Tuesday, 4 November 2014

மனசே... மனசே... /திரையிசை பாடலும், இலக்கிய பாக்களும்

         
        காலை வேளை வேலைகள் முடிந்து அமர்ந்திருந்தேன் திடீரென்று கார் இருள் சூழ்ந்தது. இது என்ன கார் காலமோ மண் மணக்கிறதே என்று என் மனம் வாசலுக்கு விரைந்தது. உடனே உள்ளிருந்து ஒரு குரல் அழைத்தது.

                  மனசே...என் மனசே..
            நீ எங்கே போகப் பார்க்கிற
            மனசே.. என் மனசே...
            நீ யாரை தேடி போகிற
            இத்தனை நாள் என் கூடயிருந்த
            இப்ப என்ன விட்டு நீ போவதெங்க
            உனக்கு யாரோட சகவாசம்...
           வேணாம் செய்யாத எனை மோசம்...

Thursday, 30 October 2014

தீயாக மாறிவரும் சா(தீ)தி

         நம் தேச தலைவர்கள் நாட்டிற்காக உழைத்தார்கள் நாட்டிற்காக வாழ்ந்தார்கள் அவர்களின் கருத்துக்கள் வேறாக இருந்தாலும் எண்ணங்கள் ஒன்றாக இருந்தது அது மக்களின் நலனுக்காக இருந்தது அதனால் கட்சிகள் ஒன்றாக இருந்து. ஆனால் இன்று அவ்வாறு இருக்கின்றதா பல்வேறு கட்சிகள் கவியரசு வைரமுத்து அவர்கள் சொன்னதுபோல் மரங்களின் கிளைகளில் இலைகளை விட கட்சி கொடிகளே அதிகம் இருக்கிறது என்று சொன்னார் சாதிக்கொரு கட்சி வீதிக்கொரு சங்கம்.

         ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு கொள்கையோடு போராடி மக்களிடத்தில் நல்ல பெயரோடு வாழ்ந்து இன்று சிலையாக நிற்கிறார்கள் ஆனால் இன்றைய தலைமுறையோ அதை தவறாக பயன்படுத்தி சாதி என்ற பெயரில் தனி கொடி, தனி சின்னம் தனி மாநாடு என்று சாதியை வளர்த்து வருகிறது. அன்று முதல் இன்று வரை சாதிகள் ஒழியவில்லை இனிமேல் ஒழியபோவதில்லை அதுதான் சங்க வைத்து வளர்த்து வருகிறார்களே பிறகு எங்கே ஒழிப்பது.

         சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் முதலில் பள்ளியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நமது அண்டை நாட்டில் ஸ்ரீலங்காவில் சாதியின் பெயரில் பள்ளியில் சேர்ப்பது இல்லை மதங்களின் பெயரில் தான் சேர்க்கிறார்கள் அவர்களால் முடிந்தது நம்மால் ஏன் முடியவில்லை?

          இஸ்லாமிய மதத்தில் உட்பிரிவுகள் இருக்கிறது அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதில்லை. கிறிஸ்துவமத்தில் உட்பிரிவு இருக்கிறது அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதில்லை ஆனால் இந்து மதத்தில் மட்டும்தான் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள். தமிழனே தமிழன் அழித்துக் கொள்கிறான். அரசு இதை கண்டு கொள்வதே இல்லை இப்ப சாதிக்கட்சி என்று வந்துவிட்டது இனிமேல் கண்டுகொள்ளவா போகிறது? அரசே சாதியின் பெயரில் கணக்கெடுப்பு செய்கிறது எத்தனை ஓட்டு எந்த சாதியில் இருக்கிறது எந்த சாதிக்கட்சியோடு கூட்டு வைத்துக்கொள்ளலாம் என்று கணக்கு பண்ணுகிறது இனிமேல் எப்படி சாதியை ஒழிக்க முடியும்.

          அரசிடம் கேட்டால் என்ன சொல்கிறது சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யதான் இந்த சாதி சான்றிதழ் கேட்கப்படுவதாக சொல்கிறது. சாதியின் அடிப்படையில் எந்த ஒதுக்கீடும் வேண்டாம் இலவசங்களும் வேண்டாம் வருமானத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கலாம். முதலில் திறமையானவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் அதன் பிறகு வருமானதிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற ரீதியில் இட ஒதுக்கீடு செய்யுங்கள். இதில் அனைத்து பிரிவினருக்கும் வேலைவாய்ப்பு அமையும். எல்லா மதத்திலும் எல்லா சாதியிலும் ஏழை என்ற ஒரு சாதி இருக்கிறது.

         இது அரசுக்கு தெரியாமலா இருக்கிறது இதன் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்புகளை வழங்கலாமே ஏன் அவ்வாறு செய்ய தயங்குகிறது? தாழ்த்தப்பட்டவர்களை மேன்மை நிலைக்கு கொண்டுவர சாதி சான்றிதழ்கள் அவசியம் இல்லை வருமான சான்றிதழ் போதும் அதிலே தாழ்த்தப்பட்டவர்களும் வந்துவிடுவார்கள் இல்லையா. அரசே நல்லது செய்கிறோம் என்ற பெயரில் இட ஒதுக்கீடு செய்து அவர்களை ஒதுக்கி வைக்கிறது, இழிவுப்படுத்துகிறது. சாதியை வளர்க்க அரசும் ஒருவகையில் ஊக்குவிக்கிறது என்பதுதான் உண்மை.

          கவிஞன் பாரதி "சாதிகள் இல்லையடி பாப்பா எனப் பாடியது குழந்தைகளுக்கு மட்டும்தான் வளர்ந்த குழந்தைகளுக்கு அல்ல போலும்" அந்த முண்டாசு கவிஞனுக்கு மனிதர்களின் மனம் முன்பே தெரிந்தால் மாற்றி பாடியிருப்பான். மற்ற நாடுகளில் இந்த சாதிசான்றிதழ்கள் இல்லை நம் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன்? மற்ற நாடுகளில் முடிந்தது நம் நாட்டில் மட்டும் முடியாமல் போனது ஏன்? சிந்திப்போம்..!

Sunday, 26 October 2014

சிங்கார சென்னைக்கு தண்ணீரால் வந்த சோதனை

         சிங்கார சென்னைக்கு தண்ணீரால் சாபகேடோ என்னவோ மழை வந்தாலும் பிரச்சினையாக இருக்கிறது மழை வரவிட்டாலும் பிரச்சினையாக இருக்கிறது. என்னதான் தமிழ்நாட்டுக்கே தலைநகரமா இருந்தாலும் தண்ணீருக்கு வேற மாவட்டங்களில் இருந்துதான் தண்ணீர் பெற வேண்டியிருக்கிறது.

           ஆம் சென்னைக்கு வீராணம் ஏரியிலிருந்து தான் குடிநீர் அனுப்பப்படுகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. இந்த ஏரி காவிரியில் இருந்து கல்லணை வழியாக தண்ணீர் வருவது வழக்கம் ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி. வீராணம் ஏரி சென்னையிலிருந்து 235 கி.மீ தொலைவிலுள்ளது.

           இந்த ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநிர் கொண்டுவர 1968 ஆண்டில் திட்டமிட்டு பிறகு பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை பின் புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு 180 MCD குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2004 ல் நிறைவடைந்தது. வீராணம் ஏரி மிகப்பெரியது அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புதினம் காவிரி கரையிலிருந்து தான் தொடங்குகிறது.

         அந்த புதினத்தில் வீரநாராயண ஏரி எனக் குறிப்பிடப்பட்டிருக்கு இந்த ஏரியை முதலாம் பராந்தகசோழன் உருவாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீராணம் ஏரி எவ்வளவு பெரியது அது உடைப்பெடுத்தால் என்னவாகும் என்பதை அத்தனை தத்ரூபமாக சொல்லியிருப்பார் அத்தனை பிரம்மாண்டமான ஏரி.

         மேலும், சென்னையுள்ள சுற்றி பூண்டி, செங்குன்றம்,செம்பரபாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஏரிகளில் முழுமையாக நீரை சேமித்து வைக்க முடியவில்லை மீதமுள்ள நீர் வீணாக கடலில் கலக்கிறது.

             போரூர், அயனம்பாக்கம், ஆகிய ஏரிகளை ஆழப்படுத்த முடியும் இதனால் அதிக நீரை சேமித்து வைக்க முடியும் இதை ஆழப்படுத்த 50 லட்சம் நிதி ஒதிக்கியதாக கூறப்படுகிறது. 20 கோடி ரூபாய் செலவில் போரூர் ஏரியின் தரை பகுதி ஒரு மீட்டர் முதல் இரண்டு மீட்டர் வரை 70 மில்லியன் கன அடியாக கொள்ளவு உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. 30 கோடி செலவில் அயனபாக்கம் ஏரியின் கரை உயர்த்தப்படும் என்றும். 79.50 கோடி நேமம் ஏரிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

            ஆனால் இவையாவும் எப்போது நிறைவேறும் என்று யாருக்கும் தெரியாது.மழைக்காலங்களில் இப்பணியை தொடர முடியாது ஒவ்வொரு வருடமும் மழை வருகிறது அந்த தண்ணீரை வெளியேற்ற வழி இல்லை அதை சேமித்து வைக்கவும் வழியில்லை. இந்த நிதிகளை வைத்து ஒரு புது ஏரியை உருவாக்கி விடலாம். சென்னை ஒரு மெட்ரோ சிட்டி ஆனால் கோடைக்காலத்திலும் சரி, மழைக்காலத்திலும் சரி தண்ணீரால் அவதிக்குள்ளாகிறது.

Saturday, 25 October 2014

நமது வாழ்க்கையின் நல்லதும் கெட்டதும்

         நமது எண்ணங்களின் அடிப்படையில் தான் ஒவ்வொரு காரியமும் நல்லதாகவும் கெட்டதாகவும் அமைகிறது. நமது மனதில் நல்ல எண்ணங்களும் உண்டாகும் சில சமயங்களில் கெட்ட எண்ணங்களும் உண்டாகும.

        இந்த இரண்டு எண்ணங்களும் தெரிந்தோ தெரியாமலோ நாம்தான் காரணகர்த்தாவாகிறோம். நாம் வெளிப்படையாகச் சொல்லும் ஆசைகள் நல்லெண்ணங்களாக உருவெடுக்கிறது. நாம் ரகசியமாக மனதில் வைத்துக்கொள்ளும் கெட்ட ஆசைகள் தீய எண்ணங்களாக வடிவெடுக்கின்றன. இரவு வந்துவிட்டால் நாம் இருட்டிவிட்டதே என்று கவலைப்படுவதில்லை. ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் போதும் இருள் தானாகவே அகன்று விடும். அதேபோன்று நல்லெண்ணங்களுக்கு முக்கியமான இடம் கொடுத்துப் பழகினால் தீயவை தானாகவே மறைந்து விடும்.

         எது நல்லது? எது கெட்டது? தாம் அதன் மூலமாக பெறுகின்ற உணர்ச்சியைப் பொறுத்து தான் அது அமைகிறது. என்னிடம் தோன்றும் எண்ணம் என்னைப் பற்றிய தற்பெருமையை பிறரிடம் பொறாமையை என்னுடைய சுயநலத்தைத் தூண்டி விட்டால் அவை கெட்டவைஎன்னிடம் ஏற்படும் எண்ணங்கள் பிறருடைய நன்மைக்காகச் சேவை செய்யும்படி என்னை எளியவனாக நினைக்க உதவும்படி உன்னுடைய செயலினால் எவருக்கும் கெடுதல் ஏற்படாதபடி அமையுமானால் அவை நல்லவையாகும்.

        எனக்கு எல்லாம் வேண்டும் இன்னும் வேண்டும் என்று மேலும் மேலும் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பவர் எவ்வளவு செல்வங்களைப் பெற்றிருந்தாலும் அவன் ஏழைதான். எனக்கு எதுவும் வேண்டாம் என்னிடம் இருக்கும் சிறிதளவுள்ள பொருளையும் பிறருக்காகக் கொடுத்து விடுவேன் என்று சொல்லி செயல்படுகிறானோ அவன் பொருள் இல்லாவிட்டாலும் செல்வந்தன்தான்.

         ஆக நாம் உலகத்தில் சுவைப்பவை தொடுபவை, உணர்பவை ஒவ்வொன்றையும் ஆண்டவன்தான் அளித்தான் என்பதை உணர்ந்து கொள்வோம். ஒரு முயற்சி சுயநலத்திற்காக அமையும் போது தீய எண்ணம் ஆகிவிடுகிறது அதுவே பொது நலத்திற்காக அமையும்போது நல்ல எண்ணம் ஆகிவிடுகிறது.

களவுமணம் கூடா

        பண்டை தமிழருடைய ஒழுக்கம், வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், நாகரிகம், சிறப்பு முதலிய செய்திகளை இலங்கியங்கள் மூலம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

         களவாவது பிறப்பு, கல்வி, வயது, உருவம், திரு முதலியவற்றால் ஒத்த தன்மையுடைய ஓர் ஆண்மகனுக்கும் பெண்மகளுக்கும் ஊழ்வலியினால் ஒருவரை ஒருவர் கண்டு காதலித்து இன்புற்று ஒழுகுவது.

         கற்பாவது, அங்ஙனம் காதலித்து அவர்கள் பிள்ளைகள் ஊர் அறிய மணந்து கொண்டு இல்லறம் நடத்தி இன்புற்று வாழ்வது இவ்விரு ஒழுக்கங்களையும் புலப்படுத்தும் பாக்களை குறுந்தொகை பாடல்கள் நமக்கு அழகாக சொல்கின்றது. இலக்கியங்களிலே எல்லோருக்கும் பிடித்த இலக்கியம் குறுந்தொகை பல கவிஞர்களை உருவாக்கிய இலக்கியம் என்று கூட சொல்லலாம்.

     அந்த பாக்கள் இதோ...

             தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் காதல் கொண்டு பிறர் அறியாதவாறு களவு மணம் மேற்கொண்டனர் தலைவன் அக்களவொழுக்கத்திலேயே நாட்டமுள்ளவனாய் இருந்தான் அதனால் தலைவி ஊரறியத் தலைவன் தன்னை திருமணம் செய்துக்கொள்ளாமல் காலம் தாழ்த்துவதைக் கண்டு தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.


            "யாரு மில்லைத் தானே கள்வன்
             தானது பொய்ப்பின் யானெவன்
            செய்கோ தினைத்தா ளன்ன சிறு
             பசுங் காவை ஒழுகுநீ ரால் பார்க்குங்
             குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே"

                                       - குறுந்தொகை

           அதாவது, தோழி, தலைவன் என்னைக் களவில் மணந்த போது வேறு எவரும் இல்லை என் நலத்தைக் கவர்ந்த கள்வராகிய தலைவர் மட்டுமே இருந்தார் "உன்னைப் பிரியேன்: பிரியின் ஆற்றேன்" விரைவில் உன்னை மணப்பேன் என்று தலைவர் தாம் கூறிய சூளுரையைப் பொய்யாகும்படி நடப்பாராயின் நான் என் செய்வேன்? ஐயோ... சாட்சிகள் ஒன்றுமில்லையே...! எங்கள் களவு மணம் நிகழ்ந்த இடத்தில் குருகு ஒன்று இருந்தது (குருகு என்பது நாரை) அது சான்று கூறும் தகுதி உடையது அன்றே..! மேலும் அது தன் இரையாகிய ஆரல்மீன் வருகிறதா..! என்று கூர்ந்து நோக்கி கொண்டிருந்ததால் தலைவன் சூளுரையைக் கேட்டுமிராது ஆகவே இனி நான் என்ன செய்வேன் என தலைவி புலம்புவதாக இச்செய்யுள் அமைந்துள்ளது.

          இச்செய்யுள்ளில் நாம் அறிந்துக் கொள்ளவேண்டியது என்னவென்றால் களவுமணம் என்பது நம் பண்பாட்டுக்கு புறம்பான ஒரு செயல் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

         பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு பாடலே சான்று தவறு  செய்துவிட்டபின் எங்கே தலைவன் தன்னை மறந்து செல்வானோ என்று பயந்து நாளை வெளி உலகத்திற்கு தெரிந்தால் தூற்றுவார்களே தலைவன் இல்லை என்று மறுத்துவிட்டால் என்ன செய்வது அந்த இடத்தில் சாட்சிகள் கூட இல்லையே என்று எப்படி அழுது புலம்புகிறாள்.

        இன்றைய காலக்கட்டத்தில் காதலின் மிகுதியால் காதல் மிகுதி என்று கூட சொல்வது தவறு உடல் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு தவறு செய்கின்றனர் அவ்வாறு தவறு ஏதும் செய்யாதிருக்கும் பொருட்டுத்தான் புலவர் முன்னரே இச்செய்யுள்ளை இயற்றினாரோ என்னவோ..?

        பெண்களே "உயிரை விட மானம் பெரியது" சேலையில் முள் பட்டாலும் முள் மீது சேலைப்பட்டாலும் பாதிப்பு சேலைக்குதான். உண்மையான காதல் ஒருபோதும் தவறு செய்யாது அப்படி தவறு செய்ய தூண்டினால் அது உண்மையான காதலாக இருக்க முடியாது உங்கள் காதல் எப்படிப்பட்டது என்று இப்போது தெரிந்திருக்கும்.




V

Friday, 24 October 2014

ரசிகர்களின் முட்டாள் தனம்

            கலை என்பது கலையாக பார்க் வேண்டும் ஆனால் நாம் எல்லை மீறி செயல்படுகிறோம். பொதுவாக நாம் யாருக்கு பாலபிஷேகம் செய்வோம் கடவுளின் சிலைக்கு அல்லது இறந்த மாபெரும் தலைவருக்கு ஆனால் நாம் இவர்களுக்கு பாலபிஷேகம் செய்வதில்லை மாறாக உயிரோடு இருக்கும் நடிகனுக்கு செய்கின்றீர்கள் உயிரோடு இருக்கும் போதே பால் ஊற்றுகின்றீர்களா?

          ரசிகர்களே யோசியுங்கள் நீங்கள் செய்யும் காரியங்கள் சரியானதா என்று. உங்கள் அன்பை நீங்கள் காட்ட வேண்டுமென்றால் உங்கள் ரசிகர் மன்றம் தலைமையில் பின்தங்கிய கிராமத்தை தத்தெடுத்து அந்த மக்களுக்கு நல்லது செய்யுங்கள் அல்லது ஒரு வேளை உணவு கூட இல்லாதவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள் அல்லது எத்தனையோ இடங்களில் ஏழை மாணவர்கள் படிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் இல்லை என்றால் அந்த நடிகன் படத்தில் போலீசாகவோ, வக்கீலாகவோ, கலெக்டராகவோ வந்து லஞ்சம் வாங்காமல் மக்களுக்கு நன்மை செய்கிறார்கள்

          நீங்களும் அதுபோல ஒரு வக்கீலாகவோ,டாக்டராகவோ,கலெக்டராகவோ ஆக நீங்களும் முயற்சி செய்யுங்கள. அதற்கு காரணம் அந்த நடிகன் என்று பெருமையாக சொல்லுங்கள் அதுதான் ஒரு உண்மையான ரசிகனுக்கு அழகு அதை விடுத்து.


         ரவுடித்தனம் செய்வது, தற்கொலை செய்து கொள்வது, பாலபிஷேகம் செய்வது, ரசிகர் மன்றம் என்ற பெயரில் வேலைக்கு செல்லாமல் வெட்டியாக இருத்தல் இதுபோன்று செயல்களை செய்தால் நீங்கள் உயிராக நினைக்கும் அந்த நடிகன் கூட உங்களை திரும்பி பார்க்க மாட்டார்கள்.

            உங்கள் நடிகனுக்காக ஒருவருக்கொருவர் அடித்து கொள்கிறீர்கள் ஆனால் அவர்களோ நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று பேட்டி கொடுக்கிறார்கள் இதில் எது உண்மை? நீங்கள் தேவையில்லாமல் அடித்து க்கொண்டு உங்கள் வாழ்க்கை இழந்து கொண்டு இருக்கிறீர்கள் அவர்களோ சுகபோகத்தோடு சந்தோஷமாக இருக்கிறார்கள் ரசிகர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் யாருக்கு என்ன லாபம் என்று யோசியுங்கள் ரசிப்பு தன்மையோடு நிறுத்திகொள்ளுங்கள் வெறித்தனம் அர்த்தமற்றது.







Thursday, 23 October 2014

தீபாவ(லி)ளி யாருக்கு?

     
  தீபாவளி கொண்டாட்டம் என்பது ஒரு நாள் தான் என்றாலும் ஒரு மாதத்திற்கு முன்பே அதை  வரவேற்க தொடங்கிவிடுவோம். பலகாரம் செய்வது முதல் துணிகள் எடுத்தல் வரை அமர்க்களமாக இருக்கும். நான் பத்து நாட்களுக்கு முன்பே துணிகள் வாங்கிவிடுவது வழக்கம் ஆனால் முழுமையாக எடுக்க மாட்டேன் கொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டு வருவேன் ஏனெனில் தீபாவளி இரண்டு நாட்கள் இருக்க மறுபடியும் செல்வேன் அந்த கூட்டத்தை கண்டு ரசிக்க... திருவிழா என்றாலே கூட்டம் அழகு அதுபோல தீபாவளி என்றாலும் கூட்டம்தான் அழகு அந்த இடிபாடுகளுக்குள் பல கூச்சல்கள் பல உரையாடல்கள் அலைமோத துணிகள் எடுப்பது ஒரு தனி சுகம்தான்.

         வீட்டை விட்டு பஸ் ஏறியதும் உரையாடல்கள் தொடங்கி விடும் பேருந்தில் பழைய நண்பிகளை பார்த்து "ஏய்... நல்லா இருக்குறியா? அப்றம் எப்டி இருக்க? என்ன டிரெஸ் எடுக்கவா? பலகாரம் செய்துட்டியா என்னென்ன பலகாரம் இந்த பலகாரத்திற்கு என்னென்ன சேர்ப்பது அதை எப்படி செய்வது ஆயிரம் கேள்விகள் எழும். நலம் விசாரிப்பில் தொடங்கி பலகாரம் சுடுவதில் வந்து நிற்கும்.

         பேருந்தை விட்டு இறங்கியதுமே காவல்துறை அறிவிப்பு காதை எட்டும் "கூட்டம் அதிகமாக இருப்பதால் அவரவர் பொருட்களை பாதுகாத்து கொள்ளுங்கள் திருடர்கள் ஜாக்கிரதை குழந்தைகளை தவிர விடாதிர்கள் வாகனங்கள் உள்ளே வர அனுமதியில்லை என்ற அறிவிப்புகள் காதை தொட்டது சாலைகளின் இரு புறங்களிலும் வான் உயர்ந்த கட்டிடங்கள் வண்ண வண்ண விளக்குகளால் ஜொலித்தன அந்த பெரிய கட்டிடங்களுக்கு கீழே நடைபாதை வியாபாரிகள் கடை விரித்திருப்பார்கள் வண்ண உடைகள் கண்ணை பறிக்கும் வழிநெடுகிலும் பலூன், வளையல் வண்டி, பழவண்டி ப்பீ... ப்பீ... ப்பீ... அந்த கூட்ட நெரிசலில் காதுக்கு அருகே ஊதும் வியாபாரி அதுதான் வேண்டுமென்று அடம் பிடித்து அழும் குழந்தை, ஜமுக்காளம், டிவி கவர் என கூவி.. கூவி.. விற்பனை செய்யும் வியாபாரிகள் அதனை தொடர்ந்து சென்றால்.

         புதிதாக திருமணமான ஜோடி "ஏங்க அந்த சுடிதார் நல்லா இருக்குள்ள எடுத்து தாங்க" உடனே கணவன் உனக்கு எதுக்கு சுடிதார் சாரிதான் உனக்கு நல்லா இருக்கு அதை எடுத்துக்க" உங்களை கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு வேற யாரையாவது கல்யாணம் பண்ணியிருக்கலாம் என்று நக்கலோடு சொல்வதை  சின்ன சிரிப்போடு ரசித்துக் கொண்டே நகர்ந்தால்.

           வெறும் 500 ரூபாயை வைத்துக்கொண்டு அதற்குள் நல்ல துணி எடுத்துவிட வேண்டும் என்று பல துணிகளை புரட்டிக் கொண்டிருக்கையில் 1000 ரூபாய்க்கு மேல சிம்பிளா எடுத்து போடுங்க என்கின்ற போது 500 ரூபாய் வைத்திருப்பவர் மெல்ல அவரை அன்னாந்து நோக்குவார் முகத்தில் சிறு வருத்தம் தெரியும் அதை காணும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும்.

      அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்தால் " நான் டிவில பார்த்த மாதிரி டிரெஸ் வேணும் என்று அடம்பிடிக்கும் குழந்தையை சமாதனப்படுத்திக் கொண்டிருக்கும் அம்மா இன்னொரு பக்கம் " மெட்டீரியலைவிட ரெடிமேட் நல்லா இருக்குள்ள அதையே வாங்கலாம்" என்ற பேச்சு ஒரு பக்கம் இவை எல்லாவற்றையும் விட துணிகளை எடுத்து எடுத்து போட்டு களைத்துப்போன விற்பனையாளர் "உங்க கலருக்கு சூப்பரா எடுப்பா இருக்கும் கையில எடுத்து பார்த்தா தெரியுமா போட்டு பார்த்தான் தெரியும் எடுங்க நல்லா இருக்கும்" என்று வியாபார தந்திரத்தோடு பேசும் குரல் ஒரு பக்கம். "இந்த டிரெஸ்க்கு மேட்சா கம்மல், கேர்பன்ட் கிளிப், வளையல் வாங்கனும்" என்ற குரல் மறுபக்கம். துணி எடுத்துவிட்டு பணத்தை கைடுக்க கைபைக்குள் கையைவிட்டால் பர்ஸ் காணாமல் அய்யோ.. நகையும் போச்சே பணமும் போச்சே என்று அழுது புரண்டு வரும் குரல் ஒருபக்கம் என்று பல குரல்கள் நம் செவிக்குள் புகுந்து வரும்.

        ஆனால் இந்த முறை துணி எடுக்க பஸ்சில் ஏறினேன் மழையின் காரணமாக கூட்டம் அவ்வாறாக இல்லை பஸ்சைவிட்டு இறங்கியதும் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது அம்மாவை தொலைத்துவிட்டு அழுகிறான் அவனின் பெற்றோர்கள் வந்து அழைத்துச் செல்லவும் என்று காவல்துறை அறிவிப்பு செய்துக் கொண்டு இருந்தது. நல்ல கூட்டம் போல என நினைத்துக்கொண்டே சென்றேன் ஆனால் அவ்வளவாக கூட்டம் இல்லை சாலையோரங்கள் வெறிச்சோடி இருந்தது மழையால் அதிகம் கடைகள் இல்லை பெரிய பெரிய கடைகளில் கூட கூட்டம் இல்லை. இந்த மழையால் நடைபாதை வியாபாரிகளின் வயிற்றில்தான் அடித்துவிட்டது இந்த தீபாவளிக்கு கடன் வாங்கி தான் கடை விரித்திருப்பார்கள் இப்போ நிறைய நஷ்டம் ஏற்பட்டிருக்கும். அதை விற்று தீபாவளி கொண்டாட காத்திருப்பார்கள் அவர்கள் சந்தோஷத்தை கெடுத்து விட்டது இந்த மழை. அவர்கள் இந்த தீபாவளியை எப்படி கொண்டாடி இருப்பார்கள்? சிறு கவலையோடு கடைக்குள் நுழைந்தேன்.

         சென்ற வருடம் போல் அதிகம் கூட்டம் இல்லை அந்த உரையாடல்களை கேட்க முடியவில்லை எதையும் ரசிக்க முடியவில்லை எங்கேயும் எதையும் பார்க்க முடியவில்லை. சென்ற வருடம் இருந்த சந்தோஷம் இந்த வருடம் இல்லை நிறைய பலகாரம், மனதிற்குப் பிடித்த டிரெஸ் எல்லாம் வாங்கியாகி விட்டது ஆனால் எதையோ தொலைத்து விட்ட வருத்தம் அதிகமாக இருந்தது. தீபாவளி தீபாவளி போல் இல்லை யாருக்கும் வாழ்த்து கூட சொல்லவில்லை. அதே இடம், அதே நேரம், அதே மக்கள் ஆனால் காட்சிகள் மட்டும் வேறு வேறு யார் முகத்திலும் சந்தோஷம் இல்லை என் மனம் போல எங்கும் வெறுமையாக இருந்தது. என் கண்களுக்கு மட்டும் அவ்வாறு தெரிந்ததா? இல்லை எல்லாருமே அவ்வாறுதான் இருக்கின்றார்களா?

       எல்லோரும் எதையோ தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது.

Thursday, 16 October 2014

அதிரசம் செய்வது எப்படி?

       
                                                                                                                                                  தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பலகாரம் தான் அதில் முக்கியமானது முறுக்கும், அதிரசமும் தான். இப்ப நாம் அந்த அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாமா?

 தேவையான பொருட்கள்:

 பச்சரிசி - 1 கிலோ
வெல்லம் - 1 கிலோ ஏலக்காய் - 7 எண்ணெய் - தேவைக்கேற்ப
நெய் - 50 கிராம்

செய்முறை:

       அரிசியை தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊர வைத்து பின் நன்றாக கழுவி வெயிலில் உலர வைக்கவும். பிறகு அரசியோடு ஏலக்காய் சேர்த்து மிக்ஸி அல்லது மில்லிலோ அரைத்துக் கொள்ளவும்.

        பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தை அதில் போட்டு காய்ச்சவும். இதில் ரொம்ப முக்கியம் வெல்ல பாகுதான் அதை பக்குவமாக காய்ச்ச வேண்டும்.

       பதம் பார்க்க ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி காய்ச்சிய பாகை சிறுதுளி விடவும் கையில் ஒட்டாமல் திரட்டாக வந்தால் அதுதான் பதம். பாகுபதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

       பிறகு காய்ச்சியை பாகை மாவில் கொட்டி கொஞ்சமாக கொஞ்சமாக ஊற்றி கிளறி மூடி வைத்து மறுநாள் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் சிறிது நெய் தடவி ஒவ்வொன்றாக எண்ணையில் போட்டு எடுக்கவும்.

         இப்போது இனிப்பான அதிரசம் ரெடி.

மானதத் தந்தி (Telepathy)

          மனிதனின் பலமான எண்ணங்கள் தலையை ஊடுருவி, மன ஆகாயத்தின் சுற்று வட்டத்தில் அலைக்கழித்துப் பாயும். இந்த மன அலைகள் ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றியதாகயிருந்தால் அறிவுத்தன்மையுள்ள அவ்வலைகள் அவரை நோக்கி நேராகச் சென்று, அவருடைய மனதைத் தாக்கி, எண்ணத்துக்குரிய மனத்திரிபை உண்டாக்க, அதை அம்மனத்துக்குரியவர் ஏதோ எண்ணம் என்ற பெயரில் அறிகிறார். ஆனால் இதற்கு ஒரு நியமம் இருக்க வேண்டும்.

          ஒருவர் மற்றொருவருக்கென மன அலையை அனுப்பும் சமயத்தில் அதைப் பெறவேண்டியவர் வேறு நினைவில் ஆழ்ந்து, இருக்கக்கூடாது பலமான எண்ணம் ஏதுமில்லாமல் இருக்க வேண்டும். பிரிந்து வாழும் காதலர்கள், நண்பர்கள், உறவினர்களிடையே இத்தகைய மானதத்தந்தி பரிமாற்றாங்கள் அடிக்கடி நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. மனதின் மூலமாகச் செய்தியை அனுப்பவும், அறியவும் பழகிய ஒரு நண்பர் உலகில் எவ்வளவு தூரத்தில் வசித்தாலும் ஒருவருக்கொருவர் செய்திகளையும், உருவங்களையும் பரிமாறி கொள்ளமுடியும.

          ஒருவர் தூரத்தில் உள்ள தன் நண்பருக்கு மனதின் மூலம் காட்சிகளை அனுப்ப முடியும். டெலிகிராப், டெலிபோன், போன்றவைகள் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையும் சாத்தியமானதுதான் இந்த டெலிபதி (Telepathy). தன் நண்பர் வெளியூர் சென்றாலும் அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் சம்மந்தப்பட்ட இரு நண்பர்களும் அறிந்து கொள்ள முடியும். அல்லது நம் மனதுக்குரியவர்களிடம் இருந்து நாம் நினைத்த நேரத்தில் கடிதமோ அல்லது டெலிபோனோ வரும் அதை வைத்தே நாம் புரிந்து கொள்ள முடியும்.

          இந்த விளக்கத்துக்குப் பின் மானதத் தந்தியை பற்றிய ஐயப்பாடு யாருக்கும் இருக்காதாகையால் இதன் உண்மையைப் பரிட்சித்தறிந்து தெரிந்து கொள்ளலாம். மானதத்தந்தி சாதனைக்கு குறைந்தது இருவர் இருக்க வேண்டும் மனதில் ஒரு உருவை, சப்தத்தை, உறுதியாகப் பிடித்து, உணர்வை அதில் நிலைநாட்டச் செய்வதன் மூலம் அதை அப்படியே வெளிமன ஆகாயத்தில் அனுப்பும் பண்பை பெற்றிருக்க வேண்டும்.

          ஒரே வீட்டின் வெவ்வேறு மூலைகளிலும் இருந்து குறித்த நேரத்தில் அவரவர் இடத்தில் அமைதியாக வசதியாக உட்கார்ந்து கொள்ளவேண்டும். முன்பே அனுப்புபவர் இன்னாரென்று அறிபவர் முடிவு செய்திருக்க வேண்டும். அனுப்புபவர் உருத்தையோ, சப்தத்தையோ மணத்தையோ எதை அனுப்பவேண்டுமோ அதைத் தெளிவாக மனதில் நிறுத்தி வைத்து உணர்வை அதில் ஊன்றி, வெளியில் அனுப்ப வேண்டும்.

           அறிபவர் அதே சமயம் எதையும் நினைக்காமல் மனதில் உதிப்பதை அறியும் நிலையில் இருந்து மனதில் உதிப்பவைகளை அறிந்து ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். பலர் சாதகம் செய்வதாயிருந்தால் ஒருவர் அனுப்புபவராகவும, மற்றவர்கள் அறிபவர்களாகவும் இருந்து இதைப் பழகலாம்.

            வாசகர்களே நீங்களும் பரிட்சித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

Wednesday, 15 October 2014

பெண்களுக்குக் கரு உண்டாக

      ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும் ஆண்களுக்கு குழந்தையை உற்பத்தி செய்யக் கூடிய உயிர் அணுக்கள் குறைவு பட்டிருந்தாலும் இம்முறையை உபயோகித்தால் நிச்சயம் பலன் உண்டு.

      வாழை மரத்தின் அடித் தண்டை அறுத்து அதில் குழி செய்து அதில் கொஞ்சம் நவச்சாரம் பொடி செய்து போட்டு அதை நன்றாகப் பாதுகாப்புடன் மூடி காலையில் வாழைத் தண்டில் ஊறிய நீரை எடுத்து ஆண் பெண் இரு பாலரும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சுமார் 2 மாதங்கள் குடித்து வந்தால் நிச்சயமாக குழந்தைச் செல்வம் உண்டாகும்.

Tuesday, 14 October 2014

ஈகை

           தானத்திலே சிறந்த தானம் அன்னதானம் அது மட்டும்தான் போதும் என்று சொல்லக்க கூடியது மற்ற எது கொடுத்தாலும் போதும் என்று மனம் வராது அதனால்தான் அதை சிறந்த தானம் என்கிறோம். தீபாவளி பண்டிகை வருகிறது அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் அது சிறு தொகையாக இருந்தாலும் அது அவர்களுக்கு பெரிய உதவி. நாம் இன்று 100 ரூபாய் சம்பாதித்தால் அதில் ஒரு ரூபாய் தர்மம் செய்யுங்கள் மனதிற்கு நிறைவாக இருக்கும் 1000 ரூபாய் சம்பாதிப்பவர் தாராளமாக பத்து ரூபாய்
தர்மம் செய்யலாம்.
                                         
         அடுத்தவர்களுக்கு கொடுக்கும் நிலையில் நாம் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள் அந்நிலையை கடவுள் நமக்கு வழங்கி இருக்கிறார் என்று சந்தோஷப்பட்டு கொள்ளுங்கள். வெறும் பரிதாபம் எந்த பயனும் அளிக்காது அவரவர் தகுதி தகுந்தார்போல் உதவிகளை செய்யதாலே போதுமானது. அதாவதி பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதன்படி நாம் செய்கின்ற உதவி சரியான நபருக்கு சென்றடைய வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். யாருக்கேனும் கொடுத்து பாருங்கள் உண்மையிலே உங்கள் மனதிற்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்.                

          வாழ்க்கையில் நாம் எவ்வளவோ சம்பாதிக்கிறோம் தேவையில்லாத எத்தனையோ செலவுகளை செய்கிறோம் அது ஒரு பயனுள்ள செலவாக இருக்கட்டுமே. நம்மால் ஒரு ஆசிரமம் கட்ட முடியுமா தெரியாது, ஒரு முதியோர் இல்லம் நடத்த முடியுமா தெரியாது ஆனால் அதை பெரிய மனதோடு நடத்துகிறவர்களுக்கு சிறு உதவியாக இருப்போமே இராமருக்கு உதவிய அணில் போல, என்ன சகோதர, சகோதரிகளே யாரேல்லாம் இப்பவே கொடுக்கப்போறிங்க?                                                                                                                    

             அட  கிளம்பியாச்சா... ஈகை குணம் உடையவர் இதை படித்த பின்னர் சும்மா இருப்பார்களா அந்த ஈசனின் ஆசி பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்..!

Sunday, 12 October 2014

சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி?

சிக்கன் ரோஸ்ட்     தேவையானபொருட்கள்:                                                                                                                                               

கோழிக்கறி எழும்பு நீக்கியது - 1/2
இஞ்சி, பூண்டு - அரைத்தது 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்                                                                                                         மஞ்சள் தூள் - சிறிதளவு                                                                                                  கடலை மாவு - 3 ஸ்பூன்                                                                                                       அரிசி மாவு - 3 ஸ்பூன்                                                                                                         பச்சை மிளகாய் - 2                                                                                                                 பெரிய வெங்காயம் - 2                                                                                                         கறிவேப்பிலை - சிறிதளவு                                                                                                   உப்பு - தேவைக்கேற்ப                                                                                                                     எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்                                                                                                   கலர்பொடி - சிறிதளவு                                                                                                  செய்முறை: 
                                                                                                                                                                                                                                                                                                                                             சிக்கன் இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, மிளகாய்தூள், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு தேவைக்கேற்ப கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும் பின்பு அவைகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிற வெங்காயம் பச்சை மிளாகாய் கறிவேப்பிலை ஆகியவைகளை சிவக்க வதக்கி பொரித்த சிக்கனை அதில் கொட்டி ஒரு புரட்டு புரட்டி எடுத்து எலுமிச்சை சாறு ஊற்றி கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். இப்போது சூப்பரான சிக்கன் ரோஸ்ட் ரெடி.

பெண்களின் உடையில் ஆபாசமா...?

             இந்த ஆபாச உடை எப்படி வந்தது? யாரால் வந்தது? சேலையும், தாவணியும் அணிந்த பெண்கள் இன்று மாடர்ன் துணி அணிவது ஏன்? பெண்களுக்கு நவநாகரிக உடை மீது மோகம் எப்படி வந்தது? சினிமாதானே இன்று அந்த சினிமாத்துறை சார்ந்தவர்களே ஜீன்ஸ் உடை அணிவதால்தான் பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார்கள் பிறகு ஏன் பெண்களுக்கு அரைகுறை ஆடை உடுத்தி நடிகைகளை ஆட வைக்கிறார்கள்?