Tuesday, 28 February 2017

விருந்து ம ரு ந்து
        இந்த உலகத்திலே மனசு நிறைவதும் வயிறு நிறைவதும் சாப்பாட்டில் மட்டும் தாங்க முடியும். அந்த சாப்பாடு ருசியா இருந்தால் நமக்கு தேவாமிர்தம் அதுவே ருசியில்லாமல் இருந்தால் ஆழகால விஷம் தாங்க.... சில பேர் பசிக்காக சாப்பிடுவாங்க இருக்காங்க நானெல்லாம் ருசிக்காக சாப்பிடுற ஆளுங்க. நான் நல்லா சமைப்பேன்னு சொல்ல மாட்டேன் ஆனால் நான் சமைச்சதே நல்லா இல்லன்னா சாப்பிட மாட்டேன்...இந்த மாதிரி ஆளு யார் வீட்டு்க்கும் சாப்பிட போனால் என்னாகும். நீங்க நினைப்பது புரிகிறது, அதான் ... அதைப் பற்றிதான் இப்ப சொல்ல வர்றேன். அவரப்படமா படிங்க. என் கூட வேலை செய்யுறவங்க வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு இருந்தாங்க நான் அப்போ வர்றேன்னு ஏதோ ஞாபகத்தில் சொல்லிவிட்டேன். அவங்களும் நம்பிகொண்டு எனக்கும் சேர்த்து சமைத்துவிட்டு சாப்பிட அழைத்தார்கள் அய்யய்யோ .... நான் சாப்பாடு கொண்டு வந்துவிட்டேனே இன்னொரு நாள் வரட்டுமா என்றேன் கெஞ்சலாக... அவருக்கோ செம கோவம்.

நான் அன்று சும்மா தலையசைத்து விட்டேன் இன்று மாட்டிக்கொண்டேனே.. என்று மனதிற்குள் பெரும் அவஸ்த்தையாக போய்விட்டது.. அவரோ முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பேசாமல் இருக்கிறார் எப்படி சமாதானம் செய்வது ஒன்று புரியவில்லை ஸாரி சொன்னால் ம்கூம்.... ஒன்னும் வொர்க்அவுட் ஆகல, சரி வீட்டுக்குதானே வரல நீங்க போய் சாப்பிட்டுவிட்டு எடுத்துட்டு வாங்கன்னு சொன்னேன். அவரும் சரி என்று சொல்லிவிட்டார்.

ஆனால் மனதிற்குள் எப்படி சாப்பிடுவது என்று பயத்தோடே இருக்கிறேன் ஏன்னா அங்க சமையல் எப்படி இருக்குமென்று எனக்கு ஏற்கனவே தெரியும். கொஞ்ச நேரத்திற்கு பிறகு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தார்கள். நான் தயக்கத்தோடு கொஞ்ச நேரத்திற்கு பிறகு சாப்பிடட்டுமா என்று கெஞ்சலாக.. அவரும் ம்ம்... என்றார் பிறகு எப்ப சாப்பிட போறீங்க மணியாயிடுத்து என்றார்.. நான் மரணபயத்தோடு போய் அவற்றை எடுத்து வைத்தேன் சாதம், அவியல், பொறியல், மோர் குழம்பு, அப்பளம், பாயசம் எல்லாம் இருந்தது. இவற்றை எப்படி சாப்பிட போகிறேன் என நினைக்கையில் கடவுள் மாதிரி ஒரு அக்கா உள்ளே வந்தாங்க பாருங்க... என் சந்தோஷத்திற்கு அளவே இல்ல, அக்கா.. இங்க வாங்க உங்களுக்கா சாப்பாடு கொண்டு வந்திருக்காங்க பாருங்க நானே உங்களை கூப்பிட நினைத்தேன் நீங்களாகவே வந்து விட்டீர்கள் என்றேன்.

அவரும் வேறு வழியில்லாமல் வந்து அமர்ந்து சாப்பிட்டார்... நான் சாப்பிட முடியாமல் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். அந்த அக்கா... இது மோர் குழம்பா... கொஞ்சம் புளிப்பா இருக்கு ஆனால் நல்லா இருக்கு, இது அவியலா சூப்பரா இருக்கே, இது பொறியலா இது அதைவிட சூப்பர், பாயாசம் ஆஹா அற்புதம் இதை எப்படி செஞ்சீங்க ன்னு வேற டிப்ஸ் கேக்குறாங்க.. நான் ஒன்னுமே சொல்லாம அவர்களையே பார்க்கிறேன்... இவர் என்ன இப்படி சொல்றார் அப்ப நமக்குத்தான் நாக்கு சரியில்லையோ என்று எனக்கு சந்தேகம்.. .

அப்புறம் ஒருவழியா சாப்பிட்டு முடித்துவிட்டு தேங்ஸ்சும் சொல்லியாச்சு... கொஞ்ச நாள் போனபிறகு என் கூட சாப்பிட்ட அக்கா வந்து என்னை ஏன் இப்படி... கோர்த்து விட்டே... நான் சும்மா வந்து எட்டி பார்த்தேன் அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையான்னு கேட்டாங்க பாருங்க...  உடனே நான் சொன்னேன் அக்கா... அன்னைக்கு எனக்கு நீங்க தெய்வம் அக்கா தெய்வம் ... நான் சாப்பிட போன நேரத்தில் கடவுள் மாதிரி வந்து காப்பாதுனீங்க பாருங்க இல்லன்னா அதை முழுசா நானே சாப்பிடுற மாதிரி ஆகியிருக்குமே... என்றேன்.

நீங்க ரொம்ப ரசிச்சு சாப்பிட்டிங்க இப்ப மாட்டிவிட்டதா சொல்றீங்க என்றேன். வேற வழி அவங்க மனசு கஷ்டபடுமே அதான் அப்படிச்சொன்னேன் என்றார் அந்த அக்கா... இதை அடிக்கடி சொல்லி என்னை முறைத்து பார்ப்பார் அந்த அக்கா... என்னால் வீட்டுக்கு போய் சாப்பிட முடியல தெரியுமான்னு சொல்லும் போது அவங்க முகத்தை பார்க்கனுமே.... ஹா...ஹா.... இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருது... அவர் சாப்பாட்டில் குறையில்லை அங்கே அன்பு மட்டுமே பிரதானம் இருப்பினும் ருசியா சாப்பிடுற ஆளுங்க எங்கே போனாலும் கொஞ்சம் கஷ்டம் என்பதற்காக சொல்கிறேன்... இதே போன்று இன்னொரு சம்பவமும் உண்டு முதல் முறை ரொம்ப கஷ்டப்பட்டேன். அடுத்தடுத்து போகும் போது நானே சமைக்கத்தொடங்கி விட்டேன் வேற வழி... ஹா..ஹா...

இப்படிதான் சில சந்தர்ப்பங்களில் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது..

No comments:

Post a Comment