Tuesday 4 November 2014

மனசே... மனசே... /திரையிசை பாடலும், இலக்கிய பாக்களும்

         
        காலை வேளை வேலைகள் முடிந்து அமர்ந்திருந்தேன் திடீரென்று கார் இருள் சூழ்ந்தது. இது என்ன கார் காலமோ மண் மணக்கிறதே என்று என் மனம் வாசலுக்கு விரைந்தது. உடனே உள்ளிருந்து ஒரு குரல் அழைத்தது.

                  மனசே...என் மனசே..
            நீ எங்கே போகப் பார்க்கிற
            மனசே.. என் மனசே...
            நீ யாரை தேடி போகிற
            இத்தனை நாள் என் கூடயிருந்த
            இப்ப என்ன விட்டு நீ போவதெங்க
            உனக்கு யாரோட சகவாசம்...
           வேணாம் செய்யாத எனை மோசம்...


             சிரித்தபடி வாசலுக்கு வந்தேன் ஒரு துளி, சிறு துளி, பல துளி என மழை கொட்டத் தொடங்கியது.

          செம்மண் நிலத்தில் விழுந்த அந்த மழைத்துளி மண்ணோடு கலந்து செந்நீராக மாறியது. அதைக் காணும் போது உடனை எனக்கு இலக்கியத்தில் குறிஞ்சித்திணை பாடல் ஒன்று என் நினைவுக்கு வந்து போனது.

         அந்த பாடலுக்கும் இந்த மழைக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா? சம்மந்தம் இருக்கிறது. இயற்கை புணர்ச்சிக்கு பின்னர் தலைவன் தன்னை பிரிவானோ என ஐயமுற்றாள் தலைவி. அவளின் ஐயத்தை குறிப்பால் அறிந்த தலைவன் தலைவியை நோக்கி கூறுகிறான் இப்படி.

                         யாயும் ஞாயும் யாரா கியரோ?
                எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்
                யானும் நீயும் எவ்வழி அறிதும்?
                செம்புலப் பெயல்நீர் போல
               அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே

           அதாவது, ஒரு தொடர்பும் இல்லாத நாம் தெய்வத்தின் துணையால் ஒன்றுப் பட்டோம் ஆதலின் நம்மிடையே இனி பிரிவு என்பதே உண்டாகாது என்று கூறுகிறான். செம்புல பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. என் தாயும் உன் தாயும் ஒருவருக்கொருவர் எவ்வகையில் உறவு உடையவர்கள் என் தந்தையும் உன் தந்தையும் எம் முறையில் உறவினர் அல்லது நீயும் நானும் ஒருவரை ஒருவர் எங்ஙனம் அறிந்து கொண்டோம் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல நம் அன்புடை நெஞ்சங்கள் கலந்தது.

         செம்மண் நிலத்து மழை பெய்யின் அம்மழை நீர் செம்மண்ணோடு கலந்து அதன் நிறத்தையும் சுவையையும் பெற்று அம்மண்ணோடு ஒன்றிவிடும் அது போல தலைவன் தலைவியின் நெஞ்சங்கள் ஒன்றாகின என இப்பாடல் கூறுகிறது.

         இதையே நம் திரையிசை பாடலில் உட்புகுத்தி இருக்கிறார்கள் நம் கவிஞர்கள்



பல்லவி

  நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்திரள நீர்வடிய
கொற்றைப் பொய்கை ஆடியவள் நீயா

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா

இரண்டாவது சரணத்தை கவனியுங்கள்

யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த நீர்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றைப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்திரள நீர்வடிய
கொற்ற பொய்கை ஆடியவள் நீயா

         மழை பெய்கின்ற போதும் மழையை ரசிக்கின்ற போதும் இந்த இரண்டு பாடலும் என் நினைவுக்கு தவறாமல் வந்து போகிறது.நானும் சிறு குழந்தையாய் கை நீட்டி அந்த மழையில் நனைய தொடங்கினேன்.      வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே...

        வாசகர்களே உங்களுக்கு என்ன தோன்றுகிறது கூறிவிட்டு போங்கள். 

2 comments:

  1. இனி எங்கள் நினைவுக்குள்ளும்
    மழை நாளில் இந்த இரு கவிதைகளும்
    நிச்சயம் வந்து போகும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete