Saturday, 7 February 2015

விளையும் பயிர் / சிறுகதை

             மெரினா கடற்கரை... இதமான காற்று வீசிக்கொண்டு இருந்தது. அந்த வெள்ளை வெளேர் மணற்பரப்பில் கைகளை தலைக்கு வைத்துக்கொண்டு கண்களை மூடியபடி படுத்திருந்தான் கோபி. சற்று தூரத்தில் ஒரு காதல் ஜோடி சிரித்து, சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர் அதன் அருகில் ஒரு சிறுவன்

         "சார்... சார்... சுண்டல் வாங்கிகோங்க சார்.. கடைசியா ரெண்டு பொட்டலம்தான் சார் இருக்கு வாங்கிகோங்க சார் நல்லா இருக்கும்" என்று கெஞ்சியபடி இருந்தான்.


        அந்த காதல் ஜோடியோ அவனை விரட்டுவதிலே மும்முரமாக இருந்தனர்.

        "ஏய்... அதான் வேண்டான்னு சொல்றேன்ல்ல போ... போ..." விரட்டினான் அந்த இளைஞன். அந்த சிறுவனோ அதை பொருட்படுத்தாமல் எப்படியாவது இவர்களிடம் சுண்டலை விற்று விட வேண்டுமென்று கெஞ்சி கொண்டிருந்தான்.

       அதை சற்று தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கோபிக்கு பழைய ஞாபகங்கள் எட்டிப்பார்த்தது.

     இதே மெரினா கடற்கரையில் கையில் தூக்குடன் "மாங்கா... பட்டாணி... சுண்டல்" எனக் கூவி கூவி விற்பான். பள்ளிக்கூடம் விட்டதும் கடற்கரைக்கு வந்துவிடுவான் காதலர்களுக்கு பிடித்த வாசகங்களை எழுதி பொட்டலம் போட்டு கொடுப்பான். காதலர்களின் பெயரை தெரிந்துக் கொண்டு மாற்றி எழுதிக்கொடுப்பான்.

       இப்படி புதிது புதிதாக செய்து அனைத்து சுண்டல்களையும் விற்றுவிடுவான். அந்த பணத்தில்தான் படித்து இன்று ஒரு தனியார் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலைபார்க்கிறான். பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவனின் காதுகளில் அந்த குரல் தட்டி எழுப்பியது.

        "சார்... சுண்டல் வாங்குறீங்களா சார்..."

         அந்த சிறுவனை பரிதாபமாக பார்த்தப்படி எழுந்து உட்கார்ந்தான் கோபி.

       "ஒரு இரண்டு பொட்டலம் கொடுப்பா.. எவ்வளவு?

         அந்த சிறுவன் சந்தோஷத்தோடு ஒரு பொட்டலம் 5 ரூபா சார் என்றவன் இரண்டு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு அவன் கொடுத்த பத்து ரூபாயை வாங்கிப் போட்டுக்கொண்டான். கோபி மெல்ல பேச்சுக்கொடுத்தான்

         "உன் பெயரென்ன பிடிக்கிறீயா?"

         எம் பேரு ராமு சார்  "படிக்க ஆசைப்பட்டேன் ஆனால் முடியல சார்... எனக்கு அப்பா இல்ல, அம்மா மட்டும்தான். அவங்களுக்கும் இப்ப உடம்பு சரியில்ல, ஏதோ கஷ்டப்பட்டு இந்த சுண்டலை மட்டும் செஞ்சுதருவாங்க இத வித்தாதான் சார் எங்களுக்கு சாப்பாடு இதுல எங்க சார் நான் படிக்கிறது?"

       இவனின் கதையைக் கேட்டு யோசித்துக்கொண்டிருந்தவனிடம் "சார்... நான் வர்றேன் சார்.. அதோ... தெரியுது பாருங்க அதான் எங்க வீடு என்று தூரத்தில் சில குடிசைகளை காட்டினான் அந்த சிறுவன்.

        அந்த சிறுவனை பார்க்கும் பரிதாபமாக இருந்தது கோபிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு அங்கிருந்து கிளம்பினான். சில நாட்களுக்குப் பிறகு கோபியும் ராமுவும் நல்ல நண்பர்களாகி போனார்கள். தினமும் கடற்கரையில் அமர்ந்து ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்கள் இதுவே வழக்கமாகிப் போனது.

           இன்று வழக்கம்போல் கடற்கரைக்கு வந்தான் கோபி வெகு நேரம் ஆகியும் ராமு வரவில்லை இவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. குறைந்த நாட்களின் ராமு மனதில் ஒட்டிக்கொண்டான். நாட்கள் வாரங்கள் ஆகியும் அவன் வராததைக்கண்டு என்னவாக இருக்கும் என யோசித்தவன் சரி அவன் வீட்டுக்குப் போய்பார்ப்போம் என நினைத்தப்படி அந்தக் குடிசையை நோக்கி நடக்கலானான்.  கொஞ்ச தூரம் சென்றதும் சில குடிசைவீடுகள் தென்பட்டன அதன் அருகில்  சிறுவர்கள் கோலி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சிறுவனை அழைத்து

          "தம்பி... ராமு வீடு எங்க இருக்கு?" "அந்த சிறுவன் ஓடிவந்து அதோ... அந்த மூனாவது வீடுதான் சார்..."என்று கை நீட்டிக் காட்டிவிட்டு விளையாட ஓடிவிட்டான். கோபி அந்த குடிசையை நோக்கி நடந்தான். உள்ளே ஒரு முனங்கல் குரல் கேட்டது. கோபி அந்தக் குடிசைக்குள் நுழைந்தான்.


       அங்கே மண் தரையில் நைந்த பாயில் சுருண்டு படுத்து கால்களை மடக்கி கைகள் இரண்டையும் கால் இடையில் நுழைத்தப்படி அம்மா... அம்மா.. என முனங்கியபடி படுத்திருந்தான் ராமு.

         ராமு... ராமு... என அழைத்தப்படி அவன் அருகே சென்று தலையில் கை வைத்தான் உடம்பு நெருப்பாக கொதித்தது நல்ல ஜீரமாக இருக்கே என நினைத்தவன்

          "ராமு... ராமு... என மீண்டும் அழைத்தான். ராமு மெல்ல கண்களைத் திறந்து பார்த்து அருகில் கோபி இருப்பதைக் கண்டதும்.

          "சார்... அம்மா செத்து போய்ட்டாங்க சார்... நான் இப்போ அனாதையாயிட்டேன் சார்..." என்று ஓவென்னு அழுதான்.

           "என்னடா சொல்றே அம்மாவுக்கு எப்படி இப்படியாச்சா?" அம்மாவுக்கு மஞ்சக்கமாலை ரொம்ப முத்திபோச்சு சார் கையில காசும் இல்ல, கவனிக்க ஆளும் இல்லாம என்னை தவிக்க விட்டுட்டு போய்ட்டாங்க சார் இனிமே நான் எப்படி சார் இருப்பேன் எனக்கு யார் இருக்கா?" என்று அழுதவனை. வாரி அணைத்து

           உனக்கு நான் இருக்கேன்டா நீ அனாதை இல்ல, உன்னை நான் பார்த்துகிறேன். என்றவன் சரி வா உனக்கு ரொம்ப ஜீரமா இருக்கு ஹாஸ்பிட்டல் பொயிட்டு நம்ம வீட்டுக்கு போவோம். என்றவனை நன்றியோடு பார்த்தான் ராமு.

             "ரொம்ப நன்றி சார்... " எனக் கையெடுத்து கும்பிட்டான்.
         "இனிமேல் சாரெல்லாம் சொல்லக்கூடாது அண்ணான்னு சொல்லனும் சரியா" என்றவன் ராமுவை தூக்கிக்கொண்டு அந்த குடிசையை விட்டு வெளியே வந்து ஹாஸ்பிட்டல் நோக்கி புறப்பட்டான்.

           மாதங்கள் பல சென்றது ராமுவை பள்ளி ஒன்றில் சேர்த்துவிட்டான் அவனும் நன்றாக படித்துக்கொண்டிருக்கிறான். ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை ராமு வீணா போன பொருட்களை வைத்து ஒரு குட்டி விமானம் ஒன்றை ஓட வைக்க முயற்சி செய்துக்கொண்டிருந்தான்.

            ராமுவை காணாமல் தேடிவந்த கோபி அவனின் செயலைக்கண்டு தூரத்தில் இருந்தே ரசித்துக் கொண்டு நின்றான். பாத்திரம் அறிந்து பிச்சைப்போடு, நல்ல நிலம் பார்த்து பயிர் செய் என்று பெரியவர்கள் சொல்வதுபோல் நான் நல்ல பையனைதான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று மனநிறைவு ஏற்பட்டது.

             "ராமு சார்... சாப்பிட வர்றீங்களா சார்... எனக்குப் பசிக்குதுங்க சார்..." என்றான் வயிற்றைப் பிடித்துக்கொண்டு.

              " இதோ... வந்துட்டேன்..." என்றபடி ஓடி வந்தான் ராமு.

          எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வருவான் என்பதில் சந்தேகம் இல்லை.

                                                                ***முற்றும்***

No comments:

Post a Comment