Tuesday 30 May 2017

கிளி ஜோசியம்

     

          ஒரு நாள் நானும் இன்னொரு பொண்ணும் பீச்சுக்கு போகலாம்னு போனோம்.... நாங்க போகும் போது ஒரு நாலு மணி இருக்கும் ஆனால் சுள்ளென்று வெயில் இருந்தது. நிற்க கூட முடியவில்லை ஆனால் அங்கே இரண்டு ஜோடிகள் மற்றவர்கள் தங்களை பார்க்கிறார்கள் என்ற அறிவே இல்லாமல் நாய்கள் போல் பீச்சை அசிங்கப்படுத்திக்கொண்டு இருந்தார்கள்... எனக்கு சுள்ளென்ற கோவம் அந்த நாய்களை விரட்டிவிட்டு வர்றேன் என்று கிளம்பினேன். என் கூட வந்த பொண்ணு "வேணாக்கா... அந்த அசிங்கத்தை நீங்க ஏன் பார்க்குறீங்க விட்டுறுங்கக்கா... எல்லாரும் பார்த்துட்டுதான் போறாங்க நீங்க வாங்க நாம அந்த பக்கம் போவோம்" என்று என்னை இழுத்துக்கொண்டு போனது..



பீச்சில் நாலு பேர் வந்து போகிற இடம்,  குழந்தைகள் வருகிறார்கள் அறிவே இல்லாமல் கின்னஸ் ரெக்கார்டருக்கு ஒத்திகை பார்ப்பது போல் அவர்கள் இருவரும் ச்சே... என்ற ஆதாங்கத்தோடு அங்கிருந்து நகர்ந்து சென்றோம். ஒரு இடம் பார்த்து அமர்ந்தோம். என் கூட வந்த பெண் "அக்கா... கிளி ஜோசியம் பார்க்கலாமா...?

"எனக்கு வேணாம் நீ பார்த்துக்கோ... " என்றேன்.

கிளி ஜோசியம் தனது கடையை விரித்தது. என்ன பார்க்கனும் "குடுபத்திற்கா, வீட்டுக்கா, உங்களுக்கா எதுவா இருந்தாலும் இருபது ரூபா தான்" என்றார்.

"அக்கா... என்கிட்ட நூறு ரூபாயா இருக்கு உங்ககிட்ட ச்சேன்ஜ் இருக்கா..."

"இருக்கு "என்று கூறியபடி பணத்தை அந்த பெண்ணிடம் கொடுக்காமல் விரித்த துணியில்  நானே வைத்தேன்..."

கிளி ஜோசியர் "அம்மா... உங்க பேர் சொல்லுங்க" என்றார்..

"கனிமொழி" என்றது என் கூட வந்த பெண்.

"ஓடி வா.. ராஜா... ஓடிவா.... கனிமொழிங்கிற பேருக்கு நல்ல சீட்டா ஒன்னு எடு" என்றார்.

அந்த கிளி வெளியே வந்துவிட்டு சீட்டை எடுக்காமல் மீண்டும் கூண்டுக்குள்ளே போனது எனக்கோ ஆச்சர்யம் ஏன் எடுக்காமல் போகிறது என்றேன்.

உங்களுக்கு ஒரு பேர்தான் இருக்கா... இல்ல வேற பேர் எதும் இருக்கா என்றார் கிளிஜோசியர் இல்லை என்று தலையாட்டியது அந்த பெண். மறுபடியும் கூப்பிடுங்க என்றேன் மூன்று முறை கூப்பிட்டும் வெளியே வந்துவிட்டு கிளி சீட்டை எடுக்காமல் உள்ளே சென்றுவிட்டது. கூட வந்த பெண்ணோ அழுதே விட்டது "ஏன்க்கா... எடுக்குதில்ல ஏதாவது சரியில்லையா... " என்றது. எனக்கும் ஒன்றும் புரியவில்லை ஏன் என்று அவரிடமே கேட்டேன் ஏன்னு தெரியலம்மா... நான் காலையிலிருந்து எத்தனையோ பேருக்கு பார்த்திருக்கேன் இந்த மாதிரி இதுவரை நடந்ததே இல்லை என்று சொல்லிவிட்டு

அந்த ஜோசியர் என்னைப் பார்த்து "நீங்க உங்க பேர் சொல்லுங்க என்றார்... நான் மாட்டேன் என்று மறுத்துவிட்டேன் எனக்கு இதில் விருப்பம் இல்லை என்றேன் அவரோ பிடிவாதமாக எடுக்க சொன்னதால் வேறு வழியில்லாமல் என் பெயரை சொன்னேன்... என்ன ஆச்சர்யம் அந்த கிளி கடகடவென்று ஓடிவந்து சீட்டை எடுத்து போட்டது. அவர் சீட்டை பிரித்து பார்க்காமலே எடுத்ததும் சொன்னார் "உனக்கு வாய் சரியில்லையே உண்மை சொல்றேன்னு சொல்லி எல்லோரையும் பகைத்து கொள்வாயே என்றார். நான் ஆமாம் என்றேன். சீட்டை பிரிக்கும் போது அதில் பெருமாளும்,  லக்ஷ்மியும் காட்சி தந்தார்கள். அவர் உடனே "மகாலக்ஷ்மி யே வந்திருக்கும்மா... நீ தொட்டது துலங்கும் வைச்சது விளங்கும், மகாலக்ஷ்மி யின் அருள் உனக்கு இருக்கும்மா, ஆனால் உன் வாய் திறந்து யாருக்கும் எந்த வாக்கும் கொடுத்து விடாதே , மனம் நொந்து திட்டிவிடாதே அது அப்படியே பலிக்கும் என்றார். லட்சுமி என்றார் சரஸ்வதி என்றார், அன்னபூரணி என்றார் என்னை ஒரு தெய்வமாகவே பாவித்து என்னென்னவோ சொன்னார். உன் வீட்டில் நீயே ராஜா, நீயே மந்திரி , நீ ஆண் பிள்ளையாக பிறக்க வேண்டியவர் பெண்ணாக பிறந்து விட்டாய் என்றார்.  உன்னிடம் யாரும் பொய் சொல்லி தப்பிக்க முடியாது என்றார். தெய்வத்தின் அருள் பரிபூரணமா உனக்கு இருக்கும்மா எந்த தோஷமும் இல்லை நல்லா இருக்கு என்று சொன்னார்.
மறுபடியும் ஒரு சீட்டை எடுக்க சொன்னார் நானும் எடுத்தேன் கிருஷ்ணர் வந்தார்.. மறுபடியும் கிருஷ்ணரே வந்திருக்கிறாரம்மா எல்லா கஷ்டமும் உன்னை விட்டும் நீங்கும் என்றார். நான் அப்படியே கேட்டுக்கொண்டே இருந்தேன் மேற்கொண்டு ஒரு வார்த்தை கேட்கவில்லை.

அதன் பிறகு என்னோடு வந்த பெண் பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்தது அந்த பெண்ணிற்கு பார்க்கலாம் என்று மீண்டும் இருபது ரூபாயை கொடுத்து பார்த்தேன். இப்போது பேர் சொன்னதும் அந்த கிளி ஓடிவந்து அந்த சீட்டை எடுத்தது. ஆனால் வந்த சீட்டு அவ்வளவாக நல்லா இல்லை. என் கூடவந்த பெண் மேற்கொண்டு அழுதே விட்டது. மூன்று முறை எடுத்தது அப்பவும் நல்லதா எதுவும் வரவில்லை. அந்த பெண்ணிற்காக என்னை எடுக்கச் சொன்னார் நான் எடுத்தேன் அப்போதும் நல்ல சீட்டு வரவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது அதன் பிறகு அந்த பெண்ணிற்காக என்னையே எடுக்கச் சொன்னார் மீண்டும் நானே எடுத்தேன் அதன் பிறகு நல்லதாக வந்தது...

அந்தப் பெண்ணைப் பார்த்து சொன்னார்... இங்கே நீயா வந்தியா இல்லை உன்னை யாராவது கூட்டி வந்தார்களா என்று கேட்டார் இந்தக்கா தான் கூட்டிவந்தாங்க என்று சொன்னது அந்த பெண்.. அந்த ஜோசியர் மேலும் சொன்னார் இவங்க உனக்கு என்ன வேணும்னு கேட்டார் தெரிஞ்சவங்க என்றது அந்த பெண்.. அப்ப அவர் சொன்னார் இவங்களை நீ முழுமையா நம்பலாம் உனக்கு இவங்க நல்லது மட்டும்தான் செய்வாங்க உனக்கு மட்டுமல்ல யாருக்குமே கெடுதல் செய்யாத மனசு உள்ளவங்க, இவங்கள ஏன் சீட்டு எடுக்க சொன்னேன்னா மகாலெட்சுமியாட்டம் இவங்க இருக்காங்க இவங்க கையால எது எடுத்தாலும் அது நல்லா இருக்கும் அதான் எடுக்க சொன்னேன்.. இப்ப கூட பாரு அவங்க கை ராசிதான் உனக்கு நல்ல சீட்டு வந்திருக்கு... இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போனார்.  அநியாத்திற்கு என்னை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார். பிறகு உனக்கு இரண்டு குழந்தைக்கு பாக்கியம் இருக்குமா... அப்படி சொல்லிட்டு என் கையாலையே ஒரு ரூபாய் எடுத்து அந்த பெண்ணை வாழ்த்தி விட்டு கடலில் வீச சொன்னார்... இவங்க சொல்ற வாக்கு உனக்கு பலிக்கும் கண்டிப்பா இது நடக்கும்னு சொல்லிட்டு போய்விட்டார்..


நான் வீட்டுக்கு வந்து ஆச்சரியத்தில் இருந்தால்.. அது எப்படி சொல்லி வைத்தார் போல் வரிசையாக ஒரே மாதிரி அர்த்தம் உள்ள சீட்டு வந்தது மற்றது அந்த பெண் பெயர் சொன்ன போது சீட்டு எடுக்காத கிளி என் பெயரை சொன்னதும் ஓடிவந்து எடுத்ததே எப்படி வியப்பில் இருந்தேன். அதன் பிறகு அவர் ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு போகிறார் என்று மறந்து விட்டோம்... திருமணம் ஆகி நான்கு வருடமாக குழந்தை இல்லாமல் இருந்த அந்த பெண் இப்போது கர்ப்பமாக இருக்கிறது.. பரவாயில்லையே அந்த கிளி ஜோசியம் சொன்னது நடந்துவிட்டதே... என்று அவரை இன்னொரு முறை பார்க்கலாம் என்று அதே இடத்தில் போய் அடிக்கடி தேடுகிறேன் என் கண்ணில் அவர் சிக்கவே இல்லை.. இதை நம்புவதா அல்லது நம்பாமல் இருப்பதா என்றே தெரியவில்லை. காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா என்று தெரியவில்லை... ஆக மொத்ததில் ஒரு நல்லது நடந்து இருக்கிறது அது வரை சந்தோஷமே...


3 comments:

  1. எல்லாரும் பொய்யர்கள் இல்ல

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அன்று அதை நான் உணர்ந்தேன்

      Delete