Friday 2 May 2014

சதுரகிரி போகலாம் வாங்க

                       


                   எங்கெல்லாமோ போறீங்க சதுரகிரி போயிருக்குறீங்களா?
ஒரு ஆடி அமாவாசை அன்று சதுரகிரி சென்றோம். பஸ்சை விட்டு இறங்கியதும் ஆச்சரியத்தில் மூழ்கிபோனேன் மலையின் அடிவார தென்னந்தோப்பில் கும்பல் கும்பலாக கடா வெட்டி சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். வழியெங்கும் பக்தர் வெள்ளத்தில் மூச்சுவிடத் தினறியது ஒரு லட்சம் பேருக்கு மேல் வந்திருந்தார்கள். சுந்தர மகாலிங்கரை தரிசிக்க ஐந்து வயது குழந்தை முதல் எழுபது வயது முதியவர் வரை பயணித்தார்கள். 

                      உல்லாசப் பயணமாக இருந்தாலும் சரி ஆன்மிக யாத்திரையாக இருந்தாலும் சரி அவை வழங்கும் அனுபவம் சுவாரஸ்யமானவை. இந்திரகிரி, ஏமகிரி, வருணகிரி, குபேரகிரின்னு நாலு மலைகள் அதற்கு நடுவில் சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சித்தகிரின்னு நாலு மலைகள் சதுர் என்கிற வார்த்தைக்கு நான்கு ன்னு பொருள் அதனாலதான் அந்த இடத்துக்கு சதுரகிரின்னு பேர்.

                        முதலில் நாங்க ஸ்ரீவில்லிபுத்தூர் போனோம் ஆண்டாள் நாச்சியாரை தரிசனம் செய்தோம் இரவு தெரிந்தவர் வீட்டில் தங்கிவிட்டு விடிகாலை 5 மணிக்கு தாணிப்பாறை பஸ்சில் ஏறினோம் பிறகு தாணிப்பாறையில் இறங்கினோம். மூலிகை வனம் தங்களை அன்போடு வரவேற்கிறது என்ற வளைவை கடந்து உள்ளே சென்றோம். 

                                   அடிவாரத்திலே ஆங்காங்கே பலகார கடைகள்கள் அன்னதானங்கள் என நமக்கு தேவையான எல்லாமே கிடைக்கிறது கொஞ்சம் தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டோம் காலை 6 மணிக்கு மலை ஏறினோம் பாறைகள் அங்கும் இங்கு உடைந்து சிறியதும் பெரியதுமாக கிடந்தது கவனமாக நடக்கவேண்டும். கொஞ்ச தூரம் போன உடனே கீச்சிட்டு தாவும்
குரங்குகள் அதை துரத்தி கொண்டு ஓடும் நாய்கள் சுற்றிலும் அடர்ந்து காடுகள்.
போகும் பாதையிலேயே விநாயகர் கோவில், காளி கோவில், பேச்சியம்மன் கோவில் என தரிசித்துக்கொண்டு நடந்தோம் செல்ல செல்ல பாறை சற்றே கடுமையாகி போனது. நடக்க நடக்க பாதை வளர்ந்து கொண்டே போனது. போகும் வழியில் இரட்டை லிங்கம் ராமதேவர் பூஜை பண்ணின லிங்கம் சிவன், விஷ்ணு ரெண்டு பேரும் காட்சி கொடுத்துட்டு ரெண்டுபேரும் லிங்கமா மாறிட்டாங்களாம்.



                                அதை கடந்து சென்றோம் ஓடையின் குறுக்கே கிடந்த பாறையின்மீது கால்களை வைத்து கவனமாக நடந்தோம் மூச்சு வாங்கியது. என் கூட வந்தவர்கள் அங்கங்கே அமர்ந்து குளுக்கோஸ் சாப்பிட்டார்கள் நான் எதையும் சாப்பிடவில்லை எங்கேயும் உட்காரவில்லை ஒவ்வொரு மலையாக கடந்து சென்றோம் பிலாவடி கருப்பர் சன்னதி வந்தது அந்த ஓடையில் கால் நனைத்துவிட்டு சாமி கும்பிட்டோம். ஒரு பக்கம்
நேர்த்தி கடனுக்காக தேங்காய் உடைத்தனர் மறுபக்கம் ஊற்று நீரில்
குளித்துக்கொண்டு இருந்தார்கள் நாங்கள் அப்படியே அந்த ஓடையை கடந்து பயணிக்க தொடங்கினோம்.




                            நாங்கள் மலை ஏறிக்கொண்டு போகையில் அந்த குறுகளான பாதையில் ஒரு பக்கம் சாமியை தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி கொண்டு இருந்தார்கள் ஒரு அடி தவறி வைத்தால் பாதாளத்தில் விழவேண்டியதுதான் கீழே விழுந்தால் ஒரு எலும்பு கூட கிடைக்காது ஆனால் இதுவரை இதுபோன்ற அசம்பாவிதம் நடக்கவில்லை என்பதுதான்
ஆச்சரியம் அதுதான் அந்த சிவனின் மகிமை. கீழே இறங்கி வருபவர்கள் எல்லோருமே இதோ கோவில் வந்தாச்சு போங்க இன்னும் கொஞ்ச தூரம் தான் இருக்கு என்று சொல்லிக்கொண்டே போனார்கள் ஆனால் கோவில் வந்த பாடில்லை மனதில் சோர்வு இருந்தாலும் மலை ஏறுவதற்கு கஷ்டமாக இருந்தாலும் முன்னேறி செல்லதான் தோணுகிறது. கோவில் எங்கே கோவில் எங்கே என்று மனம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு மலை முடிவிலும் சிறு கடைகள் மாங்காய், சுண்டல். சோளம், பலகாரங்கள் குளிர்பானங்கள், மூலிகை தண்ணீர் பந்தல்கள் நமது தாகத்தை
தீர்க்கிறது. செங்குத்தான பாறைகள, வழுக்குப்பாறைகள் என்று ஏறுவதற்கு
கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்தது. காண கிடைக்காத காட்சி எங்கு பார்த்தாலும் பசுமையான காடுகள், அருவிகள் என ரம்மியமாக இருக்கிறது சுனை நீர் அடடா.. அப்படியே இளநீரை விட இனிமையா ஜில்லென்று இருந்தது.



                         ஒருவழியாக சுந்தரமகாலிங்க கோவில் வந்து சேர்ந்தோம் சிறிய கோவில்தான் இந்த மலையில் பொருட்களை கொண்டுவந்து கட்டியது பெரிய விஷயம்தான். தஞ்சை மாவட்டத்தில் காண்பதுபோல் பிரம்மாண்டமான கோவில் அல்ல ஆனால் அவற்றுக்கும் சற்றும் குறையாத அருள்மணம் கமழ்கிறது இங்கே. சற்றே சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார் சுந்தமகாலிங்கர். பால் , சந்தனம், பன்னீர், தேன், இளநீர், விபூதி என்று ஒவ்வொரு அபிஷைகமாகத் தொடர்கிறது மிக நிதானமாக பக்திப்
பூர்வமாக அருமையாக செய்கிறார்கள்.



                          அதையடுத்து சந்தனமகாலிங்கம் அங்கும் பக்கதர்கள் வெள்ளம்போல் காட்சி தந்தார்கள் சந்தனமகாலிங்கத்தையும் தரிசனம் செய்துவிட்டு அங்கேயே பல இடங்களில் அன்னதானம் போடுகிறார்கள் அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு களைப்பு தீர சிறிது நேரம் அமர்ந்துவிட்டு கோவிலை விட்டு இறங்க ஆரம்பித்தோம். 

                                     மலை ஏறும்போது கஷ்டம் தெரியவில்லை இறங்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. இந்த வழியிலா வந்தோம்? அல்லது பாதை தவறி வந்து விட்டோமா என்று கூட தோன்றியது கடைசியில் நல்லபடியாக மாலை ஐந்து மணிக்கு அடிவாரம் வந்து சேர்ந்தோம். 


                                   கீழே வந்த உடனே மருத்துவ குழு கால் வலிக்காமல் இருக்க தைலம் கொடுக்கிறார்கள். அங்கே போவதற்கு ஈசியா பஸ் கிடைக்கிறது ஆனால் ஊருக்கு கிளம்புவதற்குதான் பஸ் கிடைக்க கஷ்டமா இருக்கு ஏனென்றால் அத்தனை கூட்டம். எத்தனை கஷ்டப்பட்டு மலை ஏறிபோனாலும் அந்த சிவனை காணும்போது எல்லா கஷ்டமும் பறந்து போய்விடுகிறது. நீங்களும் ஒருமுறை சென்று வாருங்களேன் நல்லதே நடக்கும்.

No comments:

Post a Comment