Tuesday 2 December 2014

மனமும் அட்ட சித்திகளும்

         
                 யோகி, சித்தர், சாது என்று சொன்னதும் அவர்கள் ஏதோ அற்புதங்களை, சித்துக்களைச் செய்வார்களென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அற்புதங்களைச் செய்யாதவர் யோகியாய் இறையருளைப் பெற்றவராய் பக்தராய் இருக்க முடியாதென்பது பலருடைய தவறான கருத்து. யோகி, சித்தர், சாது என்பதற்கும் சித்துக்கள் விளையாடுவதற்கும் யாதொரு தொடர்புமில்லை. யோகத்தின் குறிக்கோள் சித்து விளையாடுவது அல்ல. ஒரு உண்மையான யோகி அதைப்பற்றி நினைக்கவே மாட்டான்.

           இறைநெறியில் செல்பவர்களுக்கு இடையில் சித்துக்கள் செய்யும் ஆற்றல் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் அதுப்பற்றி அறிய மாட்டாமல் மேலே முன்னேறிப் போக முயல்வர். ஆக சாமியார், யோகி என்றால் சித்துக்கள் செய்பவர்களாக இருக்க வேண்டுமென்றோ, சித்துகள் செய்பவர்களெல்லாரும் சன்மார்க் சீலர்களென்றோ கருதும் மயக்கத்திலிருந்து நாம் விடுபட வேண்டும்.

            பொதுவாக சித்துக்கள் அணிமா, லகிமா, கரிமா, மகிமா, ஈசித்வ, வசித்வ, ப்ராகாம்ய, ப்ராப்தி என எட்டுவகைப்படும். ஆனால் முன் பகுதிகளில் நாம் விளக்கிய சூக்கும திருஷ்டி, சூக்கும் ச்ரவணம், சூக்கும யாத்திரை, மானதத்தந்தி போன்றவைகளையும் சித்துகளென்றே சொல்ல வேண்டும்.


            அணிமா: பொருள்களை அணு அணுவாகப் பிரித்து, மறுபடி அதே பொருளாக இணைக்கும் திறமை. பூமிக்குள் புதைந்த சித்தர் சில நிமிடங்களில் எதிரிலிருந்து வருவது, முதலில் அவர் பூமிக்குள் புதையுண்டதும் உடலணுக்களை அணுக்களாகப் பிரிக்கிறார், அணுக்களுக்குப் பெட்டியோ, மண்ணோ தடையாகாதாகையால் அவ்வணுக்களை வெளியில் கொணர்ந்து மறுபடி அதே உருவில் இணைத்துவிடுகிறார். ஒரு பெரிய மரத்தை இரண்டு நிமிடங்களில் இருந்த இடம் தெரியாமல் செய்துவிடலாம்.

           லகிமா: லேசாதல், உடலை லேசாக்கி, பூமியினின்று உயரக்கிளப்பல், பெரிய பாராங்கற்களை லேசாக்கி, எளிதாக மேலே உயர்த்தல் போன்றவை இச்சித்தாகும். மனதைப் பொருள்களில் தியான நிலையில் ஒருமித்து உணர்வை மேலுயர்வதாக ஊன்ற உணர்வுசக்தி மற்றெல்லாச் சக்திகளைவிடப் பலமானதால் பூமியின் ஈர்ப்புச் சக்தியை மீறிப் பொருள் மேலே உயர்கிறது.

            கரிமா: முன் சொன்னதற்கு மாறாக உடலையோ, மற்ற பொருள்களையோ பன்மடங்கு அதிக பளுவுள்ளதாயாக்கல். 100 பவுண்ட் எடையுடைய உடலையோ அல்லது ஒரு பொருளையோ தராசின் ஒரு தட்டில் வைத்து மறு தட்டில் ஆயிரம் பவுண்ட் எடையை வைத்தாலும் முன் தட்டு உயராது. உட்கார்ந்திருக்கும் லேசான ஆளை பல பேர் சேர்த்துத் தூக்கினாலும் தூக்க முடியாது. மனதைப் பொருளில் நிலைப்படுத்தி உணர்வைக் கீழ்முக அழுத்தத்தில் செயல்படுத்துவதால் இச்சித்து நடக்கிறது.

            மகிமா: சிறியதை பெரிய தாக்கல் சிறிய உடல் படைத்த சித்தர் சற்று நேரத்துக்குள் தன் உடலை பூதாகாரமாக மாற்றிக் கொள்ளல். சிறிய கல்லை பெரிய பாறையாக மாற்றல் மனத்தைப் பொருளில் நிலைப்படுத்தி, உணர்வை உள்ளிருத்தி விரியச் செய்ய அணுக்களின் இடைவெளி விரிந்து பொருள் பார்வைக்குப் பெரியதாகிறது. இந்த சித்துக்கு சிலர் மற்றொரு பொருளையும் சொல்கிறார்கள், சித்தன் உலக மக்களனைவராலும் பெருமைப்படத் தக்கவனாதல். இது அவ்வளவு சிரமமானதல்ல என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

            ஈஸித்வ: மனிதரை , விலங்குகளை, பறவைகளை விருப்பப்படி இயங்கவைத்தல், எஜமானனாகுதல், உயிரினங்களின் மனத்தை தன் வயப்படுத்தி, இதை எளிதில் சாதிக்கலாமென்பதை புரிந்து கொள்ளலாம்.

           வஸித்வ: அனைத்தையும் தன் வசப்படுத்தல், கவர்தல், மனச்சிருஷ்டி முதலிய பகுதிகளில் இதற்கான விளக்கத்தைக் காணலாம்.

           ப்ராகாம்ய: விரும்பிய மாத்திரத்தில் காரியத்தை நடத்துவித்தல், நடத்துவிக்க வேண்டிய காரிய நிலையில் மனத்தை இயக்கி உணர்வுச் சக்தியை ஊற்றினால் இது நடைபெறுமென அறிந்து கொள்ளலாம்.

             ப்ராப்தி: நாம் மனச்சிருஷ்டி விஞ்ஞானப் பகுதியில் விளக்கிய அதே தத்துவம் தானிதுதனக்கு வேண்டுமானதை உலகில் எங்கிருந்தாலும் அதைப்பெற்று அனுபவித்தல் தேவையானவைகளை மனச்சக்தியால் உண்டாக்கி அனுபவித்தல்.

             வாசகர்களே அட்டமா சித்துகளும் மன உணர்வுகளின் சம்பந்தத்தால் செய்யப்படுபவை என்பது இப்போது புரிகிறதல்லவா? இதற்கு சன்மார்க்கம், இறை நெறி எதற்குத் தேவை? மனதைப் பண்படுத்தி, இறைவன்பால் ஒன்றச் செய்ய வேண்டிய ஒன்றைச் செய்யக் கற்றுக் கொண்டால் அட்ட மாசித்துகளை மட்டுமல்ல, இன்னும் ஆயிரம் சித்துகளை விளையாடலாம். இதனால் ஒருவன் யோகி, சாது, பக்தன் ஆகிவிட மாட்டான். தன்னை அறிந்து, பிறவிப் பயனைப் பெற விரும்புபவனுக்கு இது சிறிதும் தேவையில்லை அதனால் அற்புதவாதிகளை ஆன்றோர்களெனக் கருதும் மயக்கத்திலிருந்து விடுபடுங்கள்.

2 comments:

  1. அட்டமாச் சித்திகள் குறித்து
    எளிமையாக விளக்கிச் சொன்னவிதம் அருமை
    அறியாதன அறிந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் எனது நன்றிகள்

      Delete