Wednesday 7 September 2022

இம்மையில் நன்மை தருவார் ஆலயம் போகலாம் வாங்க


                 கடந்த சில வருடங்களா எங்கேயும் போக முடியல கொரோனா காலம் என்பதை விட வேலை பளு,  நேரமில்லை இப்படி பல காரணங்கள் சொல்லலாம். சட்டென்று ஒரு யோசனை மதுரை இம்மையில் நன்மை தருவார் ஆலயம் செல்லாம் என்று தோன்றியது. சரி ஞாயிற்றுக்கிழமை போகலாம் என முடிவு செய்தாச்சு. சனிக்கிழமை இரவு மொபைலில் 4 மணிக்கு அலாரம் வைத்து விட்டு தூங்க ஆரம்பித்தேன். முழிச்சுப் பார்த்தால் காலை 6 மணி

              வழக்கமா நான் எழுந்திரிக்கும் நேரம் அச்சச்சோ... நேரம் ஆச்சே ஏன் அலாரம் அடிக்கலன்னு யோசித்துக்கொண்டே பாத்ரூம் போய் குளித்துவிட்டு அவசரம் அவசரமாக துணியை மாற்றிக்கொண்டு தலைசீவி  ஹேன் பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பியாச்சு. ஆனால் மனசுக்குள்ள இந்த அலாரம் ஏன் அடிக்கல நம்மை போகவிடாம தடுக்குதா என யோசித்துக்கொண்டே பட்டுக்கோட்டையில் 7 மணிக்கு பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன் மனசு முழுக்க நாம் சரியான நேரத்திற்கு போய் சேருவோமா? என்ற பதைபதைப்பு மனசுல இருக்கு. 

                 என் கண்கள் மணியை நொடிக்கு ஒரு தரம் பார்த்த வண்ணம் இருக்கு நேரம் கடகடவென ஓடுதே தவிர பஸ் வேகமா போகவே இல்லை ஆமை மாதிரி நகருது. ரொம்ப நாளைக்குப் பிறகு வெளியில் கிளம்புறோம் அதனால் மனசில் சிறு பயம் இருந்தது என்னவோ உண்மைதான். ஏன்னா பட்டுக்கோட்டை டூ மதுரை 10 மணி நேரமாகும் போய் திரும்புவதற்கு. அசால்டா கிளம்பிட்டோமே என நினைத்துக்கொண்டே ஈசா இதென்னப்பா சோதனை. உன்னை காண வரும் போதெல்லாம் பல சோதனைகள் செய்கிறாயே,  சதுரகிரி, திருவண்ணாமலை, போகும் போதெல்லாம் வழி நெடுகிலும் பல சோதனைகள் இருந்தது அதைப் பற்றி முன் பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். அதே போல இப்பவும் நமக்கு சோதனையா என நினைத்தப்படி மனசு திக்.. திக்.. என்று அடிக்கிறது. பின்ன தனியா சென்றால் பயம் இருக்கத்தானே செய்யும். 


                ஒருவழியா காரைக்குடி க்கு 10 மணிக்கு பஸ் போய் நின்றது அதன்பிறகு 10.30 க்கு பஸ் பயணிக்கத் தொடங்கியது சரியாக 1 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நான் இறங்கினேன். அய்யோ... இந்நேரத்திற்கு நடை சாத்தியிருக்குமே சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்ப வேண்டுமே என்ற எண்ணம் எனக்கு எழ ஓட்டமும் நடையுமாக செல்கிறேன்  கோவில் எந்த பக்கம் இருக்குன்னு தெரியலயேன்னு யோசித்தப்படி நடக்க அங்கே நின்று கொண்டிருந்த போலிஸ் காரரிடம் இம்மையில் நன்மை தருவார் ஆலயம் எங்கிருக்கு ரொம்ப தூரமா என்றேன். அவரோ .. அது இங்கிருந்து ரொம்ப தூரம்மா பெரியார் பஸ் ஸ்டான்ட்டுக்கும் பக்கத்தில் இருக்கு இங்கிருந்து பஸ் புடிச்சு அங்க போய் இறங்கிக்கோங்க என்றார் நான் தலையாட்டியபடி அங்கிருந்து நகர முற்பட்டேன் . அப்போது அவர் என்னை மீண்டும் அழைத்து "அம்மா... அந்த கோவிலுக்குத் தான் வந்திங்களா அதைவிட. இங்கே பெருமாள் கோவில் இருக்கு ரொம்ப சிறப்பு வாய்ந்த கோவில் அங்க போங்கம்மா"  என்றார். எனக்கோ அங்கே நொடி கூட நிற்க நேரமில்லாமல் நான் வந்ததே ஈசனை காணத்தான் இவர் என்ன என்னை பெருமாள் கோவிலுக்கு போக சொல்கிறார் என நினைத்தபடி அவரிடம் சிரித்தபடி மண்டையை ஆட்டிவிட்டு அங்கிருந்து ஓடி போய் பெரியார் பஸ் ஸ்டான்டுக்கு செல்லும் பேருந்தில் ஏறினேன் சரியாக 1.30 க்கு பஸ் பேருந்து நிலையத்திற்கு சென்றது அங்கிருந்து எந்த பக்கம் கோவிலுக்கு போறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு நின்னேன். 


                அப்போ ஒரு ஆட்டோ என்னை கிராஸ் செய்தது நான் கை நீட்டி இம்மையில் நன்மை தருவார் கோவிலுக்கு போகனும் ஆட்டோ வருமா என்றேன். அவரோ அந்த வழியாதாம்மா போறேன் வாங்க என்றார். எவ்வளவு பணம் என்றேன் 80 ரூபாய் கொடுங்கம்மா என்றார். என்னங்க கோவில் பக்கத்துலதான் இருக்குன்னு சொல்றாங்க நீங்க அதிகமா கேட்குறீங்களே என்றேன். யம்மா.. பாலத்தை சுத்திதாம்மா கோவிலுக்கு போக முடியும் இந்த பக்கம் போனால் போலிஸ் புடிக்கும்மா அதான் சொல்றேன் என்றார் ஆட்டோ டிரைவர் நமக்கும் வேற வழியில்லாமல் போக வேண்டியதாயிற்று அங்க போனப்பிறகுதான் தெரிந்தது பஸ்ஸ்டாண்ட் பின்புறம் தான் கோவிலே இருக்குன்னு நல்லா ஏமாத்திட்டாருன்னு நினைச்சுகிட்டே ஆட்டோவை விட்டு இறங்கினேன். மழை பெய்ததால் அந்த இடம் ஒரே சகதியாக இருந்தது. ஒருவழியாக தலைவாசல் வழியாக வருவோம்னு நினைச்சு வேக வேகமாக போனேன். கேட்டை திறந்து உள்ளே போகும் போதே ஒருவர் தடுத்தார் அங்கே எங்கம்மா போறீங்க நடை சாத்தியாச்சு உள்ள திருப்பணி நடந்திட்டு இருக்கு வெளி ஆட்கள் யாரும் போக கூடாது அனுமதிக்க மாட்டாங்க என்றார். நானோ இல்லங்க கோவிலை ஒருமுறை பார்த்திட்டு வந்திடுறேன் என்றபடி ஒரு பத்தடி நடந்திருப்பேன். இன்னொருவர் குறுக்கிட்டு நடை சாத்தியாச்சும்மா அங்க திருப்பணி நடக்குது உள்ள விடமாட்டாங்க என்றார். இல்லங்க சும்மா ஒருதடவை கோவிலை பார்த்துட்டு வந்திடுறேன் என்றேன். அவர் இந்தங்க பிரசாதம் என்று ஒரு தயிர் சாதம் பொட்டலத்தை கொடுத்தார் நான் சந்தோஷமாக வாங்கிக்கொண்டு கோவிலை நோக்கி நடந்தேன். அங்கே சிவ அடியார்கள் வேலை செய்துகொண்டு இருந்தார்கள். அதில் என்னைப் பார்த்து கோவில் திருப்பணி செய்ய வந்திங்களா?  இங்க திருப்பணி நடக்குதுன்னு எப்படித் தெரியும்? நீங்களா வந்திங்களா இல்ல யாராவது சொல்லி வந்திங்களான்னு அடுக்கடுக்காய் கேள்வியை கேட்டார். நான் சிரித்தப்படி " இல்லங்க நான் சாமி கும்பிடத்தான் வந்தேன் இங்கே திருப்பணி நடக்குதுன்னு தெரியாது என்றேன். அவரோ நீங்க எந்த ஊர்? என்றார். பட்டுக்கோட்டை என்றேன் அங்கிருந்தா வர்றீங்க என்று ஆச்சரியத்தோடு கேட்டார். 


               அதன் பிறகு அங்கிருந்து உள்ளே சென்றேன் மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் ஆலய திருப்பணி செய்ய சிவ அடியார்களை அழைப்பார்களாம். சம்பளம் கொடுத்துவிடுவார்களாம் அவர்கள் பல ஊர்களில் இந்த திருப்பணி செய்ய ஒரு குழுவாக இருக்கிறார்கள். அங்கே இருந்த சிவ அடியார்கள் இந்த தகவலை எனக்கு தந்தார்கள். நானும் அவர்களோடு இணைந்து பணி செய்ய தொடங்கினேன் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.  வெளியாட்களை யாரையும் உள்ள விட மாட்டார்களாம் இந்த சிவ அடியார்கள் ஆனால் என்னை அவர்கள் பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டது ஆச்சரியமாக இருந்தது. இதை நான் பெரும் பாக்கியமாக கருதினேன் ஆலயங்களை சுத்தம் செய்ய எனக்கு விருப்பம் உண்டு இப்ப தானா கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.  



                 எல்லா வேலையும் முடிந்த பிறகு எல்லாரையும் அழைத்தார்கள் பிறகுதான் தெரிந்தது சிவ அடியார்களுக்கு அங்கு சாப்பாடு உண்டென்று அதில் இன்னொரு ஆச்சரியம் என்னவெனில் அவர்கள் என்னையும் சாப்பிட அழைத்ததுதான். அதெல்லாம் வேண்டாம் என்றேன் அந்த சிவ அடியார்கள் என்ன சிவ இப்படி சொல்றீங்க நாங்க 100 பேர் என்றால் அதில் 101 ஆக நீங்கன்னு நினைச்சுக்கோங்க இந்த சின்ன வயதில் இந்த பணி செய்ய வந்திருக்குறீங்களே இதுவே பெரிய விஷயம். நாங்க காலம் காலமாக பரம்பரையாக குடும்பத்தில் ஒருத்தர் இந்த பணி செய்திட்டு இருக்கோம். இந்த பணி ஏல்லாராலும் செய்ய முடியாது சிவன் நினைத்தால் மட்டுமே இதை செய்ய முடியும் அது உங்களுக்கு கிடைத்திருக்கு வாங்க சிவ சாப்பிடுவோம் என்று அழைத்து அமர வைத்தார். வாழை இலையில் சாம்பார்,கூட்டு பொரியல், ரசம் பாயாசம் அப்பளத்தோடு சாப்பாடு ஆனால் சாப்பிடத்தான் முடியவில்லை. வயிறும் மனசும் நிறைவாக இருந்ததாலோ என்னவோ தெரியல சாப்பிட முடியல பொதுவா நான் கோவிலுக்கு கிளம்பிவிட்டால் எனக்கு பசியே எடுக்காது. 




            என் நெற்றியில் திருநீறு இல்லாததை கவனித்த தலைமை சிவாச்சாரியார் எனக்கு திருநீறு தந்தார் அதை பூசிக்கொண்டு சிவ பதிகங்களை சொல்லிவிட்டு எல்லோரும் சாப்பிட்டார்கள். அதன்பிறகு 4.30 க்கு மேல அர்ச்சனை தட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று பார்த்தால் எனக்கு ஒரே ஆச்சரியம் வழக்கமா சிவ ஆலயங்களில் லிங்கம் மட்டும்தான் இருக்கும் ஆனால் அங்கே நான் கண்ட காட்சி சிவ பார்வதியோடு காட்சி தந்தார் அம்மையப்பன் அழகென்றால் அழகு அப்படி ஒரு அழகு. கருவறைக்கு உள்ளே அனுமதிக்கிறார்கள் நான் நீண்ட நேரம் உள்ளே நிற்கும் பாக்கியம் கிடைத்தது. அந்தளவில் மனசுக்கு பெரும் மனநிறைவு லேட் ஆனதும் நல்லதுதான் இல்லையென்றால் இந்த பாக்கியம் எனக்கு கிடைத்திருக்காது கெட்டதிலும் ஒரு நல்லது என்பார்களே அது இதுதான். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு கோவிலிலும் எனக்கு ஒவ்வொரு அனுபவம் உண்டு. அப்படியிருக்க வாய்ப்பே இல்லாத போது சில சம்பவம் நடக்கும் இல்லையா அந்த மாதிரி ஒவ்வொரு முறையும் அனுப பூர்வமாக எனக்குள் உணர்ந்திருக்கிறேன். கோவிலை விட்டு வெளியே வந்ததும் பயம் தொற்றிக்கொண்டது அச்சச்சோ இங்கேயே மணி ஐந்தாச்சே இனிமே பஸ் புடிச்சு நாம எப்போ பட்டுக்கோட்டை போறது என்று ஓட்டமும் நடையுமாக சென்றேன். சற்று நேரத்தில் சற்று நேரத்தில் எனக்கு பஸ் கிடைத்ததது ஒருவழியாக பட்டுக்கோட்டை பஸ் பிடித்து ஏறி உட்கார்ந்த பிறகு தான் நிம்மதி வந்தது. 11 மணிக்கு பட்டுக்கோட்டை வந்தால் எங்க ஊருக்கு பஸ் இல்ல என்டா பண்றது இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே என நினைக்கையில் நாகப்பட்டிணம் பஸ் ஒன்று வந்தது. இதில் ஆச்சரியம் என்னான்னா அந்த நேரத்தில் பஸ்ஸே வராது ஆனால் அன்று வந்ததுதான் ஆச்சரியம். இதுதான் எம்பெருமானின் கருணை நம்மைத் தேடி வந்தவர்களை பத்திரமா போய் சேர்க்கனும்னு அந்த ஈசன் நினைத்திருக்கிறார். இல்லன்னா நான் பத்திரமாக வீடு வந்து சேர்ந்திருக்க முடியுமா??? தனியொரு பெண்ணாக மதுரை சென்று இரவு வீடு வருவது பெரிய விஷயம் அப்படி நான் வந்திருக்கேன்னா அது அந்த சிவனின் அருள்தான். 

             இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் ஒரு மனுசன் கஷ்டத்தில் இருக்கும் போது அதாவது இம்மையிலும் நன்மை தருவார் என்பது ஐதீகமாக இருக்கிறது. நான் போயிட்டு வந்துட்டேன் வாய்ப்பு கிடைச்சா நீங்களும் ஒரு முறை போயிட்டு வாங்க நல்லதே நடக்கும். இப்படி ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு அனுபவம் உண்டு அதை ஒவ்வொன்றாக பதிவு செய்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பதான் பதிவு செய்கிறேன் மீண்டும் இன்னொரு அனுபவத்தோடு உங்களை சந்திக்கிறேன்    . 



                                                                 நன்றி வணக்கம்

No comments:

Post a Comment