Friday, 19 May 2017

உனதன்பில் நான் தொலைந்தேன்

நட்பு என்ற ஒன்று இல்லை என்றால் இந்த உலகத்தில் யாரும் மன நிம்மதியோடு இருக்க முடியாது.  வீட்டில் பிரச்சினை,  அலுவலகத்தில் பிரச்சினை,  செல்லும் இடங்களில் பிரச்சினை என்றால் நாம் ஆறுதல் தேடி செல்கின்ற ஒரு இடம் நட்பு. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கையோடு வசிப்பவரும் சரி. கணவன்,  குழந்தைகள் என்று வசிப்பவர்களும் சரி தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் நாடி செல்வது நட்பிடம் மட்டுமே...



மனசு சரியில்லை என்றால் ஒன்று கோவிலுக்கு போகிறோம் இல்லை நட்பிடம் செல்கிறோம்.  ஆக நட்பும் ஒருவகையில் கடவுள் போன்றுதான் இல்லையா?. இவையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று நினைக்கின்றீர்களா? சொல்கிறேன் படித்துக்கொண்டே வாருங்கள். கடவுள் எனக்கு எதை கொடுத்தாரோ கொடுக்கவில்லையோ ஆனால் நல்ல நட்புக்களை எனக்கு கொடுத்திருக்கிறார். ஒருவேளை நான் உன்னுடன் எப்போதும் கூட இருக்க முடியாது அதனால் நட்பென்ற பெயரில் நான் உன்னுடன் இருக்கிறேன் என்று மறை முகமாக எனக்கு உணர்த்துகிறாரோ தெரியவில்லை. சின்ன வயது முதல் இப்ப வரைக்கு அனேக இடங்களில் எனக்கு நட்புதான் துணையாக வந்திருக்கிறது அதை எந்த காலத்திலும் மறக்க முடியாது.

சமீபத்தில் என் நண்பியின் வீட்டிற்கு சென்றேன். 14 வருட பழக்கம் எனக்காக கவலைப்படும் ஒரு இதயம், எனக்காக அழும் ஒரு ஜீவன் என் அம்மாவிற்கு பிறகு எனை நினைத்து அக்கறையோடு உருகும் ஒரு உறவு இவர்தான். (ஆனால் என் மனதில் இவருக்கு இரண்டாம் இடமே கொடுத்துள்ளேன் ஏனென்று கேட்கின்றீர்களா? நாம் எப்போதுமே நம்மிடம் அன்பாக இருப்பவர்களை விட்டு விடுவோம்)  நீண்ட நாட்களாகவே என்னை பார்க்க வேண்டும், வீட்டுக்கு வந்து எத்தனை வருடங்களாச்சு என்று ஒரே புலம்பல் தினமும் போனில் பேசிக்கொள்வோம். எனக்கு அவரின் வீட்டிற்கு செல்ல அத்தனை விருப்பம் இல்லை ஏனெனில் சூழ்நிலைக்கு தகுந்தார்போல் நாமும் மாறிக்கொள்ள வேண்டும். அவர்கள் வீட்டில் அவர் மட்டுமே நமக்கு வேண்டியவர் மற்றவர்கள் எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதால் அதனால் நான் கொஞ்சம் விலகியே இருப்பது வழக்கம்.  சரி சென்று வரலாம் என்று நினைத்தேன் முன்கூட்டியே சொல்லவில்லை பஸ்சில் ஏறி அமர்ந்த பிறகு வந்து கொண்டு இருக்கிறேன் என்ற தகவலை மட்டும்தான் சொன்னேன். முதலில் அவர் நம்பவில்லை நீண்ட நேர விவாதத்திற்கு பிறகே நம்பினார்.

நான் வீட்டிற்கு சென்ற பிறகு என்னை வரவேற்று தண்ணீர் கொடுத்தார்கள்... சில நல விசாரிப்புகளுக்கு பிறகு சரி நான் கிளம்புகிறேன் என்றேன். ஏய்... உனக்காகதான் நாட்டுக்கோழி குழம்பு வைக்கிறேன் சாப்பிட்டு போ... என்றார். பால் பாயசம் நீ தான் நல்லா வைப்ப வைக்கிறீயா... என்று கேட்கவும் செய்தார் என்னால் எதுவும் முடியாது நான் போறேன்னு ஒத்த காலில் நின்றேன். சரி ஆத்தா நானே வைக்கிறேன் ஏதாவது குறை சொன்னே பார்த்துக்கோ என்றார். பிறகு வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது சாப்பிட்ட உடனே போகிறேன் என்றேன். அவர் உடனே அறைக்குள் சென்றார். ஒரு பேக்கில் புடவை, சோப்பு, சாக்லெட், செண்ட், கோல்டு வாட்ச் இவை அத்தனையும் வைத்து என் கையில் திணித்து இது உனக்கு பிறந்தநாள் பரிசு என்றார். பஸ் ஸ்டாண்ட் வரை வந்து கணவன் மனைவி இருவரும் வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

ஆனால் எனக்கு திருப்தியாகவே இல்லை... எனக்கு அன்புதான் முக்கியமே தவிர பொருள் அல்ல, பஸ் ஸ்டாண்டில் நிற்கும்போது ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு வந்தேன் நீங்க முன்பு போல் இல்லை நிறைய மாற்றம் தெரியுது... எனக்கு எல்லாம் தெரியும் . என் கூட சரியா பேசவே இல்லை, நான் இதை வாங்கவா வந்தேன் என்னை கூப்பிட்டு வைச்சு அசிங்கப்படுத்திட்டிங்க இல்லை.. என்று ஒரு பார்வை பார்த்து விட்டு வந்தேன். என்னைப் பொறுத்தவரை பொருட்கள் கொடுத்து வாங்குவதில்லை... அன்பு. அது மனதில் இருந்து வரவேண்டும். போனில் ஆயிரம் விஷயம் பேசுவோம் நேரில் ஒன்றுமே பேசாமல் வந்ததது எனக்கு என்னவோ போலிருந்தது... மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது... இனிமே நான் இங்கே வருவேன்னு கனவில் கூட நினைக்காதிங்க என்று கூட சொல்லிவிட்டு வந்தேன். வீட்டிற்கு வந்த பிறகு ஒரு போன் கூட செய்யவில்லை அவர் போன் செய்து கொண்டே இருந்தார் நான் எடுக்கவே இல்லை.. அவர்கள் வீட்டில் இருந்து ஒவ்வொரு நம்பரில் இருந்தும் போன் வந்து கொண்டே இருந்தது. கடைசியில் அம்மாவுக்கு போன் பண்ணி பேச சொல்லுங்கம்மா என்று கெஞ்சிய பிறகு மூன்று நாளைக்கு பிறகு நான் அவரோடு பேசினேன். நான் அவரை காயப்படுத்தியதில் ஒரு சந்தோஷம் எனக்கு ஆனால் அது தவறன எனக்கு உணர்த்தியது ஒரு சம்பவம்.


இப்ப சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து செல்லும் போது ஒரு காகம் என் தலையில் வந்து அமர்ந்தது. எனக்கு விவரம் தெரிந்து ஒரு நாளும் இப்படி இல்லை தெரிந்தவர்கள் சொன்னார்கள் தலை குளிச்சுட்டு கோவிலுக்கு போ, ரோட்டில் போகும்போது கவனமா போ என்றார்கள். நான் சும்மா இருக்க முடியாமல் காகம் தலையில் உட்கார்ந்தால் என்ன பலன் என்று தேடி பார்த்தேன். அதில் இப்படி குறிப்பிட்டு இருந்தது.

ஆன்மிகம்:

மரணம் ஏற்படப்போவதை உணர பதினோரு அறிகுறிகளை குறிப்பிடுகிறது சிவ புராணம். ம்.

1.  வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள்    ஒரு சேர செயலிழத்தல்.

2. திடீரென உடல் வெள்ளை  அல்லது  மஞ்சளாக நிறத்துக்கு மாறத்துவங்குவது  அல்லது    உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தோன்றுவது.

3. தொண்டை மற்றும் நாக்கு  விடாமல் வறட்சி அடைந்துக் கொண்டே இருப்பது.

4.   அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக இடது கை நடுங்கிக் கொண்டே இருப்பது.

5. கருப்பு அல்லது சிவப்பு நிற வட்டத்தை நிலா மற்றும் சூரியனில் பார்க்க நேர்ந்தால்

6. நிலா மற்றும் நட்சத்திரங்களை பார்க்க முடியவில்லை  என்றால் அல்லது  மிக மந்தமாக தெரிந்தால்

1

7. திடீரென ஒருவரை ஈக்கள் சூழ்ந்துகொண்டால்..

8. கருடன், காகம், கழுகு / புறா ஒருவரது தலையில் வந்து அமர்ந்தால்..

9. தனது நிழலில் தனது தலைப் பகுதியை காண முடியவில்லை என்றால்

10. எதையும் சரியாக பார்க்க முடியாமல் போனால்… குறிப்பாக  நெருப்பை தெளிவாக பார்க்க முடியாமல் போனால்

11. எண்ணெய், தண்ணீர் போன்றவறில் ஒருவரது பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால்..!

மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் பதினைந்து நாட்களில் இருந்து  ஆறு மாதங்களுக்குள் மரணம் ஏற்படும் என்கிறது சிவபுராணம்.

நான் உடனே இதை என் நண்பியிடம் சொன்னேன். சொல்லிவிட்டு நான் இன்னும் கொஞ்சநாள் தான் இருக்கப்போறேன் அப்டி இப்டின்னு சொல்லி வைத்தேன். கேட்டதும் அவர் ஒரே அழுகை உடனே ஜோசியரிடம் ஓடி போய் என் ஜாதகத்தைப் பார்த்து அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஜோசியரையே போனில் சொல்ல வைத்தார். ஏனெனில் அவர் சொன்னால் நான் நம்ப மாட்டேன் செய்ய மாட்டேன் என்று ஜோசியரை வைத்து சொல்ல வைத்தார். இப்ப வரைக்கும் போன் பேசினால் கோவிலுக்கு போனியா இதை செய்தாயா..? அதை செய்தாயா என்று கேட்பது மட்டுமல்லாமல் தினமும் ஒரே அழுகை வேறு. அம்மாவுக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாது இப்ப அவரிடமும் இதை சொல்லி அம்மாவும் ஒரே அழுகை... இதன் மூலம் நான் உணர்ந்து கொண்டது. நான் இறக்கும் போது எனக்காக யார் அழுவார்கள் என்று எனக்குத் தெரியாது ஆனால் நான் இருக்கும் போதே இவர்கள் எனக்காக அழுவதை நான் கண்டுவிட்டேன். இதுவே எனக்கு போதும் அன்று அவரோடு பேசாமல் இருந்து காயப்படுத்தியதற்காக இப்போது வருந்துகிறேன். நாம் சிலரிடம் அன்பை கொட்டி கொட்டி பேசுவோம் ஆனால் அவர்கள் நம்மை கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஆனால் நாம் யாரை அதிகம் நினைக்காமல் தூர வைத்திருக்கின்றோமோ அவர்தான் நம்மீது உண்மையான அன்பு வைத்திருக்கிறார். இந்த காகம் என் தலையில் நல்லதிற்கு உட்கார்ந்துச்சோ கெட்டதிற்கு உட்கார்ந்துச்சோ ஆனால் உண்மையான அன்பு என்றால் என்னவென்று எனக்கு உணர வைத்திருக்கிறது. உண்மையில் அந்த காகத்திற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். கஷ்டமென்று ஒன்று வரும்போதுதான் உண்மையான நண்பனை அடையாளம் காண முடியும் என்று சொல்வார்கள் அதை நான் இப்போது உணர்ந்து கொண்டேன்.

எனது பிறந்த நாளில் குடும்பத்தோடு எனது எனது இல்லம் வந்து போவார்கள் இப்போது சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் சில வருடங்களாக வருவதில்லை. பரிசு பொருட்கள் மட்டும் வரும் அப்போதும் அவருக்கு எனது திட்டு மட்டுமே பரிசாக கிடைக்கும்.  இப்போதும் எனது பிறந்தநாள் வருவதற்கு முன்பே தந்துவிட்டார் பதிலுக்கு அவருக்கு கஷ்டத்தை மட்டுமே கொடுத்தேன். இப்போது நினைத்து பார்க்கையில் உண்மையில் வருந்துகிறேன் அதன் பொருட்டை இதை இங்கே பதிவு செய்கிறேன்.

என்றைக்கும் தூரத்து பச்சை பார்க்கதான் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் ஆனால் எதுக்கும் உதவாதுன்னு இப்போது புரிந்து கொண்டேன். எப்போதும் நமக்கு அருகில் இருக்கும் போது அதன் அருமை தெரியாது அது முற்றிலும் உண்மை.

2 comments:

  1. உங்கள் கருத்து ஒரு வகையில்தான் சரி

    வராதவர்கள் வருகையில் அதீத அன்பின் காரணமாக
    மிக நன்றாக கவனிக்க வேண்டுமே என்கிற
    ஆதங்கத்தில் வேலைகளை இழுத்துப்போட்டுக்
    கொள்வதால் பேசமுடியாமல் இருக்கலாம்
    இதையும் கருத்தில் கொள்ளலாம்

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதும் உண்மைதான் இருப்பினும் முன்பைவிட என ஒப்பிடும் போது நமக்கு ஒரு மாற்றம் தெரிகிறது

      Delete