Saturday, 29 November 2014

கனவு சிறுகதை


            காலை நேரமது மழை லேசாக தூரிக்கொண்டு இருந்தது. ஆங்காகங்கே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது . கருவேலங்காடு நிறைந்த அப்பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குடிசை  வீடுகள்.

       அந்த வீடுகளுக்கு சற்றுத் தள்ளி ஒரு மண் சாலை அதில் எப்போதோ போடப்பட்டது. அந்த மண் சாலையில் இப்பவோ அப்பவோ என்று விழும் நிலையில் பழுதடைந்த மின்கம்பம் ஒன்று நின்று கொண்டிருந்தது. போதுமான சாலை வசதியோ மின்சார வசதியோ மருத்துமனை வசதியோ இல்லாத கிராமம் அது.
         
          அந்த குடிசை வீட்டின் முன் சுள்ளிகளை வெட்டிக்கொண்டிருந்தாள் வேளாயி... ஒல்லியான தேகம், எண்ணெய் தேய்க்காத தலை, கழுத்தில் தாலி இல்லை கிழிந்து போன சேலையும் நைந்து போன ரவிக்கையுமாய் காட்சித்தந்தாள். "என்ன கருமம் புடிச்ச மழையிது தொண தொணன்னு பேஞ்சுகிட்டு ஒரேதா பேஞ்சும் தொலைக்கவும் மாட்டேங்குது நம்ம பொழப்பையும் கெடுத்துகிட்டு" என்றவாறு உள் நோக்கி குரல் கொடுத்தாள்.


         "குமாரு... ஏலே... குமாரு... இங்க செத்த வந்துட்டுப்போயேன்..."

          "என்னம்மா..! எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு... நான் கிளம்ப வேண்டாமா..? என்றவாறு வெளியே வந்தான் வேளாயி மகன் குமார். வயது பனிரெண்டு அரசு பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படிக்கிறான் நல்ல புத்திசாலி வகுப்பிலே இவன் தான் முதல் மாணவன்.

         "என்னடா... ரொம்ப சலிச்சுகிறே...? மழை பேஞ்சுகிட்டு இருக்குல்ல வெறகு நனையுறதுக்குள்ளே உள்ள அள்ளி வையி காசுக்கு விறகு வாங்க நம்மகிட்ட பணமா இருக்கு சீக்கிரம் அள்ளி வை இத வைச்சுதான் இன்னைக்கு சோறாக்கனும்"

         குமார் ஏதோ முனங்கியபடி சுள்ளிகளை அள்ளி வைக்கத் தொடங்கினான். ஒரு வழியாக அள்ளி வைத்துவிட்டு கைகளில் இருந்த தூசை துடைத்துவிட்டு கொடியில் கிடந்த வெள்ளை சட்டையையும் காக்கி டவுசரையும் உதரி போட்டுக்கொண்டான். கீற்றில் சொறுவி இருந்த சீப்பை எடுத்து ரசம்போன கண்ணாடியில் முகத்தை பார்த்துக்கொண்டு தலையை வாரினான். பவுடர் அடித்துக்கொண்டு நெற்றியில் கொஞ்சம் திருநீறுபோல் வைத்துக்கொண்டான். வெள்ளையாய் இருந்த கை கால்களில் தேங்காய் எண்ணெயை தடவிக்கொண்டு அடுப்படிக்கு சென்று சட்டியில் இருந்த பழைய சோற்றை தட்டில்  போட்டு பழைய குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிட்டு தட்டிலே கையும் கழுவிட்டு கொடியில் கிடந்த துணியில் கையை துடைத்துவிட்டு ஆணியில் மாட்டியிருந்த புத்தக பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு வெளியே வந்தவன்.

         "அம்மா... நான் போயிட்டு வர்றேன்..! என்றவன் ஏதோ ஞாபகம் வந்தவனாய் "அம்மா.. இன்னைக்கு எங்க ஸ்கூல்ல இலக்கிய மன்ற விழா நடக்குது என்னோட படிக்கிற பிள்ளைங்களோட அம்மா அப்பா எல்லோரும் வருவாங்க நீயும் வர்றீயம்மா..?" தயக்கத்துடன் கேட்டான்.

             "நான்.. எங்கடா ராசா வர்றது.. நேத்து பெரிய தேவர் வீட்டு வயல்ல நடவு அது கொற கெடக்கு இன்னைக்கு போய் வேலை பார்த்தான் கூலி தருவாங்க அதோட அவர்கிட்ட கடனா பணம் கேட்டுயிருக்கேன் அதை வாங்கிதான் வீட்டுக்கு கூரை மாத்தனும் இல்லன்னா இந்த மழைக்கு தாங்காது நீ பொயிட்டு வாடா ஆமா சோறு சாப்பிட்டியா..?"

          "சாப்பிட்டேன்ம்மா... சரிம்மா.. நான் வர்றேன்..." என்றவன் அந்த செம்மண் சாலையில் கீழே கிடந்த கல்லை காலால் தெத்தியபடி நடந்து சென்றான் குமார். அவன் போவதையே பார்த்துக்கொண்டு நின்றாள் வேளாயி அவளால் மூன்று வேளை உணவு கூட கொடுக்க முடியாத அவளுக்கு பிள்ளையை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டுமென்ற ஆசை நிறைய இருந்தது. நான்தான் இப்படி மழையிலும் வெயில்லயும் கிடந்து வேலை செய்யுறேன் எம்புள்ளையாவது நல்லா படிச்சு ஒரு வேலை பார்த்தான்னா நல்லாயிருப்பான் அதுவரைக்கும் என் உடம்புல உசுறு இருக்கனும் ஏக்க பெருமூச்சு ஒன்றை வெளியே விட்டாள் வேளாயி.

          மாலை 3 மணி இலக்கிய மன்ற விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினராக காவல்த் துறை அதிகாரியை அழைத்திருந்தனர். சிறிது நேர உரைக்குப் பின்னர் மாணவர்களுக்கு பரிசை வழங்கினார் காவல் துறை அதிகாரி பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, விளையாட்டுப்போட்டி, என அனைத்து போட்டிகளிலும் குமாருக்கு முதல் பரிசு கிடைத்தது. காவல்த்துறை அதிகாரி வியந்து அவனை பாராட்டினார். கூட்டத்தில் இருந்தவர்கள் கைத்தட்டி ஆராவாராம் செய்தனர் விழா முடிந்ததும் அவரவர் வீட்டுக்கு செல்லத் தொடங்கினர். குமாரும் கை நிறைய பரிசுகளோடு வீட்டுக்குச் செல்ல தொடங்கினான். அவன் காதில் கைதட்டல் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டே இருந்தது. அதே நினைவாக வந்தவனுக்கு வீடு வந்தது தெரியவில்லை. வீட்டு அருகே வந்தவன்.

          "அம்மா... அம்மோவ்.. அ..ம்..மா.. அழைத்தப்படி வந்தான். மகனின் குரல் கேட்டு வெளியே வந்த வேளாயி திகைத்து நின்றாள். மகனின் கைகளில் இருந்த பரிசுப் பொருளைப்பார்த்து.

         "என்னடா ராசா.. இத்தனை பரிசு? வாங்கி ஒவ்வொன்றாக பார்த்தாள்.

        "அம்மா எல்லாத்துலயும் நான்தான் பர்ஸ்ட் எல்லாரும் என்னை புகழ்ந்து பேசினாங்க நீ தான் அத பார்க்கல எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்ததுச்சு தெரியுமா?

        "ஆமாண்டா செல்லம் எனக்குத்தான் பார்க்க குடுத்து வைக்கல" கவலையோடு சொன்னாள்.

       "நீ கவலைப்படாதேம்மா.. நான் நிறைய படிச்சு கலெக்டராகி இந்த ஊருக்கு என்னெல்லாம் செய்யபோறேன் தெரியுமா எல்லாத்தையும் செய்வேன் என்றான் மழலை குரலில்.

        மகனின் பேச்சை கேட்ட வேளாயி இருக கட்டியணைத்து "நீ.. செய்வேடா ராசா நீ செய்வே.." என முத்தமழை பொழிந்தாள்.

      தாயின் அணைப்பில் இருந்த குமார் மனதில் நிறைய சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அவன் கண்களில் தெரிந்தது.

        இந்த கருவேலங்காட்டு சிறுவனின் கனவு நிறைவேறும் காலம் எப்போது..?

                             ¤முற்றும்¤

11 comments:

  1. கவலையே படாதீங்க ,பயபுள்ள நல்லா வருவான் :)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லிட்டிங்கல்ல நல்லாத்தான் வருவான். தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்

      Delete
  2. நிச்சயம் நிறைவேறும்
    முயற்சியும் திறனும் இருக்கிறதே
    தலைப்பும் சொல்லிச் சென்றவிதமும் அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் எனது நன்றிகள்

      Delete
  3. Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  4. very good
    im gowry
    sri lanka

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி கௌரி அவர்களே

      Delete
  5. உங்கள்(எழுத்து)நடை எனக்கு மிகப்பிடிக்கும்.

    ReplyDelete
  6. உங்கள்(எழுத்து)நடை எனக்கு மிகப்பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி

      Delete