Saturday, 1 July 2017

சித்தர்களும் பக்தர்களும்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே"

                                 - திருமூலர்

சித்தர்கள் பாடல் வழி சிருஷ்டியின் தத்துவத்தை அறியப் புகுமுன் சித்தர்களுக்கும் பக்தர்களுக்கும் உள்ள வேறுபாடு நிலையினை அறிவோம்.



யோகத்தில் அமரும் பொழுது சமாதி எனும் ஒடுக்க நிலை எப்படி ஒரு சித்தனுக்குக் கூடுகின்றதோ அவ்வாறே ஒரு பக்தனுக்கு அவனுடைய வழிபாட்டின்போது மன மண்டலத்திலேயே ஒடுக்க நிலை கூட வேண்டும். அப்படிக் கூடினால்தான் அவனுடைய வழிபாடு முழுமை பெறுகின்றது.

பூதங்கள் ஐந்தைப் புலன்களில் ஒடுக்கி, புலன்களை அந்தக் கரண் நான்கில் ஒடுக்கி, அந்தக் கரண்களை மாயையில் ஒடுக்கி, மாயயை ஆன்மாவில் ஒடுக்கி, ஆன்மாவைச் சிவத்தில் ஒடுக்கி, பிறவிப் பிணியை ஒழிப்பதே ஒடுக்க நிலை.

அதாவது சித்தனானவன் தன் அறிவின் முயற்சியால் மந்திர ஆற்றல்கள் கை வரப்பெற்று அதன் மூலம் இறைவனைச் சந்திக்கின்றான். தன் பெற்றர்கரிய பேற்றால் மரணத்தையும் வென்று மரணமில்லா பெரு வாழ்வை இந்த உடலிலேயும், உடலுக்கு அப்பாலும் வாழ்கிறான். அவனுக்கு மரணம் என்பது கூட ஒரு தூக்க நிகழ்ச்சிப் போல மாறி விடுகிறது. தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல் எந்தச் சமயத்திலும் அவனால் மரணத்திலிருந்து விடுபட இயலும்.

ஆனால் பக்தனானவன் இறைவன் மேல் கொண்ட அன்பின் திறத்தால் தன் மொழியால் இசைக் கூட்டி உள்ளத்தில் அதிர்வை உண்டாக்கி, உணர்ச்சி அலைகளை எழுப்புகிறான்.

அவன் கூட்டும் அந்தச் சொற்சொடரின் ஆற்றலானது ஆன்ம உலகிலே நுண் அதிர்வுகளை விளைவித்துத் தனி ஆன்மாவையும் பேரான்மாவையும் ஒருமைப்பாடு என்னும் ஒழுக்க நிலைக்கு உயர்த்துகிறது. நாயன்மார்களின் தேவராமும் ஆழ்வார்களின் பாசுரங்களும் இன்னபிற அடியார்களின் பாமாலைகளும் இந்த வகையைச் சார்ந்ததே.

சுருக்கமாக சொன்னால் இக்காலத்தில் மின்னோட்டமுள்ள மின்கம்பியைப் போன்றவர்கள் சித்தர்கள். இதில் அடையும் பயன்கள் பல. இருப்பினும் அஞ்சத்தக்க அபாயம் உண்டு.

ஆனால் மின்கலத்தில் உள்ள மின்சாரத்தை நாம் இலகுவாக கையாள்கின்றோம். இதில் பயன்கள் பல இருப்பினும் அஞ்சத் தக்க அபாயம் ஏதுமில்லை. இத்தகைய அன்பினைத்தான் இறைவனும் மிக விரும்புகிறான். எளிமையான வழிபாட்டின் மூலம் இறைவனை எளிதில் அடையலாம் என்பது பக்தர்களின் கூற்று.

அதாவது அறிவினால் அறிய முடியாததை கூட அன்பினால் காண முடியும் என்கிறார் இராமலிங்க சுவாமிகள் கூட

"அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வகைக்குட் படுபரம்பொருளே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே"

என்று கூறுகிறார். இங்கு அறிவு எனச் சுட்டப்படுவது யோக நெறியின் வாயிலாகப் பெற்ற மந்திர சக்திகளஹ. அன்பு என்று கூறப்படுவது யோகமுறை அறியாத இறைமையை உணரும் தனிநிலை.

அன்பிற்கு எளியனாம் இந்த இறைவனை அன்பினால் அடைந்ததற்கு உதாரணம் காரைக்கால் அம்மையார். தம் அன்பின் பெருக்கால் இறைவனையே மகனாகப் பெற்ற பாக்கியசாலி....

ஆக கடவுள் ஒரு குழந்தை மாதிரி நீங்கள் கை பிடித்து அழைத்தால் உங்கள் கூடவே வரும். நீங்கள் எப்படி நினைக்கின்றீர்களோ அப்படியே வளரும்.....

No comments:

Post a Comment