Tuesday 18 November 2014

புத்தகத்தின் மறுபக்கம்

           எனக்கு சிறுவயது முதல் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு. நான் மனிதர்களோடு பழகியதைவிட, புத்தகங்களோடு புழங்கியதுதான் அதிகம். அதனால்தானோ என்னவோ மனிதர்களை தூரத்தில் வைத்திருக்கிறேன், புத்தகங்களை அருகில் வைத்திருக்கிறேன். புத்தகத்தின் வழியாகதான் ஒவ்வொரு மனிதனையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது அவர்களை விட்டு விலகியிருக்க முடிந்தது. புத்தகத்தை படித்தால் மனித மனங்களை படிக்க முடியும்.

          18 வயதில் இராமயணம் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் அக்கா வந்து "இப்போதே இராமயணம் படிக்கிறாயான்னு" கேட்டாங்க இந்த வயதில்தான் படிக்க வேண்டும் என்று நிபந்தனைகள் உண்டா என்ன, இப்படி சொல்லி சொல்லிதான் நாம் நல்ல விஷயங்களை தாமதமாக உணர்கிறோம்.


           அகவைக்கும் ஆன்மிகத்திற்கும் என்ன சம்பந்தம்? அறுபது வயதிற்கு மேல் நல்ல விஷயங்களை உணர்ந்து யாருக்கு என்ன பயன். வயது தளர்ந்து நாம் யாருக்கு எடுத்துரைக்க முடியும்? அப்படியே சொன்னாலும் யாரும் கேட்பார்களா இப்படிதான் நாம் பல நல்ல விஷயங்களை தாமதப்படுத்தி தாமதமாக புரிந்து கொள்கிறோம். 25 வயதுக்குள்ளே அநேக ஆன்மிக புத்தகங்களை படித்தாயிற்று ஆலயங்களுக்கும் சென்று வந்தாயிற்று.

            புத்தகம் நம்மை செம்மைப்படுத்துகின்றன. புத்தகங்களை படிக்கத் தொடங்கிவிட்டலே உத்தமர்களாக விளங்குவார்கள் ஏன் தெரியுமா? ஒரு புத்தகம் படிக்கும் போதே அதில் உள்ளது போல் நாம் மாறிவிடுவோம் நாமும் அப்படி இருக்க நாம்மை தூண்டும். மனம் கட்டுப்பாட்டுக்குள் வரும். யாருக்கும் கெடுதல் நினைக்க தோன்றாது.


           ஒரு நல்ல புத்தகம் வாசிக்கும்போது இப்படி தோன்றுகிறது அதே நேரத்தில் கெட்ட புத்தகங்களை வாசித்தால் கெட்ட எண்ணங்கள் தான் தோன்றும். ஒரு வேளை  இரண்டுவிதமான புத்தகங்களையும் படித்து அவன் நல்லவனாக இருந்தால் அவன் போல் ஞானி யாருமில்லை. ஒரு புத்தகத்தின் வாசிப்பு நம்மை எங்கோ கொண்டு செல்லும் அத்தனை சக்தி நாம் வாசிக்கும் புத்தகத்திற்கு இருக்கிறது.

             ஆனால் இந்த புத்தகங்களை எல்லோரும் படிப்பது இல்லை. ஒரு சிலர்தான் இன்னும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். சில நாத்திகவாதிகள் சொல்கிறார்கள் வியாபார நோக்கோடுதான் ஆன்மிக புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று. இந்த எல்லா புத்தகங்களும் விற்பனை நோக்கோடுதான் வெளிவருகிறது.

           ஒரு ஆன்மிக புத்தகம் ஒரு மனிதனை நல்வழிப்படுத்தும், பக்குவப்படுத்தும் என்றால் அது நல்ல விஷயம் தானே. ஒரு எழுத்தாளன் அல்லது ஒரு விமர்சகன் உண்மையானவனாக அல்லது நேர்மையானவாகதான் இருப்பான். ஒரு வேளை அவன் தவறு செய்பவனாக இருந்தால் அடுத்தவனுக்கு ஒரு நல்ல விஷயத்தை சொல்லும் போது மனசாட்சி கேட்கும் நீ உத்தமனா என்று. அப்படி ஒவ்வொரு கருத்தையும் சொல்லும்போது தன்னையே அவன் மாற்றிக்கொள்கிறான்.

            ஆக ஒரு புத்தகத்தை எழுதினவனும், அதை வாசித்தவனும் உத்தமனாகிறான். நான் கீதை வாசிக்கும் போது அதில் உள்ள வாசகங்கள் என்னை கவர்ந்தது. சரி நம் வாசகர்களுக்கு சொல்வோமே என்று கீதை பிறந்த கதை என்று சிறு முன்னோட்டத்தை 12 நாட்களாக தொடரா பதிவு செய்தேன். அதை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள் தெரியுமா? குறைந்த பட்சம் பத்து பேர், அதிக பட்சம் 20 பேர் இவர்களுக்கு மட்டும் அந்த பதிவு போய் சேரும். நல்ல விஷயம் என்பது 1% சதவிகிதம்தான் போர் சேர்கிறது என்று இதன் மூலம் தெரிகிறது. பெண்களைப் பற்றியும், சினிமாவைப் பற்றி போடும் பதிவுகளைதான் அதிகம் பார்க்கிறார்கள்.

            இந்த உலகில் நல்ல விஷயங்கள் முழுமையாக போய் சேர்வதில்லை அதை யாரும் பார்ப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை. கீதை சொல்வது போல் கெட்டவர்கள் கௌரவர்கள் போல் அதிகம், நல்லவர்கள் பாண்டவர்கள் போல் குறைவு என்பது முற்றிலும் உண்மை.

             எனக்குப் பிடித்த நண்பர்களுக்கு புத்தகத்தை வழங்குவது வழக்கம் அதுவும் அவர்களுக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தால் மட்டும் இல்லை என்றால் அந்த புத்தகத்திற்கு மதிப்பு இல்லாமல் போய்விடும். புத்தகமும், வானொலியும் இரண்டு கண்கள் இவை இரண்டும் அறிவுத்திறனையும், ஞாபகதன்மையையும் அதிகப்படுத்துகிறது.

7 comments:

  1. அகவைக்கும் ஆன்மிகத்திற்கும் என்ன சம்பந்தம்? அறுபது வயதிற்கு மேல் நல்ல விஷயங்களை உணர்ந்து யாருக்கு என்ன பயன். வயது தளர்ந்து நாம் யாருக்கு எடுத்துரைக்க முடியும்//
    அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்
    எப்போதும் எண்ணிக்கை கணக்கில்
    தரத்தை எடை போடுவது தவறு என்பதே
    என் கருத்தும்
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

    Visit : http://blogintamil.blogspot.in/2014/11/dh.html

    ReplyDelete
  3. உண்மை. புத்தகம் மனிதனைக் கடவுளாக மாற்றும்.

    ReplyDelete