Thursday, 25 May 2017

முதுமையும் வறுமையும்

            நண்பியின் ஊரில் திருவிழா நான் வந்தே ஆகவேண்டும் என்று கட்டாய அழைப்பு வேறு வழியின்றி சென்றிருந்தேன்... அதாவது இந்த அன்பு என்ற பெயரில் கொல்வார்கள் தெரியுமா அந்த மாதிரி. என் நண்பியின் வீட்டிற்குள் சென்றேன் அவர் வாயெல்லாம் பல்லாக வந்து என்னை "குட்டிமா...." என கைகளைப் பிடித்து வரவேற்றார். என்னை குட்டிமா என்றுதான் அன்போடு அழைப்பார்.  அங்கே இருந்த கட்டிலில் அமர வைத்து தண்ணீர் கொடுத்து உபசரித்தார். அவரின் பிள்ளைகள் சித்தி... எப்படி இருக்கின்றீர்கள் என்று ஓடி வந்து விசாரித்தார்கள்.. அப்போது எனது அருகில் ஒரு அம்மா வாட்ட சாட்டமாக கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். ஒரு தெனாவெட்டு,  திமிர் என்பார்களே அந்த மாதிரி.  எனது நண்பி அவரை கைட்டி "இவங்க தான் பாக்யத்தம்மாள் ... நீ இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு இருப்பே இவங்க நம்ம ஊர்தான் இப்ப திருச்சியில் வேலை செய்யுறாங்க இரண்டு பையன் ஒரு மகள் "என்று அறிமுகம் செய்தார். அந்தம்மா என்னைப் பார்த்து சாதாரணமா ஒரு புன்னை செய்தார் ஏனோ அவரின் புன்னகையில் ஒரு அலட்சியம் தெரிந்தது. அப்படியே என்னைப் பற்றி யும் சொன்னார் என் நண்பி "நீங்களும் ரேடியோவில் இவபேரை கேட்டு இருப்பிங்க இவளும் கவர்மென்ட் ஆபிஸ்லதான் வொர்க் பண்றா.. ஆனால் கல்யாணமே வேண்டாம்னு சொல்றா நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்திட்டேன் கேட்கவே மாட்டேங்கிறா.. நீங்களாவது இவளுக்கு புத்தி சொல்லுங்கம்மா " என்று சிரித்தப்படி என்னைப்பார்த்தார்.


           நான் எனது நண்பியை பார்த்து முறைத்தேன் இத அவங்க கேட்டாங்களா உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று கண்ணை உருட்டிப் பார்த்தேன். என்னை அந்தம்மாவிடம் கோர்த்து விட்டுவிட்டு நைசாக நழுவினார் எனது நண்பி.

            அந்தம்மா என்னைப் பார்த்து  "ஏம்மா.. கல்யாணம் வேண்டாம்னு சொல்றே.. ஏதாவது உனக்கு பிரச்சினை இருக்கா அதனால்தான் வேண்டாம்னு சொல்றீயா எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு" என்றார் என்னவோ பெரிய டாக்டர் மாதிரி..

               நான் செம கடுப்பில் பதில் சொன்னேன். "எனக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்லை எனக்கு பிடிக்கல அதான் வேண்டாம்னு சொல்றேன்" என்றேன்.

            "இந்த உலகத்தில் யாரும் தனியா இருக்க முடியாதும்மா... ஆண் துணையில்லாமல் வாழுறது ரொம்ப கஷ்டம் என்னதான் நீ படிச்சிருந்தாலும் வேலை பார்த்தாலும் கல்யாணம் பண்ணிதான் ஆகணும். "என்றார்.

          "ஏன் அப்படி சொல்றீங்க அது அவரவர் மனச பொறுத்தது... ஒரு ஆணை சார்ந்து வாழவேண்டி அவசியம் எனக்கில்லை என்னால் முடியும்.. நீங்க கல்யாணம் பண்ணி என்ன சாதித்து விட்டீர்கள் ஒன்றுமில்லையே எல்லாரும் செய்யுற ஒன்னதான் நீங்களும் செய்திருக்கிறீங்க .... நான் அதை செய்ய விரும்பல நான் கொஞ்சம் வித்தியாசம்.. அது உங்களுக்கு சொன்னா புரியாது இந்த பேச்சை இப்படியே விட்டு விடுங்கள்" என்றேன் கடுமையாக..

           அவர் அதன் பிறகு ஒன்றும் பேசவில்லை.. மதியம் சாப்பாடு ஆரம்பித்தது. திருவிழாவிற்கு நிறைய பேர் வந்திருந்தார் கூட்டம் அதிகம் .. என் நண்பி "குட்டிம்மா நீ போய் இலையில் உட்கார் நீங்களும் போங்கம்மா... " என்றார்.

       "அந்தம்மா... பர்ஸ்ட் ஆம்புள புள்ள உட்காரட்டும்  தம்பியை உட்காரச்சொல்லும்மா"என்றது..

        எனக்கு சட்டென்று கோபம் வந்தது "அதென்ன ஆண் பெண் என்று பிரிச்சு பேசுறீங்க எல்லாம் ஒன்னுதான் சாப்பிடுவதில் யார் சாப்பிட்டால் என்னா" என்றேன்.

          எனது நண்பியோ என் கையை பிடித்து அழுத்துகிறார் "வேண்டாம் குட்டிமா.. அவங்க வயசுல பெரியவங்க அந்தகாலத்து மனுசி அப்படிதான் சொல்வாங்க கண்டுகாத விடு" என்று கெஞ்சுகிறார்.

           நான் அந்தம்மாவிடம் கோவத்தை அடிக்கி "உங்க வீட்டுல தினமும் இப்படிதானா..." என்றேன்.

          அந்தம்மா "ஆமா எங்க வீட்டுல அப்படிதான் அவங்க எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் பொம்பளைங்க நாங்க சாப்பிடுவோம் "என்றது. அப்போதே புரிந்து கொண்டேன் அது ஆண் வர்க்கத்தை உயர்த்தி பேசுகின்ற ஆள் என்று. அதன் பிறகு ஒவ்வொரு விஷயத்திற்கும் எனக்கும் அதுக்கும் கிழக்கும் மேற்குமாக இருந்தது. என் நண்பியிடம் சொன்னேன் அடுத்த முறை இந்தம்மா வந்தால் என்னை திருவிழாவிற்கு கூப்பிடாதிங்க நான் கண்டிப்பா வரமாட்டேன்..." என்றேன் கோபமாக...

     "அப்படி கோபமா பார்க்காத குட்டிம்மா... எனக்கு பயமா இருக்கு... நீ கோபப்படும்போது உன் மூஞ்சிய கண்ணாடில பாரு கண்ணு ரெண்டும் வெளியில வர்றமாதிரி  பெரிசா இருக்கு.. " என்றார்.

           நான் "அப்படி பெருசாவா இருக்கு" என்றேன் சிரித்தப்படி. சில நேரங்களில் நான் கோபமாக சத்தம் போடும்போது என் நண்பிக்கு உடம்பை அப்படியே தூக்கிப்போடும் நானே அதை கவனித்திருக்கிறேன்.

           அதன் பிறகு ஒருவழியா திருவிழாவை முடித்துவிட்டு அவரவர் வீட்டுக்கு போயாச்சு... வருடங்களும் பல கடந்தாச்சு.. இப்போது என் நண்பியிடம் போன் பேசினேன். என் நண்பி சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ச்சியானேன். ஏன் தெரியுமா..? எனக்குப் பிடிக்காத அந்தம்மா... கம்பீரமாக இருந்த அந்தம்மா... ஆண்பிள்ளைக்கு ஆதரவாக பேசிய அந்தம்மா... இப்போது மதுரையில் ஒரு ஹோமில் இருப்பதாக சொன்னார். அப்போதே நினைத்தேன் இந்தம்மா இப்படி தான் வருமென்று. கடைசி காலத்தில் மகன் மகன் என்று மகனுக்கே செய்து கொண்டு இருந்தார்
 ரிடையர் ஆகும் போது கொஞ்சம் பணம் கிடைத்திருக்கிறது அதோடு சேர்த்து கையில் இருந்த சில லட்சங்களை வைத்து இரணடு மகன்களுக்கும் ஆளுக்கொரு வீட்டை கட்டிக்கொடுத்தார். மகளுக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்தார் கையில் இருந்த சேமிப்பு அத்தனையும் கரைந்தது.  மூன்று பிள்ளைகளும்  கவனிக்கவில்லை பிள்ளைகளுக்கு மேலும் தொந்தரவா இருக்க கூடாதுன்னு ஹோமில் போய் இருப்பதா சொன்னார். ஆண் பிள்ளை ஆண் பிள்ளை என்று போர்கொடி தூக்கினாரே அவரை ஒரு ஆண் பிள்ளை கூடவா சீண்டவில்லை.. என்று மனசுக்குள் கேள்வி எழும்பியது.

          கேட்ட எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.. பிள்ளைகள் இருந்தும் எந்த ஒரு புண்ணியமும் இல்லை பிள்ளைகள் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என யோசிக்க வைத்தது.. என்னதான் ஓடி ஓடி சம்பாதிச்சு பிள்ளைகள் கிட்ட கொடுத்து கடைசி காலத்தில் நம்மை பார்த்துக்கும்னு நினைச்சா அது வெறும் கனவாக போயிறும். தாயும் பிள்ளையுமா இருந்தாலும் வாயிம் வயிறும் வேற வேறதானே.. கடைசி காலத்தில் நமக்குன்னு சில காசு பணத்தை சேர்த்து வைச்சுக்கனும் இல்லன்னா எங்கேயாவது அனாதையா செத்து கிடக்கிற சூழ்நிலை வரலாம் யார் கண்டார்கள்.

               இந்த காலத்தில் காசு இருந்தால்தான் பெத்த புள்ளையே மதிக்குது இல்லன்னா மிதிக்குது... ஒவ்வொரு பெரியவர்களும் தனக்கு ஐம்பது வயசு வந்துட்டாளே தனக்குன்னு கொஞ்சம் பணத்தை சேமிக்க ஆரம்பிக்கனும் அப்பதான் தனக்கு உடம்பு சரியில்லன்னா கூட யாரையாவது வைத்து நம்ம உடம்பை கவனிக்க முடியும்... சில பேர் அதை யோசிக்கிறாங்களே இல்லை. ஓடி ஓடி சம்பாதிக்கிறாங்க இஷ்டத்து கையில் இருக்கிற பணத்தை செலவு செய்யுறாங்க... பின்னால் நாம் எப்படி இருக்கப்போகிறோம் என்று சிந்திப்பதே இல்லை..

             தினமும் நான் சாலையில் செல்லும் போது வழி எங்கும் யாராவது பிளாட்பாரத்தில் படுத்து இருக்கிறார்கள் இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்... யார் யாரிடமோ கையேந்தி கிடக்கிறார்களே என்று நான் நிறைய வருந்துவதுண்டு.. அப்படியே என்னால் முடிந்த உதவிகளையும் செய்வதும் உண்டு.. இதையெல்லாம் பார்க்கும் போது முதுமை என்பது நாம் செய்கின்ற நல்வினை, தீவினைகளுக்கு கொடுக்கப்படுகின்ற கூலியோ என்று நினைக்க தோன்றுகிறது.

            என் மனதில் அடிக்கடி தோணுகின்ற ஒரு விஷயம் இவர்கள் யாரோ எவரோ தெரியாது ஏதோ உதவி செய்கிறோம் வருந்துகிறோம் பிறகு மறந்து விடுகிறோம். ஆனால் நமக்கு வேண்டியவர்களுக்கு அல்லது நமக்குத் தெரிந்தவர்களுக்கு உறவுகளுக்கு இந்நிலை வந்தால் நாம் என்ன செய்ய போகிறோம் நம்மால் என்ன செய்ய முடியும்... என யோசிக்கும் போதே என் காதோரத்தில் ஏதோடு சுடுகிறது தொட்டு பார்க்கிறேன் அது என் கண்களில் இருந்து வந்த கண்ணீர்தான். எதிர்காலத்தை பற்றிய உணர்வு கண்ணீராக என்னை சுடுகிறது போலும்.

6 comments:

 1. இப்படிப்பட்ட சூழலில் வாழ்பவர்களைப்
  பார்த்து நீங்கள் சொல்வது போல
  நாமு கொஞ்சம்
  சுதாரிப்பாகத்தான் இருக்கவேண்டும்
  இல்லையெனில் சிரமம்தான்
  பயனுள்ள பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

   Delete
 2. நல்ல பதிவு, சமயங்களில் நீங்கள் சொல்வது போல களங்கமற்ற வினா (விடை தெரிந்து கொள்ளும் நோக்கொடு கேட்கககப்படும் கேள்வி) மனத்தில் தோன்றி வாட்டி எடுத்து மறைந்து விடும். நமது வேலை, கடமை இவற்றை தாண்டி ஒரு குறிக்கோள் வைத்துக்கொண்டு அதற்காக உழைத்தால் முதுமை கூட சுகம் தான்.

  ReplyDelete
  Replies
  1. சில நேரங்களில் அது மனதை காயப்படுத்தும் என்பதை சிலர் உணர்வதே இல்லை... நன்றி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

   Delete
 3. உண்மை. முதுமையில் வறுமை என்பது கொடிய சாபமே.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சில நேரங்களில் சில விஷயங்கள் நம்மை பாதிக்கவே செய்கிறது

   Delete