Thursday 2 April 2015

நான் கடவுள் / ஒருபக்க கதை

              காரைக்குடி பேருந்து நிலையம் அரியக்குடி பெருமாள் கோவிலுக்கு செல்வதற்காக பஸ்க்கு காத்திருந்தேன். அருகில் என் தோழியின் மகள் கடைகளைச் சுற்றி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றாள். தோழி தனக்குத் தெரிந்த ஒருவருடன் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தாள்.

              அப்போது என்னருகில் ஒரு குரல் திரும்பிப் பார்த்தேன் அழுக்கு சேலையும், பரட்டை தலையும், முகத்தில் அதிக சுருங்கங்களோடு வயது முதிர்ந்த பாட்டி "அம்மா... தர்மம் பண்ணுங்கம்மா... மயக்கமா வருதும்மா... காபித்தண்ணி குடிக்க காசுயிருந்தா குடுங்கம்மா..." என்றார். என் தோழியின் மகள் முகத்தை சுழித்து வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.


               
            நான் ஹேன்பேக்கைத் திறந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தேன். கண்கள் விரிய வாங்கிய பாட்டி இரு கைகளை மேலேத் தூக்கி

         "நீ... நல்லா இருக்கனும்மா... ஏழேழுத்தலைமுறைக்கும் நோய்நொடியின்றி நல்லாயிருக்கனும்..." வாழ்த்திவிட்டு நகர்ந்தது.

        "அம்மா.. அம்மா.. இங்க வாங்கம்மா.. இந்த சித்தி சரியான இளிச்ச வாயிம்மா... அந்தப் பிச்சைக்காரக் கிழவி ஆஹா ஒஹோன்னு புகழ்ந்ததும் பத்து ரூபாயைத் தூக்கி குடுத்துட்டாங்கம்மா... என்னைப் பார்த்து நக்கலாக சிரித்தப்படி அம்மாவிடம் புகார் செய்தாள்.

          நான் இருவரையும் பார்த்து சொன்னேன். "என்னைப் புகழ்ந்து சொன்னதற்காக நான் பணம் கொடுக்கவில்லை.. அந்த இடத்தில் எங்கம்மாவை நினைத்துப் பார்த்துக் கொடுத்தேன்... முதியவர்களுக்கு எப்பவும் கொடுப்பது வழக்கம். ஏன்னா வயசானவங்களுக்கு இனி வேலை செய்து சாப்பிட முடியாது... ஒரு டீ ஐந்து ரூபா, ஒரு இட்லி இரண்டு ரூபா இன்னைக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு நான் மகளா இருந்தேன் அவ்வளவுதான்...

           நாம சாமி கும்பிட கோவிலுக்குப் போறோம் ஏன்? எனக்கு அதைக் கொடு இதைக் கொடுன்னு கையெடுத்து கும்பிட்டு யாசகம் கேட்டுத்தான் போறோம் அப்ப நாமளும் ஒருவகையில் பிச்சைக்காரங்கதான்... நாம கடவுள் முன்னாடி கையேந்தி நிற்கிறோம் அவங்க நம் முன்னாடி கையேந்தி நிக்கிறாங்க அந்த ஒரு நொடி நாம அவங்களுக்கு கடவுளா தெரிவோம் அதான் கையெடுத்து கும்பிடுறாங்க..." என்றேன்.

          நான் சொன்னது அந்தப் பெண்ணுக்கு புரிந்ததோ இல்லையோ ஆனால் மனதைக் குத்தியிருக்கும் என்பது உண்மை.

         
                            /// முற்றும்///

3 comments:

  1. adadadada... innama eidhura naina

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

    ReplyDelete