Tuesday, 11 November 2014

கீதை- 6

         பொதுவாக பாடசாலைகளில் போதிக்கப்படுகிற விஷயம், அமைதியான சூழ்நிலையில் ஆய்ந்தறிய வேண்டிய ஒன்று எதற்காக போர்க்களத்தில் போதிக்கப்பட்டது என்ற கேள்வி எழும்.
வாழ்க்கை பல போராட்டங்களை உள்ளடக்கிய மகாயுத்தம். அதில் போராடுகிறவன் வெற்றி பெறுகிறான். வெற்றிக்காக அவன் அசராது போராட வேண்டியிருக்கும. போராடத் தயங்குகிறவன் இழந்ததைப் பெற முடியாது, இருப்பதையும் தக்க வைத்துக்கொள்ள முடியாது.

       ஒரு யுத்தத்தைப் பற்றி யுத்தகளத்தில் பேசுவது எவ்விதத்திலும் முரணாகத் தெரியவில்லை. குருட்சேத்திரத்தை கொலைக்களம் என்றால் உலகம் ஒரு முடிவற்ற கொலைக்களந்தான். குருட்சேத்திரப் போரில் நடந்தது கொலைத் தொழிலா, தர்மம் தனது கடமையைச் செய்ததா என்று நாம் விவாதித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

"நியாயத்தைக் காப்பாற்றுவதற்காக
 உயிரைக் கொடு, தேவைப்பட்டால்
 நியாயத்தைக் காப்பாற்றுவதற்காக
 உயிரை எடுக்கவும் செய்"

இதுதான் கண்ணன் காட்டிய வழி

 நாளை கீதையின் சிறப்பு பற்றி பார்ப்போம்.

                   - தொடரும்

மனசு

கோலங்களாக சிக்கித்தவிக்கிறது
 என் மனசு நடுவில்
 ஓவியமாக உன் உருவம்..!

கீதை-5

            பாண்டவர் ஐவரிலும் அர்ச்சுனனுடன் நெருங்கிய உறவு கண்ணனுக்கு. பாலப்பருவத்தில் இருந்து, திருமணப் பருவம் வரை, வில்வித்தையில் இருந்து போர்க்களம் வரை எல்லா நிலைகளிலும் அர்ச்சுனனின் வாழ்வோடு சம்பந்தப்பட்டிருக்கிறான் கண்ணன். அப்படித்தான் உலக மாந்தர் ஒவ்வொருவரின் வாழ்விலும் அவன் சம்பந்தப்பட்டிருக்கிறான். ஜீவாத்மா பரமாத்மா தொடர்பே அர்ச்சுனன் கண்ணன் தொடர்பின் மூலம் விளக்கம் பெறுகிறது.

        கீதை உபதேசம் ஏன் அர்ச்சுனனுக்குச் செய்யப்பட்டது? பாண்டவரில் முக்கியத்துவம் பெற்ற மூவர் தர்மர், அர்ச்சுனன், பீமன் ஆவர்.

        தர்மர் சகல சாஸ்த்திரங்களையும், தர்மங்களையும் கற்றவர். அவருக்கு உபதேசம் தேவைப்பட்டது. பீமன் முரடன் முடர்கள் நீதி நியாயங்களைக் கேட்டுக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களில்லை. எனவே, கண்ணனின் உபதேசம் அர்ச்சுனனுக்கு செய்யப்பட்டது. மாமனிதன் தர்மர் மனிதனுக்கொவ்வாத விலங்கு குணம் படைத்தவன் பீமன். எனவே மனிதனான அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்யப்பட்டது. பாமர மக்களின் ஏகபிரதிநிதியாய் அவன் அந்த நல்லுரைகளைக் கேட்டுக் கொண்டான்.

Sunday, 9 November 2014

கீதை (பகுதி-4)

         அலைமேலலையாய் கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. மனித வாழ்க்கையிலும் அப்படிதான் சோதனைமேல் சோதனை. அது அரசனுக்கும் உண்டு, ஆண்டிக்கும் உண்டு. வாழ்வின் மறைபொருளுணர்ந்து அதன் பிடியில் சிக்கி வாடும் நிலை எல்லோருக்கும் உண்டு. உலகில் தீயவர்கள் அதிகம் கௌரவர்களைப் போல, நல்லவர்கள் குறைவு பாண்டவர்களைப்போல.

         பாரதப் போர் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே விளைந்த போர் என்பதைவிட, தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் நிகழ்ந்தது. மனிதப் பிறவியின் நல்லியல்புக்கும், தீய இயல்புக்கும் இடையில் நிகழ்ந்தது என்பதே பொருத்தம். போர்க்களம் குருட்சேத்திரம் அது மனித சரீரம் 'தர்மம் வெல்லும்' என்பது பாரதத்தின் மூலம் நாம் கண்ட நிரூபணம் நிரூபித்து காட்டியவர் பகவான்.

        உலக உயிர்களுக்கெல்லாம் அனுக்கிரகம் செய்கின்ற பகவான் ஒரு மானிடனுக்கேன் சாரதியாக இயங்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். எல்லா உயிர்களுக்குள்ளுமிருந்தும் அவர்தானே அனைவர் வாழ்வையும் சாரத்தியம் செய்து கொண்டு இருக்கிறார் . மனச்சாட்சி என்கின்ற சாரதி!

                                                   -தொடரும்

சொல்வதெல்லாம் உண்மை





             ஜீ தமிழ் எடுத்து இருக்கின்ற நல்ல முயற்சி சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி. பிரச்சனைகளை தீர்த்து வைக்கின்ற ஒரு நிகழ்ச்சியா நடத்திக்கொண்டு இருக்கிறது. நல்ல விஷயம்தான். ஆனால் யார் யாரின் பிரச்சனைகளை தீர்த்துவைக்கிறது? சமூகத்தின் பிரச்சனையா? அல்லது சமூகத்தில் உள்ள குடும்பங்களின் பிரச்சனையா? இதில் கலந்து கொள்ள வருகின்ற அனேக குடும்பங்கள் இரண்டு, மூன்று மனைவிகள் உள்ளவர்கள், கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள,இளம் காதலர்கள் இப்படிதான் அதிகம் வருகிறார்கள். இது சரியானதா?

கீதை (3)

            கடவுள் நம் பக்கம் இருந்தால் பிரதிகூலங்களும் அனுகூலமாகிவிடும. கடவுள் நம் பக்கம் இல்லை என்றால் வேறு எந்த அனுகூலங்களை நாம் பெற்றிருப்பினும் அவை நமக்கு பயன்படாது. போருக்கஞ்சாத சுத்தவீரன் அர்ச்சுனன் ஆனால் நடக்கவிருந்த பாரதப் போரிலோ அவன் துணிவை இழக்கவில்லை என்றாலும் சொல்லமாட்டத கலக்கத்தில் இருந்தான். களத்தில் பாட்டனார் பீஷ்மரையும், குருவான துரோணரையும் தாயாதியரையும் எதிர்த்துப் போரிட வேண்டிய நிலைக்குத் தாம் தள்ளப்பட்டமோ என்பதால் எழுந்த கலக்கம் அது. தன் கையால் அவர்கள் வீழ்ந்துபட நேருமே என்றெண்ணி வேதனைப்பட்டான். பிதாமகர் பீஷ்மர் தொட்டு உறவுகளையெல்லாம் தொலைத்து நாம் சௌகரியங்களைத் தேடிக்கொள்ள வேண்டுமா அப்படியொரு போர் அவசியமா என்று யோசித்தான்.

         சொந்தபந்தங்கள் சூழ்ந்திருக்க சொத்து சுகங்களை அனுபவிக்கின்ற மகிழ்ச்சி அவர்களை கொன்று அதன் மூலம் பெற்று அனுபவிப்பதில் ஏது? மனம் கூசியது பார்த்திபனுக்கு கையில் ஏந்திய வில்லைக் காலடியில் போடுகிறான் விரக்தியுடன் சுத்த வீரர்கள் அப்படிதான் போரின் நுணுக்கங்களைப் போலவே மற்ற நெறிகளையும் கவனமுடன் ஆராய்வார்கள். தர்மத்துக்குப் பழுதேற்பட்டு விடக்கூடாது என்பதில்அக்கறையாயிருப்பார்கள்.

        சொந்த மனிதர்களுக்கெதிராய் போர் செய்வதில் எந்த நியாயமும் இருப்பதாய்த் தெரியவில்லை அர்ச்சுனுக்கு. அர்ச்சுனா நீ போர்புரியத் தயங்குவது புறங்காட்டி ஓடுவதற்குச் சமம். நீ பின்வாங்கினால் அதர்மத்திடம் புறங்காட்டிச் செல்வதாகத்தான் அர்த்தம் என்று கண்ணன் பேசுகிறான்.

        போர்களத்தில் வைத்து கண்ணன் உரைத்ததெல்லாம் பாண்டவ வீரனுக்கு மட்டுமின்றி உலகத்தின் ஒவ்வொரு பாமரனுக்கும் பொருந்தும்.

                                   
                                                  -தொடரும்

Saturday, 8 November 2014

விடியல்

தோழனே..! 
உனக்காக விடிக்கின்ற காலை
உனக்காக உதிக்கின்ற சூரியன்
உனக்காக சிரிக்கின்ற நிலா
உனக்காக அழுகின்ற வானம்
உனக்காக வீசுகின்ற தென்றல்
உனக்காக வாடுகின்ற மலர்
இவையாவும் பொய்யில்லை
பிறகு ஏன்? உனக்காக
யாருமில்லை என்று வருந்துகிறாய்
அடடா..! உன் உலகம்
எத்தனை அழகானது
உற்சாகமாய் கிளம்பு
உலகம் உன் நாளைய
விடியலுக்காக காத்திருக்கிறது..!

Friday, 7 November 2014

கீதை (பகுதி-2)

         போரைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை. பாண்டவரும, கௌரவரும் கண்ணனின் உதவி வேண்டி துவாரகை சென்றனர். அவர்கள் சென்ற சமயம் கண்ணன் துயில் கொண்டிருந்தான்.

         கௌரவர் சார்பில் சென்ற துரியோதனன் கண்ணனின் தலைமாட்டிலும், பாண்டவர் சார்பில் சென்ற அர்ச்சுனன் அவனது கால்மாட்டிலும் நின்றிருந்தனர்.

         துயில் நீங்கிய கண்ணன் இயல்பாகத் தனது கால்மாட்டில் நின்றிருந்த அர்ச்சுனனை முதலில் பார்த்தான். பிறகே தலைமாட்டில் நின்றிருந்த துரியோதனன் கண்ணில் பட்டான். தான் முதலில் கண்ணுற்ற அர்ச்சுனனிடம் முதலில் பேசிய கண்ணன் பாண்டவர்க்குத் துணை நிற்க ஒப்புக் கொண்டான். துரியோதனனோ கண்ணனின் படையைத் தனக்கு உதம்படி வேண்டினான். ஆக மகாபாரதப் போரில் கண்ணன் ஒரு பக்கம் அவனது படை மற்றொரு பக்கம் என்று முடிவாயிற்று.

         கண்ணன் அர்ச்சுனனிடம் ஒரு நிபந்தனை விதித்தான். அதற்கு அவனும் ஒப்புக்கொண்டான். அந்த நிபந்தனை இதுதான். போரில் கண்ணன் ஆயுதமேந்தமாட்டான் பார்த்தனுக்கு ரத சாரத்தியம் மட்டுமே செய்வான்.

        இங்கே நாம் கவனத்தில் கொள்ளத்தக்கதொன்று.

       துரியோதனன் படை பலத்தைப் பெரிதாய் மதித்தான். அர்ச்சுனனோ இறைப்பலத்தைப் பெரிதும் மதித்தான்.

கீதை

                   கீதை (பகுதி-1)

       கீதையைத் தியானிக்கிறவரை பாவங்கள் தீண்டாது.

      கீதை எங்கிருக்கிறோ அங்கு புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும் வந்து சேர்கின்றன

      எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரமே சகாயம் வருகிறது.

      எங்கு கீதை கற்கப்படுகிறதோ, கற்பிக்கப்படுகிறதோ அங்கு நான் வாசம் செய்கிறேன்.

                                  (ஸ்ரீ கீதா மகாத்மியம்)
       
              இது பகவானின் வாக்கு

       பரமாத்மா கண்ணனைவிட சிறந்த ஞானியும் இருக்க முடியாது. பகவத் கீதையைவிட சிறந்த நீதி நூலும் இருக்க முடியாது.

        கண்ணனைத் துதிக்க முடிந்தவரும் கீதையைப் படிக்க முடிந்தவரும் பாக்கியவான்கள். 

                கீதை பிறந்த கதை

        மகாபாரதப் பாண்டவர்களுக்கும, கௌரவர்களுக்கும் சமாதானம் ஏற்பட வகையில்லை. பாண்டவர்க்குரிய நாட்டை சூதில் அபகரித்த துரியோதனாதியர் ஐவரின் சொத்துக்களில் ஐந்தே ஐந்து வீடுகளைக் கூட அவர்களுக்குத் திருப்பித் தர மறுத்துவிட்டனர்.

        கண்ணனின் தூது தோல்வி கண்டது அவன் துவாரகைக்குத் திரும்பிவிட்டான்.

                                                  - தொடரும்

Thursday, 6 November 2014

சமுதாய சிந்தனைகளை கூறும் மகாபாரதம்

     

         பாரதப் பெருங்காப்பியம் குருகுலத்தாரிடை நிகழ்ந்த போர் பற்றி கூறுகிறது. உலக இலக்கியங்களுள் அளவாற் பெரியது பாரதம் என்பர். பாரத போர் நிகழ்ந்த காலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன 4500 வருஷங்களுக்கு முற்பட்டது என்கிறது " வெள்ளிடை மாலை" கலியுகத்தின் தொடக்கத்தில் ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக பாரதப் போர் நடந்ததாகவும் கூறுவர். ஒரு சிலர் துவாபரயுகத்தின் இறுதியில் கி.மு. 3139 என்றும் கி.மு. 3102 ல் நிகழ்ந்தது என்றும் பலவாறு பல கதைகள் புனைந்துள்ளனர். ஆனால் பாரத போர் உண்மையில் நிகழ்ந்திருக்க கூடும் ஏனெனில் நாமும் பாரத போரின் அடிப்படையில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Wednesday, 5 November 2014

தண்டனை

காசு கொடுத்தான் அவன்
சுகத்தை கொடுத்தாள் அவள்
இருவருக்கு இலவச இணைப்பாக
இறைவன் கொடுத்தான் "எய்ட்ஸ்"..!

யாரோ இவன்

கிழக்கில் தோன்றும்
சூரியன் போல் எழுந்து வந்து
மறைந்து கொள்வானோ..?

கவிதைப் பெண்ணின்
கண்கள் போல்
துறுதுறுப்பானோ..? 

காதல் கொள்ளும்
சந்திரன் போல் அருகில் வந்து
கரைந்து போவானோ..?

இலக்கிய காதலில் தோழியின் பங்கு

         வரலாற்று சுவடுகளில் இன்றும் அழியாமல் தடம் பதித்து நிற்பது காதல். காதலைப் பற்றி இலக்கியங்களும், இதிகாசங்களும், காவியங்களும் பலவாறு எடுத்து இயம்புகின்றன. அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை காதல் புனிதமானது என்கின்றனர் பலர், காதல் இல்லையேல் சாதல் என்கின்றனர் சிலர். அப்படிப்பட்ட வலிமை பொருந்திய காதலுக்கு தூதாக நிற்பது நட்பு.

           ஒரு தலைவனுக்கும், தலைவிக்கும் காதல் ஏற்பட்டால் அவர்களுக்கு தூதாக செல்வது தோழிகள். அதுமட்டுமல்ல இவர்களில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மனமறிந்து நாசுக்காக தவறை உணரச் செய்யும் உரிமையும் இவர்களுக்கு உண்டு. இது எந்தளவுக்கு உண்மை என்பதை அறிய இலக்கியத்துக்குள் சென்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்வோமா? வாருங்கள் இங்கே ஒரு தலைவனும் தலைவியும் காதல் வயப்பட்டு யாரும் அறியாதவாறு களவொழுக்கத்தில் ஈடுபடுக்கின்றனர். இவ்வாறு களவிலே கூடும் வழக்கத்தை விடுத்து தலைவன் தலைவியை விரைவில் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோழி விரும்புகின்றாள். அதனால் தலைவனை சந்தித்து அவன் மனம் புண்படாதவாறு இவ்வாறு கூறுகின்றாள்.