அப்துல் கலாம் போல் இனி ஒருவரை நாம் காணமுடியுமா? என்ன ஒரு அற்புதமான மனிதர், எத்தனை எளிமையானவர். கடைக்கோடி மனிதர் வரை தன் சிந்தையில் வைத்த உயர்ந்த மனிதர். இன்றைய அரசியல்வாதிகள் இவரைப் பார்த்து வெட்கப்பட வேண்டும். இவர் பதவியில் இருக்கும்போது பணம், காசை சம்பாதிக்கவில்லை மனிதர்களை சம்பாதித்து இருக்கிறார். இவரின் உறவினர் கூட தான் பதவியில் இருக்கும் எந்த சலுகையும் காட்டாத உன்னத மனிதர். பதவி வந்தாலே உலகமே தன் கையில் இருப்பதுபோல் ஆடும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தன் சொந்த பணத்தில் உறவினருக்கு செலவு செய்த உத்தமர். பரிசு பொருளைக்கூட யாரிடமும் பெறக்கூடாதென்று நினைத்தவர். இவர் ஏழ்மையில் வாழ்ந்தாலும் பதவி வந்ததும் தன்னிலையை மறக்காதவர்.
அரசு பள்ளியில் படித்து, அரசு உதவி தொகையில் உயர் கல்விக் கற்று தமிழ்நாட்டுக்காக வாழ்ந்தவர். இவரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் கண்களில் கண்ணீர் பெருகிறது. அத்தனை ஏழ்மை நிலையில் வாழ்ந்திருக்கிறார். திருச்சி கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கிப்படிக்கும்போது அசைவ சாப்பாடு சாப்பிட்டால் அதிக பணம் செலவாகும் என்று சைவ சாப்பாட்டிற்கு மாறியவர். ஒருசமயம் இராமேஸ்வரத்தில் புயல் வந்தபோது அவரின் பெற்றோர் அவரைப் பார்க்க ஆசைப்பட்டார்களாம். ஆனால், கலாமிடமோ ஊருக்குச் செல்வதற்கு பணம் இல்லையாம். என்ன செய்வதென்று புரியாமல் தனக்குப் பரிசாக கிடைத்த புத்தகத்தை விற்கச் சென்றாராம். அந்தக் கடைக்காரர் ஆச்சரியப்பட்டு பரிசாக கிடைத்த புத்தகத்தை விற்க வேண்டிய அவசியம் என்னவென்று கேட்டாராம். கலாமும் விவரத்தைச் சொன்னாராம் உனக்கு எவ்வளவு பணம் தேவை என்று கடைக்காரர் கேட்டாராம். இவர் சொன்னா தொகை எவ்வளவு தெரியுமா? ரூபாய் 60. அந்தக் கடைக்காரர் 60 ரூபாய் பணத்தையும் கொடுத்து இந்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு புத்தகத்தை வாங்கிச் செல் என்றாராம். அதன்படி கலாமும் ஊருக்குச் சென்று பெற்றோரை பார்த்துவிட்டு அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு முதல் வேலையாக போய் புத்தகத்தை வாங்கினாராம். அத்தனை ஏழ்மையில் வாழ்ந்திருந்தாலும் பதவி வந்ததும் ஆடம்பரமாக வாழ நினைக்காமல் எளிமையாக வாழ்ந்தவர்.
நடிகர் சிவக்குமாரிடம் பேசவதைக் கேட்டால் நமக்கே ஆச்சரியத்தை வரவழைக்கிறது. ஒரு குடியரசு தலைவர் நடிகர் சிவக்குமாரிடம் " நீங்கள் எழுதிய அந்த புக்கத்தை படித்தேன் அந்த வரிகள் மிக நன்றாக இருந்தது சார்... உங்கள் சொற்பொழிவைக்கேட்டேன் 4 மணி நேரம் போனதே தெரியவில்லை சார்... உங்க சுயசரிதையை படித்தேன் உங்க குடும்பத்தைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் சிறப்பாக வழிநடத்தில் சென்றுருக்கீறீர்கள். " என்று பாராட்டவும் செய்தார். இப்படி யாரால் முடியும்? சின்ன, சின்ன விஷயங்களை கூட நினைவில் வைத்து பாராட்டுகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.
இந்த எளிமை தான் மக்கள் மனதில் குடியிருக்க வைத்தது. பதவியில் இல்லாதபோதும் மக்கள் இதயத்தில் இருக்கிறார். எந்த ஒரு தலைவனுக்கும் கிடைக்காத ஒரு மரியாதை கலாமுக்கு கிடைத்திருக்கிறது. இதுவரை யாருக்கு கிடைக்காத மரியாதை இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் நடந்த வீடாகதான் இருந்தது. மக்கள் வெள்ளத்தில் கண்ணீர் கடலில் மூழ்கடித்து சென்றுவிட்டார். அக்னி சிறகுகள் அவரை விண்ணுலகத்திற்கு சுமந்து சென்றுவிட்டது.
அப்துல் கலாம் இராமேஸ்வரத்தில் தொடக்கப்பள்ளியில் தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்தது இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்கு சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் செய்திதாள் விநியோகம் செய்தார்.
தனது கல்லூரி படிப்பை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 1954 ம் ஆண்டு இயற்பியலில் பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் முதுகலைப்பட்டமும் பெற்றார். 1960 ம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி பிரிவில் DRDO விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையை தொடங்கினார். 1980 ஆம் ஆண்டு SLV III ராக்கெட்டை பயன்படுத்தி ரோகினி 1 என்ற துணைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச் செய்தார்.
1981 ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. 1963 ம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டுவரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்தார். 1999 ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார்.
2002 ம் ஆண்டு நடந்த குடியரசு தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பதிவியேற்றார். மத்தியரசு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. பாரத ரத்னா விருது பெற்ற 3 வது குடியரசு தலைவர் இவர்.
இவர் எழுதிய நூல்கள்: 1. அக்னி சிறகுகள்
2. இந்தியா 2020
3. எழுச்சி தீபங்கள்
4. அப்புறம் பிறந்த ஒரு புதிய குழந்தை
இவர் பெற்ற விருதுகள் ஏராளாம். வாழ்ந்தால் இவர் போல் வாழவேண்டும் வீழ்ந்தால் இவர் போல் விழவேண்டும். "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் யார்" என்ற பாடல் இவருக்கு பொருந்தும். கோடான கோடி மக்களின் அன்பை பெற்ற ஒரே ஒரு தலைவர் இவராகதான் இருக்கும். இவர் விஞ்ஞானியாக இருந்தபோதும் இசையிலும், கவியிலும், ஓவியத்திலும் திறமைவாய்ந்தவராக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மதநல்லினக்க மிக்கவராகவும் அதாவது எல்லா மதங்களையும் நேசிக்க கூடிய தலைவராக இருந்தார்.
அவரின் கனவு இந்தியாவை மிகப் பெரிய வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்பதுதான். அவரின் கனவுகளை இந்திய இளைஞர்களிடம் விட்டுச் சென்றுருக்கிறார். எந்தவித வசதியும் இல்லாத அவர் லட்சியத்தோடு படித்ததால்தான் இன்று மிகப்பெரிய மக்கள் தலைவராக வாழ்ந்து மறைந்தார். இளைஞர்கள் மனது வைத்தால் நாளை வீட்டுக்கொரு கலாம் உருவாகலாம். அவர் விதைத்த விதை தலைவிரிச்சமாக வளர்ந்து நிற்கும் என்பது ஐயமில்லை.
No comments:
Post a Comment