Thursday, 23 October 2014

தீபாவ(லி)ளி யாருக்கு?

     
  தீபாவளி கொண்டாட்டம் என்பது ஒரு நாள் தான் என்றாலும் ஒரு மாதத்திற்கு முன்பே அதை  வரவேற்க தொடங்கிவிடுவோம். பலகாரம் செய்வது முதல் துணிகள் எடுத்தல் வரை அமர்க்களமாக இருக்கும். நான் பத்து நாட்களுக்கு முன்பே துணிகள் வாங்கிவிடுவது வழக்கம் ஆனால் முழுமையாக எடுக்க மாட்டேன் கொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டு வருவேன் ஏனெனில் தீபாவளி இரண்டு நாட்கள் இருக்க மறுபடியும் செல்வேன் அந்த கூட்டத்தை கண்டு ரசிக்க... திருவிழா என்றாலே கூட்டம் அழகு அதுபோல தீபாவளி என்றாலும் கூட்டம்தான் அழகு அந்த இடிபாடுகளுக்குள் பல கூச்சல்கள் பல உரையாடல்கள் அலைமோத துணிகள் எடுப்பது ஒரு தனி சுகம்தான்.

         வீட்டை விட்டு பஸ் ஏறியதும் உரையாடல்கள் தொடங்கி விடும் பேருந்தில் பழைய நண்பிகளை பார்த்து "ஏய்... நல்லா இருக்குறியா? அப்றம் எப்டி இருக்க? என்ன டிரெஸ் எடுக்கவா? பலகாரம் செய்துட்டியா என்னென்ன பலகாரம் இந்த பலகாரத்திற்கு என்னென்ன சேர்ப்பது அதை எப்படி செய்வது ஆயிரம் கேள்விகள் எழும். நலம் விசாரிப்பில் தொடங்கி பலகாரம் சுடுவதில் வந்து நிற்கும்.

         பேருந்தை விட்டு இறங்கியதுமே காவல்துறை அறிவிப்பு காதை எட்டும் "கூட்டம் அதிகமாக இருப்பதால் அவரவர் பொருட்களை பாதுகாத்து கொள்ளுங்கள் திருடர்கள் ஜாக்கிரதை குழந்தைகளை தவிர விடாதிர்கள் வாகனங்கள் உள்ளே வர அனுமதியில்லை என்ற அறிவிப்புகள் காதை தொட்டது சாலைகளின் இரு புறங்களிலும் வான் உயர்ந்த கட்டிடங்கள் வண்ண வண்ண விளக்குகளால் ஜொலித்தன அந்த பெரிய கட்டிடங்களுக்கு கீழே நடைபாதை வியாபாரிகள் கடை விரித்திருப்பார்கள் வண்ண உடைகள் கண்ணை பறிக்கும் வழிநெடுகிலும் பலூன், வளையல் வண்டி, பழவண்டி ப்பீ... ப்பீ... ப்பீ... அந்த கூட்ட நெரிசலில் காதுக்கு அருகே ஊதும் வியாபாரி அதுதான் வேண்டுமென்று அடம் பிடித்து அழும் குழந்தை, ஜமுக்காளம், டிவி கவர் என கூவி.. கூவி.. விற்பனை செய்யும் வியாபாரிகள் அதனை தொடர்ந்து சென்றால்.

         புதிதாக திருமணமான ஜோடி "ஏங்க அந்த சுடிதார் நல்லா இருக்குள்ள எடுத்து தாங்க" உடனே கணவன் உனக்கு எதுக்கு சுடிதார் சாரிதான் உனக்கு நல்லா இருக்கு அதை எடுத்துக்க" உங்களை கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு வேற யாரையாவது கல்யாணம் பண்ணியிருக்கலாம் என்று நக்கலோடு சொல்வதை  சின்ன சிரிப்போடு ரசித்துக் கொண்டே நகர்ந்தால்.

           வெறும் 500 ரூபாயை வைத்துக்கொண்டு அதற்குள் நல்ல துணி எடுத்துவிட வேண்டும் என்று பல துணிகளை புரட்டிக் கொண்டிருக்கையில் 1000 ரூபாய்க்கு மேல சிம்பிளா எடுத்து போடுங்க என்கின்ற போது 500 ரூபாய் வைத்திருப்பவர் மெல்ல அவரை அன்னாந்து நோக்குவார் முகத்தில் சிறு வருத்தம் தெரியும் அதை காணும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும்.

      அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்தால் " நான் டிவில பார்த்த மாதிரி டிரெஸ் வேணும் என்று அடம்பிடிக்கும் குழந்தையை சமாதனப்படுத்திக் கொண்டிருக்கும் அம்மா இன்னொரு பக்கம் " மெட்டீரியலைவிட ரெடிமேட் நல்லா இருக்குள்ள அதையே வாங்கலாம்" என்ற பேச்சு ஒரு பக்கம் இவை எல்லாவற்றையும் விட துணிகளை எடுத்து எடுத்து போட்டு களைத்துப்போன விற்பனையாளர் "உங்க கலருக்கு சூப்பரா எடுப்பா இருக்கும் கையில எடுத்து பார்த்தா தெரியுமா போட்டு பார்த்தான் தெரியும் எடுங்க நல்லா இருக்கும்" என்று வியாபார தந்திரத்தோடு பேசும் குரல் ஒரு பக்கம். "இந்த டிரெஸ்க்கு மேட்சா கம்மல், கேர்பன்ட் கிளிப், வளையல் வாங்கனும்" என்ற குரல் மறுபக்கம். துணி எடுத்துவிட்டு பணத்தை கைடுக்க கைபைக்குள் கையைவிட்டால் பர்ஸ் காணாமல் அய்யோ.. நகையும் போச்சே பணமும் போச்சே என்று அழுது புரண்டு வரும் குரல் ஒருபக்கம் என்று பல குரல்கள் நம் செவிக்குள் புகுந்து வரும்.

        ஆனால் இந்த முறை துணி எடுக்க பஸ்சில் ஏறினேன் மழையின் காரணமாக கூட்டம் அவ்வாறாக இல்லை பஸ்சைவிட்டு இறங்கியதும் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது அம்மாவை தொலைத்துவிட்டு அழுகிறான் அவனின் பெற்றோர்கள் வந்து அழைத்துச் செல்லவும் என்று காவல்துறை அறிவிப்பு செய்துக் கொண்டு இருந்தது. நல்ல கூட்டம் போல என நினைத்துக்கொண்டே சென்றேன் ஆனால் அவ்வளவாக கூட்டம் இல்லை சாலையோரங்கள் வெறிச்சோடி இருந்தது மழையால் அதிகம் கடைகள் இல்லை பெரிய பெரிய கடைகளில் கூட கூட்டம் இல்லை. இந்த மழையால் நடைபாதை வியாபாரிகளின் வயிற்றில்தான் அடித்துவிட்டது இந்த தீபாவளிக்கு கடன் வாங்கி தான் கடை விரித்திருப்பார்கள் இப்போ நிறைய நஷ்டம் ஏற்பட்டிருக்கும். அதை விற்று தீபாவளி கொண்டாட காத்திருப்பார்கள் அவர்கள் சந்தோஷத்தை கெடுத்து விட்டது இந்த மழை. அவர்கள் இந்த தீபாவளியை எப்படி கொண்டாடி இருப்பார்கள்? சிறு கவலையோடு கடைக்குள் நுழைந்தேன்.

         சென்ற வருடம் போல் அதிகம் கூட்டம் இல்லை அந்த உரையாடல்களை கேட்க முடியவில்லை எதையும் ரசிக்க முடியவில்லை எங்கேயும் எதையும் பார்க்க முடியவில்லை. சென்ற வருடம் இருந்த சந்தோஷம் இந்த வருடம் இல்லை நிறைய பலகாரம், மனதிற்குப் பிடித்த டிரெஸ் எல்லாம் வாங்கியாகி விட்டது ஆனால் எதையோ தொலைத்து விட்ட வருத்தம் அதிகமாக இருந்தது. தீபாவளி தீபாவளி போல் இல்லை யாருக்கும் வாழ்த்து கூட சொல்லவில்லை. அதே இடம், அதே நேரம், அதே மக்கள் ஆனால் காட்சிகள் மட்டும் வேறு வேறு யார் முகத்திலும் சந்தோஷம் இல்லை என் மனம் போல எங்கும் வெறுமையாக இருந்தது. என் கண்களுக்கு மட்டும் அவ்வாறு தெரிந்ததா? இல்லை எல்லாருமே அவ்வாறுதான் இருக்கின்றார்களா?

       எல்லோரும் எதையோ தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது.

No comments:

Post a Comment