Wednesday, 5 November 2014

இலக்கிய காதலில் தோழியின் பங்கு

         வரலாற்று சுவடுகளில் இன்றும் அழியாமல் தடம் பதித்து நிற்பது காதல். காதலைப் பற்றி இலக்கியங்களும், இதிகாசங்களும், காவியங்களும் பலவாறு எடுத்து இயம்புகின்றன. அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை காதல் புனிதமானது என்கின்றனர் பலர், காதல் இல்லையேல் சாதல் என்கின்றனர் சிலர். அப்படிப்பட்ட வலிமை பொருந்திய காதலுக்கு தூதாக நிற்பது நட்பு.

           ஒரு தலைவனுக்கும், தலைவிக்கும் காதல் ஏற்பட்டால் அவர்களுக்கு தூதாக செல்வது தோழிகள். அதுமட்டுமல்ல இவர்களில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மனமறிந்து நாசுக்காக தவறை உணரச் செய்யும் உரிமையும் இவர்களுக்கு உண்டு. இது எந்தளவுக்கு உண்மை என்பதை அறிய இலக்கியத்துக்குள் சென்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்வோமா? வாருங்கள் இங்கே ஒரு தலைவனும் தலைவியும் காதல் வயப்பட்டு யாரும் அறியாதவாறு களவொழுக்கத்தில் ஈடுபடுக்கின்றனர். இவ்வாறு களவிலே கூடும் வழக்கத்தை விடுத்து தலைவன் தலைவியை விரைவில் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோழி விரும்புகின்றாள். அதனால் தலைவனை சந்தித்து அவன் மனம் புண்படாதவாறு இவ்வாறு கூறுகின்றாள்.



வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திச் னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தாங்கி யாங்கியவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே

        அதாவது, தோழி என்ன சொல்கிறாள் தெரியுமா? இரவில் வந்து தலைவியைக் கண்டு திரும்பும் தலைவனைப் பார்த்து "பெரிய பலாப்பழம் கனிந்தால் சிறிய கொம்பு தாங்காது அது கீழே விழுந்து சிதையும் அல்லது காவலற்ற அப்பழத்தை அயலார் கவர்ந்து செல்வார்கள் அதுபோல தலைவி தலைவன் மீது கொண்டுள்ள காதல் மிகப்பெரியது அது மிகுந்தால் அவள் சிற்றுயிர் தாங்காது. அவள் இறந்து விடவும் கூடும் அல்லது அயலார் அவளை மணக்கவும் கூடும் என்று கூறித் தலைவியை விரைவில் மணந்து கொள்ளுமாறு தலைவனிடம் குறிப்பாக உணர்த்துகின்றாள். இப்படி குறுந்தொகை பாடல் இவ்விதம் சொல்கிறது என்றால் இதைவிட சற்றே ஆழமாக நற்றினை பாடல் ஒன்று இவ்விதம் கூறுகின்றது


இரவுப்புறத் தன்ன பினர்படு தடவுமுதற் சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை பெருங்களிற்று மருப்பின் அன்ன விழும்பு முதிர்பு
நன்மா னுழையின் வேறுபடத் தோன்றி விழவுக்களங் கமழும் உரவுகீர்ச் சேர்ப்ப ! இனமணி நெடுந்தேர் பாக னியக்கச் செல்இய சேறியாயின் இவளே
வருவை யாகிய சின்னாள்
வாழா ளாதல்நற் கறிந்தனை சென்மே!

                                   - நற்றினை

 "விழும்பு முகிர்பு நன்மா னுழையின் வேறுபடத் தோன்றி விழவுக் களங் கமழும்."

           இதன் பொருள் என்னவென்றால் "தாழை அரும்பு முதிர்ந்து சாய்ந்து விட்டதாயின் மணம் எங்கும் பரவும் அனைவரும் அது குறித்துப் பேசுவர் அதுபோல உங்களது களவொழுக்கமும் எங்கும் பரவி அலர் தூற்றும் பெண்களின் வாயில் பட்டு பலர் பேசும் பேச்சாயிற்று. ஆதலால் புலால் நாறும் கடற்கரைப் பாங்கினை விழவுக்களம் கமழும் இடம் போலச் செய்தது தாழை அரும்பின் மணம் அதுபோல தலைவியை பற்றி பழிப்பேச்சு மிகுந்த இவ்வூரில் நீ தலைவியை மணம் பேச வரும் செய்தி பரவினால் எமக்கு இனியதாகும். அவ்வாறு செய்யாமல் நாள் கடத்தினால் தலைவி இறந்து விடுவாள் என்று தோழி கூறுவதாக அமைந்துள்ளது. எதோடு எதை ஒப்பிட்டு எத்தனை அழகாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

No comments:

Post a Comment