Wednesday 7 January 2015

மீத்தேன் சுரண்டல்

            காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் எரிவாயு என்ற பெயரில் நீர்வள ஆதாரத்தை உறிஞ்சுவிட்டு நஞ்சு பொருளை பூமியில் கலந்து பசுமையாக இருக்கின்ற விளைநிலங்களை தார்பாலைவனமாக ஆக்கப் போகிறது மத்திய அரசு. மீத்தேன் எரிவாயு திட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை காவு கொடுக்கப் போகிறது. சுடுகாடாக மாற்றப்போகிறது. விவசாயத்தை நம்பி வாழ்கின்ற விவசாயிகள், உழவர்கள் எங்கே தங்கள் நிலம் பறி போகுமோ என்ற பீதியில் இருக்கிறார்கள்.

            மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்கு கிடைக்கிறது, சாண எரிவாயு மீத்தேன்தான் பூமிக்கு மேலே கழிவு பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறை பகுதியில் மீத்தேன் இருக்கிறது.


            தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும் அதை எடுத்து மின் உற்பத்தி செய்ய போவதாகவும் சொல்கிறது மத்தியரசுநாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல் மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறை பரப்பை உடைக்க வேண்டும், பூமியின் உள்ளே கிலோ மீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு நீரியல் விரிசல் முறை (Hyolraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் உள்ள நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.

         நிலத்தடி நீரை வெளியேற்றி விட்டால் அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்த பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு பூமியின் மேலே உள்ள நிலம் நஞ்சாகிவிடும். பிறகு மக்கள் வேறு வழியின்றி நிலங்களை விற்றுவிட்டு வெளியேறுவார்கள். எந்த எதிர்ப்பும் இருக்காது அவர்களின் திட்டம் இதுதான். 35 ஆண்டுகளில் 6.25 லட்சம் கோடி மதிப்புள்ள மீத்தேன் வாயுவை எடுக்க முடியும் என்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இங்கே விளைகின்ற பயிர்களின் மதிப்பைக் கணக்கிட்டால் 35 ஆண்டுகளில் 35 லட்சம் கோடி மதிப்பிற்கு விவசாயம் நடைபெறுகிறது.    அப்படி பார்த்தாலும் இந்த திட்டம் முட்டாள் தனமாக தெரிகிறது.


               மீத்தேன் எதற்காக எடுக்கின்றீர்கள்? மின்சாரத்திற்கும், எரிவாயுவிற்கும் தானே எங்களுக்கு இது இரண்டுமே வேண்டாம். மின்சாரம் வேண்டாம் மண்ணெய் விளக்கு போதும், சிலிண்டர் வேண்டாம் விறகு அடுப்பு போதும். நவீன வசதிக்காக காணி நிலங்களை இழக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. தூய்மை இந்தியா என்றது மத்தியரசு விவசாயத்தை அடியோடு ஒழித்துக்கட்டி சுத்தம் செய்ய போகிறதா? மொட்டையடித்து விட்டு சீப்பு வாங்க நினைக்கிறது மத்தியரசு.

             விளைநிலங்களை பாலைவனமாக்கி விட்டு சோற்று பிச்சையெடுக்க வைக்கப்போகிறதா? கூடங்குளம் போல் இதை சும்மா விட முடியாது. இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன் முறியடிக்க வேண்டும். மக்களுக்கு இதுப்பற்றிய விழிப்புணர்ச்சி அதிகம் தேவை.


             வாசகர்களே இதுப்பற்றி உங்களால் முடிந்தவரை மக்களுக்கு உணர்த்துவதற்கு முயற்சி செய்யுங்கள்.

3 comments:

  1. வலைப்பூவை பார்வையிட்டு தகவலை தெரிவித்தமைக்கும், வாழ்த்தியமைக்கும், தங்கள் வருகைக்கும் எனது நன்றிகள்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் ஜம்புலிங்கம் சார் அவர்களே

    ReplyDelete
  3. தங்களது வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிகள் பல

    ReplyDelete