Thursday, 1 January 2015

மோட்சபுரி காசியில் முக்தி அருளும் விஸ்வநாதர்

        திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள் நிறைந்த காசி அகிலேஸ்வரனின் அம்சம். காசியில் மட்டும் கயிலைநாதனுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

       பரமேஸ்வரன் முன்பொரு சமயம் கைலாசத்தை விட மேன்மையான தலம் தரணியில் எங்காவது இருக்கிறதா என்று பார்ப்பதற்காகப் புறப்பட்டு வந்தார். வந்தவர் காசியை அடைந்தார். அந்நகரின் மேன்மையைக் கண்டு கைலாயத்தையே மறந்தார். இங்கேயே இருந்து விட்டார்.

             கைலாயபதி போன இடம் எதுவென தேடிக்கொண்டு பிரம்மதேவன் புறப்பட்டு வந்தார். காசியின் வசீகரம் அவரையும் அங்கேயே கட்டிப் போட்டது. பிரம்மனுக்குப் பின்னாலேயே நாராயணனும் தேடி வந்து அவரும் காசியிலேயே ஐக்கியமானார். மும்மூர்த்திகளும் காசியை உறைவிடமாகக் கொண்டது கண்டு, ஏனைய கடவுள்களும் காசியே கதி என்று வந்தடைந்தனர். முதல் முதலாக இத்தலத்தின் மேன்மையை ஈரேழு உலகங்களுக்கும் எடுத்து சொன்னவர் ஈஸ்வரன் என்பதால் இங்கே சிவனுக்குப் பிரதானமான வழிபாடு.

              ஏழு முக்தித் தலங்களில் ஒன்றெனப் போற்றப்படும் காசியில், பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக விஸ்வநாதர் பூரண பிரகாசத்துடன் ஒளிர்கிறார். மகாதேவனின் ஜோதிர்லிங்கம் இங்கு மண் தோன்றிய காலத்திலிருந்தே எழுந்தருளியிருப்பதாகக் கருதப்படுகிறது.

              நுழைவாயில் வெள்ளித் தகட்டினால் வேயப்பட்டிருக்கிறது. இந்த நுழைவாயிலுக்கு சிம்மத்வாரம் என்று பெயர். கோயிலின் உள்ளே நுழைந்ததும் இடப்புறம் சத்தியநாராயணர் சந்நிதி தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும், கணபதியும் எழுந்தருளியிருக்கிறார்கள். மேற்குப்புறத்தில் காலபைரவருக்கு ஒரு சந்நிதி அருகில் ஆஞ்சநேயர். மற்றொரு புறத்தில் ஆதிசக்தி கௌரி எழுந்தருளி இருக்கிறாள்.

           ஆலயத்தின் கிழக்குப்புறம் பத்தடிக்குப் பத்தடியில் கருவறை! விஸ்வேச்வரர் லிங்கம் கருவறையின் வடகிழக்கு மூலையில் ஒரு சிறு பள்ளத்தில் இருக்கிறது. கங்கை நதியின் மணிகர்கணிகைப் படித்துறை தீர்த்தம்தான் விஸ்வேஸ்வரரின் அபிஷேகத்திற்கு உகந்தது.

         அப்புனித தீர்த்தத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பக்தர்கள் விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்று தமது கரங்களாலேயே சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, மலர்களைத் தூவி தொட்டுத் தழுவிக் கும்பிட்டுவிட்டுத் திரும்புகிறார்கள்.

            காசிநாதனைக் கண்கள் தரிசித்ததுமே களைத்த உடல்களில் கூட புத்துணர்ச்சி. விஸ்வநாதனை விரல்கள் தொட்டதும் வேதபுரியான கயிலைக்கே சென்று மீண்டது போன்ற பரவசம்.

           கருவறைக்கு வடமேற்கு மூலையில் உள்ள ஓர் அறையில் கணபதியும் அருகில் பார்வதிதேவியும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். கருவறைக்கு வடக்குப்புறமுள்ள ஓர் அறையில் போக அன்னப்பூரணி சந்நிதியைக் காணலாம். விச்வேச்வரர் கோயிலில் இரவு 9.30 மணிக்கு அர்த்தஜாமப் பூஜை. இந்த பூஜைக்கு சிங்கார பூஜை என்று பெயர். இதைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த தரிசனத்திற்குப் பெருங்கூட்டம் கூடுகிறது.

           தீபாவளிப் பண்டிக்கையின்போது மூன்று நாட்களும் காசியிலுள்ள கோயில்களில் திருவிழா போன்று கூட்டம் கூடுகிறது. மூன்றாவது நாள் வகை வகையான இனிப்புப் பண்டங்களைத் தட்டுத் தட்டாக நூற்றுக் கணக்கில் செய்து மண்டபத்தில் அன்னக்கூடம் அமைக்கப்படுகிறது.

             இந்த அன்னக்கூட தரிசனத்திற்கென்றே விஸ்வநாதர் கோயிலுக்குப் பாரதம் எங்கிலும் இருந்து பெருமளவில் மக்கள் வந்து குவிகிறார்கள்.

          கயிலைநாதனைக் காண காசிக்கு வாருங்கள் களிப்பெய்துங்கள்.

          இந்த கோவில் உத்தரப்பிரதேசத்தில் உள்ளது. காசிக்கு விமானம் மற்று இரயில்களில் செல்லலாம்.

         தரிசன நேரம் 4 முதல் இரவு 9.30

No comments:

Post a Comment