Friday 21 August 2015

சில நேரங்களில் சில மனிதர்கள்

சில நேரங்களில் சில மனிதர்கள் புத்தகத்தை முதல் முறையாக அதை தொடுகிறேன். இந்த புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று புரட்டி பார்க்கிறேன். எடுத்த உடனே முன்னுரையை படிக்கிறேன். அதில் அந்த கதையின் ஓட்டத்தை ஜெயகாந்தன் விவரிக்கிறார். இந்த கதை சிலருக்குப் பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம். இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களை போல் சிலர் இருக்கலாம், அல்லது இனிமேல் இருக்க கூடும் என்கிறார். அப்படி என்ன கதாபாத்திரம் என்று பக்கத்தைப் புரட்டுகிறேன். படிக்க... படிக்க.. ஏதோ ஒரு கணம் சுமை மனதில் ஏறுகிறது. அதில் வருகிற கதாபாத்திரம் போல் சற்று மாறுபட்ட கதாபாத்திரம் எனக்குத் தெரிந்த ஒரு கதாபாத்திரம் அந்த கதையை ஒட்டியே வந்து போகிறது.


அதில் வருகின்ற கதாநாயகியும் "அக்னி பிரவேசம்" என்ற கதையை படித்துக்கொண்டே வருவாள் இது நம் கதை போலவே இருக்கே என்று ஆதங்கப்படுவாள். அதே போல் இந்த கதையை நான் படிக்கும்போது நமக்குத் தெரிந்த ஒருவரின் கதை போலவே வருகிறதே என்று நினைத்துக்கொண்டே படித்தேன்...

படிக்க... படிக்க... இப்படியும் இருக்க முடியுமா? என நினைத்தாலும் நிஜத்திலும் இருக்கிறதே என உணர முடிந்தது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு நியாயம் இருக்கதான் செய்கிறது அவர்கள் வழி(லி)யில் சென்று பார்க்கும் போது. அவரவருக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது அதை அவர்கள் கோணத்தில் பார்க்கும்போது சரியாகதான் இருக்கிறது. ஜெயகாந்தனின் கதை ஓட்டம் எப்படி இருக்கும் என்று இதுவரை எனக்குத் தெரியாது ஆனால் கதையை படிக்கும் போது யாரோ ஒருத்தி அவளின் கதையை யாருக்கோ சொல்வதுபோல் இருந்தது. அவரின் தோற்றம் வேறாக இருக்கிறது ஆனால் கதை முழுக்க ஆங்கில கலந்த வார்த்தைகள் அதிகம் இருந்தது என்னை ஆச்சரியப்பட வைத்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு புத்தகத்தைப் படிக்கிறேன். புத்தகத்தை சுமக்கிற குழந்தை போல் கதையின் பாரம் மனதில் ஏறிக்கொண்டே இருக்கிறது. ஜெயகாந்தன் சொன்னதுபோல் கதையின் முடிவை படிக்காமலே விட்டுவிட்டேன். ஏனோ அதற்குமேல் கதையை படிக்க முடியவில்லை.

"சில நேரங்களில் சில மனிதர்கள்" இப்படியும் இருக்க கூடும். இருக்கவும் செய்கிறார்கள்.

2 comments:

  1. மதிப்புரை அருமை

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...!

    ReplyDelete