Friday, 14 November 2014

¤சந்தியா¤ சிறுகதை

           காலை நேரமது யூனிபார்ம் அணிந்த பிள்ளைகள் ஸ்கூலுக்கு வேகமாக சென்று கொண்டிருந்தனர். ஆய்சா மட்டும் வருகின்ற ஒவ்வொரு பஸ்சையும் விட்டுவிட்டு தூரத்தில் பார்வையை போட்டப்படி நின்றுக்கொண்டிருந்தாள்... அவள் பார்வை யாருக்காவோ வெயிட்டிங் என்பதை சொல்லாமல் சொன்னது. அடிக்கடி கடிகாரத்தை பார்ப்பதும் எரிச்சலாக தூரத்தை வெறிப்பதுமாக இருந்தவளின் பிரகாஷமானது...

          "ஹாய்... ஆய்ஷா! என்ன ரொம்ப நேரமா அய்யாவுக்காக வெயிட்டிங்கா..." என்றபடி வண்டியை நிறுத்தினான் குமார்.

            "இல்லைங்க சார்... வந்து அஞ்சு நிமிஷம் தான் ஆகுது என்று நக்கலாக கூறிவிட்டு இன்னும் கொஞ்ச நேரம் லேட்டா வந்திருந்தா பஸ் புடிச்சு ஆபிஸ் போயிட்டு உனக்கு ஒரு குட்பாய் சொல்லிட்டு போயிருப்பேன்.."

           "சாரிம்மா... சாரி.. ரியலி வெரிசாரி கொஞ்சம் லேட்டாயிடுச்சு அதுக்கு இத்தனை கோபமா..? அங்காளபரமேஸ்வரியே நேரில் பார்த்த மாதிரி இருக்கு சீக்கிரம் வண்டியில ஏறி உக்காரும்மா உன்னை ஆபிஸ்ல விட்டுட்டு போறேன்..."


         ஆய்ஷா சிரித்துக்கொண்டே ஏறி உட்கார்ந்தாள் குமார் வண்டியை விரட்டினான்"இன்னும் கொஞ்சம் வேகமா போங்க குமார் மேனேஜர் இந்நேரம் ஆபிஸ் வந்திருப்பார் நேத்தே முக்கியமான பைல் ஒன்னு பார்க்கனும்னு சொன்னார் என் ப்ரண்ட் சந்தியா வந்திருப்பா நான் மட்டும் லேட்டா போயி திட்டு வாங்கப்போறேன் எல்லாம் உங்களால வந்தது"

           "அம்மா தாயே ஆளவிடு இனிமே கரெக்ட் டைம்க்கு வந்து பிக்கப்பண்றேன். ஆமா உன்ப்ரண்ட் சந்தியா என்னை பார்த்தாலும் ஒரு வார்த்தை கூட பேசமாட்டேங்குறாங்க ஒரு ஹாய் வேண்டாம் ஒரு சிரிப்பாவது சிரிக்கலாம் இல்ல இதுதான் உன் குளோஸ் ப்ரண்டோட லெட்சனமா?

          "இல்ல குமார் அவ யார் கூடையும் பேசமாட்டா அவ உண்டு அவ வேலை உண்டுன்னு இருப்பா ரொம்ப நல்ல பொண்ணு தெரியுமா" "இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணா... என்றவன் ஏதோ ஞாபகம் வந்தவனாய் ஆய்ஷா ஈவ்னிங் சீக்கிரம் வந்துரு வெளியில எங்காவது போகலாம் "


            "எங்க போறோம்"

              "ம்... போகும்போது சொல்றேன் என கண்சிமிட்டி சிரித்தவன் அவளை ஆபிஸ்சில் இறக்கிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு மின்னலாக மறைந்தான்.

         ஆய்ஷாவும், குமாரும் காதலர்கள் ஒரு வருஷமா காதலிக்கிறார்கள் இருவர் வீட்டிலும் இவர்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டனர் இவர்கள்தான் கல்யாணத்தை லேட்டா வச்சுக்கலாம் என்று ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

        ஆய்ஷா மெல்ல வந்து சந்தியாவிடம் கிசுகிசுத்தாள் " சந்தியா மேனேஜர் வந்துட்டார"

       "ஏய் ஆய்ஷா ஏண்டி இப்படி பயப்படுற இன்னும் வரல இப்பதான் போன் வந்துச்சு இன்னைக்கு லீவாம் நேத்து உன்கிட்ட டைப் பண்ண சொல்லி ஏதோ கொடுத்தாராமே அதை டைப் பண்ணி டேபில்ல வைக்க சொன்னார் அப்படியே நோட்ல என்ட்ரி போட சொன்னார்"

            "அப்பாடா இன்னைக்கு ஜாலிதான் சொல்லிக்கொண்டே டைப் பண்ணத்தொடங்கினாள் அப்படியே சந்தியாவிடம் பேச்சுக்கொடுத்தாள்.

         "ஏய் சந்தியா நேத்து உன்னை பெண் பார்க்க வந்தாங்களே என்னாச்சு என்ன சொன்னாங்க இந்த இடம் பிக்ஸ் ஆயிடுமா? எந்த ஊர்? மாப்பிள்ளை என்ன வேலை பார்க்கிறார்?" அடுக்கடுக்கா கேள்விகளை கேட்டாள்.

         "ம்... மாப்பிள்ளை வேலைபார்க்கிறார் பொள்ளாச்சி பக்கத்துல சின்ன கிராமம் அவங்களோட சொந்த ஊர் அது அம்மா,அப்பா, ஒரு தங்கச்சி தங்கச்சிக்கும் கல்யாணம் ஆயிடுச்சு" மூச்சுவிடாமல் சொல்லிமுடித்தாள்.

            "உனக்கு மாப்பிள்ளைய பிடிச்சுருக்காடி?"

            "ம்... பிடிச்சுருக்கு நான் நினைச்ச மாதிரி நல்ல குடும்பம் மாப்பிள்ளை நல்ல குணமா தெரியுது அம்மா, அப்பா ரொம்ப நல்லவங்களா இருக்காங்க ஸோ... டோட்டலா குட் பேமிலி"

            "ஏண்டி சந்தியா நான் ஒன்னு
 கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே"

            "தப்பா இல்லாத எந்த கேள்வியா இருந்தாலும் தப்பா எடுத்துக்கமாட்டேன் கேளு"

        "நீ ஏன் யாரையும் காதலிச்சு கல்யாணம் பண்ணல உனக்கு காதல் பிடிக்காத இல்ல, உன்னை யாரும் காதலிக்கலையா கண்டிப்பா உன்னை யாரும் காதலிக்காம இருக்க முடியாது ஏன்னா நீதான் அநியாயத்துக்கு அழகா இருக்குறீயே"

           "நீ கேட்ட ரெண்டு கேள்வியில ஒன்னு கரெக்ட் அது என்னான்னா காதல் எனக்கு சுத்தமா பிடிக்காது ஏன்னா காதல் ஒருவித கவர்ச்சியால் ஏற்படுத்துன்னு நினைக்கிறவ நான். "

          இன்னைக்கு பொண்ணுங்க எல்லாம் அழகா இல்லன்னாலும் பரவாயில்ல சுமார பையனாக இருந்தாலும் அவன் கூட ஊரை சுத்திகிட்டு எனக்கும் ஒரு காதலன் இருக்கான்னு பெருமையா சொல்லிகிட்டு திரியுற காலம் இது இந்த காலத்துல சுத்த கர்நாடகமா இருக்கேயடி நான் கூடதான் காதலிக்கிறேன் என் காதல் என்ன தப்பா? நாங்க இன்னும் ஒரு வருஷத்துல கல்யாணம் பண்ணிக்கதானே போறோம்."

           அக்கவுண்ட்ஸ் வரவு செலவு கணக்கை பார்த்துக்கொண்டிருந்த சந்தியா அமைதியாக பதில் சொன்னாள். "அது உன்னோட விருப்பம் எனக்குன்னு ஒரு பாலிசி இருக்கு அப்படிதான் நான் இருக்க விரும்புறேன்எனக்குன்னு ஒவ்வொன்னா பார்த்து பார்த்து வாங்கிதர்ற அப்பா அம்மா என்னோட வாழ்க்கையையும் நல்லபடியா அமைச்சு தருவாங்கன்னு நம்பிக்கை இருக்கு அதோடு நமக்கு பிச்ச மாப்பிள்ளைய தேர்ந்தெடுத்து அவங்க முன்னாடி வந்து ஆசிட்டை ஊத்துறத விட அவங்க தேர்ந்தெடுக்கிற மாப்பிள்ளைய கட்டிகிட்டு அவங்க ஆசிர்வாதத்தோடு வாழுறது போதும்னு நினைக்கிறேன்."

          "அப்ப காதல் உங்க அப்பா அம்மாக்கு பிடிக்காதுன்னுதான் காதலை வெறுக்கிற இல்லையா?"

         "இல்லடி காதல் எனக்கும் பிடிக்கும் காதல் பண்ணிட்டு கல்யாணம் பண்றதை விட கல்யாணம் பண்ணிட்டு காதலிக்கலாம்னு நினைக்கிறேன். இன்னைக்கு காதல்ங்கிற பேர் ஊரை சுத்திக்கிட்டு ஓடி போய் கல்யாணம் பண்ணிட்டு கொஞ்ச நாள் உல்லாசமா இருந்துட்டு அப்பறம் ஒத்துவரலன்னு பிரிஞ்சு போற காதல் தேவையா சொல்லு ஆமா என்கிட்ட ஏன் இப்படி பேட்டி எடுக்கிற மாதிரி கேள்வியா கேட்டு கொல்ற? உன் காதல் தப்புன்னு நான் சொல்லல எனக்கு பிடிக்காதுன்னுதான் சொல்றேன் தட்ஸ்ஆல்" "
   
          "அப்பப்பா... ஒரு லெக்ஸரே அடிச்சுட்டே என் காதுல ரத்தம் ஒன்னுதான் வரல இனிமே ஒரு வார்த்தை கூட இத இத பத்தி பேசவேமாட்டேன்" என வாய்விட்டு சிரித்தாள்."

        "போடி உனக்கு வேற வேலையை இல்லையா" என்றபடி மற்ற வேலைகளை பார்க்கத் தொடங்கினாள். இப்படி பேசிய சந்தியாவுக்கு வயது 25 பெற்றோருக்கு நல்ல மகள் மட்டுமல்ல முற்போக்கு சிந்தனைவாதியும் கூட யாரோடும் அதிகம் பேசமாட்டாள் அப்படியே பேசினாலும் அது பொதுவான விஷயங்களாகதான் இருக்கும் இப்படிபட்டவளுக்கு அவள் மனம் போலவே வாழ்க்கை அமைந்துவிட்டது.

         இந்த நவீன உலகத்தில் இப்படி ஒரு பெண்ணா ஆய்ஷா உள்ளுக்குள் மகிழ்ந்து போனாள் அதே சந்தோஷத்தோடு வாழ்த்துச் சொன்னாள் உன் நல்ல மனசுக்கு நல் வாழ்க்கை அமையும் சந்தியா வாழ்த்துக்கள். அப்புறம் சந்தியா ஒரு சின்ன அட்வைஸ் சொல்றேன் கேட்டுக்க கலயாணம் முடிஞ்சு பர்ஸ்ட் நைட்ல என்கிட்ட அடிச்ச லெக்ஸரை மாப்பிள்ளைகிட்ட அடிச்சுராதே பாவம் அவர் மயக்கம் போட்டு விழுந்திட போறார்" கண்சிமிட்டி சிரித்தாள். "

        "போடி... உனக்கு எப்போதுமே கிண்டல்தான்" என முகம் சிவந்தாள் சந்தியா.

                          முற்றும்

No comments:

Post a Comment