Sunday, 12 February 2017

அடைக்கோழி

                          பகுதி (2)                                                                                                                                                       - தொடர்ச்சி

             இந்த மாதிரி பெண்களை ஏன் நான் அடிக்கடி சந்திக்கிறேன் என்று தெரியவில்லை. பிச்சை எடுக்கும் பாட்டி முதல் பேருந்தில் பயணம் செய்யும் பெண்ணுவரை சும்மா பார்த்து சிரித்தால் போதும் அப்படியே ஆதி முதல் அந்தம் வரை என்னிடம் கொட்டி விடுகிறார்கள். நான் இவர்களிடம் கேட்டேனா இல்லையே பிறகு ஏன் என்னிடம் வந்து சொல்கிறார்கள் அவர்களைப்பார்த்து சிரித்தது ஒரு குற்றமா...? பஸ் பயணத்தில் இது போன்று நிறைய அனுபவம் உண்டு. எங்க ஆபிஸ்ல அறைய சுத்தம் செய்கிற ஒரு அம்மா இருக்கிறார்கள் நான் அவர்களை அக்கா என்றுதான் அழைப்பேன். ஒரு நாள் யாரும் இல்லாதபோது ரொம்ப நாளா உங்கிட்ட மனசு விட்டு பேசனும்னு தோனுச்சு பேசலாமா என்றார். நானும் சொல்லுங்கள் என்றேன். அவர் சிறு பிள்ளை முதல் திருமணம் முடித்து,  குழந்தை பெற்று அதை கஷ்டப்பட்டு படிக்க வைத்து அந்த மகளுக்கும் திருமணம் முடித்து குழந்தை பிறந்தது வரை ஒன்று விடாமல் சொன்னார். அதாவது ஒரு வேளை சோற்றுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் இப்ப எப்படி இருக்கிறேன் என்று அவர் மன ஆதங்கத்தை கொட்டினார். மேலும் சொன்னார் என்னுடைய கணவர் வேலை செய்கிறார் அதை வைத்துதான் என் பிள்ளைகளை பொறியியல் கல்லூரி வரை படிக்க வைத்து பதினைந்து சவரன் நகைப்போட்டு கல்யாணம் முடிச்சேன்னு நினைப்பாங்க ஆனால் அதுதான் இல்லை. என்னுடைய குழந்தைகள் பிறந்த பிறகு அவர் வேலைக்கு போவதையே விட்டுவிட்டார். வேற வழியில்லாமல் அப்பதான் முதல் முறையா வெளி உலகத்தை பார்க்கிறேன் குழந்தைக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட அந்த ஆளால் முடியாத போது நாம் வீட்டில் உட்கார்ந்து எந்த பயனும் இல்லை என்று ஒரு கம்பெனியில் கூட்டுற வேலையில் சேர்ந்து என் பிள்ளைகளை படிக்க வைத்தேன் நல்ல முறையில் திருமணமும் செய்து வைத்தேன். இதுவரை யாராவது உங்க வீட்டுக்காரர் என்ன செய்கிறார் என்று கேட்டால் அவர் மெக்கானிக்கா இருக்கிறார் என்று சொல்கிறேன்.  அவர் மரியாதை இதுவரை காப்பாற்றி வருகிறேன். இதுவரைக்கும் அது யாருக்குமே தெரியாது ஆனால் உங்களை பார்த்ததும் உண்மையை சொல்லனும்னு என் மனசுக்கு தோணுச்சு இத்தனை வருடங்களாக அழுத்திய மனபாரம் தீரந்தது போல் இருக்குன்னு கண்ணீர் சிந்துகிறார். நான் திகைத்து போய் உட்கார்ந்து இருக்கிறேன் எனக்கும் துக்கம் தொண்டையயை அடைக்கிறது.



         ஸாரி மேடம் என்னுடைய கதையை சொல்லி உங்க மனச கஷ்டப்படுத்திட்டேனா....? என்னவோ தெரியல இதுவரைக்கும் நான் யாரிடமும் இப்படி பேசியது இல்லை ஆனால் உங்களிடம் எந்த உண்மையும் மறைக்க முடியவில்லை. என்றார். நான் சரி அழாதிங்க உங்களை நினைச்சா ரொம்ப பெருமையாவும்,  ஆச்சரியமாவும் இருக்கும் கவலைப்படாதிங்க இனிமேல் உங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. முதலில் அவருக்கு அதை புரிய வையுங்கள் ஒரு ஆண் மகனுக்கு உத்யோகம்தான் புருஷலட்ஷணம் என்று சொல்லுங்கள் என்று ஆறுதல் கூறினேன். அவர் மீண்டும்... மீண்டும் ஸாரி சொன்னார். மனிதனுக்கு மனிதன் ஆறுதல் அவ்வளவுதான் விடுங்கள் என்றேன்.

           இப்படிதான் பல பெண்கள் என்னிடம் அவர்கள் மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைக்கிறார்கள். காரணம் எனக்கு புரியவில்லை இதுவரை என்னிடம் நீ என்ன செய்கிறாய் உன் நிலை என்ன? உனக்கு என்ன என்று யாரும் கேட்டதும் இல்லை நான் சொன்னதும் இல்லை. இப்போது நான் நினைக்கிறேன் கடவுள் என்னிடம் மறைமுகமாக ஏதோ ஒன்றை எனக்கு உணர்த்துகிறார் என்று. சில சமயம் நான் நினைத்தது உண்டு. "பார்த்தாய உலகத்தில் எத்தனை பெண்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் உனக்கு நான் அந்த கஷ்டத்தை  கொடுக்கவில்லை உன்னை எப்படி வைத்திருக்கிறேன் பார். உன்னுடைய கஷ்டமெல்லாம் ஒரு கஷ்டமே இல்லை அதையும் தாண்டி இந்த உலகத்தில் பெண்கள் ஒவ்வொரு நாளும் கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்று கடவுள் எனக்கு உணர்த்துவதாக அறிகிறேன்.

             இல்லையெனில் ஏன் இவர்கள் என்னிடம் அவர் மனக்குமறல்களை கொட்டி தீர்த்து கொள்ள வேண்டும். பஸ்சில் பார்க்கின்ற பெண்மணி கூட ஒன்றுவிடாமல் ஒப்புவிக்கிறது என்னால் ம்...ம்... போட முடியவில்லை. இது இப்போது முடியாது இது இன்னும் தொடரும் என்றே என் மனதிற்கு தோன்றுகிறது. அவர்களுக்கு என்னவோ என்னிடம் கொட்டிவிட்டு சந்தோஷமாக செல்கிறார்கள் நான்தான் அதை மனதில் ஏற்றி அவஸ்த்தை படுகிறேன். கடவுளை நான் நேரில் பார்த்தால் ஒன்றே ஒன்று கேட்பேன் இன்னும் என்னை வைத்து என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாய்...?  கன்னித்தீவு மாதிரி நீண்டு கொண்டே போகுதே எப்ப முடிப்பாய் என்பேன்.

           சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஒரு பிச்சை எடுக்கிற பாட்டிங்க பார்த்தா பாவமா இருக்கேன்னு சொல்லி ஒரு பத்து ரூபாயைய கொடுத்து சாப்பாட்டுக்கு என்ன செய்றீங்க ஏதாவது தேவைன்னா சொல்லுங்க நான் பக்கத்திலதான் இருக்கேன் என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன். அந்த பாட்டி உடனே சாப்பாட்டுக்கு ஒரு கஷ்டமும் இல்ல உங்களமாதிரி ஆளுங்க நிறைய செய்றாங்கன்னு சொல்லிட்டு அதோட கதையை சொல்ல ஆரம்பிச்சது பாருங்க.... என்னால் ம்.... போட முடியவில்லை ஒருவழியா ஆபிஸ்க்கு லேட்டாச்சு பாட்டி நான் வர்றேன்னு சொல்லிவிட்டு வந்து விட்டேனே தவிர அந்த பாட்டியின் கதை என்மனதில் ஏறிக்கொண்டே வந்தது. அவர் இறக்கி வைத்துவிட்டு என்னை கையெடுத்து கும்பிட்டு அனுப்பிவிட்டார்.ஆனால் நான் அதை சுமக்க தொடங்கிவிட்டேன்.

             ஒருவருக்கு காசு பணம் கொடுத்து உதவுவது மட்டும் உதவி அல்ல ஒருவர் மனச்சுமையை குறைக்க உதவுவதும் ஒரு உதவிதான். நினைத்துப்பாருங்கள் அந்த பிச்சைக்கார பாட்டியிடம் யாராவது பேசுவார்களா? காசை போட்டுவிட்டு போய்கொண்டே இருப்பார்கள். நாம் இந்த நிலையில் இருக்கிறோமே, நம் குடும்பத்தார் நம்மை பிளாட்பாரத்தில் விட்டுவிட்டாரே என்று அவர் மனதில் எத்தனை காயங்கள் இருந்திருக்கும்... நாம் தரும் பணத்தில் வயிறு நிறையுங்க ஆனால் மனசு நிறையாது என்று அந்த பாட்டியிடம் பேசிய பிறகுதான் நானே உணர்ந்தேன். அந்த கஷ்டமான சூழ்நிலையிலும் அவர் என்ன சொன்னார் தெரியுமா...? "கடவுள் எனக்கு ஒரு குறையும் வைக்கல உங்களமாதிரி குழந்தைகள் என்னை நல்லா பார்த்துகிறாங்க என் மகன் எந்த கஷ்டமும் இல்லாமல் நல்லா இருக்கனும்னு அவர் கடவுளை வேண்டும்போது நான் திகைத்து நின்றேன். என்ன பாட்டி இந்த நிலைக்கு ஆளாக்கிய உங்க மகன் நல்லா இருக்கனும்னு நினைக்கிறீங்களே என்றேன். அந்த பாட்டி சொன்னுச்சு பாருங்க அவன் என் மகன் இல்லையா...? என்று...


             இவையெல்லாம் மனதில் அசைப்போட்டுக்கொண்டே நடந்தேன்... நடக்கும்போது கால்வலியைவிட மனசுல வலி அதிகமாச்சு... இதற்கெல்லாம் யார் காரணமென்று நீங்க நினைக்கிறீங்க உங்களால் யூகிக்க முடிகிறதா...? திருமணம் முடித்து இரண்டு குழந்தையும் கொடுத்து அது வாழ ஒரு வேளை சாப்பாடு கூட போட முடியாத அந்த ஆண்மகன் ஒருவகையில் ஏமாற்றுகாரன்தானே... நம்பி வந்த மனைவி,  குழந்தைகளை காப்பாற்ற வக்கில்லாத அவனுக்கு எதற்கு திருமணம் எதற்கு குழந்தைகள்?  ஒரு வேளை அந்த பெண் இந்த குழந்தைகளை வளர்க்க அவள் தவறான இடத்திற்கு போயிருந்தால் அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தால் அந்த குழந்தைகள் நிலை என்னவாகி இருக்கும். இது ஒரு ஆண்மகனின் பொறுப்பற்ற செயல் இல்லையா...? இன்றுவரை வேலைக்கு செல்லாமல் மனைவியின் சம்பளத்தில் சாப்பிட்டு இருக்கிறார்கள் இது போன்ற இன்னும் சிலர்.

           அந்த பாட்டியை எடுத்துக்கொள்ளுங்கள் மகன் நல்ல வேலையில் இருக்கிறான் ஆனால் தாயை கோவில் வாசலில் பிச்சை எடுக்க வைத்திருக்கிறான். இவன் என்ன ஆண்மகன் இது யார் குற்றம்... ஒரு பெண் தவறு செய்கிறாள் வழித்தவறி போகிறாள் என்றால் அதற்கு காரணம் ஏதோ ஒரு வகையில் ஒரு ஆணாகதான் இருக்க முடியும். நன்றாக சிந்தித்து பாருங்கள்... உங்களுக்கே புரியும்.

                                                                                   - குரும்பாடு பச்சையை நோக்கி...

4 comments:

  1. ungal anubava payanam ezzhuthup paniyaga thodarattum..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க மேடம்

      Delete
  2. நானும் உங்கள் இனம்தான் மேடம், யாரிடமாவது தொடர்ந்து பேச ஆரம்பித்தால் போதும் இரண்டு நாட்களுக்குள் அவர்கள் கஸ்டங்களை சொல்லி விடுவார்கள், அவர்கள் கஸ்டங்களை கேட்டு நம் நிலமை பரவாயில்லையே என்று நினைத்து கொள்வேன். ஆண்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் மேடம் தேடினால் கிடைப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஓ... ஊருக்கு ஒருத்தர் இருக்கவே செய்கிறார்கள்...

      Delete