Sunday 14 December 2014

நூதன பிச்சை

         ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்களும் சரி பாவ புண்ணியம் என்று இரக்கப்பட்டு உதவி செய்பவர்களும் சரி இதனால் நிறைய சோம்பேறிகளை உருவாக்குகிறோமோ என்று கூட தோன்றுகிறது.

         ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்று நினைக்கின்றீர்களா? 30 வயது மதிக்கதக்க ஒருத்தர் காவி உடை, நெற்றியில் பட்டை சந்தனம், கழுத்தில் மாலை, கையில் குடுகுடுப்பை சகிதம் வந்தார். (எங்கள் ஊரில் இதுபோன்று அதிகம் பேர் இருக்கிறார்கள்) நான் அவரிடம் "நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம் போங்க" என்று சொன்னேன்.

          அவர் உடனே சொன்னார் "என்னம்மா வேண்டான்னு சொல்றீங்க நல்ல வாக்கு சொல்றேன் ஏன் தடுக்குறீங்க என்று சொல்லிவிட்டு என்னைப்பற்றி ஆஹா.. ஓஹோ.. என்று புகழ்ந்தார் இது எல்லோரும் வழக்கமாக சொல்வதுதான். இப்படி சொல்லிவிட்டு சாப்பாடு இருக்குமான்னு கேட்டார்.


            நானும் சாப்பாடு என்றவனுடன் இல்லையென்று சொல்ல மனமில்லாமல் எடுத்து வந்து போட்டேன். சாதம் போடும்போது "மீன் குழம்பு ஊத்தட்டமா" என்றேன். "பரவாயில்லை ஊத்துங்க நான் மாலை போடவில்லை சும்மாதான்.." என்றார். பக்கத்து வீட்டில் இருக்கும் அக்கா கேட்டார் மத்தியான வேளையில் குடுகுடுப்பைக்கு என்ன வேலை என்றார்உடனே அவர் சொன்னார். "அப்பதானே மதியம் சாப்பாடு கிடைக்கும்..." என்றார்.

           ஆக அவர் பொய் சொல்லவில்லை ஆனால் அவர் போலி என்று தெரிந்தும் இல்லை என்று சொல்ல மனமில்லை.

         அடுத்து இன்னொருத்தர் வந்தார். கையில் ஒரு பைல், பேண்ட் ஷர்ட், கழுத்தில், கையில் செயின் சகிதம் 20 வயது மதிக்கதக்கவர். என்னிடம் வந்தார் "அனாதை சிறுவர்களுக்காக ஒரு டிரஸ்டு வச்சுருக்கோம் இன்னைக்கு  12 மணிக்கு அவங்க வடலூர் கிளம்புறாங்க அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்க" என்றார்.

            நான் உடனே "டிரஸ்டா எங்க இருக்கு என்றேன். அதற்கு அவர் பட்டுக்கோட்டையில் தான் என்று ஒரு குறிப்பிட்ட இடத்தை சொன்னார். நான் உடனே "அப்படியா இப்ப என்னிடம் பணமில்லை கண்டிப்பா நான் அங்கு வந்து உதவி செய்யுறேன்" என்றேன். உடனே அவர் சொல்றார் பாருங்க "இல்ல மேடம் இன்னைக்குதான் அவங்களுக்கு இந்த உதவி தேவை மற்ற நாளில் எங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வரும் இன்னைக்கு 12 மணிக்கு அவங்க கிளம்புறாங்க மேடம்" என்கிறார். அவர் என்னிடம் கேட்கும் போது மணி 11 ஆக இவரும் பொய் சொல்கிறார் என்றே தெரிகிறது

            இப்படிதான் நாம் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற மனிதர்களை சந்திக்கிறோம். பேருந்தில் இதற்கு மேல், வேல் குத்திக்கொண்டு, இரத்தம் சிந்தி சாட்டையால் அடித்துக்கொண்டும் பிச்சை எடுக்கிறார்கள் இவர்களை என்ன செய்யலாம்.

          இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? இல்லை இவர்களை வழி நடத்தக் கூடிய அமைப்புகள் ஏதாவது இருக்கிறதா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ஒரு நடவடிக்கை எடுப்போம். இல்லை இவர்கள் இப்படிதான், அலுவலக பணியாளர்கள் முதல் அரசியல் வாதிகள் வரை லஞ்சம் என்ற பெயரில் கௌரவ பிச்சை எடுக்கிறார்கள் அதைவிட இது பெரிய தவறில்லை என்று விட்டு விடுவோமா?

            ஏன் இப்படி ஒரு ஆதங்கம் வருகிறது என்றால் உண்மையில் தொண்டு செய்பவர்கள், தொண்டு நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் சேவை மனப்பான்மையில் உதவி கேட்டு வரும்போது. எது அசல், எது போலி என்று தெரியாமல் சந்தேகப்பட வேண்டியிருக்கு. ஒரு வேளை அந்த உதவி பயனுள்ளவர்களுக்கு பயனில்லாமல் போகிறது.

          இதை தடுப்பதற்கு உதவியாக இருக்குமே என்ற ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இவை.

         இதுப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் வாசகர்களே..!

4 comments:

  1. நல்ல சேவா ஸ்தாபனங்களை நன்கு விசாரித்து அறிந்து ஊக்குவிக்கலாம். இப்படி வீடு தேடி வருபவர்களுக்கு உதவி செய்வது வீண்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். இதுபோன்று பிச்சை எடுப்பவர்களை தடை செய்ய முடியுமா என்பதுதான் என் கேள்வி

      Delete
  2. கடவுளின் பேரில் பல கோவிலகளிலும் இம்மாதிரி நடப்பது நூதனப் பிச்சை என்பதை விட பட்டப் பகலில் நடக்கும் வழிப்பறி என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது !

    ReplyDelete
    Replies
    1. அப்படிதான் எல்லா இடங்களிலும் நடக்கிறது. என்ன செய்வது யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லையே!

      Delete