Saturday, 2 May 2015

திருச்சாழல்

              மகளீர் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. தடையும் தடைக்கேற்ற விடையும் பாடுவது. இருவருக்கிடையில் நிகழும் வாதம் போன்றது.

 பூசுவதும் வெள்நீறு பூண்பதுவும் பொங்குஅரவம்
 பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ
 பூசுவதும் பேசுவதும் கொண்டு என்னை
 ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பு ஆனான் சாழலோ.

           பூசுவது வெண்ணீறு, அணிவதோ சீறும் பாம்பு. பேசுவது நற்றமிழ் நான் மறை. இவற்றிடையே பொருத்தம் ஏதும் உண்டா? உண்டு. இயற்கையாகவும், உயிர்களனைத்துமாகவும் இறைவன் விளங்குவதுதான் அது. இறைவன் உண்மையில் இயற்கையின் வடிவம். மனிதனன்றோ தனது கற்பனையில் தோன்றியவாறெல்லாம் இறைவனை அலங்கரித்து அழகு பார்த்தான். நீறு பூசி, பாம்பு அணிவித்து, வேதம் ஒதப்பண்ணினான்.


 அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
 நிலமுதற் கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ
 நிலமுதற் கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
 சலமுகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ.

             திருமாலும், பிரம்மாவும் தனது அடிமுடி காண முடியாதபடிக்கு தீப்பிழம்பாய் நின்றான் சிவன். நிலத்திற்குக் கீழும், அண்டத்திற்கு மேலுமாய் அவன் நில்லாமற் போனால் அயனும் அரியும் பகைமையால் ஏற்ப
ட்ட செருக்கொழிய மாட்டார்கள்.

தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
விண்பால் யோகெய்தி வீடுவர் காண் சாழலோ.

          பெண்ணை ஒரு பக்கத்தில் வைத்த பித்தன் எப்படிச் சுத்த சிவன் ஆக முடியும்? அவன் சங்கற்பத்தால் அவ்வாறு கொள்ளாவிட்டால் உலகம் ஏது? உயிர்கள்தாம் ஏது?
சிவசக்தி பரிணமிக்காவிடில் உலகோர் மணமில்லாமல் மாண்டிருப்பர்.

கான் ஆர்புலித்தோல் உடைதலை ஊண்காடுபதி
ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர் ஏடீ
ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும்
வான் நாடர் கோவும் வழி அடியார்சாழலோ.

           புலித்தோலை உடையாகவும், மண்டையோட்டைப் பிச்சைக்கலமாகவும், சுடுகாட்டை இருப்பிடமாகவும் கொண்டிருக்கிறானே இவனுக்கு யார் ஆட்படுவார்? நாரணனும், நான்முகனும், இந்திரனும் அவனுக்கு எப்போதுமே அடிமைகள் தாம். அழியக்கூடிய உலகமிது. இங்கே எதற்கும் சொந்தம் பாராட்டாதீர்கள் என்கிறார் மாணிக்கவாசகர்.

கட கரியும் பரிமாவும் தேரும் உகந்த ஏறாதே
இடபம் உகந்து ஏறிய ஆறு எனக்கு அறிய இயம்பு ஏடீ
தடமதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில்
இடபம் அது ஆய்த்தாங்கினான் திருமால் காண் சாழலோ

          மதயானை, குதிரை, தேர் இருக்க அவற்றையெல்லாம் விடுத்து ரிஷபத்தை ஏன் வாகனமாய்க் கொண்டான்? சிவன் முப்புரத்தைச் சிரித்து எரித்த பொழுது திருமால் காளையாக வந்து சிவனைச் சுமந்தான். சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்னும் கோட்பாடு இவ்விதம் நிறுவப்பட்டது,

சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கு அன்று அருளிய ஆறு என் ஏடீ
 நலமுடைய நாரணன்தன் நயனம் இடந்து அரன் அடிக்கீழ்
அலர்ஆக இட ஆழி அருளினன்காண் சாழலோ.

         ஜலந்தரன் என்னும் ஆணவமுடைய அசுரனை சக்ராயுதத்தால் அழித்த சிவன் அந்தச் சக்கரத்தை திருமாலுக்குக் கொடுத்தது ஏன்? சிவனை வழிபட்டு வந்த நாராயணன் ஒரு நாள் பூவொன்று குறைந்தபோது தன்கண்ணைப் பிடிங்கிப் பூவாக அர்ச்சித்தார். அது காரணம் பற்றிச் சக்ராயுதத்தைச் சிவன் அவருக்குத் தந்தான்.

அருந்தவருக்காலின் கீழ் அறமுதலா நான்கனையும்
இருந்தவருக்கருளுமது எனக்கறிய இயம்பேடீ
அருந்தவருக்கற முதனான் கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக்குல கியற்கை தெரியாகாண் சாழலோ

             அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப்பொருள்களை இறைவன் ஆலமரத்தின் கீழிருந்து விளக்குகிறார். அவர் மட்டும் அவற்றை விளாக்காதிருந்தால் உலகம் வாழ்வியலை அறியாது போயிருக்கும்.

                                  -தொடரும்

No comments:

Post a Comment