Wednesday, 17 December 2014

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் ஆலயம்

             வாசகர்களே நான் இப்போது உங்களை திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்துச் செல்ல போகிறேன். அங்கே செல்ல உங்களுக்கு விருப்பம்தானே..! அப்ப என் கூட வாருங்கள்..!

             நான் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருவானைக்காவல் நோக்கி பயணித்தேன். பஸ் நிறுத்தம் அருகிலே திருவானைக்காவல் ஆலயம் மிகப்பெரிய கோபுரத்துடன் வரவேற்றது. அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இது பாடல் பெற்ற தலமாக இருக்கிறது.

           இந்த ஆலயம் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவராப்பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் அமைய பெற்ற தலமாக இருக்கிறது. கோயிலின் உள்ளே நுழைந்து போகையில் இருபுறம் பாக்கு மரங்கள் அழகாக இருக்கிறது அதை கடந்து போகையில் நாலுகால் மண்டபம் அதிலுள்ள நான்கு தூண்களில் அழகான சிற்பங்கள் நம்மை கவர்கிறது அதை ரசிப்படி உள்ளே நுழைந்தேன் பிரம்மித்து நின்றேன். கற்தூண்களை மண்டபங்களை தாங்கி நம்மை பிரம்மிக்க செய்தது.



          வாருங்கள் முதலில் சிவனை தரிசித்துவிட்டு பிறகு மற்றவகைகளை பார்ப்போம்.

         பிரம்மிப்பு விலகாமல் ரசித்தப்படி 10 ரூபாய் நுழைவுச் சீட்டு பெற்றுக்கொண்டு வரிசையில் சென்று போனோம். லிங்கம் இருக்குமிடம் தரை மட்டத்திற்கு கீழே இருக்கிறது குனிந்து உள்ளே சென்றோம். எம்பெருமான் மிக அழகாக காட்சி தந்தார்.  கர்ப்பகிரஹத்திற்கு மிக அருகில் நின்று காணக் கூடியதாக இருந்தது. கொண்டு வந்த பூக்களையும் வில்வ இலையையும் கொடுத்தோம் ஐயர் அர்ச்சனை செய்து தீபாராதனைக்காட்டி திருநீறு தந்தார். தீபத்தை தொட்டு திருநீறு பெற்றுக் கொண்டு வெளியே வந்தோம்.

           சரி வாருங்கள் இந்த கோவிலின் தல வரலாற்றை பார்ப்போம். புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்திருக்கிறது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்திருக்கிறது.

            சிவ கணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யாணையாகவும் சிலந்தியாகவும் பிறந்தார்களாம். சிவலிங்கம் கூரையில்லாமல் வெயிலிலும், மழையிலும் கிடந்திருக்கிறது. அதைப் பார்த்த சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில் மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்து வந்திருக்கிறது.

அதே நேரத்தில் யானை காவிரியில் இருந்து தன் துதிக்கையால் நீரும் பூவும் கொண்டுவந்து வழிப்பட்டு இருக்கிறது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாக கருதி அதை அழித்துவிட்டு செல்லுமாம். சிலந்தி மறுபடியும் வலை பின்னி தன் வழிபாட்டை தொடருமாம். தினந்தோறும் இது தொடர யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும் சிலந்தியோட போராட கடைசியில் இரண்டும் இறந்துவிட்டதாம். இவைகளின் சிவபக்தியை மெச்சிய சிவபெருமான் யானைய சிவ கணங்களுக்கு தலைவனாக ஆக்கினார்.

              சிலந்தி மறுபிறவியில் கோச்செங்குட்வ சோழன் என்ற அரசனாக பிறந்து பூர்வ ஜென்ம வாசனையால் கோச்செங்குட் சோழன் யானை ஏற முடியாத குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலை மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோயில்கள் கட்டினானம். அவையாவும் மாடக் கோயில் என்று அழைக்கப்பட்டதாம். கோச்செங்குட் சோழன் கட்டிய முதல் மாடக் கோவில் திருவனைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம்தானாம்.

இதில் இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்திரைப் போல வந்து மதில் சுவர் எழுப்பி பணியாளர்களுக்கு திருநீறை கூலியாக கொடுத்ததாக தல வரலாறு கூறுகிறது.

           பணியாளர்களின் உழைப்பிற்கேற்ற திருநீறு தங்கமாக மாறியதாம். திருவனைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில் சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசை கோபுரங்களும் நம் கண்களை விரிய செய்கிறது.

          சரி வாருங்கள் அடுத்து நாம் நான்காம் பிரகாரத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி சன்னதிக்கு செல்வோம். இந்த சன்னதி கிழக்கு நோக்கியவாறு இருக்கிறது.

         இங்கே இருக்கும் ஜம்புலிங்கம் அன்னையால் செய்யப்பட்டதாம். அதன் வரலாறு இப்படி சொல்லப்படுகிறது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை கையில் நீர் எடுத்து லிங்கமாக வடித்தாராம். அம்பிகை கையில் உள்ள நீர் லிங்கமாக மாறியதாம். அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தாராம். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஒருமுறை கவேரி நதியோடு சென்றுவிட்ட சோழனின் மணியாரம் திருமஞ்சனக் குடத்தில் சிக்கிக் கொண்டு எம்பிரானுக்கு ஆபரணமாக விளைந்த அற்புதத்தை சுந்தர மூர்த்தி நாயனர் ஒரு பாடலில் கூறியுள்றார்.

           இந்த தலத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால். அதிகாலையில் கோபூஜையும் உச்சிக்காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிகால பூஜையின் போது சிவாச்சாரியர்கள் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கீரிடம் அணிந்து கொண்டு மேளவாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளையும் செய்வது இத்தலத்தின் தனி சிறப்பாக இருக்கிறது.

           அதுமட்டுமின்றி பல அரிய சிற்பங்கள் இத்தளத்தில் காண கிடைக்கிறது. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை சிவலிங்க சன்னதிக்கு இடதுபுறமாக அமைந்துள்ளது. பல்வேறு சோழ மன்னர்கள் இக்கோவிலுக்கு பல கொடைகளை வழங்கியுள்ளனர் அதற்கு சான்றாக ஏராளமான கல்வெட்டுகள் காண கிடைக்கிறது. மொத்தம் 156 கல்வெட்டுகள் உள்ளது. இத்தலத்தப்பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அத்தனை விஷங்கள் இருக்கிறது அதில் பாதிதான் இவை.
அடுத்து நாம் கோவிலை சுற்றி வருகையில் சனிபகவான் சன்னதி, குருபகவான் சன்னதி, 63 நாயன்மார்களின் சிலைகளும், குபேர லிங்கமும், அதை தொடர்ந்து 108 லிங்கங்களும் நம்மை கவர்கிறது. அதை தொடர்ந்து நாகதோஷம் நீங்கவும் இங்கே பூஜிக்கப்படுகிறது. கோவிலைச் சுற்றி கற்மண்டபங்களும் தூண்களும் ரசித்துக்கொண்டே இருக்க தோணுகிறது. பிரம்மா, விஷ்னு, சிவன் மூவரும் ஒரே இடத்தில் இருக்கும் சன்னதியும் இருக்கிறது. அங்கிருந்து கிளம்ப மனமில்லாம் கிளம்பினோம். என்ன வாசகர்களே அப்ப நீங்கள்?

1. கோபுரம்


2. இது உட்புற மாடங்களும், தூண்களும்



 3. அதன் சிற்பங்கள்


2 comments:

  1. “திருவானைக்காவல்” என்றதும் உங்கள் தளம் வந்தேன். படங்களும் பதிவும் நன்றாக உள்ளன. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா..? திருவனைக்காவல் உங்களை ஈர்த்திருக்கிறது. தலத்திற்கும், தளத்திற்கும் வந்தமைக்கு எனது நன்றிகள்..!

      Delete