னு சொல்வே ஒரு போன் கூட பேசுறாங்க இல்லன்னு நான் அவங்களுக்கு ஏதாவது சொல்லி சமாளிப்பேன் " என்றபடி மூச்சுவாங்க மேலே கூட்டிச்சென்றாள் கலா.. பத்து பதினைஞ்சு குடித்தனம் இருக்கும் அபார்ட்மென்ட் வரிசையாக வீடு அதில் ஒரு வீட்டின் முன் நின்று செப்பலை இங்கேயே கழட்டி போடு வீட்டுல பூஜையறை தனியா இல்ல ஹால்தான் வைச்சுருக்கோம்  அதான் நாங்க உள்ள போடுறதுல்ல என்றபடி உள்ளே சென்றாள் கலா. சுதா அவள் பின்னே ஒன்றும் பேசாமல் சென்று கொண்டு வந்த பேக்கையும், வாங்கிட்டு வந்த பழங்களையும் அங்கே வைத்துவிட்டு நிமிர்ந்தவள் வீட்டை கண்களாலே அளந்தாள் சின்னதா ஒரு ஹால், அதையொட்டி ஒரு பெட்ரூம்,அதையொட்டி ஒரு ரூம் அதன் அருகே பாத்ரூம் அதன் அருகிலே சின்னதாய் ஒரு கிச்சன். இதையெல்லாம் பார்த்தபடி நின்றவளின் கையில் இந்த தண்ணிய குடி என்று சொம்பை திணித்தாள் கலா.