தூய்மை இந்தியா... தூயமை இந்தியா... என்று அய்யா மோடி அவர்கள் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் விளம்பரங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் என்ன பயன் யார் பயன் பெற்றார்கள் என்று அய்யா மோடி அவர்களுக்குத் தெரியாது. எத்தனையோ கிராமங்களில் வெளிப்புறங்களில்தான் இன்னும் மலம்கழிக்கிறார்கள். இந்த விளம்பரங்களைக் கண்டு அவர்கள் மலம் கழிப்பதை நிறுத்தி விடுவார்களா என்ன? ஏனெனில் அவர்களுக்கு கழிப்பறை வசதிகள் கிடையாது இந்த சூழ்நிலையில் அவர்கள் எங்கே செல்வார்கள்...?
ஒவ்வொரு கிராமத்திலும் இனி வெளிபுறங்களில் மலம் கழிக்க மாட்டேன் என்று உறுதி மொழி படிவத்தில் கையெழுத்து வாங்க சொல்லி மோடி அவர்களின் உத்தரவு அது என்னாச்சு ... காகிதத்தில் வாங்கிய கையெழுத்து காத்தோடு போச்சு... முன்பு ஒன்று ச்சீச்சீ ன்னு சொல்லுங்கள்.. ச்சீச்சீ.. ன்னு என்று விளம்பரம் வந்தது அதையும் அவர்கள் சொல்லிக்கொண்டே வெளிப்புறங்களில்தான் மலம் கழிக்க சென்றார்கள். இதற்கு காரணம் அவர்களிடம் கழிப்பறை வசதி இல்லை என்பதுதான் இருந்தால் அவர்கள் ஏன் வெளியே செல்ல போகிறார்கள்...?
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வீட்டுக்கொரு கழிப்பறை வசதி என்று ஊரக வளர்ச்சித்துறையில் இருந்து மானியத் தொகையாக 12000/- அரசு அறிவித்தது. நல்ல விஷயம்தான் நல்ல திட்டம் தான் ஆனால் அது எந்தளவுக்கு பயனைத்தந்தது . ஊராட்சி என்ன செய்தது தெரியுமா யார்.. யார் எல்லாம் கழிப்பறை கட்டியிருந்தார்களோ அவர்களிடம் அந்த பணத்தைக் கொடுத்துவிட்டு, அரசுக்கு இத்தனை பேர் கழிப்பறை கட்டியிருக்கிறார்கள் இவ்வளவு தொகை செலவாச்சுன்னு கணக்கு போயாச்சு. ஆக கழிப்பறை கட்டாதவன் அப்படியேதான் இருக்கிறான் அவனுக்கு எந்த மானிய தொகையும் செல்லவில்லை.
முதலில் அரசு என்ன செய்ய வேண்டும் யார் வீட்டில் கழிப்பறை இல்லை என்று கணக்கு எடு அதன் பிறகு அந்த ஒவ்வொரு வீடுகளுக்கும் மானிய தொகை அறிவி.. அதன்பிறகு அவர்கள் கழிப்பறை கட்டாமல் இருப்பார்களா என்ன...? திட்டங்கள் நிறைய இருக்கலாம் அதை செயல்படுத்தும்படி திட்டங்கள் இருக்க வேண்டும். அய்யா மோடி அவர்களின் திட்டம் சரி ஆனால் நடைமுறையில் வேறாக இருக்கிறதே அதை சரிப்படுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும். அதை விடுத்து தூய்மை இந்தியா... தூய்மை இந்தியா என்று நாடுகளை சுற்றிவருவதில் எந்த பயனும் இல்லை.
மத்திய அரசோ... மாநில அரசோ முதலில் அடித்தட்டு மக்களின் பிரச்சினை என்னவென்பதை புரிந்துக்கொண்டு அதற்கு தகுந்த ஆட்களை பணியில் அமர்த்தி திட்டங்களை செயல்படுத்த முயலுங்கள் அதை விடுத்து நீங்கள் எங்கேயே இருந்து கொண்டு காகிதத்தில் கையெழுத்திட்டு ஆணை பிறப்பித்தால் இவர்களும் அதற்கு அழகாக ஒரு கணக்கை காட்டிவிடுவார்கள் இங்கே உள்ளவர்கள். ஆக கடைசிவரை கழிப்பறை வசதி இல்லாதவன் கஷ்டப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறான். நீங்களோ ஆவணம் சரியாக இருக்கிறதா... என்றுதான் பார்க்கின்றீர்கள் ஆனால் அது யாருக்கு பயன் பெற்றது என்று பார்க்கவில்லை.
இதுபோல் எல்லா இடங்களிலும் நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அரசு இதை கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. தூய்மை இந்தியா நல்ல திட்டம் ஆனால் அது செயலில் இல்லை என்பதுதான் உண்மை. பட்டுக்கோட்டையில் தாலியறுப்பான் சந்து என்று ஒன்று உள்ளது அந்த பக்கம் யாருமே போக முடியாது. எல்லோரும் அங்கேதான் சிறுநீர் கழிப்பார்கள் இப்போது அங்கே சுத்தமாக இருக்கிறது அதற்கு காரணம் தூய்மை இந்தியா திட்டம்தான் அதற்கு இந்த நேரத்தில் நன்றியை கூறிக்கொண்டாலும் கிராமங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை இந்த இடத்தில் பதிவு செய்வது எனது கடமையாக நினைக்கிறேன்.
கிராமங்களில் இன்னும் 50/100 சதவிகிதம் பேர்தான் கழிப்பறை வசதி பெற்றுள்ளார்கள் மற்றவர்கள் வெளியில்தான் போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இது மக்களின் தவறாக இருந்தாலும் அவர்களுக்கு போதுமான வருமானம் இல்லை என்பது உண்மை. கழிப்பறை வசதி இல்லாதவர்கள் வீடுகளை கணக்கெடுத்து அவர்களுக்கு மானிய தொகை வழங்கினால் இந்த திட்ட முழுமை பெறலாம் என்ற நம்பிக்கை உண்டு...
No comments:
Post a Comment