Monday, 8 December 2014

பிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள்/ சிறுகதை

                                               கதை தொடர்ச்சி

          இரவு ராசாத்தி சமையல் செய்துக்கொண்டிருந்தாள். அனிதா பக்கத்து ரூமில் நாளைக்கான பாடங்களை படித்துக்கொண்டிருந்தாள். கண்ணன் மெல்ல வந்தான் பேக்கை தன் ரூமில் வைத்தவன் சமையலறை பக்கம் சென்றான். "என்னம்மா சமையலா" என்றான். உடனே கோபத்தோடு தலையை வெடுக்கென்று திருப்பி "எங்கேடா போய் தொலைஞ்சே ரெண்டு நாளா... எங்க போனே.. நீ.. புள்ளையா.. நீ.. என்னைக்காவது உண்மையை சொல்றீயா ப்ராடு.. ப்ராடு.. மூஞ்சிய பாரு.. " ஏக வசனத்தில் திட்டி தீர்த்தாள்.

               "என்னம்மா.. இப்படி கோபமா பேசுறீங்க., நான் என்னம்மா தப்பு செஞ்சேன்.. நான் கல்யாணத்துக்கு தாம்மா போனேன்..." என்றான் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு.


         "ஏய்... ஏய்... திரும்ப.. திரும்ப.. பொய் பேசாத... உங்க சார் எனக்கு போன் பண்ணி பேசினார் என் மூஞ்சிலே முழிக்காதே.. உன்னை பார்த்தாலே எனக்கு பிடிக்கல முதல்ல இங்கிருந்து.. போ..." கோபமாக கத்தினாள்.

       உண்மை வெளிப்பட்டுவிட்டது என தெரிந்தவன் நைசாக நழுவி பாத்ரூம் பக்கம் சென்று முகம் கை கால் கழுவிக் கொண்டு வந்து ஹாலில் உள்ள ஷேரில் அமர்ந்தான்ராசாத்தி சமையலை முடித்துவிட்டு "ஏய்.. அனிதா.. இங்கே வா.. இதெல்லாம் எடுத்துவை மணி 9 ஆச்சு சாப்பிடணும்.. அனித்தா சலித்தப்படி செய்த சாப்பாடுகளை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தாள்.

          "ஏய் அவனையும் சாப்பிடச் சொல்லு" என்றபடி தட்டுகளை எடுத்து வைத்து சாப்பாடுகளை போட்டு வைத்தாள். எல்லோரும் மவுனமாக சாப்பிட்டுவிட்டு அவரவர் போய் படுத்தனர்.

        இரண்டு மாதம் கழித்து, ட்ரிங்... ட்ரிங்... போன் அலறிக்கொண்டு இருந்தது கண்ணன் ஓடி வந்து எடுக்க வந்தான். அதற்குள் ரிசிவரை எடுத்துவிட்டாள் ராசாத்தி. "ஹலோ.. ஹலோ.. யாரு பேசுங்க.. ஒன்னும் பேசாம இருந்தா எப்படி ஹலோ... சிறிது நேரத்திற்கு பிறகு மறுமுனையில் பதில் வந்தது ஹலோ.. நான்தான் அத்தை நிர்மலா பேசுறேன்.."

          "ஏய்.. என்ன நீ., போனை எடுத்தா பேசமாட்டிய எனக்கடுப்படித்தாள் இப்ப எதுக்கு போன் பண்ணின?"

        "ஒன்னுமில்ல" என ஓ... வென அழத்தொடங்கினாள் நிர்மலா.

      "ஏய்... இங்கபாரு.. எதுக்கு இப்ப அழுறே முதல்ல அழுறத நிறுத்து விஷயத்தை சொல்லு"

         " நேத்து என்னை பொண்ணு பார்க்க வந்தாங்க நான் பிடிக்கலன்னு சொல்லிட்டேன் எங்கப்பா.. சத்தம் போட்டாரு.. நான் உண்மையை சொல்லிட்டேன்"

           "ஏய் எல்லாத்தையும் சொல்லிட்டியா...
நீ படிச்ச பொண்ணுதானே.. இப்ப எதுவும் சொல்லாதே அப்புறம் பிரச்சினை பெரிசாயிடும்னு சொன்னேனா இல்லையா நீ இவனை மாட்டிவிட போற இவனுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது.."

           "ஒன்னும் நடக்காது அத்தை என்னை முழுசா சொல்லவிடுங்க நான் எல்லாத்தையும் சொன்னவுடன் அப்பா.. விவரம் கேட்டாரு கேட்டுட்டு சரி என்னவோ பண்ணிதொலை இனி உன்னை படிக்க வைக்க மாட்டேன் என் மூஞ்சிலே முழிக்காதேன்னு சொல்லிட்டாருன்னு அழுதாள்.

            "சரி சரி அழதே.. நீ பாட்டுக்கு இப்படி அழுது அழுது அவனுக்கு போன் பேசினியன்னா.. அவன் என்ன செய்வான் வீட்டுல யாரோடும் பேசுறதும் இல்ல சாப்பிடறதும் இல்ல எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கான். இங்கபாரு அவன் கூட சந்திச்சு பேசுறதை அளவோடு வச்சுக்க... உங்கப்பா எங்காவது பார்த்தா பிரச்சனை ஆயிடும் சொல்லிட்டேன் என்ன புரிஞ்சுதா? சரி நான் வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் ராசாத்தி.

            நாட்கள் சென்றது இருவரும் இஷ்டத்து ஊர் சுற்றினார்கள் சினிமா, பார்க் என்று உல்லாசமாக இருந்தனர். ஆனால் நிர்மலாவோட அப்பாவோ ரகசியமாக மாப்பிள்ளை பார்க்க தொடங்கியிருந்தார்.

                                                       -தொடரும்

No comments:

Post a Comment