Sunday 2 August 2015

இலங்கை வானொலியும் நானும்

                 இலங்கை வானொலி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.  நடிகர் சத்தியராஜ் அவர்கள் பேசுவதை கேட்டுயிருக்கிறீர்களா? அவர் பேட்டிகளில் உண்மையை பட்டு பட்டென்று போட்டு உடைப்பார் எனக்கு அது ரொம்ப பிடிக்கும். ஆனால் அந்த மாதிரி பேசுவது சிலருக்கு பிடிக்காது. அவர் போல நானும் பேசப்போறேன். ஹா.. ஹா... அவர் ஒரு பேட்டியில் சொல்வார் " நடிகன் படத்தில் நடிக்கிறதை விட நிஜத்தில்தான் அதிகம் நடிக்கிறாங்கன்னு சொல்வார். ஏன்னா மேடையா இருந்தாலும் சரி, நேரில் இருந்தாலும்  சக நடிகரை பார்க்கும்போதும், ரசிகர்களை பார்க்கும்போதும் வாய்கூசாமல் சில வார்த்தைகளை அள்ளிவிடுவாங்களாம். இதில் இன்னொரு காமெடி என்ன தெரியுமா? "உண்மையயை மட்டும் பேசுற மைக்கை எவனாவது கண்டுப்பிடிச்சா உலகத்துல ஒருத்தன் கூட உயிரோடு இருக்கமாட்டான் பேசுறவன் அத்தனைப் பேரும் செத்துபோயிடுவான்" ஏன்னா பேசுறது அத்தனையும் பொய்னு சத்தியராஜ்  சொல்வார். அது உண்மைதானே? அது சினிமாவில் மட்டுமல்ல எல்லாத்துறைகளும் அப்படித்தான்.


                  இலங்கை வானொலிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது அதற்கு முழுக்காரணம் அறிவிப்பாளர்கள். அதோடு இலங்கை வானொலி நேயர்களுக்கு அளித்த வாய்ப்புகள் அதிகம் அதனால்தான் இன்றும் பழைய நேயர்கள் மத்தியில் மறக்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது.

                  அறிவிப்பாளர்கள் எல்லோரையும் எல்லோருக்கும் பிடிக்கும் அதில் ஒருத்தருக்கு மட்டும் ரசிகையா/ரசிகரா இருப்போம். அதில்கூட ஏகப்பட்ட சண்டைகள் வரும். ஏனெனில் அத்தனை வெறித்தனமான ரசிகர்கள் இலங்கை வானொலிக்கு உண்டு அதன் அறிவிப்பாளருக்கு உண்டு.
அந்தவகையில் அதில் நானும் ஒருவர். எல்லோரும் சினிமா நடிகருக்குதான் ரசிகரா இருப்பார்கள் ஆனால் நான் இலங்கை வானொலிக்கு ரசிகையா இருந்தேன். என்னால் இப்போதும் வேற ஒரு வானொலியை கேட்க முடியாது ஏன்? ஏன்? என்று என்னையே கேள்விக் கேட்டுக்கொள்வேன். அப்போது எனக்குத் தெரியவில்லை இப்போது புரிகிறது நான் இலங்கை வானொலியை காதலிக்கிறேன் என்று. இப்போது இலங்கை வானொலி இல்லையென்றாலும் வேறொரு வானொலியை கேட்க பிடிக்கவில்லை. எல்லோரும் ரசித்தார்கள் ஆனால் நான் நேசித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

                    எத்தனையோ நேயர்கள் இலங்கை வானொலியில் பேசுவார்கள் இலங்கை வானொலி மட்டும்தான் கேட்கிறேன் என்பார்கள் ஆனால், இன்று அவர்கள் எல்லா வானொலியும் கேட்கிறார்கள் அந்தந்த வானொலியில் அவ்விதம் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

                எது எப்படியோ ரேடியோவில் நமது பெயர் ஒலித்தால் போதும் என்று நினைப்பவர்கள் அவர்கள். இன்னும் சில நேயர்கள் இருக்கிறார்கள் எல்லா அறிவிப்பாளர்களிடமும் பேசுவார்கள் ஆனால் அந்தந்த அறிவிப்பாளரிடம் "உங்களிடம் மட்டும்தான் பேசுகிறேன்" என்பார்கள். இந்த மாதிரி ஜால்ரா நேயர்களும் நிறைய உண்டு. அறிவிப்பாளர்களுக்குள் சண்டை மூட்டிவிட்ட நேயர்கள் நிறைய இருக்கிறார்கள். எல்லாத்துறைகளிலும் போட்டியும், பொறாமையும் இருக்கத்தான் செய்கிறது.
 
                இலங்கை வானொலி நேயர்களை நிறைய எழுத வைத்து அழகு பார்த்து அதனால் கிடைத்த நண்பர்கள் வட்டம் ஏராளம்... ஏராளம்... இன்று நண்பர்கள் தினமாம் அதிக நண்பர்களை இணைத்த இலங்கை வானொலி சர்வதேச ஒலிபரப்பும் இல்லை அதனால் ஏற்பட்ட நட்பும் இல்லை. அன்று வெறும் கடிதங்களில் மட்டுமே தொடர்புகொள்ள முடிந்தது ஆனால் இப்போது தொடர்புகொள்ள நிறைய வசதிகள் இருக்கிறது இருப்பினும் அப்போது இருந்த சந்தோஷம், எதிர்பார்ப்பு இப்போது இல்லை.

                  எனக்கு எங்காவது பழைய பாடல்களைக் கேட்டுவிட்டால் இலங்கை வானொலியை நினைத்துக்கொள்வேன். இன்று இடைக்கால பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன் அப்போது இந்த பாடல் எந்த படம்? இந்த பாடல் எந்தப் படம் என்று யோசித்து யோசித்து கடைசியில் தவறாகவே படத்தின் பெயர்களைச் சொன்னேன்.  இதே இலங்கை வானொலி கேட்டுக்கொண்டிருந்தால் அந்த படத்தில் உள்ள அத்தனை விவரங்களையும் சொல்லியிருப்பேன்.  இலங்கை வானொலி இல்லாதது பெரிய இழப்புதான். வானொலிப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் அத்தனை விஷயங்கள் இருக்கிறது அனுபவம் இருக்கிறது. "ஒரு புத்தகம் படித்தால் எத்தனை பயன் உள்ளதோ அத்தனை பலன் உள்ளது வானொலி கேட்பதால்" நாம்  நிறைய பொது அறிவுகளை வளர்த்துக்கொள்ளலாம். வானொலி சிறு பெட்டிக்குள் அடங்கிய பெரிய ஆசான்.


                 ஒரு சிறு  உதாரணம்  உங்களுக்காக நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கையில் பள்ளி ஆண்டு விழாவில் பாட்டு போட்டியில் என் பெயரை சேர்த்துவிட்டார்கள் என் வகுப்பு தோழில்கள். நான் எவ்வளவோ மறுத்தும் முடியவில்லை என் வகுப்பு ஆசிரியயை "என்ன பாட்டு பாட போகிறாய்? எங்கே அதை பாடிக்காட்டு என்றார். நான் பாடினேன் ... 'திருப்பறங்குன்றத்தில் நீ சிரித்தால் திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்...' பாடலைக் கேட்டவர், "இந்தப் பாடல் உனக்கு எப்படித் தெரியும் பாட்டு கிளாஸ் போறியா?"ன்னு கேட்டார். நான் சொன்னேன் "இல்லை மிஸ் இலங்கை வானொலியில் இந்த பாடலை அடிக்கடி கேட்டிருக்கேன் அப்ப அதன் அருகில் உட்கார்ந்து எழுதி வைத்துக்கொண்டு பாடுவேன்" என்றேன். அவர் ஆச்சரியப்பட்டு பாராட்டினார். "கண்டிப்பா  நீ இந்த பாட்டை பாடுற உனக்கு பர்ஸ்ட் பிரைஸ் கிடைக்கும்" என்றார். அதே போல் அந்த பாடலைப் பாடி முதல் பரிசைப் பெற்றேன். அதுமட்டுமல்ல என்னை எழுத வைத்த ஆசானும் கூட இன்று நான் நாலு வார்த்தை கோர்வையாக எழுதுகிறேன் என்றால் அதற்கு காரணம் இலங்கை வானொலி. வானொலிக்கு எழுத ஆரம்பித்து இன்று நாளிதழ்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் எழுத வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. இப்போது எல்லோரும் மாறிவிட்டார்கள் வளர்ந்துவிட்டார்கள் ஆனால், நான் மட்டும் மாறவும் இல்லை வளரவும் இல்லை அப்படியே இருக்கிறேன்..!

               இப்போது வானொலி கேட்பதில்லை அதற்கு காரணம் நிகழ்ச்சிகள் முன்பு போல் இல்லை என்பதுதான் உண்மை.

                  காலங்கள் மாற மாற ஒன்று இன்னொன்றை மறக்கச் செய்யும் ஆனால் இலங்கை வானொலி பொறுத்தவரை அது முடியாததாக இருக்கிறது. ஏனெனில் அறிவிப்பாளர்களின் காந்த குரல்கள் அப்படி. எனக்கு இப்படி மற்றவர்களுக்கு எப்படியோ..? சிலரது அன்பு எப்படி நம்மை அடிமைப்படுத்திவிடுமோ அப்படியே சிலரது குரல்களும் நம்மை அடிமைப்படுத்தி விடும்.  அதில் சிக்கிக்கொண்ட சிறு வண்டு நான்... இன்னும் மீளமுடியாமல். மீண்டும் சர்வதேச ஒலிபரப்பு வந்தால் சிறப்பாக.இருக்கும்.

"ஊமையாய் போன சங்கீதம் ஒன்று என்றுதான் பேசுமோ..."

5 comments:

  1. இலங்கை வானொலி பற்றிய உங்கள் எண்ணம் தவறானது அல்ல உண்மையானது.
    நானும் அதன் ரசிகையாகி இன்று எழுதும் அளவிற்கு வந்துள்ளேன்.
    மறக்க முடியாதது.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சகோதரி... மனதில்பட்டதை சொல்ல நினைத்தேன்.

    ReplyDelete
  3. சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. இலங்கை வானொலிப் பற்றி ஏதெனும் படித்தாலோ அல்லது கேட்டாலோ ஒரு ஆதங்கம் வரதான் செய்கிறது

    ReplyDelete
  4. மறக்க முடியாத இலங்கை வானொலி. எனக்கும் தான். அந்நாளைய இலங்கை வானொலி அறிவிப்பாளர்களின் இனிமையான அறிவிப்புக்கள் இன்றும் மனதில் ஒலிக்கின்றன. சிறப்பான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...! தமிழ்இளஙகோ அவர்களே... உண்மைதான் இலஙகை வானொலியை கேட்டவர்கள் மறக்க மாட்டார்கள்..

      Delete