Friday 10 October 2014

ஐயனார் இந்து கடவுளா?

       

        
சங்க காலத்தில் சிறப்புடன் வழங்கிய பெயர் சாத்தன் என்பது நன்கு புலப்படும். சாத்தன் அல்லது சாத்தனார் என்னும் பெயர் சாஸ்தார் என்னும் வடமொழிப் பெயரின் திரிபு சாஸ்தா என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று கடைச் சங்க காலத்தில் தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் சாத்தன் என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களிலிருந்து தெரிகின்றது. சிலப்பதிக்காரத்தில் சாத்தன் வரலாறு கனாத்திரம் உரைத்த காதையில் விரிவாகப் பேசப்படுக்கின்றது.

 பௌத்த வழி சாத்தன் 

           புத்தருக்கு வழங்கிய பெயர்களுள் ஒன்று சாஸ்தா. சாஸ்தா சாத்தன் என்னும் வடமொழிச் சொல்லிற்கு நேரான தமிழ்ச் சொல் ஐயன் அல்லது ஐயனார் பௌத்த மதம் அழிந்த பின்னர் அம்மதக் கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்து மதம் ஏற்றுக் கொண்டபோது வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர் புத்தரை திருமாலின் ஓர் அவதாரமாகக் கருதினர், சைவ சமயத்தோர் புத்தராகிய சாத்தனாரை திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாக கற்பித்து சாத்தனாரைச் தமது தெய்வமாக சேர்த்துக்கொண்டனர்.

சமண வழி சாத்தன் 

           பௌத்த சமயத்திலிருந்து இந்துக்கள் சாத்தனை தெய்வமாக ஏற்றுக் கொண்டது போலவே சமணத்திலிருந்து இத்தெய்வத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்று கருதப்படுகிறது.

          சமணர்களுடைய கோயில்களில் இத்தெய்வத்தை இன்றும் காணலாம். இத்தெய்வத்திருக்கு பிரம்மயட்சன் சாத்தனர் முதலிய பெயர்களில் அவர்கள் கூறுகின்றனர. பௌத்த சமண ஐயனார் பௌத்த மதத்திலிருந்தும் சமண மதத்திலிருந்தும் ஐயனாரை இந்துக்கள் ஏற்றுக் கொண்டனர். பௌத்த ஐயனாருக்கும் சமண ஐயனாருக்கும் உள்ள வேறுபாடு யாதெனில் பௌத்த ஐயனாருக்குரிய வாகனம் குதிரை சமண ஐயனாருக்குரிய வாகனம் யானை என்பதே இன்றைய நிலையில் ஐயனார் கோயில்களில் இரண்டும் கலந்தே காணப்படுகிறது சிவன் கோயில் பலிபீடத்தில் நந்தியும், முருகன் கோயில்களில் மயிலும் இருப்பது போல் ஐயனார் கோயில்களில் பலிபீடத்தில் யானை தான் காணப்படுகிறது.

           அதே கோயில்களில் குதிரையின் சிலைகளும் கோயில்களின் எதிரே தனித்தும் வரிசையாகவும் வைக்கப்பட்டுள்ளன. இருவேறு மதங்களிலிருந்தும் ஐயனார் வழிபாடு புகுந்திருந்தாலும் அவை பிற சமயச் சார்பின் என்ற எண்ணமின்றி இந்துக்கள் இரண்டையும் இணைத்து ஒன்றாகவே கருதி வழிப்பட்டு வருகின்றனர் என்பதற்கு யானை உருவமும் குதிரை உருவமும் ஒன்றாக காணப்படுவதே சான்றாகும். சமணர்களும, பௌத்தர்களும் உயிர் கொலை விரும்ப மாட்டார்கள் அதனால்தான் ஐயனார் சந்நதிகளில் உயிர்பலியிடுதல் இன்றும் இல்லை.

          ஐயனார் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறும் காலங்களில் ஆடு, சேவல் முதலியன பலியிடப்படும் ஆனால் ஐயனார் சந்நதிகளில் இவற்றைப் பலியிடமாட்டார்கள். ஐயனார் கோயில்களில் பரிவாரத் தெய்வங்களாக இருக்கும் கருப்பர், வீரன் முதலிய தெய்வச் சந்நதிகளில் பலி நடக்கும் பலியிடுவதற்கு முன் ஐயனாருக்கு பூஜை செய்து திருக்கதவை தாழிட்டுப் பூட்டப் பெறும் ஐயனாரை இந்துக்கள் கடவுளாக ஏற்றுக்கொண்டாலும் உயிர்கொலை செய்வதைத் தடுத்து விடுகின்றனர்.

           இந்து சமயத்தாரால் சாத்தன் வழிபாடு தெய்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர். சாத்தனார் சிவபெருமானின் மகனாக சொல்கின்ற வரலாறு தமிழ்நாட்டில் பரவிற்று திருநாவுக்கரசர் தாம்பாடிய திருப்பாயிற்றுர்த் திருப்பதிகத்திலே சாத்தனைச் சிவபெருமானின் மகன் என்றே குறுப்பிடுகின்றனர்.

        "பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
         சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
         கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதியும் நல்ல
         தீர்த்தரும் சடை மேல் வைத்தார் திருப்பயற் றூர்ஊர னாரே"

         ஐயனார் அரிகரபுத்திரர் சாத்தா என்னும் அழைக்கப் பெறுவர் தாருகாவனத்து இருடிகளின் ஆணவ மாதி சிறு மாப்புக்களை அடக்குவதற்கு அரியும், அரனும் எழுந்தருளிய காலத்து, மோகினியாக நின்ற மகாவிஷ்ணுவின்பால் அரனுக்கு மகனாகத் தோன்றியவர். கிராமத்தை பாதுகாக்க ஊரின் வடக்கே கோயில் கொண்டுள்ளார் என்று குறிப்பிடுகின்றது. கந்தபுராணத்தில் இரண்டாவதான அசுர காண்டத்தில் 32 ஆம் படலம் மகா சாத்தப்படலம் இப்படலத்தில் ஐயனாரின் அவதார நிகழ்ச்சிகள் விரிவாகப் பேசப்படுகின்றனர்.
       
        திருமால் மோகினி வடிவங் கொண்ட பொழுது சிவப்பெருமான் அவளைச் சார்ந்த நிலையில் ஐயனார் தோன்றினார். ஐயனாரை உருவாக்கிய சிவபெருமான் அவருக்குப் பெயர் சூட்டி உருத்திரோடு உலகை காக்கும் தொழிலை அவருக்கு தந்தார்.

                                   "அங்கண் மேவி அரிகர புத்திரன்
                                     சங்கை யில்பெருஞ் சாரதர் தம்மோடு
                                     எங்கு மாகி யிருந்தெவ் வுலகையும்
                                     கங்குலும் பகலும் எல்லையுங் காப்பனால்
                                                                                                          
                                                                                               (கந்தபுராணம்- 54)

            ஐயனார் மாசி மாதம் அமாவாசைக்கும் முதல் நாள் சிவராத்திரியன்று பிறந்தார் என்று கூறுவர் அதனால்தான் ஐயனார் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் சிவராத்திரியன்று நடைபெறுகின்றனர். ஐயனார் தன் பரிவாரங்களுடன் இரவில் குதிரை மீதமர்ந்து ஊரை காத்து வருவதாக மக்கள் நம்புகின்றனர். மதுரை வீரனும் பாவாடைராயனும் ஐயனாரின் படைத்தளபதிள், குட்டிச் சாத்தான், சாத்தான் கருப்பன், முண்டன், குளிகன் முதலிய பூதங்கள் ஐயனாரின் பணியாட்கள் என்று சொல்லப்படுகிறது.

            ஐயனார்தான் ஐயப்பன் என்றும் சொல்லப்படுகிறது சைவ கடவுளாக இருப்பதால் பலியிடுதலை தவிர்த்து பச்சரிசி படையிலப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. கடவுளின் தோற்றம் வெவ்வேறாக இருந்தாலும் அதன் ஆதிமூலம் என்பது ஒன்றுதான். வேற மதக்காரர்கள் சிலர் கேலியாக சொல்வதுண்டு அரிக்கும் ஹரிக்கும் எப்படி குழந்தை பிறக்கும் அதாவது ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் எப்படி குழந்தை பிறக்கும் என்று கேட்கின்றனர் இப்போது அவர்களுக்கு புரிந்திருக்கும். மனிதர்களில் ஆண் பெண் என்ற இரண்டு படைப்புகளையும் தாண்டி திருநங்கை என்ற படைப்பு ஒன்று இருக்கு எல்லோரும் அறிவர் இப்படி ஒரு படைப்பு இருக்கும் பட்சத்தில் இதையும் நம்பதான் வேண்டியிருக்கிறது. மனிதருக்கு நல்ல விஷயங்களை எடுத்துரைக்க கடவுள் பல அவதராங்கள் எடுத்ததாக சொல்லப்படுகிறது.


 ஸ்ரீசந்திரா 










2 comments:

  1. Mika nanru sakothary.
    மிக நன்று சகோதரி. நன்றாகத்
    தேடி எழுதியுள்ளீர்கள்.
    தொடருங்கள்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சகோதரி

      Delete