Monday 23 February 2015

ஜபம் செய்வது எப்படி?

             மனிதனை நல்வழிப்படுத்தி சகல சௌபாக்கியங்களையும் அளிக்கவல்லது ஜபம். எப்படி ஜபம் செய்யத் தொடங்குவது? வாங்க பார்க்கலாம்.

            உங்கள் வீட்டில் தனிமையான ஓர் அறையைத் தேர்ந்தெடுங்கள். சுவரில் உங்கள் மனதுக்கினிய சுவாமி அல்லது தேவியின் படத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் கண் பார்வை இருக்கும் மட்டத்தில் அவருடைய பாதம் கண்ணில் படும்படி படத்தை மாட்டுங்கள். கீழே உட்கார ஒரு பாயையோ, பலகையையோ போட்டுக்கொண்டு உட்காருங்கள். காலை சௌகரியமாக சப்பணம் போட்டு உட்கார்ந்து ஜபத்தை ஆரம்பியுங்கள்.


             முதலில் சுவாமியின் பாதம், பிறகு கால்கள், அப்புறம் இடை, அதன் பின்பு மார்பு, கடைசியாக முகம் இப்படிப் பார்வையை உயர்த்திக் கொண்டே செல்லுங்கள். கொஞ்ச நாள் பழகியதும் உங்களால் முகத்தையே உற்றுப் பார்க்கமுடியும். இதுதான் ஜபம் செய்வதற்கு பக்குவமான நிலை.

            பகவான் உங்கள் இதயத்தின் வலதுபுறம் இருப்பதாக உருவகம் செய்துகொள்ளுங்கள். இப்போது ஜபத்தைத் தொடங்கலாம். ஜபமாலையை எடுத்துக்கொள்ளுங்கள் மாலை உருட்ட ஆரம்பியுங்கள்.

          மாலையை உருட்டும்போது ஆள்காட்டி விரலை உபயோகிக்கக் கூடாது. அது பிறரைப் பார்த்துக் குற்றஞ்சாட்ட உபயோகிக்கும் விரல். நீ வேறு நான் வேறு என்று பிரித்துக் காட்டப் பயன்படும் விரல். அது ஜபத்துக்குப் பயன்படாது. மோதிரவிரலையும் கட்டவிரலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த இணைப்பில் ஜபமாலையை வைத்துக்கொள்ளுங்கள்.

            உங்களுடைய இஷ்ட மந்திரம் ஒன்றை தேர்ந்தெடுங்கள்.

வேதாந்த மந்திரங்கள்:

தத்தவமணி - அதுவே நீயாகும் அகம்
 பிரம்மாஸ்மி - நானே பிரம்மம்
அயம் ஆத்மா பிரம்மன் - நான் என்பதே பிரம்மன்
 சிவோகம் சிவோகம் - நானே சிவம், மங்களம்
 ததேவ சத்யம் தத் பிரம்மா - அதுவே பிரம்மன்
ஆனந்தோகம் ஆனந்ததோகம்- நானே ஆனந்தம் மகிழ்ச்சியுடன் உருவகம்
ஹம்ஸ்சோகம் - அவன் நானே, நானே அவன் சோகம் ஹம்ஸா :அவனில் நான், என்னில் அவன்

பௌராணிக மந்திரங்கள்:

ஓம் நமோ நாராயணாய:
ஓம் ஸ்ரீராம
ஜயராமா ஜயஜயராமா:
ஓம் நமசிவாய:
ஓம் ஸ்ரீஷண்முகாயை நமஹ:
ஓம் ஸ்ரீராமச்சந்திராய நமஹ:
ஓம் ஸ்ரீலக்ஷ்மியாயாய நமஹ:
ஓம் ஸ்ரீசரஸ்வதியாயாய நமஹ:

             இது போன்ற மந்திரத்தில் ஒன்றை 108 தடவைகள் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்.

          ஜெபமாலையின் பிரதான முடிச்சாக மேரு மணி இருக்கும். அதில் ஆரம்பித்து உருட்டத் தொடங்க வேண்டும். நூற்று எட்டு தடவைகள் சொல்லி முடித்ததும் மேருவிற்கு வந்துவிடுவீர்கள். இது ஒரு ஜபமாலா முடிந்ததற்கு அடையாளம்.

           நூற்று எட்டாவது முடிந்ததும் உடனே மேரு மணியை உருட்டாதீர்கள். நூற்று ஏழாவது மணியை மறுபடி உருட்டிவிட்டு மீண்டும் மேருமணியைத் தாண்டி ஜபம் செய்யத் தொடங்குங்கள். அதாவது 107 வது மந்திரம் சொன்ன மணியைக் கொண்டே அடுத்ததையும் சொல்லிவிட்டு மேருமணியைத் தொடமால் 109 வது மந்திரத்திற்குப் போய்விட வேண்டும். இது இரண்டாவது ஜபமாலா.

          படிப்படியாக வேளைக்கு இருபது ஜபமாலாக்கள் வீதம் இரண்டு வேளையும் செய்யப் பழகுங்கள். ஜபம் செய்யும் போது உள்ளம் உருக வேண்டும், அன்பு, பச்சாதாபம், கருணை, நம்பிக்கை, பிரேமை இப்படி எல்லா விதமான நயமான உணர்ச்சிகளையும் மனதில் ஏந்தி உருக வேண்டும்.


          எந்த அளவுக்கு ஜபம் செய்யலாம்? எதையும் அளவாகச் செய்வதே முறையானது. ஜபத்தையும் அளவாகவே கையாள வேண்டும்.

        முதலில் ஒரு மாலா 108 தடவைகள் அளவு செய்ய ஆரம்பித்தால் போதுமானது. பிறகு படிப்படியாக, நேரமும் அவகாசமும் கிடைப்பதற்கேற்ப அதிக அளவு மந்திரங்களைச் சொல்ல பழகிக் கொள்ளுங்கள்.

          ஜபம் செய்யும் போது தடைகள் குறுக்கிடக்கூடும். ஜபம் செய்யும் போது தூக்கம் வரக்கூடும். அப்படி உறங்கிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

          ஜபம் செய்யும்போது மனதில் சரணாகதி உணர்வு இருக்க வேண்டும். தன்னுடைய பதவி, அதிகாரம, திறமை, செல்வாக்கு எல்லாவற்றையும் மறந்துவிட்டு இறைவனடியில் சரணாகதியாச் சேர்த்துவிட வேண்டும். ஆன்மீக ஒளிவிளக்கு என்னும் நூலில் இருந்து.

No comments:

Post a Comment