Saturday 25 April 2015

திருவம்மானை

கேட்டாயோ தோழிகிறிசெய்த வாறொருவன்
 தீட்டார் மதில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
 காட்டாதன எல்லாம் காட்டிச் சிவங்காட்டித்
 தாட்டாமரைக் காட்டித் தன் கருணைத் தேன்காட்டி
 நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
 ஆட்டான் கொண்டு ஆண்டவா பாடுதுங்காண்.

          தோழியே ஒருவன் எனக்குச் செய்த மாயத்தைக் கேட்டாயோ? சித்திரங்கள் தீட்டிய மதிள் சூழ்ந்த திருப்பெருந்துறைப் பெருமான் எனக்குக் காட்டுவதற்கு அரியன காட்டினான். தன் திருவடிகளையும் காட்டினான். அருளாகிய தேன் காட்டினான், சிவபரம் பொருளைக் காண்பித்துத் தன்னுடைய அடிமையாக்கிக் கொண்டதை நாம் பாடுவோம்.


 ஒயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
 சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
 மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
 நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
 தாயான தத்துவனைத் தானேஉலகேழும்
 ஆயானை, ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய் தன்னை இடைவிடாது நினைவோர்


              நெஞ்சில் அவன் வீற்றிருப்பான். நினையாதார்க்குத் தொலைவில் நீங்குவான். உள்ளும், புறமும் இருந்து அவன் உயிர்களைப் பக்குவப்படுத்திக் கொண்டிருப்பான். தாய்போன்ற மெய்ப்பொருள். தானாகவே ஏழுலகத்திலும் கலந்து அவைகளாய் நிற்பவன் அத்தகையவனை நாம் பாடுவோம்.

சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன் தன் வேள்வியினில்
 இந்திரனைத் தோள் நெறித்திட்டெச்சன் தலையரிந்து
அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஒட்டுகந்த
செந்தார்ப் பொழில்புடை சூழ்தென்னன் பெருந்துறையான்
 மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்

              தக்கன் செய்த தகாதவேள்வியில் சந்திரனைத் தேய்த்தும் இந்திரனது தோள்கனை நெரியச் செய்தும். வேள்வித்தலைவனின் தலையைக் கொய்தும், வானத்தே செல்லும் ஒளிக்கதிர்களை உடைய சூரியனின் பல்லை யுடைத்தும், மற்ற தேவர்களை வெவ்வேறு திக்கில் ஒடச்செய்தும் பார்த்து மகிழ்ந்தான். சோலை சூழ்ந்த திருப்பெருந்துறையுடைய மந்தாரப் பூமாலையணிந்த அந்தச் சிவபெருமானைப் பாடி அம்மானை ஆடுவோம்.

ஊனாய் உயிராய் உணர்வாயென் உட்கலந்து
தேனாய் அமுதமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோர் அறியா வழியெமக்குத் தந்தருளும்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனாய்ச் சீரொளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோனாகி நின்றவா கூறதுங்காண் அம்மானாய்

              என் உடம்பும், உயிரும், அறிவும் சிவபெருமானிடத்திருந்து வந்தன. அவன் எனது கண்ணில் கலந்து, தேனும் அமுதமுமாய் இனிமை தந்தான்.

             தேவர்களும் அறிதற்கரிய வீட்டு நெறியைக் காட்டியருளினான். பேரறிவின் வடிவமாய் இருப்பவனும் அவனே. அவன் உயிர்களின் தலைவனாய் நின்ற முறையைப் பாடியாடுவோம்.


                                              -தொடரும்

No comments:

Post a Comment